உடையாள் – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

உடையாளில் நீங்கள் சொல்லிக்கொண்டு வரும் நுண்ணுயிர் மற்றும் தாவர அறிவியல் தகவல்களைக்குறித்து நான் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். தினமும் 9-4 மணிவரை இருக்கும் ஆன்லைன் வகுப்புக்கள். அதைக்காட்டிலும் அதிகமாக சமயம் எடுத்துக்கொள்ளும் அவற்றிற்கான முன் தயாரிப்புக்கள் என்று நாள் முழுவதுமே இதிலேயே தீர்ந்து போய்விடுகின்றது. உடையாள் காட்டும் மகரந்தசேர்க்கை, விதை முளைத்தல் உள்ளிட்ட பல தாவரஅறிவியல் தகவல்கள், புறக்காரணிகள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நுண்ணியிர்களின் வளர்ச்சி போன்ற மிகச்சரியான அறிவியல் தகவல்களை குறித்தெல்லாம் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்

 நீங்கள் சொல்லி இருப்பது போலவே பசைபோன்ற சுரப்புக்களினால் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு பேக்டீரியாக்கள் திண்டு போல, முடிச்சுபோல கொத்துக்களாக காணப்படு்ம். Stromatolites பாறைகள் எனப்படுபவை மிகச்சரியாக அப்படி பசையினால் பலகோடி வருடங்களுக்கு முன்பு ஒன்றாக திரண்டு அடுக்கடுக்கான பாறைகளைப்போல இறுகியிருக்கும் நீலப்பச்சை பேக்டீரியக்காலனிகள்தான். Stromatolites என்றாலே கிரேக்க மொழியில் அடுக்குப்பாறைகள் என்றுதான் பொருள்

இவற்றிலிருக்கும் பேக்டீரியாக்கள் மற்ற பேக்டீரியாக்களை போலல்லாமல் பச்சையம் கொண்டிருக்கும், சூரியஒளியைக்கொண்டு ஒளிச்சேர்க்கை மூலம் உணவை தாவரங்களைப்போலவே தயாரிக்கவும் செய்யும் (Photosynthetic cyanoBacteria) உடையாளில் சொல்லி இருப்பது போலவே இப்படிமப்பாறைகள் மிக மிகமெதுவாக வளர்ந்திருக்கின்றன, 1 மைக்ரான் தடிமன் வளரவே 2000 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

மனிதஇனம் தோன்றும் முன்னரே உருவாகியிருந்த இவற்றினால்தான் அப்போது 1 சதவீதம் மட்டுமே இருந்த ஆக்சிஜன் 20 சதவீதமாக அதிகரித்து மனித இனம் உள்ளிட்ட பிற உயிர்கள் தோன்றவும் காரணமாக இருந்திருக்கின்றது. இப்போது இவை பெருமளவில் அழிந்துபோய்விட்டன. இப்படிமப்பாறைகளில் உயிருடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பேக்டீரியாக்கள் இருப்பவை பஹாமா தீவுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் மட்டும்தான் இருக்கின்றன.

ஆஸ்திரேலியாவின் இந்த படிம பேக்டீரியாப்பாறைகள் இருக்கும் அதி உப்புநீர்நிலையான Hamelin Pool – பகுதி யுனஸ்கோவால் பாரம்பரியச் சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இதைப்போலவே biofilms எனபப்டும் பேக்டீரியாக்களின் கூட்டத்தையும் நாம் கண்களால் காணமுடியும். உதாரணமாக அதிவெப்பத்திலும் உயிர்வாழும் thermophilic பேக்டீரியாகள் வெந்நீர் ஊற்றுக்களில் கூட்டம் கூட்டமாக காணப்படும். அமெரிக்காவின் Yellow stone மற்றும் Oregon னின் வெந்நீர் ஊற்றுக்களில் இப்படியான பேக்டீரியாக்களின் காலனிகள் அழுத்தமான மஞ்சள் பச்சை சிவப்பு என பல வண்ணங்களில் நீர்நிலைகளின் அடியிலும், கரைகளிலும் படிந்திருப்பதை பார்க்கலாம்.

உடையாளில் சொல்லி இருப்பதைப்போல ஒரு குறிப்பிட்ட சூழலில் இருக்கும் சத்துக்களை நுண்ணுயிரிகள் எடுத்துக்கொள்ள கையாளும் பல்வேறு வழிமுறைகளை ecological niche என்கிறது அறிவியல்.

ஆய்வகங்களிலும் பெட்ரி தட்டுக்களில் பேக்டீரி்யாக்கள் பல நிறங்களில் பல வடிவங்களில் திட்டுக்கள் போல் கூட்டமாக வளர்வதை சாதாரணமாக பார்க்கலாம்.

ஒளிச்சேர்க்கை செய்யும் திறனுள்ள பேக்டீரியாக்களைப் போலவே தன்னுடலில் இருக்கும் சில குறிப்பிட்ட காந்ததன்மையுடைய நுண்சத்துக்களை குட்டி காம்பஸ்களைபோல உபயோகித்து பூமியின் காந்தப்புலனை கண்டறிந்து அதில் போய் அப்பிக்கொள்ளும் magnetic bacteria’க்களும் கூட உள்ளன.

லோகமாதேவி

 

ஜனனி, ஜெனி போன்ற பெயர்களின் பொருளைக்குறித்தும் ஆவலாக வாசித்து குறிப்பெடுத்து வைத்தேன். எனக்கு இதில் தனித்த ஆர்வமுண்டு. சமீபத்தில் தாவரப்பெயர்களின் etymology குறித்தான உரையின் பொருட்டு கிரேக்க லத்தீன் தாவரப்பெயர்களில் மாறாத பொருளுள்ளவற்றை மட்டும், Alba என்றல் வெள்ளை nigrum என்றால் கருமை இப்படி, ஒரு நீண்ட பட்டியலாக தொகுத்து வைத்திருக்கிறேன்.

உடையாளில் நீங்கள் சொல்லிக்கொண்டு வரும் எல்லாமே நுண்ணுயிரியல் சொல்லும் உண்மைகள்தான். நான் இப்போது Bacteriology மற்றும் Virology பாடங்களைத்தான் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்

ஆய்வகங்களில் பேக்டிரியாக்களை வளர்க்கும் ஊடகத்தை தயாரிப்பதோ அல்லது நுன்ணுயிர்கள் வளரும் Micro environment குறித்தோ சொல்லுகையில் அவை எல்லாமே உடையாளில் இருப்பதை நினைத்துக்கொள்ளுகிறேன். தினமும் இந்த வகுப்பெடுக்கும் முன்பாக இன்னொரு முறை உடையாளை வாசித்துவிடுகிறேன்.

//மரத்தின் இலைகள் மிக அதிகமாக சூரிய ஒளியை பெறும்படி வடிவம் கொண்டவை. மரத்தின் இலைகளில் காற்று மிக அதிகமாகப் படும்// ஆம் இது தாவரவியலின் அற்புதங்களில் ஓன்று.

Phyllotaxy எனப்படும் தண்டுகளின் மீது இலைகள் எப்போதுமே சூரிய ஒளி படும்படியே அமைந்திருக்கும் இலையமைப்பை நான் மாணவர்களுக்கு நேரில் செடிகளை மரங்களை காட்டி கற்றுக்கொடுப்பேன். குப்பை மேனியின் இலையமைப்பை பார்த்தால் அத்தனை அழகாக இருக்கும் இலைக்காம்புகளின் நீளத்தை தேவைக்கேற்ப கூட்டியும் குறைத்தும் ஒரு பச்சைப்பூங்கொத்தைப்போல சூரியனை நோக்கியே எல்லா இலைகளையும் காட்டிக்கொண்டிருக்கும் அது.

பெருகவேண்டும் என்னும் துடிப்பான ’திருஷ்ணை’யை பற்றி சொல்லி இருக்கிறீர்கள். வைரஸின் திருஷ்ணையை குறித்து அறிகையில் ஆச்சர்யமாகவும் பயமாகவும் கூட இருக்கிறது. சாதாரண நுண்ணோக்கியால் கூட காணமுடியாத மிகச்சிறிய உயிரி்யான அதன் கொடூர புத்திசாலித்தனம் அச்சமூட்டுகிறது உண்மையில்.

கதையின் இறுதியில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தாவரங்களையும் விலங்குகளையும் இணைக்கும் கற்பனை வெகு சுவாரஸ்யம். Plantibodies என்பது அப்படியான தாவரங்களிலிருந்து நேரடியாக எதிர்ப்புசக்தியை நாம் பெற்றுக்க்கொள்ளும் ஒரு முயற்சிதான். ஒரு விறுவிறுப்பான் ஹாலிவுட் திரைப்படம் போலிருக்கிறது உடையாள்.

2019ல் வெளியான Fantastic Fungi என்னும் தாவரவியலாளர்களும் இ்ணைந்து தயாரித்திருக்கும் மிக நல்ல படத்தை முடிந்தால் பாருங்கள். பலகோடியாண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருக்கும் நுண்ணுயிரிகளான பூஞ்சைகளின் உலகை அத்தனை அழகாக காட்டியிருக்கிறார்கள். உடையாள் எழுதிக்கொண்டிருக்கையில் இந்தப்படத்தை பார்ப்பது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

Symbiont என்பதற்கு ’’ஒத்துயிர்’’ என்பது மிகச்சரியான சொல். மாணவர்களுக்கு இதை சொல்லிவிட்டேன்.

உடையாளைப்பற்றி எழுத இன்னும் ஏராளம் இருக்கின்றது ஆர்வமாக தொடர்ந்து வாசிக்கிறேன். நன்றி

அன்புடன்

லோகமாதேவி

முந்தைய கட்டுரைஎம்.வி.வியின் காதுகள்: சுனீல் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைகதைகளின் வழியே… கடிதங்கள்