செய்திநிறுவனங்களின் எதிர்காலம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இந்தியச் செய்தி ஊடகங்களின் எதிர்காலம் குறித்த தங்களது கவலையும் எச்சரிக்கையும் மிக நியாயமானது. அவைகளின் வீழ்ச்சி ஜனநாயக சமூகத்திற்கு பேரிழப்பாகவே முடியும். வணிக லாபம் கருதியோ, அரசியல் காரணமான பாரபட்ச கருத்துக்களை கொண்டிருந்தாலும் அவை தன் செயலுக்கு பொருப்பேற்றாக வேண்டும். தொடர்ந்து செயல்பட ஒரு வரையரைக்குள் செயல்பட வேண்டியுள்ளது. குறிப்பாக முன்நிலை செய்தி ஊடகங்களுக்கு இது பொருந்தும்.
ஆனால் சமூக ஊடகங்கள் பொறுப்பு ஏற்பு வரையரை ஏதுமில்லா ஒரு மேம்போக்கான சுயகருத்து வெளிப்பாடகவே உள்ளன. காழ்ப்புணர்ச்சியையும் பொய் பிம்பங்களையும் எளிதாக உருவாக்குகின்றன.
உலகளவில் பாரம்பரியமிக்க முன்நிலை செய்தி நிறுவனங்கள் digital subscription/paywall முறையை படிப்படியாக நடைமுறைப்படுத்தி வெற்றியும் கண்டுவருகின்றன. அமெரிக்காவின் நியுயார்க் டயம்ஸ் 2011 முதல் digital subscription கட்டணமுறையை அமலாக்கியது. தற்போது இவ்வழியில் வருவாய் விளம்பரவருவாயை விட மும்மடங்காகும். சர்வதேச அளவில் இம்முறையை நடைமுறைப் படுத்தி பெரும் வெற்றி பெற்றுள்ளது (இந்தியாவில் மாத சந்தாவாக வெறும் ரூ60க்கு).
நம்பகத்தன்மை, கருத்தாய்வில் கட்டுரைகளில் நேர்மை, அனைத்து தரப்பினருக்கான செய்திகளையும் தாண்டிய மற்ற பகுதிகள் ஆகிய கோட்பாடுகளுடன் செயல்பட்டால் செய்தி ஊடகங்கள் மாறி வரும் சூழலிலும் நிலைகொள்ள இயலும். அது நிகழ்தாவேண்டும்.
அன்புடன்,
பா. ரவிச்சந்திரன்
அன்பிற்குரிய ஜெ,
செய்தி ஊடகத் துறையின் தற்கால நிலைமை குறித்து தங்களது பதிவை வாசித்தேன். நான்காண்டுகளுக்கு மேலாக உங்களை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். ஊடகத்துறையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வருகிறேன். ஒரு இளம் ஊடகவியலாளனாக எனது துறையில் நான் கவனித்து அதில் நான் புரிந்து கொண்ட ஒரு அம்சம் என்னவென்றால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஊடகத்துறை ஒரு சவாலான மாற்றத்திற்கு உரிய காலகட்டத்தை தற்போது சந்தித்து வருகிறது என்பதே. எனது மனதில் எழுந்த பல்வேறு கேள்விகளுக்கு விடை காணும் வகையில் நான் எழுதிய நீண்ட பதிவு ஒன்றை உங்களிடம் தற்போது பகிர விரும்புகிறேன். உங்கள் வாசகனாக.
அன்புடன்,
கண்ணன். வ
பின்வரும் எனது பதிவு
ஊடகங்கள்,யுவால்,மகாபாரதம்
டிஜிட்டல் யுகத்தில் செய்தி ஊடகத்தின் நிலையும்; யுவால், மகாபாரதம் உணர்த்தும் செய்தியும்
“இன்றைய சமூக வலைதளம் இரு முக்கிய விஷயங்களை உணர்த்தியதுள்ளது. ஒன்று, தற்போது அனைவரும் செய்தியாளர்களாக உள்ளனர். இரண்டாவது, அனைவரும் காமெடியன்களாக உள்ளனர்”.
பேஸ்புக்கில் உலவிய மேற்கண்ட வரிகள் நம் கவனத்தை ஈர்ப்பதுடன், தமிழ்நாட்டில் செய்தி ஊடகம் சார்ந்து தற்போது கிளம்பியுள்ள பெரும் விவாதத்துடன் பொருந்திப் போவதாகவும் உள்ளது. ’ஜனநாயகத்தின் நான்காவது தூண்’ எனப்படும் செய்தி ஊடகம், தற்போது பல்வேறு தரப்புகள் குழாயடிச் சண்டையிட்டுக் கொண்டு ஒன்றன்மீது ஒன்று சேற்றை வாரி இரைத்துக் கொள்ளும் இடமாக மாறியுள்ளது.
இத்தகைய சூழலை செய்தி ஊடகத் துறை சந்தித்து வருவதற்கு முக்கியக் காரணம், கடந்த பத்து ஆண்டுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் கண்டுள்ள அசுர வளர்ச்சியும், அதன் விளைவாக மக்கள் மீது சமூக வலைதளங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கமுதான்.
ஆனால், தற்கால உலகின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவராகக் கருதப்படும் யுவால் நோவா ஹராரி (Yuval Noah Harari) இன்றைய டிஜிட்டல் உலகத்தில் செய்தி ஊடகம் சந்திக்கும் மையப் பிரச்னை குறித்த முக்கியக் கருத்து ஒன்றை முன் வைக்கிறார். அதை நாம் நுட்பமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
”மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, அவர்களைக் கிளர்ந்திழுக்கும் (Exciting) செய்திகளை இலவசமாகத் திணிக்கும் களமாக, இன்றைய செய்திச் சந்தைகள் மாறி வருகின்றன. மக்களின் கவனத்தை தங்களது கட்டுக்குள் வைத்திருக்கும் வித்தையை சில சாமர்த்தியக்கார்கள் கற்றுக்கொண்டு, வாசகர்களை ஈர்க்கும் வகையில் ’கிளிக்பெய்ட்’ ரகச் செய்திகளை உருவாக்கித் தருகின்றனர். இது போன்ற சிக்கலான அணுகுமுறைகளால் உண்மை ஓரம் கட்டப்படுகிறது” என்கிறார் யுவால்.
முன்னதாக, மானுடப் பரிணாம வளர்ச்சி குறித்து இவர் எழுதிய ’சேப்பியன்ஸ்’ என்ற நூல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. முந்தைய காலக்கட்டத்தில், அன்றைய சம்பவங்கள், தகவல்கள், தரவுகள் ஆகியவற்றை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதே செய்தியாளர்களின் பிரதானப் பணியாக இருந்து வந்தது.
ஆனால், தற்போதைய டிஜிட்டல் யுகத்தின் வருகைக்குப் பின் இது பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. நிகழ்வுகள், உண்மைகள் போன்ற அடிப்படை விஷயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு ’மக்களின் விருப்பம்’ என்பது முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள், உண்மைச் சம்பவங்கள் ஆகியவற்றை மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு எப்படிக் கொடுக்கலாம் என வணிக சினிமா இயக்குனர்களைப் போலவே செய்தியாளர்களும் சிந்தித்துப் பணியாற்றத் தொடங்கி விட்டனர்.
20-25 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அரசியல் தலைவர்களோ, பிரபலங்களோ மக்களைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றால், தங்களின் பி.ஆர்.ஓக்கள் மூலம் செய்தியாளர்களை அழைத்து பேட்டியளிப்பார்கள். அது, அடுத்த நாள்தான் செய்தித்தாள்களின் மூலம் வெகுஜன மக்களை சென்றடையும்.
ஆனால் தற்போது நாட்டின் பிரதமரோ, அதிபரோ ஒரு ட்வீட் போட்டால், அது அந்த நொடியே அனைத்து மக்களின் உள்ளங்கைகளில் உள்ள செல்போன்களைச் சென்று சேர்கிறது. அடுத்த நிமிடத்திலிருந்தே வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் அவர்களின் கருத்துக்கள் குறித்த விவாத மேடை அரங்கேறத் தொடங்குகிறது. இதைத்தான் செய்திச் சந்தை என்கிறார் யுவால்.
மக்களுக்கு இவ்வளவு எளிதாக தகவல்கள் கிடைக்கும் சூழலில், வெறும் தகவல் பறிமாற்றம் என்ற பங்களிப்பை மட்டும் செய்யும் கருவியாக இனி செய்தி ஊடகங்கள் செயல்படுவதில் அர்த்தமில்லை . எனவே தான், அதையும் தாண்டி மேலதிக விஷயங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் தற்போது உருவாகியுள்ளது.
மேலும், அந்த செயல்பாடு சமூகத்திற்கும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை செய்வதே ஆரோக்கியமான போக்காக அமையும். ஆனால் இதற்கு மாறாக, அறிவுசார் செயற்பாடாக இருந்து வந்த செய்தி ஊடகம், மக்களின் உணர்வுகளோடு விளையாடும் பொழுதுபோக்காக தற்போது மாறியுள்ளது. இங்கிருந்துதான் கருத்துருவாக்கம், சார்ப்புச் செய்திகள், போலிச் செய்திகள், உண்மை இருட்டடிப்பு, வெறுப்புப் பிரச்சாரங்கள், போஸ்ட் ட்ரூத் உள்ளிட்ட பல பிரச்னைகள் உருவெடுக்கின்றன.
ஒவ்வொரு தனி நபரும் ஊடகமாகச் செயல்பட்டு வரும் காலம் இது. இதில் குறிப்பிட்ட நோக்கம் கொண்ட ஒருவர் தனது சாமர்த்தியத்தால் செய்தியைத் திரித்து, உண்மையை மறைக்கும் கண்கட்டு வித்தையை எளிதாகச் செய்துவிட முடியும். இதைச் சரியாக விளக்க, தொன்ம இதிகாசமான மகாபாரதத்திலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
பாண்டவர்கள், கௌரவர்கள் என்ற இரு தரப்பினருக்கும் இடையே போர். இரு தரப்பினருக்கும் போர் தந்திரங்களைப் பயிற்றுவித்த குருவான துரோணர், இப்போரில் கௌரவர்களின் பக்கம் நிற்கிறார். மாவீரரான அவரை வீழ்த்துவது எளிதான காரியமல்ல. அதற்கு ஏதாவது தந்திரம் தேவை. இதனை நன்கு உணர்ந்த கிருஷ்ணன் மேற்கூறிய ’செய்தித் திரிபு’ என்ற யுக்தியை இங்கு கையாள்கிறார்.
துரோணரின் மகனான அஸ்வத்தாமனும் இப்போர் வீரர்களுள் ஒருவன். மகன் மீது அளப்பரிய பாசம் கொண்டவர் துரோணர் என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும். அன்றைய போரில் அஸ்வத்தாமன் என்ற பெயர் கொண்ட யானை ஒன்று இறந்து விடுகிறது. இந்தச் சூழலை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என கிருஷ்ணனுக்கு பொறி தட்டுகிறது. போர்க்களத்தில் நிகழும் மரணங்களை அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதமாக உரக்க அறிவிப்பது, அன்றைய போர் நியதிகளுள் ஒன்று. இந்த யானை இறந்த அறிவிப்பு போர்க்களத்தில் உள்ள துரோணரின் காதுகளில் சென்று விழ வேண்டும். அந்த அறிவிப்பை தர்மத்தின் வடிவாகக் கருதப்படும் யுதிஷ்டிரன் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு, அதனைச் செயல்படுத்துகிறார் கிருஷ்ணன்.
அதன்படி, அஸ்வத்தாமன் என்ற யானை மரணமடைந்து விட்டது என்று யுதிஷ்டிரன் அறிவிக்க, சரியாக ‘யானை’ என்று குறிப்பிடும்போது கிருஷ்ணன் சங்கை எடுத்து ஊதுகிறார். துரோணரின் காதுகளுக்கு ’அஸ்வத்தாமன் இறந்து விட்டான்’ என செய்தி திரிந்து செல்கிறது. தன் மகன் மரணித்து விட்டான் என்ற சொல்லால் உருக்குலைந்த துரோணர் ஆயுதங்களை அப்படியே கைவிடுகிறார். போரில் வீழ்த்தப்படுகிறார். இதுதான் கதைச் சுருக்கம்.
இது உண்மைக் கதையா, புராணமா, வரலாறா என்ற விவாதங்களைத் தாண்டி, இக்கதை தற்காலத்தில் நமக்கு உணர்த்துவது என்ன என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். உண்மையை மட்டுமே பேசக் கூடியவனான யுதிஷ்டிரனைக் கொண்டே, எடிட்டிங் என்ற கான்செப்ட் எப்படி லாவகமாகக் கையாளப்பட்டுள்ளது என்ற யுக்தியை கொஞ்சம் கவனியுங்கள். தற்போதைய செய்தி ஊடகக் காலத்துடன் இதனைப் பொருத்தி புரிய வைக்கவே இக்கதை.
உண்மையை மறைக்கும் மயக்கத்திலிருந்து தப்பிக்க வழிதான் என்ன? அண்மையில் மூத்த செய்தியாளர் சேகர் குப்தா தனது காணொலி ஒன்றில் ’Trust, but verify’ என்ற வாசகத்தை மேற்கோள் காட்டினார். “ஒரு செய்தியை நம்புங்கள். ஆனால் அதற்கு முன் அதன் உண்மைத் தன்மையை எப்போதும் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்”.
இந்த வரியை நினைவில் கொள்வதே சிறந்த வழி. துரோணர் அந்த அறிவிப்பை நம்புவதற்குமுன் ஒருமுறை அதனை உறுதிபடுத்திக் கொண்டிருந்தால் கதையே மாறியிருக்கும் அல்லவா? எனவே, வள்ளுவர் கூறுவது போல், எப்பொருள் யார் கூறக் கேட்டாலும், அதன் மெய் பொருளைக் காண்பதில் கவனம் தேவை.
மக்களிடம் உண்மைச் செய்திகளைக் கொண்டு சேர்ப்பற்கான தேவை, என்றும் அல்லாத அளவிற்கு தற்போது எழுந்துள்ளது. உலகின் 86 சதவிகிதம் இணையப் பயன்பாட்டாளர்கள், போலிச் செய்திகளுக்கு இரையாகின்றனர் என்கிறது CIGI என்ற நிறுவனத்தின் ஆய்வு.
இறுதியாக, யுவால் ஹராரியின் வரிகளுடனேயே இக்கட்டுரையை முடிக்கிறேன். ”உணவு, கல்வி, பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கு மக்கள் தற்போது பணத்தை தாரளமாகச் செலவிடுகிறார்கள். அதே போல், தரமான செய்திகளையும் செய்தியாளர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதும் சமூகத்தின் தலையாயக் கடமைகளுள் ஒன்று”.