விஷ்ணுபுரம்- கடிதம்

 

விஷ்ணுபுரம் நாவல் வாங்க
https://vishnupuram.com/  நாவல் பற்றிய பார்வைகளுக்காக

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் நாவலை இன்றுதான் படித்து முடித்தேன். ஏறத்தாழ ஓராண்டுக்கால வாசிப்பு. ஏற்கனவே பல கிளாஸிக் நாவல்களை படித்திருந்தாலும் விஷ்ணுபுரம் வாசிப்புதான் ஒரு முழுமையான நாவலனுபவத்தை அளித்தது. ஒரு நாவல் என்றால் என்ன, அதன் சாத்தியங்கள் என்ன என்பதை இந்நாவல் காட்டியது.ஒரு முழுமையான கல்வி என்றுதான் சொல்லவேண்டும்.

நான் வாசித்த நாவல்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு பக்கத்தை காட்டுபவை. அதற்கேற்ற அமைப்பு கொண்டவை. தமிழ்நாவல்கள் பெரும்பாலும் இரண்டுவகை. ஒன்று, இங்கே உள்ள அன்றாட யதார்த்தவாழ்க்கையுடன் சம்பந்தமுள்ளவை. அல்லது ஏதாவது உத்திச்சோதனை போல செய்பவை. அவற்றின் பிரச்சினைகளுக்கும் தமிழ்ப்பண்பாடுக்கும் சம்பந்தமிருப்பதில்லை. தமிழகத்தின் வரலாற்றிலும் அவற்றுக்கு வேர்கள் இருப்பதில்லை. அவை etherical ஆனல் ஒரு தளத்தில் நிற்பவை. எந்த உண்மையான பண்பாட்டு பிரச்சினையையையும் அவை காட்டுவதில்லை

விஷ்ணுபுரம் மிகமிக இந்திய நாவல். இந்தியப் பண்பாட்டுப்பிரச்சினைகள். இந்திய வரலாற்றுப்பிரச்சினைகள். இந்தியாவின் ஞானப்பிரச்சினைகள் ஆகியவை. அவை எவையும் கற்பனையானவை அல்ல, உண்மையில் இங்கே இருப்பவை. உதாரணமாக ஒருபக்கம் உயர்ஞானமும் இன்னொரு பக்கம் சாதிய அடக்குமுறையும் இருப்பது[ பண்பாடு]. தொடர்ந்த படையெடுப்புகளால் அமைப்புகள் மாறிக்கொண்டே இருப்பது. [வரலாறு]ஞானத்தேடல்கொண்ட spiritual adventurists எதையாவது கூறியதுமே அமைப்பாக மாறி sub religion ஆக மாறிவிடுவது [ஞானம்] என்று எல்லாமே இங்கே இன்றைக்கும் இருக்கும் பிரச்சினைகள்.

விஷ்ணுபுரம் நாவலின் வெற்றி என்னவென்றால் இவை எல்லாமே ஒரே கதையாக ஒன்றோடொன்று பின்னி அமைந்துள்ளன .ஒரே கதையாக உள்ளன. ஒரு ஆயிரத்தைந்நூறு ஆண்டுக்காலம் இந்தியாவில் நடந்த எல்லா மாற்றங்களும் ஒரு சின்ன கதைப்பரப்புக்குள் சுருக்கப்பட்டு செறிவாக்கப்பட்டுள்ளன. எனவே நாவல் மிகச்செறிவாக உள்ளது. ஆனால் முயற்சி எடுத்து இதைப் படிக்கும் ஒருவர் ஒரு முழுமையான கல்வியை அடைகிறார். அவருக்கு ஒரேவீச்சில் இவையனைத்தும் கிடைக்கின்றன.

இவற்றை தனித்தனியாக ஒருவர் படிக்கலாம். ஆனால் இவை ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டிருக்கும் ஒட்டுமொத்தமான சித்திரம் அவருக்கு கிடைக்க வாய்ப்பில்லை. ஒட்டு மொத்தமாக இதைப் படித்தறியும் ஒருவர் இது வெளியே உள்ள வரலாறோ தத்துவமோ அல்ல என்று உணர்கிறார். இவற்றில்தான் தான் வாழ்கிறோம் என்றும் இவையெல்லாம்தான் தன் சிந்தனையை உருவாக்கியிருக்கின்றன என்றும் உணர்கிறார். அதனால்தான் இது ஒரு கிளாஸிக் அனுபவம் என்று நினைக்கிறேன்

ஆனால் இந்த அடிப்படையான விஷயங்களை கற்றுக்கொள்ளும் மனநிலை கொண்டவர்கள் மட்டுமே வாசிக்கத்தக்க நாவல் இது. கதைவாசிப்பவர்களுக்கு உரியது இல்லை. ஒரு கல்வி அனுபவம். ஒருபக்கம் ஹிஸ்டாரிக்கலாக உள்ள ஒன்று மறுபக்கம் எப்படி பெர்சனல் ஆக உள்ளது என்று காட்டுவது. வரலாற்றிலும் தத்துவத்திலும் ஞானப்பயணத்திலும் உண்மையில் இந்தியாவில் என்ன நடந்தது, இன்றைக்கு என்ன பிரச்சினை உள்ளது என்று கொஞ்சம் அக்கறை உள்ளவர்கள் மட்டுமே வாசிக்கமுடியும். ஆனால் நானறிந்தவரை தமிழில் இலக்கிய வாசகர்களிலேயேகூட 10 சதவீதம்பேர்தான் அப்படிப்பட்ட தேடல் கொண்டவர்கள். அவர்களுக்குத்தான் இந்நாவல் புரியும், பயன்படும்.

ஆனால் மிக நுட்பமான கொண்டது இந்நாவல். உதாரணமாக ஒரு cosmic allegory எப்படி மதமாக ஆகும்போது power symbol ஆக மாறி அதிகாரத்தின் குறியிடாக ஆகிவிடுகிறது என்று காட்டும் இடங்கள்.

2019 வரை தமிழில் வந்த முக்கியமான எல்லா நாவல்களையும் படித்தவன் நான். [வெண்முரசு வாசிக்கவில்லை] இந்தியாவின் அறியப்பட்ட நாவல்கள் பெரும்பாலானவற்றை படித்திருப்பேன். என் ஆதர்ச எழுத்தாளர்கள் ஐரோப்பிய மாஸ்டர்ஸ்தான். தமிழில் வந்த நாவல்களில் மட்டுமல்ல இந்தியாவில் வந்த நாவல்களிலேயே அந்த வரிசையில் வைக்கவேண்டிய ஒரே நாவல் விஷ்ணுபுரம் மட்டும்தான். அதனுடன் ஒப்பிட இன்னொரு நாவலை தேடிக் கண்டடைய முடியவில்லை. ஒரு பெரிய அனுபவம், ஒரு சாதனை

எஸ்.டி.ராஜகோபால்
விஷ்ணுபுரம்- வாசிப்பு
விஷ்ணுபுரம் – கடிதம்
விஷ்ணுபுரம்- கடிதம்

 

முந்தைய கட்டுரைவெண்முரசு வாசிப்பது.
அடுத்த கட்டுரைமாடன்மோட்சம்- கடிதம்