மலையும் குகையும்

சென்ற ஒன்றாம்தேதி காலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பினேன். ஈரோடு நண்பர்கள் அழைத்துக்கொண்டேதான் இருந்தார்கள். கிளம்பவேண்டும் என்ற துடிப்பு இருந்துகொண்டே இருந்தது. ஆனால் பொய்சொல்லி அனுமதி வாங்கவேண்டாம் என நினைத்தேன். அனுமதி தேவையில்லை என அறிவிக்கப்பட்டதுமே கிளம்பிவிட்டேன்.

காலை ஆறுமணிக்கு காரில் கிளம்பி மதியம் ஒரு மணிக்கெல்லாம் ஈரோட்டை வந்தடைந்துவிட்டேன். மழைமேகங்கள் நிறைந்த வானின்கீழ் அகன்றசாலையில் காரின் முன்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்வதென்பது ஒரு வகை பறத்தல் அனுபவம். வழியில் பழக்கமான ஹரீஸ் மோட்டலில் சாப்பாடு.

ஈரோடு வந்ததுமே நண்பர்களைச் சந்திக்கும் கொண்டாட்டம். நாகர்கோயிலில் இருக்கும்போது இவர்களை சந்திக்க ஏங்கியதுபோல தோன்றவில்லை. சந்திக்கும்போது அந்த ஏக்கம் இருந்தது தெரிந்தது. சென்னை செந்திலின் ராஜ்மகால் கல்யாண மண்டபத்தில் ஓர் அறையில்- அதற்கு மணமகன் அறை என்று பெயர்- தங்கினேன். கிருஷ்ணன், மணவாளன், ஈஸ்வரமூர்த்தி, அந்தியூர் மணி, சிவா, சந்திரசேகர்  என நண்பர்கள் வந்துகொண்டே இருந்தனர்.

 

மாலையில் சென்னிமலைக்கு சென்று அங்கிருக்கும் மணிமலை என்னும் மலைமேல் ஏறினோம். சென்னிமலை முருகன் கோயில் புகழ்பெற்றது. இது அருகே இருக்கும் இன்னொரு மலை. இன்னும் பெருவாரியான மக்களுக்கு அறிமுகமாகாதது. அதோடு பெருந்தெய்வக் கோயிலும் இல்லை. சிறிய ஆலயமாக இருந்தது அங்கிருந்த ஒரு பெரியவரின் முயற்சியால் சமீபகாலமாக திருப்பணி செய்யப்பட்டுள்ளது

மணிமலைக்குச் செல்ல பாதை இல்லை. கொஞ்சதூரம் காட்டுக்குள் செல்லவேண்டும். ஆனால் மலைப்பாறைமேல் ஏறிச்செல்ல புதிதாக அமைக்கப்பட்ட படிகள் உள்ளன. மேலே புதிதாகக் கட்டப்பட்ட கோயில். முதல்தெய்வம் கருப்பராயன். கையில் ஓங்கிய வாளுடன் கருப்பராய சாமி நின்றிருக்கிறது. உள்ளூர் அர்ச்சகர்கள் பூசை செய்கிறார்கள்

நாங்கள் மேலே செல்லும்போதே மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. மழை அணுகி வருவதை மலைமேல் நின்று பார்த்தோம். குளிர்காற்றுடன் சாரல். இருண்ட அமைதி. சற்றுநேரத்திலேயே மழை சூழ்ந்துகொண்டது.  ஈரத்தின் வெளிச்சத்தில் அப்பகுதியே அழகாகத் தெரிந்தது.

மறுநாள் மதியம் கிளம்பி திருச்செங்கோடுக்கு அருகே உள்ள கொங்கணர் குகைகளுக்குச் சென்றோம்.மிக ஒதுக்குபுறமான பகுதி. வெறுமே அடிக்கப்பட்ட கற்களால் கட்டப்பட்ட சுவர்களுடன் புல்கூரை இடப்பட்ட வட்டமான வீடுகள்கூட தென்பட்டன

கிராமக்கோயில் ஒன்று வழியில் இருந்தது. பழைய கற்காலத்தவை என்று சொல்லத்தக்க கல்அறைகளும், கல்லடுக்குகளும் [பதுக்கைகளும்] நிறைந்த ஒரு சிறுசோலை. சுடுமண்சிற்பங்கள் நிறுவப்பட்டிருந்தன. ஏராளமான சூலங்கள் நடப்பட்டிருந்தன. மிகத்தொன்மையான , அனேகமாக கற்காலத்திலிருந்தே இருந்துவரும், ஓர் இடுகாடு அது.

 

 

கொங்கணர் குகைகள் எனப்படுபவை மலைச்சரிவில் அமைந்த இயற்கையான குகைகள். செல்லும் வழிமுழுக்க புதர்க்காடு. அரளிமரங்களே குறுங்காடாக மாறிய பாதை. வேம்பு, கோங்கு போன்றவை சமீபத்தைய மழையால் செழித்து நின்றிருந்தா

அங்கே கொங்கண முனிவர் தவம் செய்வதாக தொன்மம்– சமீபத்தைய தொன்மம்தான். உள்ளே வைக்கப்பட்டிருந்த சிலைகள் எல்லாமே ஐம்பதாண்டுகளுக்குள் நிறுவப்பட்டவை. சிவன், கருப்பராயன், துர்க்கை, கொங்கணமுனிவர்.

பார்த்ததுமே அது சமணக் குடைவரை என்று தோன்றியது. ”ஏதாவது கல்வெட்டு இருக்கா கிருஷ்ணன்?” என்றேன். ”இல்லை” என்றார் கிருஷ்ணன், அவர் இருமுறை அங்கே வந்திருந்தார். “துப்புரவாக பாத்திட்டேன் சார், சாதாரண குகைதான்”

ஆனால் சென்று மேலே பார்த்ததுமே நான் கல்வெட்டை கண்டுகொண்டேன். பிற்காலச் சோழர்காலத்தையது என்று சொல்லத்தக்க கல்வெட்டு. தமிழின் எழுத்துருதான். ஒற்றைவரி. அருகிலேயே கற்காலக் குகையோவியங்களையும் கண்டுகொண்டோம். ஓரிரு உருவங்கள்தான். மேலும்கூட நிபுணர்கள் கண்டுகொள்ளக்கூடும். கண்பழகி அவற்றை அடையாளம் காணும்படி தேர்ச்சி கொண்டவர்களால்தான் அவற்றைக் காணமுடியும்

ஆனால் குகையின் பெரும்பகுதி உள்ளே பந்தங்களும் விளக்குகளும் அடிக்கடி ஏற்றப்படுவதனால் கருமை படிந்துவிட்டது. மாதந்தோறும் பௌர்ணமிக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள் என்று தெரிகிறது.

அப்பகுதி முழுக்க குகைகள்தான், சிறிதும் பெரிதுமாக. மேலே உள்ள குகை ஒரு சுரங்கப்பாதை போலவே வளைந்து உள்ளே சென்று கன்னங்கரிய இருளுக்குள் இருக்கும் சிற்றறைக்குச் செல்கிறது. அங்கே ஒரு சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. நாங்கள் செல்லும்போது எவரோ ஏற்றிவைத்த தீபம் எரிந்துகொண்டிருந்தது. முச்சுத்திணறவைக்கும் இருண்ட சிறிய குகைமுடிச்சு அந்த அறை

அப்பகுதியே உயரமற்ற மொட்டைப்பாறைகளாலும் சரிவுகளில் செழித்த முள்மரங்களாலும் ஆனது. பொதுவாக மழை குறைவான கரட்டுப்பகுதி. இந்த பருவகாலத்தில் நல்ல மழை பெய்து செழித்து தென்படுகிறது. சிவந்த பாறை, பல இடங்களில் ஊன்போலவே தோன்றும். ஊறி வழியும் மழைநீர்த்தடம் குருதிவடு என்றே தெரிந்தது.

மலைச்சரிவில் நின்று பார்த்தால் சுற்றிலும் பச்சைக்காடுகள் அலைகளாக விரிந்த நிலம். மழைக்காலத்திற்குரிய மென்வெளிச்சம். குளிர்ந்த காற்று. அந்தத் தருணத்தின் விடுதலையைச் சொல்லின்மையில் கொண்டாடவேண்டும் என்று தோன்றியது

மலைப்பாறை இடுக்கில் ஒரு காந்தள் மலர்ந்திருந்தது. குருதிப்பூ என்று கபிலர் சொல்லும் மலர். பின்னணியில் மலை அமைந்திருக்க செங்காந்தளைப் பார்ப்பது ஒரு குறிஞ்சி அனுபவம்.

வரும்போதே ஒரு முடிவெடுத்தேன். இனி கொரோனா பயம் இல்லை. எந்த எச்சரிக்கையும் கொள்ளப்போவதில்லை. வந்தால் தாங்கிக்கொள்வோம், செல்வதென்றாலும் அவ்வாறே. இனி இங்கிருந்தே ஆகவேண்டும் என்பதொன்றும் இல்லை. குடும்பத்தவர் நலன் கருதியே இதுவரை எச்சரிக்கை. பொறுப்பில்லா குடிமகனாக வாழவேண்டாம் என்று கருதியும். இனி அக்கவலைகள் இல்லை.

ஒருமாதம் தொடர் பயணங்கள் உத்தேசித்திருக்கிறேன். இங்கிருந்தும் பல பயணங்கள். நண்பர்கள் வந்துசேரவிருக்கிறார்கள். வாழ்க்கை மூடிக்கொண்டு அமர்வதற்குரியதல்ல என்பதே எப்போதும் என் கொள்கை. நோய் என்ன செய்யும், நமன் என்ன செய்ய இயலும்?

முந்தைய கட்டுரைஉடையாள்-5
அடுத்த கட்டுரைவெண்முரசு- வினாக்கள்-5