வெண்முரசு- வினாக்கள்-5

வெண்முரசு விவாதங்கள்

வணக்கம் சார்…பலவேறு பிரதான கதாபாத்திரங்களுக்கு ஒரு புதிய வார்ப்பினை அளித்திருக்கிறீர்கள். அதாவது துரியோதனனும், திருதராஷ்டிரனும் மாபெரும் நற்குணங்களோடு வருகிறார்கள். தருமர் இயல்பான மனிதனுக்குள்ள எல்லா நொய்மைகளோடும் வருகிறார். இது நீங்கள் திட்டமிட்டு அமைத்ததா? எனில் ஏன்?

மதி தியாகராஜன்

அன்புள்ள மதி

அதை நான் திட்டமிட்டு அமைக்கவில்லை. இதெல்லாமே மிகச்சிறிய வயதில் பதிவானவை. வாசிக்க வாசிக்க வளர்ந்தவை. வாழ்வில் கண்டடைந்தவை. புனைவின் தருணங்களில் இயல்பாக எழுந்து வளர்பவை. நாம் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தினால் அது இலக்கியமல்ல. அது ஏன் அவ்வாறு என்றால் அது வாழ்க்கை என்றே சொல்ல முடியும்

வேண்டுமென்றால் ஒரு வாசகனாக ஒன்று சொல்வேன். திருதராஷ்டிரர் துரியோதனன் போன்றவர்களுடையது ஓர் உயரநிலையிலிருந்து வீழ்வது. ஆகவே அவர்கள் தொடக்கத்திலிருந்து உயர்வாகத் தெரிகிறார்கள். யுதிஷ்டிரர் சாமானியர்களின் அறத்துயர் அனைத்தும் கொண்டவர். அவரே அறுதியான வெற்றியையும் அடைகிறார்

ஜெ

***

தீர்க்கதமசுக்கு பார்வையற்ற போதும்,.. கர்ணனின் கவச குண்டலக் கோலம் பார்க்கமுடிந்த தருணம் அற்புதமானது..அதனுடைய அழகு இன்னும் மனதில் நிற்கிறது.. அக்காட்சியின் பின்னணியை விவரிக்க முடியுமா

ரஞ்சனி பாசு

அன்புள்ள ரஞ்சனி

அதுவும் மரபிலுள்ளதுதான், சந்திரமதியின் தாலி கணவனுக்கு மட்டுமே தெரியும் என்ற தொன்மம் உண்டு அல்லவா?

கர்ணனின் கவசகுண்டலங்களை ஒரு குணரீதியான விஷயமாக, நுண்வடிவம்கொண்டதாக உருவாக்கிக்கொண்டேன். அப்படியென்றால் எவர் அதையெல்லாம் பார்ப்பார்கள் என்பது ஓர் இனிய புனைவாடல். நாவல் முழுக்க பல விழியிலாதோர் அதைப் பார்க்கிறார்கள். அணுக்கமானவர்கள் பலர் பார்த்ததே இல்லை

ஜெ

***

நீங்கள் மிக விரிவாக கதாபாத்திரங்களின் உணர்வுகளை விவரிக்கும்போது அதனால் பாதிக்கப்படுவீர்களா? எனில் எப்படி மீள்வீர்கள்? உதாரணமாக, சிசுபாலனாக கிருஷ்ணரை வெறுக்கவேண்டும். அர்ஜுனனாக அவரை விரும்பவேண்டும்..

எஸ்.பாலகிருஷ்ணன்

அன்புள்ள பாலகிருஷ்ணன்

இல்லை, வெறுப்பு விருப்புகள் நிகழ்வதில்லை.ஆனால் ஒரு கதகளியில் எல்லா வேடங்களையும் கட்டி ஆடிய பெருங்களைப்பு உருவாகும். ஆட்டம் முடிந்த நடிகர்கள் அறுந்துவிழுந்த கொடிபோல கிடப்பதைக் கண்டிருக்கிறேன். அந்நிலை. அவர்கள் பெரும்பாலானவர்கள் குடியைக்கொண்டு கடந்துவருகிறார்கள். நான் அது இல்லாமலேயே சமாளித்தேன்

ஜெ

***

​மௌரியர்கள் வரை வந்து சேரும் குல நீட்சி என்பது வெண்முரசின் இயல்பு படி அப்படியும் இருக்கலாம் என்ற சாத்தியமா அல்லது அதற்கு வரலாற்று, சமூகழியல் ஆதாரங்கள் எதையாவது கண்டடைந்துள்ளீர்களா?

அருணாச்சலம் மகாராஜன்

அன்புள்ள அருணாச்சலம்

இலக்கியத்துக்குச் சொல்லாராய்ச்சியே போதும். சொல்லொருமை கொண்டு அவ்வாறு ஊகிக்கலாம். அதுவே வெண்முரசில் உள்ளது. வரலாற்றாய்வுக்கு அது போதாது

ஜெ

***

அஸ்தினாபுரம் போன்ற வட இந்திய பகுதிகள் (ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹிமாசல பிரதேசம், பீகார், ராஜஸ்தான், குஜராத் முதலிய மா நிலங்கள்) நீங்கள் வாழ்ந்த ஊர்கள் அல்ல. ​நீங்கள் பயணம் செய்த பகுதிகள். நீங்கள் மேற்கொண்ட இந்தவகையான பயணங்கள் வெண்முரசிக்குள் எப்படி உள்வருகின்றன? வெண்முரசில் இந்த பயண அனுபவங்களின்பங்கு என்ன? ஏனெனில் நான் மகாபாரதம் சார்ந்த குருஷேத்ரம் போன்ற சில ஊர்களை பார்த்திருக்கிறேன். ​சில இடங்களை வரலாற்று ரீதியாக நாம் துல்லியமாக நிறுவ முடியாது. பெரும்பாலும் ஊகங்களாவும் தொன்மங்களாவும் உள்ளன. இதை எப்படி வெண்முரசில் அணுகி இருக்கிறீர்கள்?

இளையராஜா

அன்புள்ள இளையராஜா,

நான் மகாபாரதம் சார்ந்த இடங்களுக்கெல்லாம் பயணம் செய்திருக்கிறேன். அவற்றில் பல இடங்களை துல்லியமாக வகுக்க முடியாது, தொல்லியல் சான்றுகள் இல்லை என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் பெரும்பாலும் இடங்களில் மாறுதல்கள் இருக்காதென்பதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம்

ஒன்று, நிலவியல். குருக்ஷேத்திரம் என்பதுதான் பிந்தைய பானிப்பட். அங்கே போர் நடந்துகொண்டே இருந்திருக்கிறது. ஏனென்றால் போர் நிகழ் உகந்த வெட்டவெளி, பொட்டல்நிலம் அது. அப்படி இன்னொரு இடம் இல்லை. அப்படி பல இடங்கள் நிலவியல்படி இன்னொரு இடத்தில் இருந்திருக்க வாய்ப்பு குறைவு

மகாபாரதமே பெரும்பாலான இடங்களின் நிலவியல்செய்திகளை வர்ணனைகளில் தருகிறது. பயணம்செய்யும் வழிகளையும் சொல்கிறது. அவற்றைக்கொண்டு பார்த்தாலும் இன்றுள்ள இடங்கள் பிறிதாக இருக்கும் வாய்ப்பு மிகக்குறைவாகவே தெரிகிறது

இன்னொன்று, தொன்மநம்பிக்கை. இந்த இடம் என்று தொன்மம் ஓர் இடத்தை நிறுவினால் அது மக்கள்மனதில் நிலைபெற்றுவிடுகிறது. அந்த இடத்தின் முக்கியத்துவம் மாறலாம். அந்த இடம் மாறுபட வழியே இல்லை.

இந்தப்பகுதிகளுக்கெல்லாம் செல்லும்போது உள்ளத்தில் பதிந்தவை வெண்முரசில் உள்ளன. இதையெல்லாம் எழுதப்போகிறோம் என்ற விழிப்புணர்வுடன் சென்றவை என்பதனால் அந்நினைவு கூர்மையாகவே இருக்கும்.

ஜெ

***

சில புனையப்பட்ட நிகழ்வுகள், பின்னாளில், ஒரு வரலாற்று சான்றாக தவறாக எடுத்தாளப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனை எப்படி பார்க்கிறீர்கள். உதாரணமாக, விசித்திரிய வீரியனுக்கு மருத்துவம் பார்க்க, அகத்தியர் வருவது.

நா, விஜயராகவன்

அன்புள்ள விஜயராகவன்

அப்படிப்பார்த்தால் எந்த புனைவுக்கும் அந்த வாய்ப்புண்டு. தல்ஸ்தோயின் போரும் அமைதியும் நெப்போலியனை ஒருவகையில் காட்டியது. கல்கியின் அலையோசை சுதந்திரப்போராட்டத்தை ஒருவகையில் காட்டுகிறது. இதெல்லாம் வரலாறாக மயங்க வாய்ப்புண்டு அல்லவா?

இலக்கியத்துக்கும் வரலாற்றுக்கும் அப்படி ஒரு ஊடாட்டம் உண்டு. வரலாறு பெரும்பாலும் புறவயத்தகவல்களால் ஆனது. ஆனால் அதன் தொகுப்பில் புனைவம்சம் எப்போதும் உண்டு. தவிர்க்கவே முடியாது. அந்தப்புனைவை இலக்கியம் வழிநடத்துகிறது. அதையும் தவிர்க்கமுடியாது

கரிகால்சோழன் அல்லது ராஜராஜசோழன் பற்றிய நம் வரலாறு புனைவிலிருந்து வந்தது அல்லவா? அதை கல்கி மறுபடி புனைந்து நிறுவினார் அல்லவா?

புனைவை வாசகர்கள் ஏற்கிறார்களா என்பதே அது வரலாற்றில் எவ்வண்ணம் ஊடுருவுகிறது என்பதற்கான ஆதாரம். வரலாறு தூய தரவுகளால் மட்டுமே ஆனது அல்ல என்று உணர்ந்தால் அதில் புனைவின் பங்களிப்பை கருத்தில்கொள்ள முடியும். அது எதிர்மறையானது அல்ல. அது வரலாற்றில் ஓர் ஒத்திசைவை உருவாக்குகிறது. வரலாற்றை கட்டமைக்கும் விழுமியங்களை செறிவுபடுத்துகிறது, மாற்றியமைக்கிறது.

அகத்தியர் விசித்திரவீரியனை சிகிழ்ச்சைசெய்யட்டுமே, அது உருவாக்கும் விழுமியம் மகாபாரதத்தில் கலக்கட்டுமே.

ஜெ

***

[வெண்முரசு நிறைவை ஒட்டி குருபூர்ணிமாவின்போது நிகழ்த்திய உரையாடலில் எழுத்தில் கேட்கப்பட்ட வினாக்கள்]

முந்தைய கட்டுரைமலையும் குகையும்
அடுத்த கட்டுரைதிருத்தர்கள்- ஜா.ராஜகோபாலன்