விஷ்ணுபுரம்- கடிதங்கள்

விஷ்ணுபுரம் வாங்க
https://vishnupuram.com/  நாவல் பற்றிய பார்வைகளுக்காக

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுநம் நாவலை இன்றுதான் வாசித்து முடித்தேன். ஒரு தவம். என் அளவில் இத்தனை சிரமப்பட்டு ஒரு நாவலை முடித்ததில்லை. வாசிப்பனுபவத்தின் தீவிரமே ஒரு நாவலை வாசிக்கமுடியாமலாக்கும் என்பதை இப்போதுதான் அறிந்தேன். ஒரு தீவிரமான அனுபவத்திற்குப்பின் அப்படியே நாவலை மூடிவைத்துவிட்டு அடுத்த நாட்களை கனவு கண்டபடி செலவிடுவது என் வழக்கம்.  அதன்பிறகு மறுபடி தொடங்குவேன்

இது ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம். முதலில் ஒரு சப்ளைம். அதில் மகிழ்ந்திருக்கும்போது மண்டையில் ஓர் அடி. ஒரு உயர்தத்துவம். அதை புரிந்துகொண்டதுமே அது மன்ணில் புரண்டு அழுக்காகிறது. அதிகாரமாக மாறி அடக்குமுறையாகிறது. ஒட்டுமொத்தமாக இதைப்புரிந்துகொண்டால் இந்தியாவை புரிந்துகொண்டதுபோல

ஏன் இந்தியாவில் இத்தனை மதக்குறுங்குழுக்கள், ஏன் இத்தனை ஞானிகள், ஏன் இத்தனை சம்பிரதாயங்கள், ஏன் மூலநூல்களுக்கெல்லாம் இத்தனை பொழிப்புரைகள். எல்லா கேள்விகளும் ஒரே நாவலின் வழியாக ஒரு முழுமையான பதில் கிடைக்கும் என்று விஷ்ணுபுரம் வாசிப்பதற்கு முன் நம்பியிருக்கவே மாட்டேன்

இதைப்படிக்காமல் தமிழில் எதைப்படித்தாலும் எதையுமே படிக்கவில்லை என்றுதான் சொல்வேன். இதில் பேசப்படுபவைதான் உண்மையான தத்துவப்பிரச்சினைகள், அறப்பிரச்சினைகள். இதை புரிந்துகொள்ளாமல் எதைப்புரிந்துகொண்டாலும் அரைகுறைப்புரிதல்தான்

கே.ராஜ்மோகன்

 

அன்புள்ள ஜெ,

பெரும் பிரமிப்பையும், மிரட்சியையும் ஏற்படுத்திய நூல். கற்பனை நகரம் விஷ்ணுபுரத்தை மையப்படுத்தி சோனா நதி, ஹரிததுங்கா மலையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மூன்று பகுதிகளை உள்ளடக்கிய நூலில், முதல் பகுதி ‘ஸ்ரீபாதம்’, விஷ்ணுபுரத்தில் நடைபெறும் பெரும் விழாவினையும், இரண்டாம் பகுதி ‘கௌஸ்துபம்’, மத அறிஞர்களின் விவாதங்களையும், மூன்றாம் பகுதி ‘மணிமுடி’, பிரளயம் ஏற்பட்டு விஷ்ணுபுரம் அழிவதையும் கூறுகிறது.

முதல் பகுதியில் நடைபெறும் சம்பவங்களையும், நபர்களையும், மூன்றாம் பகுதியில் மிகஅழகாக நினைவுபடுத்தி கதைக்குள் பொருத்துகிறார் ஜெயமோகன்.

கர்வம் மிகுந்த கலைஞனாக வரும் சங்கர்ஷணன், தனது காவியத்தை உறுதியுடன் அரசவையில் சமர்ப்பிக்கிறான்.மகனை இழந்த துக்கத்தில் அல்லாடுகிறான்.

கற்பனை நகரின் காட்சிகள் கண்முன்னே விரிகிறது. மன்னராட்சியின் கேலிக் கூத்துகள், நீதிபரிபாலனம், உடனடியான தீர்ப்புகள், இயலாமைகளின் கண்ணீர் அழகாக புனையப்பட்டுள்ளன.

தானமாக பெற்ற அப்பங்களை காசுக்கு விற்கும் கிழவன், வண்டியின் சக்கரங்களில் நசுங்கி மடிகிறான்.

சங்கர்ஷனின் குணாதிசயமும், சுயமதிப்பும், ஆக்ரோஷமான வாதங்களும் தீர்க்கமான படைப்பாளி ஒருவனை நினைவுபடுத்தின.

கண்களில் கோளாறு ஏற்பட்ட யானை மூர்க்கத்தனமாக சென்று பெரும் சேதம் ஏற்படுத்தி மற்றொரு யானையால் கொடூரமாக கொல்லப்படுகிறது. யானையை தேர்வு செய்த நபர் கடும் தண்டனைக்கு ஆளாகிறார்.

ஜெயமோகனின் சிந்தனை வேகம் அளவிடமுடியாதது. வாசித்துக் கொண்டிருக்கும் எளிய வாசகன் தெருமுனைக்கு செல்வதற்குள் அவர் நான்கு ஊர்களைத் தாண்டிச்சென்று விடுகிறார்.

வாழ்வில் பிடிப்பின்றி துறவியாய் அலைந்து திரிந்த நாட்களில் திருவட்டாறு கோயிலில் உறங்கிக்கொண்டிருந்த போது, அருகில் படுத்திருந்த துறவி விஷ்ணுசிலை குறித்தும், ஒரு யுகத்தின் முடிவில் பிரளயம் ஏற்பட்டு அப்போது பெருமாள் புரண்டு படுப்பார் என்றும் கூறிய வார்த்தைகளை அவதானித்ததாக ஜெயமோகன் கூறுகிறார்.

ஏழு ஆண்டுகள் பெரும் உழைப்பை அளித்து இந்நாவலை உருவாக்கியிருக்கிறார். தமிழ்ச்சூழலில் ‘விஷ்ணுபுரம்’ குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

20% வாசித்து முடித்த நிலையில், உள்வாங்குதலில் ஏற்பட்ட குழப்பம் மீண்டும் வாசிக்கச் செய்தது. 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் மீண்டும் ஒரு தேக்கநிலை ஏற்பட, முகநூலில் பதிவிட்டு நண்பர்களை உதவிக்கு நாடினேன்.

பின்னூட்டங்கள் அளித்த உத்வேகம், நாவலைத் தொடர்ந்து வாசித்து நிறைவுறச் செய்தது. நண்பர் ஒருவர் எழுத்தாளர் பா.ராகவன் விமர்சனத்தை வாசிக்குமாறு கூறி இணைப்பையும் தந்திருந்தார். பா.ராகவனின் விமர்சனம் தெளிவு ஏற்படுத்தியது.

தீவிர இலக்கிய வாசிப்பு குறுகிய வட்டத்துக்கு உரியதாகவே எப்போதுமிருக்கும் தமிழ்ச்சூழலில், எதிர்மறை விமர்சனங்கள், ஒரு படைப்பு வாசகனை அணுக முடியாமல் செய்து விடுகிறது.

நூலில் ஜெயமோகன் குறிப்பிடும் பெயர்கள், பயன்படுத்தும் சொற்கள் பெரும் வியப்பை அளிக்கின்றன.

நாவலின் சரிபாதி பகுதியை முதல்பாகம் ‘ஸ்ரீபாதம்’ ஆக்கிரமித்து விடுகிறது. போனால் போகிறதென்று சில இடங்களில் மட்டும் எளிய சொல்லாடல்களும் இடம்பெறுகின்றன.

வாசிக்க மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது இரண்டாம் பாகம் ‘கௌஸ்துபம்’தான். சபையில் நடைபெறும் மத அறிஞர்கள் இடையேயான விவாதத்தில் இடம்பெறும் சொற்களை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை.

பிரபஞ்சம், மனிதமனம், வாழ்வு, மரணம் குறித்த விவரணைகளை வாசிக்கும்போது மனித வாழ்வு குறித்த சிறுபுரிதலாவது ஏற்படுகிறது.

வாசிப்பினூடே இடையிடையில் பிரம்மாண்டமான சயனக் கோல விஷ்ணுவின் சிலையும்,ஸ்ரீபாதம், இடை, மணிமுடி இவற்றுக்கு எதிரான வாயில்களும் காட்சிகளாக விரிகின்றன.

மரணத்தை தீபங்களின் தொடர்ச்சியான குளிர்வு நிலைகளுடன் ஒப்பிடுகிறார் ஜெயமோகன்.

முதல் பாகத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தி புனையப்பட்ட விஷ்ணுபுரத்தின் நுழைவாயில்கள், கோபுரங்கள், நகரின் விஸ்தீரணம் மூன்றாம் பாகத்தில் அடுத்தடுத்து நீரில்மூழ்கி அழிகின்றன.

‘விஷ்ணுபுரம்’ – வியப்பளிக்கும் சொற்கோபுரம்.

சுப்ரமணியம் சரவணன்

விஷ்ணுபுரம்- வாசிப்பு
விஷ்ணுபுரம் – கடிதம்
விஷ்ணுபுரம்- கடிதம்
முந்தைய கட்டுரைபன்னிரு படைக்களம்- சுரேஷ் பிரதீப்
அடுத்த கட்டுரைநூறுகதைகள்- கடிதங்கள்