மகாபாரத கால சீனம். மிகப்பெரிய கப்பல்களோடு வணிகம் செய்யும் பெருநிலமாக காட்டப்படுகிறது. கங்கைச்சமவெளிக்கு முன்னாலேயே மஞ்சள் நதி நிலங்கள் பேரரசுகளாகிவிட்டனவா?
கணேஷ்
அன்புள்ள கணேஷ்
மகாபாரதம் இரும்புக்காலகட்டத்தின் இறுதியில் நிகழ்கிறது. இரும்பில்லாமல் மகாபாரதப்போரே இல்லை. அத்தனை விவரணைகள் உள்ளன. உலோகம் என்றாலே இரும்பு என்ற அளவுக்கு கூறப்படுகிறது. அப்படியென்றால் மூவாயிரத்தைநூறு முதல் நாலாயிரமாண்டுகள் தொன்மையானது மகாபாரத காலகட்டம்
அதற்கும் முன்னரே சீனம் உயரிய நாகரீகத்துடன், சர்வதேச வணிகத்துடன் சிறப்பாக விளங்கியிருக்கிறது. இன்றைய தரவுகளின் படி மகாபாரதக் காலகட்டத்தில் சீனாவில் பேரரசுகளும் பெருவணிகமும் உருவாகி நிலைகொண்டிருந்தன
நமக்கு மகாபாரதக் காலகட்டத்தைச் சேர்ந்தவை என உறுதிசெய்யத்தக்க உயர்கலை வெளிப்பாடுகளோ உயர்கைவினை வெளிப்பாடுகளோ கிடைக்கவில்லை. ஆனால் அக்காலத்தையவை என கிடைக்கும் சீனப்பொருட்கள் மிகமிக நுட்பமானவை. முறையான ஆலைகளில் தயாரிக்கப்பட்டவை.
வெண்கலக்காலத்திலேயே சீனாவில் நிலையான பெரிய அரசுகள் இருந்திருக்கின்றன. உயர்தொழிலும் வணிகமும் நிலைகொண்டிருக்கிறது. மகாபாரதக் காலகட்டத்தில் சீனாவில் ஸியா வம்சம் [Xia dynasty] ஆட்சி செய்திருக்கிறது என ஊகிக்கப்படுகிறது
ஜெ
என்னுடைய பெயர் நினேஷ்குமார். நான் பன்னிரு படைகளம் நாவல் எழுத ஆரம்பித்த பொழுதில் இருந்து தினமும் இணைதளத்தில் படிக்க ஆரம்பித்தேன். 24 வது நாவல் வரை தினமும் படித்து விட்டேன். ஆனால் விவாதத்திலும் பங்கு கொள்ளாததால் நான் முழுவதாக வெண்முரசை உள்வாங்கவில்லை என்பதை இப்பொழுது சில விவாத நிகழ்வில் பங்கு கொள்ளும் போதுதான் புரிந்தது.
அதனால் முதற்கனலிருந்து நாவலாக படிக்க ஆரம்பித்தேன். இப்பொழுது நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சொன்ன ஒரு வார்த்தை என்னை மிகவும் யோசிக்க வைக்கிறது. ஒரு நாளுக்கு ஒரு அத்தியாயம் படிக்கும் பொழுது மனம் அதிலேயே சுற்றிக் கொண்டு இருக்கும். ஆனால்மூன்று நான்கு நாட்களில் ஒரு நாவலைப் முடிக்கும்போது அவ்வளவு தூரம் உள்வாங்க முடியாது என்ற சந்தேகம் வருகிறது. இப்பொழுது புதியதாக வாசிக்க ஆரம்பிக்கும் வாசகர்ளுக்கு எவ்வாறு படிப்பது என்று உங்களுடைய அறிவுரை என்ன?
நினேஷ்குமார்
அன்புள்ள நினேஷ்குமார்
புதியதாக வாசிப்பவர்களிடம் இனி நாளொன்றுக்கு ஓர் அத்தியாயம் மட்டும் வாசியுங்கள் என்று சொன்னால் நடக்குமா? நாளொன்றுக்கு ஒர் அத்தியாயம் வாசிப்பதில் ஒரு நன்மை உண்டு. அத்தியாயங்களை கூர்ந்து வாசிக்கலாம். ஆனால் 3 மாதம் ஆகும் முடிக்க. ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் அந்ந்நாவலின் உலகுக்குள் ஆழ்ந்திருக்கும் உணர்வு அமைகிறது. அது நாள்தோறும் படித்தால் கிடைக்காது
எப்படியிருந்தாலும் இந்நாவல்களை ஒற்றை வாசிப்பில் அப்படி கடந்துசெல்ல முடியாது. ஏனென்றால் இவை நாமறியாத உலகைச் சேர்ந்தவை. தத்துவ விவாதங்கள் கொண்டவை. வாசக இடைவெளி நிறைந்தவை. ஊடுபாவுகளாக ஓடும் கதைகளாலானவை. ஆகவே இன்னொருமுறை வாசிப்பது, தகவல்களைக் கோத்துக்கொள்வது, பிறருடன் விவாதிப்பது, வாசகர்கடிதங்கள் மற்றும் கட்டுரைகளை வாசிப்பது என தொடர்ந்து முயல்வதே சிறந்தவழி
ஜெ
உளவியலில் மனித மனத்தை சிக்மண்ட் ப்ராய்ட்-க்கு நிகராக ஆராய்ந்து பார்த்து, அந்த எண்ணங்களை எழுத்தாக்கும் போதும், எதிர்வினையாற்றி எழுதும் போதும், மனக்கொந்தளிப்பை எப்படி கையாள்கிறீர்கள்..உதாரணமாக இருட்கனியில் கர்ணன் தன் தாய் ராதையை பார்க்க செல்லும் போது, அவள் புலம்புவதும், அதற்கு எதிர்வினையாற்றும் கர்ணனின் தந்தை கூறுவதும்
பிரகாஷ் திலீப்
அன்புள்ள பிரகாஷ்
பொதுவாக ஃப்ராய்டியம் போன்ற கொள்கைகள் எழுத்தாளனுக்கு ஓரளவுதான் உதவும். எழுத்தாளன் ஒரு வாழ்க்கைச்சந்தர்ப்பத்தை இருவகையில் அறிகிறான். ஒரு ஆராய்ந்து அறிவது. இரண்டு கற்பனையால் உணர்வது. ஆராய்ந்து அறியும் தளத்தில் அவன் கற்கும் கொள்கைகள் உதவுகின்றன. அந்தவகையில் நவீனச்சிந்தனைகள் எல்லாமே எழுத்தாளனுக்கு உதவுபவைதான். எழுத்தாளன் அவற்றைக் கற்றாகவேண்டும். ஆனால் ஞானி சொன்னதுபோல கற்று மறக்கவேண்டிய களவுதான் அது. அவனுடைய அனுபவம்தான் கற்பனையாக விரியவேண்டும்
நான் எழுதும்போது அங்கே என்னையே நிகழ்த்திக்கொள்கிறேன். அதன்பின் மீண்டுவருகிறேன். எழுத்து என்பது அதுமட்டுமே
ஜெ
கர்ணனின் துரியோதனனின் பிறகு இளைய யாதவரின் மறைவு பின்பு நடப்பவை எல்லாம் அந்த பின்னணியின் கருமையை தாண்டி கலை அமைதியை நிறுவும் விதமாக அமைத்திருப்பது அந்த தருணத்தில் எழுதி சென்றதா அல்லது கூரிய திட்டமிடலா?
அமர்
அன்புள்ள அமர்
இத்தகைய எழுத்து என்பது அத்தருணத்தை ஆசிரியன் பலவாறாக உடைந்து நடிப்பதுதான். அவ்வண்ணம் நடிப்பதற்கு உண்மையான அனுபவம் கொஞ்சம் இருந்தாகவேண்டும், கூடவே விரியும் கற்பனையும். நான் இறப்பை கொஞ்சம் பார்த்தவன் அல்லவா? கர்ணனின் சாவுக்கு துரியோதனனாக நான் என் 19 வயதிலேயே இருந்திருக்கிறேன். என் அலைக்கழிப்புக்கள் அனைத்தும் தொடங்கியது 1981ல் என் உயிர்நண்பன் ராதாகிருஷ்ணனின் தற்கொலையுடன்
ஜெ
வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு அல்லது எழுத நினைப்பவர்களுக்கு பெரும் சோர்வையும்,தன்னம்பிக்கை குறைவையும் ஏற்ப்படுத்துவதாக வெண்முரசு அமையுமோ?..
கிரிதரன் கவிராஜா
அன்புள்ள கிரிதரன்
அப்படி அல்ல, முந்தைய தலைமுறையினரின் படைப்புக்கள் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பவையாக, மேலும் கற்றுக்கொடுப்பவையாகவே அமையும். ஒரு மொழியில் உயரிலக்கியம் இருக்கும்போதுதான் அதன் தொடர்ச்சியாக அடுத்தகட்ட இலக்கியம் உருவாகி வருகிறது.
தொடக்ககால இலக்கியவாதி முந்தைய தலைமுறை எழுத்துக்களையே கூர்ந்து வாசிக்கிறான். அவற்றிலிருந்து கற்றுக்கொள்கிறான். செல்லும்வழிகளை, சாத்தியங்களை, மொழியை. கூடவே அவன் உணரும் ஒரு போதாமையும் இருக்கும், அதை தான் நிரப்ப முடியுமென எண்ணுவான். அதுவே அவனை எழுதவைக்கும்
ஜெ
[வெண்முரசு நிறைவை ஒட்டி குருபூர்ணிமாவின்போது நிகழ்த்திய உரையாடலில் எழுத்தில் கேட்கப்பட்ட வினாக்கள்]