வெண்முரசு வினாக்கள்-2

வெண்முரசு விவாதங்கள்

வெண்முரசு முடிவடைந்த பின்னர் ஒரு உச்ச நிலையிலிருந்து இறங்கி விட்டதாக உணருவீர்களா அல்லது அதே உச்ச நிலையில் இருந்து மற்றுமொரு மாபெரும் படைப்பை எழுதும் உத்தேசம் இருக்கின்றதா?

லோகமாதேவி

அன்புள்ள லோகமாதேவி

வெண்முரசை ‘மாபெரும் படைப்பை’ எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதத் தொடங்கவில்லை. அன்று எனக்கு இந்தியப்பண்பாடு, இந்தியமெய்யியல்மரபு சார்ந்த சில குழப்பங்களும் தேடல்களும் இருந்தன. மேலும் ஆழமான சில ஆன்மிகமான தத்தளிப்புகள் இருந்தன. நான் யோகி என்றால் ஊழ்கம் பயின்றிருப்பேன். எழுத்தாளன் என்பதனால் வெண்முரசு எழுதினேன்

இதன்வழியாக ஓர் இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறேன். மேலே எங்கே செல்வேன் என்று இப்போது தெரியவில்லை

ஜெ

மகாபாரதத்தை வாழ்நாள் கல்வியாக கற்பவர் உணர்ந்தவர் என்ற முறையில் , மகாபாரதம் குறித்த உங்கள் ஒட்டு மொத்த ஞானத்தையும் பகிர்ந்து முடித்து விட்டதாக நினைக்கிறீர்களா ? 

பிச்சைக்காரன்

 

அன்புள்ள பிச்சைக்காரன்

நான் மகாபாரதத்தை ஒரு ஆழ்படிமத் தொகை என்றே பார்க்கிறேன். நம் இன்றைய பண்பாட்டை விழிப்புநிலை மனம் என்றால் மகாபாரதம் ஆழ்நிலையில் இருக்கும் கனவுமனம்.

அந்த ஆழ்படிமங்களைக்கொண்டு நான் ஓர் உலகை உருவாக்கினேன். அதில் என் வினாக்களை உசாவிக்கொண்டு பயணம் செய்தேன். அந்த படிமங்கள் இன்னொருவருக்கு இன்னொருவகையில் பொருள்படலாம். எனக்கே மீண்டும் புத்தம்புதியவடிவில் பொருள் அளிக்கலாம்.

எவரும் ஆழ்மனதை, கனவுலகைச் சொல்லி முடிக்கமுடியாது

ஜெ

வெண்முரசில் எந்த கதபத்திரம் இன்னும் கூட விளக்க பட்டு இருக்கலாம் என நினைக்கிறிர்களா ?

மோகன்ராஜ் பொன்னம்பலம்

அன்புள்ள மோகன்ராஜ்

அப்படி நிறையக் கதாபாத்திரங்கள். உத்தரையை முன்வைத்து ஒரு பெருநாவலை எழுதமுடியும். உதாரணமாக சுபத்ரைக்கும் உத்தரைக்குமான உறவென்ன என்பது இந்நாவலில் மெலிதாகத் தொட்டுச்செல்லப்பட்ட ஒரு கதை.

ஜெ

மகாபாரதத்தில் தென்னிந்தியாவைப் பற்றிய குறிப்புகள் உள்ளன என்றாலும் மிக கொஞ்சமே.

​நீங்கள் வெண்முரசில் தென்னிந்தியாவைப்பற்றி கிருஷ்ணை நதியில் துவங்கி கீழே உள்ள பகுதிகளை, தமிழகம் உட்பட விவரித்து எழுதிய பகுதிகள் வலிய திணித்தவை போல நாவல்களுள் தெரிகின்றன. 

​உண்மையிலேயே சொல்லுங்கள் மகாபாரதம் கொஞ்சம் தென்னிந்தியாவை புறக்கணித்துவிட்ட கதையாக தோன்றவில்லையா. பஃருளி , தோல் மதுரை போன்ற செய்திகள் உண்மையிலேயே மகாபாரதத்தில் இல்லைதானே?

தென்னிந்தியாவைப் பற்றிய குறிப்புகளைச் சேர்த்ததால். வரலாற்று சித்தரிப்பு என்பதைத் தவிர. நாவலுக்கே, அதன் தரிசனத்திற்கே அது எவ்வகையிலேனும் பலம் சேர்க்கிறது என்று எண்ணுகிறீர்களா?

கணேஷ் கௌரிசங்கர்

 

அன்புள்ள கணேஷ்

மகாபாரதத்தில் தென்னகம் பற்றிய குறிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஓரளவு விரிவாக வருவது சகாதேவனின் படையெடுப்பின்போது.ஆனால் வெண்முரசு மிகவிரிவாக தென்னகத்தின் சித்திரத்தை அளிக்கிறது.

இரண்டு அடிப்படைகள் அதற்கு. ஒன்று மகாபாரதம் சென்ற இரண்டாயிரமாண்டுகளில் தென்னகத்தில் பேருருவம் கொண்டிருக்கிறது. தென்னக மொழிகளில் எல்லாமே மகாபாரத மறுஆக்கங்களும், மகாபாரதத்தை ஒட்டிய காவியங்களும், மகாபாரதத்தை நிகழ்த்தும் கலைகளும் செழித்துள்ளன.

சொல்லப்போனால் மகாபாரதம் வாழ்வதே தெற்கேதான். அதன் முழுமையான சுவடிகள் கிடைத்ததே தெற்கில்தாந் கேரளத்தில் குறிப்பாக. தென்னகத்தின் ஐந்து ஆசாரியார்களும் அதை மூலநூல் என்கிறார்கள்.சங்கர,ராமானுஜர், மத்வர்,நிம்பார்க்கர், வல்லபர். அவர்கள்தான் மகாபாரதத்தை ஐந்தாம்வேதநிலைக்கு கொண்டுசென்று வைத்தவர்கள். அதை ஒரு பொதுமக்களியக்கமாக ஆக்கியவர்கள்.

ஆகவே தெற்கு மகாபாரதத்திற்கு உரியது. அதைத்தவிர்த்து இன்று எழுதமுடியாது,கூடாது.தென்னகத்தில் மகாபாரதம் தமிழ்செய்தவர்கள் எல்லாமே தென்னகநிலத்தை உள்ளே கொண்டுசென்றிருக்கிறார்கள். தென்னகத்தின் நாட்டார் தொன்மங்கள் மகாபாரதத்தில் நுழைந்துள்ளன. அவர்களின் வழியே என்னுடையதும்.

மகாபாரதத்திலுள்ள தென்னகச்செய்திகள் பல பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என ஆய்வாளர் சொல்வதுண்டு. ஒவ்வொருவரும் தங்களைப்பற்றிய செய்திகளை அதில்சேர்க்கிறார்கள். அது இரண்டாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் ஒரு செயல்பாடு. அப்படி சேர்க்கப்படும் ஒரு மரபு இருக்கையில் அதையே வெண்முரசும் கையாளமுடியும்

 

ஜெ

வெண்முரசில் சொல்லபட்டிருக்கும் ஏராளமான தாவர வகைகள் அனைத்துமே தாவர அறிவியலின் அடிப்படைகள், விதிகள், விளக்கங்கள்  நுண்தகவல்களை சொல்லும் விதமாகவே ஒரு சிறுபிழைகூட இல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது. இது எப்படி சாத்தியமானது உங்களுக்கு தாவரங்களுடன் அணுக்கம் என்பது எத்தனைதூரம்

லோகமாதேவி

அன்புள்ள லோகமாதேவி

வெண்முரசின் தகவல்களை சிறப்பாக ஆய்வுசெய்வதில்லை. எழுதும்போக்கில் வருவனவற்றை அப்படியே எழுதியபின் கூடுமானவரை சரிபார்ப்பேன். எழுத்துச்செயல்பாடு என்பது மிகமிக விரிவாக்கம் செய்யப்படும் நினைவே. படைப்புத்தருணத்தில் இருக்கும் ஆழமான நினைவுத்திறன் மற்றபொழுதுகளில் இருப்பதில்லை.

சிலசமயம் நாம் படைப்புநிலையில் எழுதிய சில செய்திகள் நம் பொதுப்புத்திக்குச் சிலவிஷயங்கள் தவறெனத் தோன்றும். ஆனால் ஆராயும்போது அவை சரியென்றே தெரியவரும். அந்த படைப்புச்சூழலுக்குள் அவை அவ்வாறே ஆழத்துநினைவிலிருந்து உருவாகி வருகின்றன. அவை தோன்றுவதற்கு ஒரு தர்க்கமுறை இருக்கிறது

அதற்கப்பால் ஒரு படைப்புசார்ந்த சுதந்திரம் உண்டு. பலசமயம் வடக்கே மகாபாரதச் சூழலில் தெற்கிலுள்ள சில தாவரங்கள் அன்றாடப்புழக்கத்தில் இல்லாமலிருக்கலாம். உதாரணம் தசபுஷ்பம் போன்றவை. ஆனால் அவற்றைக் குறியீடாக கையாளவேண்டியிருக்கிறது, ஆகவே அச்சுதந்திரத்தை எடுத்துக்கொள்வேன்

ஜெ

 

வால்மீகி ராமாயணம் மற்றும் கம்ப இராமாயணம் இடையே ஆன வேறு பாடு என்பது 1000 ஆண்டு மதிப்பீடுகளின், அறத்தின் மாற்றம். குறிப்பாக சீதையின் பரிணாமம் அதுபோல் வியாசனுக்கும் வெண்முரசு நூலுக்கும் உள்ள 2000 ஆண்டு அற, தத்துவ வளர்ச்சி என்ன ?

கிருஷ்ணன்

அன்புள்ள கிருஷ்ணன்,

அதை நானே துல்லியமாகச் சொல்லமுடியாது. இப்படிச் சொல்லலாம். மகாபாரதம் தொன்மையான நூல் ஆகையால் அதில் ஓர் இனக்குழு அறம் அவ்வப்போது இயல்பாகச் செயல்படுகிறது. அதைவிடவும் தொன்மையான பழங்குடி அறம் திகழும் கணங்களும் உண்டு – குறிப்பாக போர்களின்போது.

அதன் பின்னர் நிலப்பிரபுத்துவகாலத்து சமூகஅறம் உச்சத்தில் இருந்தபோது மகாபாரதக்கதைகள் அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டன. குந்தி நியோகமுறையில் குழந்தை பெற்றுக்கொண்டது, திரௌபதி ஐவரை மணந்தது, பீமன் அர்ஜுனனை தொடையிலறைந்து கொன்றது எல்லாவற்றுக்கும் எளிமையான இன்னொரு விளக்கம் உருவாக்கப்பட்டு அக்கால ஒழுக்கநோக்கு நிறைவுசெய்யப்பட்டது.

வெண்முரசு அந்த குலக்குழு அறத்தையும், பழங்குடி அறத்தையும் சென்றகாலத்தையதாகவே காண்கிறது.ஆகவே அதை அப்படியே முன்வைக்கிறது. இன்றைய சமூகவியல்- அறவியல் நோக்கில் அதெல்லாம் இயல்பான வரலாற்றுநிகழ்வுகளே என உணர்கிறது

மகாபாரதம் பாரதவர்ஷத்தைப்பற்றி மட்டுமே பேசுகிறது. அறம், தத்துவம்எல்லாமே பாரதவர்ஷத்தினரைக் கருத்தில்கொண்டே பேசப்படுகிறது.  வெண்முரசு தத்துவ- ஆன்மிக நோக்கிலேயே அறத்தை அணுகுகிறது. என்றுமுள அறம் என்ன, அதன் மானுடப்பொதுவான கூறுகள் என்ன என்று அது பார்க்கிறது. இது இன்று உருவாகி வந்துள்ள உலகளாவிய நோக்கின் விளைவு என்று சொல்லலாம்

ஜெ

[வெண்முரசு நிறைவை ஒட்டி குருபூர்ணிமாவின்போது நிகழ்த்திய உரையாடலில் எழுத்தில் கேட்கப்பட்ட வினாக்கள்]

முந்தைய கட்டுரைஓரே பாதை
அடுத்த கட்டுரைநாஞ்சில்- கடிதங்கள்