பெர்க்லி கடிதம்

அன்பின் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு:

திரு.அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் தர்க்கங்களை/விளக்கங்களை வாசித்தேன். இதை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்ற குழப்பம் உள்ளது. உங்கள் வலைத்தளத்தை இந்த வாதத்திற்கு பயன்படுத்துவதில் தயக்கங்களுண்டு. ஆயினும் என் விளக்கங்களுக்குக் கடமைப்பட்டுள்ளேன்.

திரு.அநீ யின் எடுத்துக்காட்டுகளிலிருந்து, அந்த நூல் முன்வைக்கும் முடிவுகளுக்கு ஒருவர் தாவமுடியும் என்பதே வியப்பளிக்கின்றது. It is a big leap of faith.

பேராசிரியர் மறைமலை அதே இடுகையில் “India- A leading light of Philosophy, An abode of religious tolerance” என்று நம் பாரம்பரியத்தில் பெருமை கொள்கின்றார். “Our younger generation, I am sure will change this ugly scenery, And Again our country will be A cradle of International brotherhood” என்று நம் இளைய தலைமுறையில் நம்பிக்கை கொள்கின்றார். அந்தக் கொடூர நிகழ்வுகளைக் கண்டித்து மட்டுமே கடும் சொற்களைப் பயன்படுத்துகின்றார்.

பேராசிரியர் ஹார்ட், கம்பன் மேல் தீராக் காதல் கொண்டவர். வள்ளுவன் கூட அவருக்கு ஒரு பொருட்டில்லை. அவரை அறிந்தவர்களுக்கு இது நன்கு தெரியும். அவரின் கம்பராமாயணக் கண்ணோட்டத்தை, ”This nuanced anti-Brahminism is camouflaged in academic language”, என்று கூசாமல் முன்வைக்க முடியும் என்பது அதிர்ச்சி அளிக்கின்றது. ‘Breaking India’ நூலில் ‘Berkeley Tamil Chair’ பற்றிய குறிப்புகளுக்கு பேராசிரியர் ஹார்டின் பதில், இந்த இடுகையில்:

http://tamil.berkeley.edu/category/blog

பேராசிரியர் நார்மன் கட்லர், இன்று நம்மிடையே இல்லை. அவரை யூதரென்றே நினைத்திருந்தேன். (என் கணிப்பு தவறாகவே இருக்கலாம். எம்மதமாயினும் ஒன்று மட்டும் உறுதி. அவர் மதவாதி இல்லை). அவரைப் பற்றிய அந்நூலிலுள்ள கண்ணோட்டம் சாத்தியமென்றே அவர் நினைத்திருக்கமாட்டார். இங்குள்ள வழக்கப்படிக் கூறுவதென்றால், he must be turning in his grave now.

சுருக்கமாக – மேற்கின் வசதிக்கோ, கிறுத்துவ சபையின் ஆதரவிற்கோ, இந்தியாவைத் துண்டாக்கவேண்டும் என்ற ஆவலிலோ நிறுவப்பட்டதல்ல பெர்க்லி தமிழ் அறக்கட்டளை. தமிழும் பல காலம் வாழ வேண்டும் என்ற ஆர்வத்தில், பல இன்னல்களைக் கடந்து, தமிழ் ஆர்வலர்களின் உழைப்பில் நிறுவப்பட்டது. அதன் மேல் எவ்வளவு சுலபமாகச் சேர் பூசிவிடுகின்றார்கள் நம்மவர்கள். மனம் கணக்கின்றது. சிலருக்கு ‘அறம்’ என்பது கதைகளுக்கு அழகு கூட்டுவதற்கு மட்டும்தான் போலும்.

அன்புடன்,

குமார் குமரப்பன்

அன்புள்ள குமார் குமாரப்பன்

என்னுடைய இணைய தளத்தில் வந்த ஒரு கட்டுரையில் இருந்த ஒரு சுட்டியில் இருந்த குறிப்பு என்பதானால் அதற்கு என் இணையதளத்துடன் தொடர்பேதும் இல்லை என்றாலும் தங்கள் மறுப்பை வெளியிட்டேன்.அதற்கான பதிலையும். மீண்டும் உங்கள் மறுப்பையும் வெளியிடுகிறேன். மேற்கொண்டு இந்த விவாதத்தை நீங்களே வேறு தளத்தில் தொடரலாம்.

இதுபற்றி எனக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் தெரியாது. ஆனால் இத்தகையா ஐயங்கள் பெர்க்லி மீதும் ஹார்ட் மீதும் ஃபெட்னா மீதும் இருப்பதை நான் பரவாலாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

அந்த ஐயங்கள் எழுவதைப்பற்றி நீங்கள் பரிசீலிக்கத்தான் வேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைஅமிர்தம் சூரியா
அடுத்த கட்டுரைசோற்றுக்கணக்கு-கடிதம்