உடையாள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

உடையாள் ஒரு அழகான கதை. எல்லா அறிபுனை கதைகளுமே அடிப்படையில் உருவகக்கதைகள்தான். இந்தக்கதை உர்சுலா லெ க்யுன் கதைகளைப் போன்றது. தத்துவமும் கவித்துவமும் கலந்த ஒரு கதை. இத்தகைய கதைகளின் ‘அற்புத’ அம்சம் ஒன்று புராணத்தில் நிகழமுடியும். அல்லது அறிவியலில் நிகழமுடியும். ஆகவேதான் அறிவியல்புனைகதைகள் முக்கியமாக ஆகின்றன.

நல்ல அறிபுனை என்பது கதையோட்டம், திகைப்பு ஆகியவற்றை மட்டும் உருவாக்கினால்போதாது. ஒரு தத்துவ உருவகமாகவும் ஆகவேண்டும், கவித்துவப் படிமமாகவும் ஆகவேண்டும், உடையாளில் அது நிகழ்ந்திருக்கிறது.

நாமி என்ற பெயர் முதல் கதையின் உருவகக் கவித்துவம் ஆரம்பிக்கிறது. பெயர் கொண்டவள், பெயரானவள். கடைசியில் அவளுடைய பெயர்களும் தோற்றங்களும் மட்டும்தான் எஞ்சுகின்றன. நாமி வயதாகி மறைந்தாலும் சிறுமியாகிய நாமி மட்டுமே அழியாமல் நிலைகொண்டாள் என்பதில்தான் இந்தக்கதையின் கவித்துவமே உள்ளது.

குழந்தையாகவே அழிவின்மை கொண்டவளாக இருக்கிறாள். நடுவே அன்னையாக பேருருவம் எடுத்தும் அமர்ந்திருக்கிறாள். அந்த உலகமே அவள் படைத்தது.

நாமி என்ற குழந்தை நிழலைப் பார்க்கிறது. பின் தன் பிம்பத்தைப் பார்க்கிறது. பின்பு தன் உருவத்தையே பெருக்கிக் கொள்கிறது. தன் பேருருவத்தையும் பல்லுருவத்தையும் விட்டுவிட்டுச் செல்கிறது. ஒரே வீச்சில் கதையின் இந்த குவிமையம் ஒரு பெரிய தரிசனமாக உள்ளது. பெயரில்லாத அந்தக் குழந்தை கண்ட நிழல்கள்தானா அவையெல்லாம் என்று எண்ணத் தோன்றுகிறது

ஆர். பாலகிருஷ்ணன்

அன்புள்ள ஜெ

ஓர் அறிபுனை கதைக்கான அடிப்படைகள் அனைத்தும் தெளிவாக அமைந்த அற்புதமான கதை உடையாள். குழந்தைக்கதை என்பது ஓர் அழகான ஏமாற்றுவேலை. அதன் நடை மட்டுமே குழந்தைக்குரியது.  நீங்கள் அறிபுனை என்பதே ஒரு குழந்தைக்கதை என்று நினைக்கிறீர்களா என்று தெரியாது. ஆனால் அறிபுனை என்பது குழந்தைகதையாக ஆகும்போது அபாரமான வசீகரம் கொள்கிறது என்று தெரிகிறது. ஏனென்றால் அறிபுனை கதையின் சாராம்சமான உணர்வு என்பது வியப்பும் பிரமிப்பும்தான். பிற கதைகளில் அந்த வியப்பும் பிரமிப்பும் வெளிப்படும்போது அதை சமநிலைப்படுத்த வேண்டியிருக்கிறது. அதற்காக சிக்கலான அறிவியல் பேருரைகளை அளிக்கவேண்டியிருக்கிறது. அந்த அறிவியல்பேருரைகள் கதைக்குரிய அழகை இல்லாமலாக்கிவிடுகின்றன. வாசகனின் கற்பனையையும் குறைத்துவிடுகின்றன

அசிமோவ் போன்றவர்களெல்லாம் இந்தச் சிக்கல் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். கதைக்குள் கதையின் அழகை பாதிக்காமல் அறிவியலை விளக்குவது மட்டும்தான் அறிபுனைவின் முதல் சவால் என்று சில்வர்பிளாக் ஒரிடத்தில் சொல்கிறார். குழந்தைக்கதை அந்த சவாலை சந்தித்துவிடுகிறது. குழந்தைக்கதைக்குள் நடுவே ஆசிரியரின் குரல் அல்லது ஒரு கதாபாத்திரத்தின் குரல் அறிவியலை விளக்கும்போது அது இயல்பாக இருக்கிறது

உடையாளில் அடிப்படை அறிவியல் கருத்துக்களான காலம்,வெளி, தன்னுணர்வு, படைப்பு, பரிணாமம் போன்றவற்றை தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள். தகவல்களும் தேவையான அளவு, சரியாக அளிக்கப்பட்டுள்ளன.

எஸ்.ரவிச்சந்திரன்

அன்புள்ள ஜெ

சயன்ஸ் ஃபிக்‌ஷன் எழுதும் எழுத்தாளர்கள் கற்பனையை கட்டில்லாமல் ஓட்டி ஓர் உலகை உருவாக்கிக் காட்டுகிறார்கள். அவர்களுக்கே ரொம்ப போய்விடக்கூடாது என்று ஒரு சந்தேகம் வரும். அதற்கு கொஞ்சம் ஆராய்ச்சிகள் செய்து அறிவியல்தர்க்கத்தை கண்டுபிடிக்கிறார்கள்.

உடையாளில் அறிவியல்விளக்கம் சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால் நீங்கள் தாவும்போது யோசிப்பதும் தெரிகிறது. உதாரணமாக தண்ணீரே இல்லாமல் ஒரு கிரகத்தில் உயிர் எப்படி உருவாகும் என யோசிக்கிறீர்கள். பாக்டிரியா காற்றிலிருந்து கார்பன்டையாக்சைடு, நைட்ரஜன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு குளூக்கோஸ் தயாரிக்கிறது என்கிறீர்கள். அது சரி. குளூக்கோஸ் தயாரிக்கும் பாக்டீரியாக்கள் உண்டு

ஆனால் வெறும் பாக்டீரியா ஓரு எக்கோ சிஸ்டத்தை முழுமையாக உருவாக்குமா என்ற சந்தேகம் உடனே வந்துவிடுகிறது. ஆகவே பூமியிலிருந்து போன செடிகளுடன் பாக்டீரியாக்கள் இணைந்து சிம்பியாட்டிக் ரிலேஷன் வழியாக அந்த எக்கோ சிஸ்டம் உருவாகிறது என்கிறீர்கள்.

ஆனால் உண்மையில் அந்த தயக்கமே தேவையில்லை. பாக்ட்ரீயா மட்டுமே ஒரு முழுமையான எக்கோ சிஸ்டத்தின் அடிப்படையை உருவாக்கமுடியும். பசிபிக் கடலின் அடியில், சூரிய ஒளியே படாத ஆறு கிலோமீட்டர் ஆழத்தில், எரிமலைக்குழம்பு வெளிவிடும் வெப்பம் வருகிறது. அந்த வெப்பத்தை ஆற்றலாக பயன்படுத்தி பாக்டீரியாக்கள் உருவாகி செழித்திருக்கின்றன. தாவரங்களைப்போலவே பாக்டீரியாக்கள் இருக்கின்றன. பாக்டீரியாக்களை சாப்பிடும் சிற்றுயிர்கள் உள்ளன.அவற்றை சாப்பிடும் பெரிய உயிர்களும் உள்ளன. ஒரு முழு எக்கோ சிஸ்டமே உள்ளது. மேலே உள்ள உலகுடன் சம்பந்தமே கிடையாது. ஆற்றலை உணவாக ஆக்குவதுதான் எக்கோ சிஸ்டத்தின் அடிப்படை. அது முழுக்கமுழுக்க பாக்ட்ரீயாவே செய்கிறது.

அது இரண்டு விஷயங்களைக் காட்டுகிறது. பிரபஞ்சத்தில் ஒளியே இல்லாமல் முழுக்கமுழுக்க இருட்டில் இருக்கும் கிரகங்களிலும் உயிர் இருக்கலாம். முழு எக்கோ சிஸ்டமே இருக்கலாம். கிரகத்தினுள் சிக்கிக்கொண்ட பெருவெடிப்பின் அணுவாற்றலின் வெப்பமே அதுக்குப் போதுமனாது. இன்னொன்று, உயிர் உருவாகி செழிக்க தாவரமே தேவையில்லை. முழு உணவுற்பத்தியையும் ஆக்ஸிஜன் உற்பத்தியையும் பாக்டீரியாவைப்போன்ற நுண்ணுயிரே செய்யமுடியும்.

சயன்ஸ் ஃபிக்‌ஷன் எழுதுபவர்கள் வேகமாக பறக்கலாம். அவர்கள் கற்பனை செய்வதைவிட அறிவியல் இன்னும் விரிவாக மாறிவிட்டது

எஸ். சம்பத்குமார்

முந்தைய கட்டுரைவாசிப்பு- ஒருகடிதம்
அடுத்த கட்டுரைசெயலும் கனவும்- கடிதங்கள்