உடையாள்- கடிதங்கள் 3

உடையாள் – கடிதங்கள்-2

உடையாள்- கடிதங்கள்-1

அன்புள்ள ஜெ

உடையாள் கதையை வாசித்தேன். மிகச்சிறப்பாகச் சொல்லப்பட்ட ஒரு குழந்தை அறிவியல் கதை. குழந்தைக்கதை என்றால் அடிப்படையில் குழந்தைகளுக்குரிய நீதிகளைச் சொல்வதாக இருக்கும் என்றுதான் இங்கே பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். அல்லது குழந்தைகளுக்குரிய விளையாட்டுத்தனத்தை கொண்டுவருகிறார்கள். குழந்தையின் கற்பனையை தூண்டிவிடும்படி இருந்தால் போதும் என நினைக்கிறார்கள். உடையாள் குழந்தைகளுக்கு அடிப்படையான கேள்விகளை முன்வைப்பதாக உள்ளது. அத்துடன் அறிவியலின் அடிப்படைகளைச் சார்ந்தும் அமைந்துள்ளது.

குழந்தைக் கதைகளில் அறிவியலை எந்த அளவுக்குக் கலப்பது என்பது ஒரு அடிப்படை விஷயம். எல்லாவற்றுக்கும் அடிப்படைகளைச் சொல்ல ஆரம்பித்தாம் வெறும் தகவலாக ஆகிவிடும். வியப்பும் திகைப்பும் இல்லாவிட்டால் குழந்தைகள் கதைகளை ரசிப்பதில்லை. உடையாளில் அந்த எல்லைகளில் கவனமாகச் சென்றிருக்கிறீர்கள். ஏதோ ஓர் இடத்தில் கதையை குழந்தைகளின் கற்பனைக்கே விட்டுவிடவேண்டியிருக்கிறது. உதாரணமாக நாமி தியோக்களை படைத்தபிறகும் அங்கே உயிர்கள் உருவாகலாம். பறவைகளின் கால்கள் மண்ணில் பதிந்த வடிவில். இலைகளின் வடிவில் எல்லாம் அமீபாக்கள் உடலை அடையலாம். கடைசியில் சாரா வந்து பார்க்கும் தங்கத்துளியில் விசித்திரமான பல உயிரினங்கள் இருக்க வாய்ப்புண்டு. அதையெல்லாம் குழந்தைக்கு கற்பனைசெய்யவே விட்டுவிட்டீர்கள்

தியோக்கள் உருவானபிறகு தியோக்கள் எப்படி பரிணாமம் அடைய முடியும் என்பதுதான் கேள்வி. தியோக்கள் உருவாகி பரிணாமம் அடைந்ததுமே நாமியின் ரோல் முடிந்துவிட்டது. அங்கே கதையைச் சுருக்கி முடிப்பதும் சிறப்பாக இருக்கிறது. ஓர் அறிவியல் ஆராய்ச்சியாளனாகவும் ஆசிரியனாகவும் விளக்கத்தை எங்கே நிறுத்திக்கொள்வது என்பதுதான் முக்கியமாக தெரிந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்த எல்லை கடைப்பிடிக்கப்பட்டிருப்பதனால் கடைசிப்பகுதிகள் தூய்மையான ஆச்சரியம் மட்டுமே நிறைந்தவையாக உள்ளன. வாழ்த்துக்கள்

ராஜன் குமாரவேல்

 

ஜெ

உடையாள் கதையை வாசிப்பது ஓர் இனிய அனுபவமாக இருந்தது. நான் தொடர்ச்சியாக பலவகையான புனைவுகளை வாசித்துச் சோர்ந்திருந்த காலம். இந்த ஊரடங்கு வாழ்க்கையில் ஒரு புதிய உலகுக்குள் நுழைந்த அனுபவத்தை அடைந்தேன். அதன் தத்துவார்த்த தன்மையும் அறிவியலில் இருந்து மேலெழும் தன்மையும் மனதை நிறைவுறச்செய்தன.  சிம்ப்யோட்டிக் ரிலேஷன் பற்றி பல அற்புதமான அறிவியல் புனைகதைகள் வந்துவிட்டன. மரங்கள் மனிதர்களுடன் இணையும் சிம்ப்யோட்டிக்   கதைகள் கூட எழுதப்பட்டுவிட்டன. ஆனால் அவற்றில் எல்லாமே அவை ஒருவகை இயற்கை மீறலாகவும் கடைசியில் அழிவை அளிப்பதாகவுமே சொல்லப்பட்டுள்ளது. அதையும் இயற்கையின் அலகிலா சாத்தியக்கூறுகளில் ஒன்றாகச் சொல்கிறது உடையாள்.

எஸ்.மாதவன்

அன்புள்ள ஜெ.,

உடையாள் கதையை என் 8 வயது மகளுக்கு சொல்லும் நோக்கத்தோடு தான் முழுதும் படித்தேன் (அமெரிக்காவில் வளர்வதால், இன்னும் தமிழ் வாசிக்கக் கற்றுத்தரவில்லை. அனால் நன்றாகத் தமிழில் வாயாடுவாள்). படிக்கும்போது இவ்வளவு அடர்த்தியான அறிவியல் விஷயங்களைக் குழந்தைகள் புரிந்துகொள்வார்களா என்று சந்தேகம் இருந்தது.

ஆனால், கதை சொல்லும்போது கிட்டத்தட்ட எல்லா விஷயங்களையும் புரிந்துகொண்டாள் – உண்மையில் எனக்கு இது ஆச்சரியமாகத்தான் இருந்தது. அதோடு, நான் ஒரு நாள் மறந்தாலும், என்னை நச்சரித்துக் கதையைப் படிக்கவைத்து விடுவாள்..

என்னதான் நாநூறு வருடங்கள் வாழ்ந்தாலும், நாமி இறந்தபோது வருத்தப்பட்டாள், மனிதருக்கு எத்தனை கொடுத்தாலும் அடங்காது போலும்.

அவளுக்கு மட்டுமல்ல, எனக்கும் கூட இந்தக் கதை பல புதியகோணங்களில் வாழ்க்கையை அறிமுகப்படுத்தியது.

நன்றி
ரத்தன்

 

முந்தைய கட்டுரைதியடோர் பாஸ்கரன் சந்திப்பு
அடுத்த கட்டுரைநேர்த்தியும் அழகும்-நேற்றும் இன்றும்