அரதி : கடிதங்கள்

நீங்கள் அரதி குறித்து எழுதியிருந்த பதிலை படித்தேன்.
அரதியிலிருந்து வெளிவரும் வழி ஏதும் இருந்தால் சொல்லுங்கள்.
 
-ராம்
அன்புள்ள ஜெ,
நலமா?
அரதி படித்தவுடன் தான் தெரிந்தது, சில வருடகளாக எனக்கும் அது இருக்கிறது என்று. அரதியில் இருந்து எப்படி வெளிவருவது? அரதி வராமல் தடுப்பது எப்படி?
சில நேரங்களில் தொடர் தோல்விகளால் மனம் தளர்ந்து வாழ்வே இப்படி தான் என்று ஆகிறது. நான் மட்டும் உலகில் இருந்து பிரிந்து ஒரு இருளான தனி உலகில் வாழ்வது போல் ஆகிறது. என்னிடம் நிறைய சாதிக்கும் திறமை இருந்தும், ஒரு அடிமட்ட நிலை வாழ்க்கைக்கே போராட வேண்டிஉள்ளது.

தங்கள் நிறைய எழுதுகிறீர்கள். எதை விடுவது எதை படிப்பது என்றே தெரியவில்லை.   ஆனால் எல்லா எழுத்தும் என்னை நான் அறிய பெரிதும் உதவுகிறது.
நெறைய எழுதவும்.
மிக மிக நன்றி,
மகேஷ்

அரதி குறித்து எனக்குக் கடிதங்கள் வந்தபடியே இருக்கின்றன. அவற்றில் இருந்து அது ஒரு பொதுச்சிக்கலாக இருக்கிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதற்கான சமூகக் காரணங்கள் என்ன என்பதை விவாதிக்கப்புகுந்தால் பெருகும். பொதுவாக நம்சூழலில் உள்ள போட்டிப் பரபரப்பு மனிதர்களுக்குள் அந்த சலிப்பை உருவாக்குகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது.
மனிதர்கள் இத்தகைய வாழ்க்கைக்காகப் படைக்கப்பட்டவர்கள் அல்ல. இதை குரங்குகளையும் மான்களையும் பிற பெரிய மிருகங்களையும் பார்த்தால் உணர முடிகிறது. அவை ஓய்வெடுக்கும் நேரமே அதிகம். நிதானமாக வாழ்வதே அவற்றுக்கு வழக்கம். அவற்றின் உடலும் மனமும் அதற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. ஆபத்து காலத்தில் அவற்றை அதிவேகமாக செயல்பட வைக்கும் அட்ரினலின் உடனே அவற்றை சோர்வுறவும்செய்கிறது.
நேர்மாறாக சிறுபூச்சிகள் எறும்புகள் போன்றவை ஓயாமல் சுறுசுறுப்பாக இருக்கின்றன. எறும்புகள் தூங்குவதே இல்லை. அவற்றின் வாழ்நாள் மிக மிகக் குறைவு என்பதனால்தான் இந்தச் சுறுசுறுப்பு என்று எண்ணுகிறேன்.
மனிதர்கள் தாங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கும் வாழ்க்கையால் அடையும் மனச்சோர்வை அவ்வாழ்க்கையை மாற்றிக்கொள்ளாமல் முழுக்க நீக்கிவிடமுடியாது என்பதே உண்மை. ஆனால் அது எல்லாருக்கும் சாத்தியமானது அல்ல. ஆகவே என்ன செய்யலாமென்று சிந்திப்பதே முறை.
அரதியை வெல்வதற்கு முக்கியமான தேவை ஒன்று உள்ளது. நமக்கு அரதி என்ற ‘நோய்’ இருக்கிறது என்று உணர்வது. அதாவது அது இயல்பான ஒரு நிலை அல்ல என்று அறிந்துகொள்வதும், அது நம் வாழ்க்கையை அழிக்கக்கூடியது என்று  உணர்வதும், அதை சரிப்படுத்திக்கொள்ள கவனம் எடுத்துக்கொள்வதும். பெரும்பாலானவர்களின் சிக்கல் அதை அவர்கள் உணர்வதில்லை என்பது. உணர்ந்தாலும் அதை ஏதோ தத்துவார்த்தமான– முதிர்ச்சியான– மனநிலை என்று நியாயப்படுத்திக் கொள்வது.
அரதியில் இருந்து தப்ப நாம் முடிவெடுத்தாலே பாதிப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நான் எண்ணுகிறேன். நமக்கு உண்மையிலேயே எது பிடிக்கும், நம்முடைய அகம் எதனால் உண்மையிலேயே மகிழ்ச்சி கொள்கிறது என்று நாமே கண்டுபிடித்தல் அடுத்தபடி. பயணமா, சேவையா, கலையிலக்கியங்களா, சாகஸங்களா எது என்று அறிவது. அது ஒவ்வொருவருக்கும்  ஒன்று. அதைக் கண்டுபிடித்தல் சற்று சிக்கலான விஷயம். பலசமயம் நம்மைப்பற்றி நாம் கொண்டுள்ள சித்திரம் நம்மை தவறான திக்குகளுக்குக் கொண்டுசெல்லக் கூடும்.
நம்முடைய மனம் உவகைகொள்ளும் விஷயங்களைச் செய்வதுதான் அரதியில் இருந்து தப்புவதற்கான ஒரே வழி. எப்போதும் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் செய்வதற்குத் திட்டமிடலாமே. கனவு காணலாமே.  எதிர்பார்க்கலாமே. நம் பகற்கனவுகளில் மீண்டும் மிண்டும் அதைச் செய்யலாமே. மானுட வாழ்க்கை பெரும்பகுதி சித்தத்தில்தான் வாழ்ந்து முடிக்கப்படுகிறது,. வெளியே நிகழும் வாழ்க்கை அதன் ஒரு சிறு துளியே.
ஜெ
முந்தைய கட்டுரைமதுரை ஆதீனம்
அடுத்த கட்டுரைநான் கடவுள்