காடுசூழ் வாழ்வு

அந்தியூருக்குமேலே தாமரைக்கரை ஊர் அருகே நாங்கள் நண்பர்கள் சேர்ந்து அமைத்த ஒரு மலைவிடுதி உள்ளது. ஈரட்டி அருவி என்னும் சிற்றருவிக்குமேலே அமைந்தது. பத்துபேர் வசதியாக தங்கலாம். இருபதுபேர் வரை தங்கியிருக்கிறோம். முன்பெல்லாம் புத்தாண்டை நண்பர்களுடன் இங்கே கொண்டாடும் வழக்கமிருந்தது

செந்தில்குமார், கிருஷ்ணன், அந்தியூர் மணி, ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் ஆகியோருடன் ஈரட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை [6-9-2020] அன்று வந்து சேர்ந்தேன். சில நாட்கள் இங்கே தங்கலாமென்று திட்டம்.  நண்பர்கள் அந்தியூர் மணி, ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் உடன் தங்கினர். எஞ்சியோர் மலையிறங்கினர். நண்பர் திருப்புர் அழகுவேல் வந்தார். நண்பர்களின் அவை கூடி குறைந்து கூடிக்கொண்டிருந்தது. நான் மட்டும் மாறாமலிருந்தேன்.

இது ஈரட்டியில் மழைக்காலம். வழக்கத்தைவிட மழை அதிகம். ஈரட்டி வனவிடுதிக்குச் சுற்றும் காடுசெறிந்த உயரமான மலைகள்தான். மலைகள் முழுக்க பசுமை அலைகொண்டிருக்கிறது. நடுக்காத குளிர் எப்போதும் உண்டு. காற்றில் பசுங்காட்டுக்குரிய மணம். ஈரமும் பசுமையும் ஒன்றின் இரு பக்கங்கள். ஒன்று பிறிதென நடிப்பவை.

காட்டுக்குரிய ஓசைகள். பலநூறு பறவைகளின் ஓசைகளின் திரள், சீவிடுகளின் அடிக்கோடு. ஆனால் அத்தனை ஓசைகளும் இணைந்து ஒன்றாகும் காட்டின் அரவம் நம் செவிகளுக்கு ஓர் ஓசையின்மையையே உருவாக்குகிறது. ஒன்றுமே நிகழாமல் இயற்கை நம்மை சூழ்ந்திருப்பதுபோல தோன்றுகிறது. ஒரு மாபெரும் நிலக்காட்சி ஓவியத்திற்குள் நம்மையும் அசைவில்லா வண்ணத்தோற்றமாக எவரோ வரைந்து வைத்திருப்பதுபோல.

இத்தகைய சூழலுக்கு வந்ததும் நாம் அறிவது முதலில் புற அமைதி. அதை நம் உள்ளம் எதிரொலிக்கும்போது அக அமைதி. விளைவாக பரபரப்பு அடங்கிவிடுகிறது. உடனே தூக்கம் வந்து தழுவத் தொடங்குகிறது. உற்சாகமான உரையாடல்கள் நின்றுவிடுகின்றன. சோம்பலான செல்லப்பேச்சுகள், அரைச்சிரிப்புகள், அப்படியே கண்ணயர்தல், மீண்டும் பேச்சு. கூடவே கொஞ்சம் டீ, கொஞ்சம் நடை.

ஈரட்டி போன்ற அமைதி அடர்ந்த இடங்களில் இரண்டுநாள் தங்கி கடுமையாக உழைத்து ஓரு வேலையை முடித்துவிடலாம் என எண்ணுபவர்கள் உண்டு. அது இயலாத காரியம். வந்ததுமே தூக்கக் கலக்கம், சோம்பல், ஓய்வுதான். நாம் உள்ளூர எத்தனை பரபரப்பானவர்கள், எத்தனை அலைக்கழிவுகள் கொண்டவர்கள் என்பதை இச்சூழலில்தான் உணர்வோம். நாம் உள்ளே இறுக்கி வைத்திருக்கும் விசைச்சுருள் எதிர்ப்பக்கமாகச் சுழன்று புரியவிழத்தொடங்கிவிடுகிறது

முழுக்க தளர்ந்து அவிழ்ந்துவிட்டபின்னர் மீண்டு வர முடியும். பெரும்பாலும் மூன்றாவது நாள். அப்போது சூழல் நமக்கு பழகிவிட்டிருக்கும். உள்ளம் போதிய ஓய்வை எடுத்துவிட்டிருக்கும். நிதானமாக, சீராக வேலைகளைச் செய்யமுடியும். அகம்குவிந்து சிதறல்கள் இல்லாமல் பணியாற்றலாம். முற்றிலும் இன்னொருவராக இருப்போம்

ஆனால் உளஅழுத்தம் நிறைந்தவர்களுக்கு அது இயல்வதில்லை. அவர்கள் மேலும் பலநாட்கள் அரைத்துயில் நிலையிலேயே இருப்பார்கள். ஊட்டியில் இதைப் பார்த்திருக்கிறேன். ஊட்டியில் நாலைந்து நாட்கள் கடந்தால் நான் மிகச் செயலூக்கம் கொண்டவனாக ஆகிவிடுவேன். ஆனால் ஒரு வாரம் வரை இடைவெளியில்லாமல் தூங்கிக் கொண்டிருப்பார்கள் சிலர். அவர்களால் மீளவே முடியாது. அவர்கள் உள்ளூர அனல் அடங்கி குளிர்ந்து கொண்டிருக்கிறார்கள். குணமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

ஈரட்டி மாளிகையின் முகப்பில் ஒரு மரம். அதன் கீழே கல்லாலான இருக்கைகள். அங்கிருந்து சுற்றிலும் காட்டைப் பார்க்கமுடியும். அங்கே இருந்தபடிதான் நாங்கள் உரையாடுவது. மழைநனைந்த கல் கண்மணிகளின் கரிய மினுமினுப்பு கொண்டிருந்தது. மழைச்சூழலின் அரைவெளிச்சம் போல இச்சூழலை துலக்கிக்காட்டுவது வேறில்லை.

ஈரட்டி மலையில் பி.எஸ்.என்.எல் அலைவரிசை மட்டுமே கிடைக்கும், அதுவும் கொஞ்சமாக. மின்னஞ்சல் பார்க்க முடியாது. அதற்கு அடர்காட்டுக்குள் ஒரு சாலையில் மூன்று கிலோமீட்டர் செல்லவேண்டும். அங்கே பிஎஸ்என்எல் மட்டும் இணையம் கிடைக்கும். அதுவும் காற்றில் வந்துபோகும். அரைமணிநேரம் அமர்ந்தால் ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிட முடியும். காட்டில் பசுமை நடுவே அமர்ந்து வானுடன் தொடர்புகொள்வதும் ஒரு விந்தை அனுபவமாகவே இருந்தது

ஈரட்டிக் காட்டில் அமர்ந்து மின்னஞ்சல் பார்த்துவிட்டு நானும் ஈஸ்வரமூர்த்தியும் திரும்பிக்கொண்டிருந்தோம். முன்னரே சென்றுவிட்டிருந்த கிருஷ்ணனும் அந்தியூர் மணியும் ஒரு செந்நாய்க்கூட்டத்தை பார்த்து எங்களை செல்பேசியில் அழைத்து எச்சரித்தனர். அடித்து புரண்டு வெளியே வந்து மாளிகை திரும்பிவிட்டோம். காட்டில் மிக அபாயமான கொல்விலங்கு செந்நாய்க்கூட்டம்தான்- அவற்றை ஒற்றை உடல் என்றே கொள்ளவேண்டும்.

ஈரட்டியில் வனவிலங்கு நடமாட்டம் மிகுதி. சில நாட்களுக்கு முன்பு அங்கே தங்கியிருந்த அன்புராஜ் [வீரப்பனுடன் இருந்து சிறைமீண்டவர். நாடகக்கலைஞர், இயற்கை ஆர்வலர், அந்தியூரில் இயற்கை அங்காடி நடத்துகிறார்] முற்றத்திலேயே ஒரு யானை வந்துவிட்டதை கண்டிருக்கிறார். முன்பு கருஞ்சிறுத்தை தென்பட்டிருக்கிறது.

மழையில் ஈரட்டி ஓடையில் செவ்வெள்ளம். அருவி ஆர்ப்பரிக்கும் ஓசை. சூழ்ந்து எத்தனை வகையான மலர்கள், என்னென்ன பறவைகள் என்று ஓர் ஆய்வாளர் மட்டுமே கணக்கிடமுடியும். நாம் எண்ணி எண்ணி பார்க்கலாம். அதுவே ஒரு கொண்டாட்டம்.

காலைமுதல் மாலை வரை, ஒளி எழுந்து உலகு துலங்கி மெல்ல இருண்டு சாரலுடன் அந்தி வந்து சூழ்ந்து கொள்வதுவரை, பின் மின்சாரம் வந்துசென்றுகொண்டிருக்கும் இரவிலும், மழையின் ஓசையையும் இருட்டுக்குள் காற்றின் முழக்கத்தையும் கேட்டபடி அமர்ந்திருந்து நற்குளிரில் தூங்கச் செல்வது ஒரு பெரிய விடுதலை அனுபவம். அறிந்த உலகமே அருகே இல்லை. சூழ்ந்திருப்பது அறியாத இயற்கை மட்டுமே

ஈரட்டிச் சிரிப்பு…

ஈரட்டி பொதுக்குழு

ஈரட்டி சந்திப்பு

சிரிப்புடன் புத்தாண்டு

முந்தைய கட்டுரைடார்த்தீனியம் [குறுநாவல்]-2
அடுத்த கட்டுரைவெண்முரசில் நாகர்கள்- கல்பனா ஜெயகாந்த்