மொழியாக்கம் பற்றி- ஸ்வேதா சண்முகம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். மொழியாக்கம் பற்றி, ஸ்வேதா ஷண்முகத்தின் செறிவான கட்டுரை வாசித்தேன். அவரின் புரிதலும், தேடி அறிந்துகொண்ட தகவல்களும் சரியே. ‘Thrice’ என்ற ஒரு வார்த்தையை எடுத்துக்கொண்டு, மொத்த மொழிபெயர்ப்பு நிலைமையையும் தெளிவாக தற்காலிக நாட்டு நடப்பைச் சொல்லிவிட்டார். ஆங்கிலம் பேசப்படும் நாட்டில் வளர்ந்தவர்கள் மொழிபெயர்க்க வேண்டும் என்பதை நீங்கள் பரிந்துரைப்பதை நானும் வாசித்திருக்கிறேன்.
புனைவுகள் ஒரு புறம் இருக்கட்டும். இந்தியாவில் ஆங்கிலம் படித்து எழுதுபவர்களின் கட்டுரைக்கும், அமெரிக்காவில் வாழ்ந்து தாய்மொழிபோல் கற்று எழுதுபவர்களின் கட்டுரைக்குமே பெரும் வேறுபாடுகள் இருக்கும். இங்கு பட்டப்படிப்புகளுக்கு, கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும்பொழுது , மதிப்பெண்கள், பேராசிரியர்களின் பரிந்துரைகள் என்பதோடு, விண்ணப்பதாரர் அவரைப் பற்றியோ, கொடுத்துள்ள தலைப்பிலோ கட்டுரை எழுதவேண்டும். சிக்காகோ பல்கலைக் கழகத்தில் , இப்படியெல்லாம் ஒரு கட்டுரை கேட்டு இருப்பார்கள். உனது மேசையைத் திற, என்ன பொருள் கிடைக்கிறதோ, அதைப் பற்றி ஒரு கட்டுரை எழுது என்று இருக்கும். இதில் ஆக்கப்பூர்வமான சிந்தனை அல்லாமல், சரியான சொற்களும்/ படிமானங்களும் மொழி தேர்ந்தவனுக்கே வரக்கூடியவையல்லவா? மதிப்பெண்கள் குறிப்பிடும்படியில்லையெனினும், சிறந்த கட்டுரைக்காகவே,கல்லூரியில் இடம் கிடைப்பது உண்டு.
எனது தோழி ஒருவர், என் மகனுக்கு , the goat thief – Permumal Murugan short stories ஆங்கில மொழிபெயர்ப்பை பரிசளித்தார். The well என்று ‘நீர் விளையாட்டு’ கதைக்கு வைத்த தலைப்பே கதையின் படிமத்தை இழந்துவிட்டது என்றான். by the time he finished the first round, என்னுமிடத்தில், இந்த இடத்தில் நானாக இருந்தால், round என்பதற்கு lap என்று போட்டிருப்பேன் என்றான். இப்படி ஒரு கதையிலேயே நூறு சொல்ல ஆரம்பித்துவிட்டான். அதற்கு அவனிடம்,.”உங்களின் கதையை, நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் நாள் ஒன்று வரும், அன்று, அவன் இரண்டாம் முறையாக அதை திருத்தி எழுதட்டும்” என்றேன். இதை இரண்டு மொழி மொழியாக்கம் என ஸ்வேதா, தாங்கள் பரிந்துரைக்கும் முறையை நினைவுகூர்ந்து மொழியாக்கத்தில் உள்ள ஒரு சிக்கலை தீர்க்க ஒரு வழி சொல்கிறார்.
ஸ்வேதாவை ,நான், கடந்தவருடம் விஷ்ணுபுரம் விழாவில் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இவரைப் போன்றவர்களால்தான், தமிழில் வெளிவந்துள்ள மிகச் சிறந்த புனைவுகள் ஆங்கிலத்தில் வெளிவரும் என ஒரு நம்பிக்கை வருகிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள்!
அன்புடன்,
வ. சௌந்தரராஜன்,
ஆஸ்டின்