உடையாள்- கடிதங்கள்

அன்புள்ள அப்பாக்கு,

இன்று நானும் என் தங்கையும் பாரதி (7 வகுப்பு) உடையாள் படித்தோம். முதல் புத்தகம், வாசிக்கிறாள். என்னது கட்டாயாத்தின் காரணமாக, மிக்கவும் ஆருவமாக படித்துவிட்டுஎல்லாரிடமும் கதை சொன்னாள் ப்ரின்ட் எடுத்து தரவேண்டும் என்றால் அதனால் நான் புத்தக வடிவில் அமைத்தேன். அதன் வடிவம்  உங்களிடம் பகிரிந்து கொள்ள அனுப்புகிறேன்.

நன்றி
காய்த்ரி . த

அன்புள்ள காயத்ரி

அழகாக வடிவமைத்திருந்தீர்கள்.

உடையாள் ஒரு கதை மட்டுமல்ல. அதில் தத்துவம் அறிவியல் போன்றவை உள்ளன. அவற்றையும் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.  பலமுறை வாசிக்கவும் வேண்டும். இப்போது புரியாதவை பிறகு புரியும்

வாழ்த்துக்கள்

ஜெ

 

அன்புள்ள ஜெ

ஒரு சிறு சந்தேகம் அதற்காகவே இந்த கடிதம். உடையாள் குறுநாவலை இருதனங்களாக தொடர்ச்சியாக வாசிக்கிறேன். நேற்றைய கதை பகுதியை என் அத்தை மகளுக்கு சொன்னேன். பாதியிலே நின்றுவிட்டதால் முடிவில்லையா என்றாள். தினம் ஒரு பகுதி வரும் நான் படித்து விட்டு உனக்கு கதை  சொல்கிறேன் என்றேன்.

பின் பனிமனிதன் கதையை சொல்ல தொடங்கினேன். பனிமனிதனை ஒரிரவு உட்கார்ந்து நாலு மணி நேரத்தில் வாசித்து முடித்தேன். உற்சாகமான இரவு அது. குழந்தையாகவே மாறி கனவில் லயித்து விட்டேன். பின் அதிலிருந்த ஆன்மீக சாரமான கேள்விகளை விளக்கி கொண்ட பின் என் புரிதல் மகிழ்ச்சி எல்லாவற்றையும் சேர்த்து உங்களுக்கு ஒரு கடிதம் எழுதிட வேண்டும் என நினைத்திருந்தேன். சோம்பேறித்தனத்தால் அப்படியே விட்டுவிட்டேன்.

பனிமனிதனை அவளுக்கு  சொல்லிமுடித்தேன். கதை நன்றாக  இருக்கிறது. புத்தகத்தில் படித்தால் இன்னும் நிறைய சின்னசின்ன விஷயங்களோடு  நல்லா இருக்குமல்லவா என்ற கேள்விக்கு ஆம் என சொல்லி முடிப்பதற்குள் தனக்கு புத்தகம் படிக்கும் பழக்கமும் ஆர்வமும் இல்லை என்று கூறிவிட்டாள். கல்லூரி நான்காம் படிப்பதற்குள்ளேயே பெரும்பாலன மாணவர்களுக்கு வாசிப்பதற்கான பொறுமையும் குழந்தைத்தனமான ஆர்வமும் போய்விடுகிறது போலும். நம்  சூழலில் தான் காரணங்கள் உள்ளன என்பது என் எண்ணம்.

பனிமனிதன் அவளுக்கு ஒரு கதை மட்டுமே நிற்கிறது. எனக்கு அதில் பாண்டியன் நீல வைரத்தை நோக்கி அதீத ஈடுபாடுதுடன் செல்வதும் மலை மீதிருந்து தனது பெருபிம்பத்தை பார்த்து தனக்குதானே நான் நான் நான்…என கூறிக் கொள்வதும் உறைந்த ஏரியின் அடியில் உள்ள விலங்குளின் சித்திரமும் நெருப்பு ஆற்றின் உருவமும் கிம்மின் எப்போதைக்குமான மௌனமும் யதியை சந்தித்த கணத்தில் அவர்களில் ஒருவராதலும் தன்னையே இழத்தலும் அடுத்த போதிசத்வராக அவன் தேர்தெடுக்கப்படும் போது டாக்டர் புத்தராகிய கிம்மின் காலி்ல் விழுந்து வணங்குதலும் அவர்கள் மூவரும் மூன்று நிலைகளில் இருப்பதாகவும் என நிறைய கேள்விகள் உள்ளன. அவற்றை தேடி கண்டடைந்தால் மேலும் நிறைவு தரும்.

என் கேள்வி என்னவெனில் இதுபோன்று ஒரு  இலக்கிய பிரதி ஏற்படுத்தும் தாக்கத்தை ஒரு தேர்ந்த கதைச்சொல்லியால் பேச்சின் மூலம் இன்னொரு நுண்ணணர் மிக்க செவியாளனிடம் ஏற்படுத்த முடியுமா ? அவ்வாறு உங்களுக்கு நிகழ்ந்துள்ளதா?

இறுதியில் எனது சிறு கேள்விக்கு  சுற்றிசுற்றி சொல்லி உங்கள் நேரத்தை எடுத்து கொண்டதற்கு மன்னித்து கொள்ளவும். இப்படி வளவளவென பேசுவது தவறு தான் எனினும் இதை பற்றி பேச உங்களை விட்டால் எனக்கு வேறு யாருடனும் பேசுவதற்கு ஆளில்லை. எனவே தான் இப்படி.

அன்புடன்

சக்திவேல்

 

அன்புள்ள சக்திவேல்

கதை என நாம் சொல்வது வாழ்க்கையில் இருந்து ஒருங்கிணைந்த வடிவில் திரட்டிக்கொள்ளும் ஒரு நிகர்வாழ்க்கை. அதன் ஒரு வடிவமே எழுத்தில் உள்ளது. எழுத்தில் இருப்பதுதான் மிக விரிவான வடிவம். பேச்சில் நடிப்பில் வருவதெல்லாம் அதன் சுருக்கமான வேறுவடிவங்கள்.

மனிதர்களில் இருவகை உண்டு. கற்பனை இயல்பு அடிப்படையாக உள்ளவர்கள், தர்க்க இயல்பு அடிப்படையாக உள்ளவர்கள். எல்லா வகையினரும் கதை கேட்கலாம். ஆனால் கற்பனை உடையவர்களே கதையை முழுமையாக அடைகிறார்கள். அவர்கள்தான் மேலும் விரிவாக கதை தேவைப்படுபவர்கள். அவர்கள்தான் கதைகளை படிக்க முற்படுகிறார்கள்

தர்க்க அடிப்படையிலான மனமுள்ளவர்கள் கதையில் இருந்து சில செய்திகளை மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள். அச்செய்திகளை அறிவாக அடைகிறார்கள். கற்பனை உள்ளவர்கள் வாழ்ந்து பார்க்கிறார்கள்

கதையை நாம் எவருக்குச் சொல்கிறோம் என்பது முக்கியமானது. அதற்கேற்ப கதையை விரிக்கவோ சுருக்கவோ செய்யலாம்

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு- வினாக்கள்-4
அடுத்த கட்டுரைமூலநூல்களின் மொழியாக்கமும் மறுபதிப்பும்