வெண்முரசு- வினாக்கள்-3

வெண்முரசு விவாதங்கள்

நான் வியாச பாரதத்தை வாசித்தது கிடையாது ஆனால் பாரதம் தெரியும்.ஒரு நெகடிவ் கேரக்டராக அறியப்பட்ட துரியோதனன்,உங்களால் கலியாக அறிமுகப்படுத்தப்பட்ட துரியோதனன், தொடர்ந்து வாசிக்க, வாசிக்க,நல்ல மனிதனாகவே என் மனதிற்கு படுகிறான்.எது சரி?அல்லது நீங்கள் இது நீங்கள் அறிமுகப் படுத்தும் துரியோதனா?

கீதா

அன்புள்ள கீதா.

மகாபாரதம் பற்றி முதன்மையான ஆய்வாளர்கள் அனைவருமே சொல்லும் ஒரு வரி அதில் முழுக்க நல்லவர்களும் இல்லை, முழுக்க கெட்டவர்களும் இல்லை என்பது. துரியோதனனுக்கும் இது பொருந்தும்

ஆனால் பிற்கால பௌராணிக மரபில், நிகழ்த்துகலைகளில் நல்லவன் கெட்டவன் என்பது உறுதியாக்கப்பட்டது. அது அத்துறைகளின் தேவைக்கேற்ப நிகழ்ந்தது

துரியோதனன் ஒரு அவலநாயகன். அவலம் என்பது அனைத்து நல்லியல்புகளும் கொண்ட ஒருவன் ஒரு தீய இயல்பால், விதியால் வீழ்ச்சியடைவது. துரியோதனனின் மண்ணாசையும் ராவணனின் பெண்ணாசையுமே அவர்களை வீழ்த்தின. கம்பனின் ராவணனும் ‘கெட்ட’ கதாபாத்திரம் அல்ல என்பதை அறிந்திருப்பீர்கள். ஓரளவு கம்பனின் ராவணனின் சாயல் வெண்முரசின் துரியோதனனுக்கு உண்டு

வியாசனின் ‘கைரேகை’ படிந்த இடங்கள் என்று சிலவற்றை மகாபாரத ஆய்வாளர் சொல்வதுண்டு. வியாச ஹஸ்தமுத்ரை பதிந்த இடங்களில் இருந்து துரியோதனனை உருவாக்கி மற்ற இடங்களுக்கும் விரிவாக்கவேண்டும். துரியோதனனின் சாவுத்தருணம் அதிலொன்று.அங்கே நாம் பெருந்தன்மைமிக்க ஓர் அரசனையே காண்கிறோம். தன்னுடன் போர்புரிய அவன் அப்போது யுதிஷ்டிரரை தெரிவுசெய்திருக்கலாம் –ஒரே அடியில் வென்றிருக்கலாம். தன் தகுதிக்கு சமானமான பீமனையே துரியோதனன் தேர்வுசெய்கிறான்

செவ்வியல் வடிவான கதகளியில் துரியோதனன் ஒருவகை கதாநாயகன். நான் கண்ட துரியோதனன் மாபெரும் நடிகர்களால் மேடையில் நிகழ்த்தப்பட்டவன்

ஜெ

துணைக்காதாபாத்திரங்கள் பலவற்றை முதன்மை கதாபாத்திரங்களுக்கு இணையாகவே சொல்லியிருக்கிறீர்கள். குறிப்பாக அணுக்கச் சேடிகளும் செவிலித்தாய்களும். இவர்களின் பாத்திரப்படைப்பில் உங்களுக்கு ஏதேனும் முன்மாதிரிகள் அலல்து அந்தரங்கமான் பழைய நினைவுகள் உள்ளனவா?

லோகமாதேவி

 

அன்புள்ள லோகமாதேவி,

துணைக்கதாபாத்திரங்களை உருவாக்கும்போது நமக்குச் சுதந்திரம் உள்ளது. அவர்களின் வாழ்க்கை முன்னரே சொல்லப்படவில்லை. நமக்குத்தெரிந்தவர்கள் அதில் வந்து அமையமுடியும்.மேலும் மாபெரும் வரலாற்றுநாயகர்களின் முன் நின்றிருக்கும் சாமானியர்கள்தானே நாமெல்லாம்?நமக்கு அந்த சாமானியர்கள்தானே நெருக்கமானவர்களாக இருக்கமுடியும்?

சிவை, சுருதை உட்பட பல கதாபாத்திரங்களில் என் அம்மாவின் சாயலை காண்கிறேன். இயல்பாக அப்படி நிகழ்ந்தால்தான் உண்டு. எண்ணிச் சேர்ப்பதில்லை

ஜெ

மூல மாஹாபாரத பாத்திரங்களின் தன்மையை, வெண்முரசு பாத்திரங்களுடன் ஒப்பிட்டு பேசியவர்களை, எப்படி எதிர்கொண்டீர்கள்?

சிவக்குமார் ராமலிங்கம்

 

அன்புள்ள சிவக்குமார்

 

அப்படி ஓர் ஒப்பீடு வந்துகொண்டேதான் இருக்கும். இயல்பானதுதான் அது. அவர்கள் மூன்றுவகை. வைணவ மதமரபுகளில் ஒருசிலருக்கு மகாபாரதம் ஒரு மூலநூல். ஆகவே அதை மறுஆக்கம்செய்வது பிழை. அவர்கள் மறு ஆக்கங்களை வாசிக்கமாட்டார்கள், தங்கள் மரபு சுட்டிக்காட்டும் பாடத்தையே தலைக்கொள்வார்கள். அவர்களுக்கு மறுஆக்கங்கள் பொருட்டல்ல, அவ்வளவுதான்

மற்றதரப்பினரில் அறிஞர்களுக்கு மகாபாரதம் ஒரு புராணத்தொகை என தெரிந்திருக்கும். புராணங்கள் மறுஆக்கம் செய்யப்படும் செயல்பாடு அவை எழுதப்பட்டபோதே தொடங்கியது. சொல்லப்போனால் மறுஆக்கம் செய்யப்பட்டவையாகவே புராணங்கள் நமக்கு கிடைக்கின்றன. மகாபாரதத்தின் கதை வியாசமகாபாரதத்திலேயே வேறுபட்ட வடிவங்களில் கிடைக்கிறது.

அதன்பின் அவை காலந்தோறும் மறுஆக்கம் செய்யப்பட்டுக்கொண்டே இருந்திருக்கின்றன. பிற்காலப் புராணங்களில் மகாபாரதக்கதைகள் மாறுபட்ட பலவகையான வடிவுகளில் இருக்கின்றன. பிற்கால காவியங்களில் மேலும் மறுஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பின்னாளில் எடுத்தாளப்பட்ட நாடகங்கள் போன்ற சிறுகாவியங்களில் மேலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

நாட்டார்கலைகளிலும் நிகழ்த்துகலைகளிலும் மகாபாரதம் சுதந்திர மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. அர்ஜுனனை கோழையென காட்டும் படைப்புகளே உண்டு. நவீன இலக்கியம் உருவானபின் விழுமியங்களை பரிசீலிக்கும் ஆசிரியர்கள் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்து மறுஆக்கம் செய்திருக்கிறார்கள்.

இது ஒரு பெரிய தொடர்செயல்பாடு.  ஒரு கதையை வரலாறாகப் பொதிப்பாதுகாப்பது இங்கே நிகழவில்லை. அது அடிப்படையான தொல்படிமங்களின் தொகை எனக்கண்டு, அவற்றைக்கொண்டு புதியபடைப்புக்கள் காலந்தோறும் உருவாக்கப்பட்டபடியே உள்ளன. அவை அம்மறுஆக்கம் வழியாக எதை முன்வைக்கின்றன என்பதே முக்கியம்.

அறிஞர்களல்லாதவர்கள், எளிய வாசகர்கள், அவர்களுக்கு மேலோட்டமாக தெரிந்த மகாபாரதம் மாற்றப்பட்டுள்ளது என சொல்லி எழுதியதுண்டு. நேராக எனக்கு எழுதினால் வெண்முரசில் மூலமகாபாரதத்தின் அடிப்படைநிகழ்வுகளோ, குணச்சித்திர இயல்புகளோ பெரும்பாலும் மாறுதலடையவில்லை என பதில் எழுதுவேன். குறைப்பட்ட வாசிப்பும் மூலத்தில் அறிமுகமின்மையும் அந்த உளப்பதிவை உருவாக்குன்றன என்பேன்

பொருட்படுத்துமளவுக்கு மகாபாரதம் அறிந்த எவரும் மாற்றுக்கருத்துச் சொல்லவில்லை. முக்கியமான மகாபாரத அறிஞர்களுடன் எப்போதும் தொடர்புகொண்டபடியே வெண்முரசு எழுதப்பட்டது.

ஜெ

சிறு கதாபாத்திரங்களின் பெயர்கள் எங்குமே திருப்பி உபயோகபடுத்தப்படவில்லை. அணுக்கர்கள், சூதர்கள், காவலர்கள், ஏவலர்கள், அமைச்சர்கள், விலங்குகளின் பெயர்கள் என அனைத்துமே தனித்துவமாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமைந்துள்ளது. இவற்றின் பின் குறிப்பு எதாவது?

 

சதீஷ்

 

அன்புள்ள சதீஷ்

மூலமகாபாரதமே பெயர்களின் கடல்.வெண்முரசு மூலத்தில் இல்லாத சாமானியர்களின் பெரிய உலகம் ஒன்றை கூடச்சேர்க்கிறது. அந்தணர்கள் வணிகர்கள் ஏவலர்கள் போர்வீரர்கள் சூதர்கள் பாணர்கள் என. அவர்களுக்கெல்லாம் பெயர்கள் வேண்டும். பெரும்பாலான தருணங்களில் அவர்களின் குலம், தொழில்சார்ந்தே பெயர்கள் போடப்பட்டன. அரிதாக குறியீட்டுப்பொருளிலும் பெயர்கள் போடப்பட்டுள்ளன

ஜெ

 

[வெண்முரசு நிறைவை ஒட்டி குருபூர்ணிமாவின்போது நிகழ்த்திய உரையாடலில் எழுத்தில் கேட்கப்பட்ட வினாக்கள்]

 

முந்தைய கட்டுரைவலி என்பதும் குறியீடே – விஷால்ராஜா
அடுத்த கட்டுரைவெண்முரசென்னும் உறவின் நிறைவு- லோகமாதேவி