அன்புள்ள ஜெ
மழைப்பாடலில் இருந்து வெளிவராத நிலையில் இதை எழுதுகிறேன். இந்தக் கொரோனா காலகட்டம் இல்லையென்றால் வெண்முரசை வாசித்துவிடலாம் என்று நான் துணிந்திருக்கமாட்டேன். அதோடு வாசிப்பதற்கான சாஃப்ட்வேர் இருந்தது. காரில்போகும்போது விடுபடுவதைக் கேட்டுவிடலாம் என்று நினைத்தேன். தொடர்ச்சியாக வாசித்தேன். உண்மையில் ஒருமுறை வாசித்தேன், அதையே திரும்பவும் கேட்டேன்
மழைப்பாடலைப் பற்றிய என்னுடைய மனச்சித்திரமே வேறு. கதை தொடங்குவதற்கு முன்பு இருக்கும் சூழலை விரிவாக எழுதியிருக்கிறார் என்றுதான் நினைத்திருந்தேன். கதையை தீர்மானிக்கும் எல்லா அடிப்படைகளும் இங்கேதான் இருக்கின்றன. உதாரணமாக குந்தி யுதிஷ்டிரனைப் பெற்றபின் ஒருமுறை குழந்தையை எங்கோ வைத்துவிட்டு கொஞ்சம் நகர்ந்துவிட்டு வந்தால் குழந்தை இடம் மாறியிருப்பது கண்டு திகைப்பது. அந்தப்பதைப்புதான் குந்தியின் ஆளுமையாக ஆகிவிட்டது
சதசிருங்கத்தின் அழகிய காடும் செண்பகமலர்த்தோட்டமும் மின்னல்கள் ஓயாத இமையவெளியும் வானவிற்கள் பூத்த காட்டில் அர்ஜுனனின் பிறப்பும் எல்லாம் கனவுமாதிரி நெஞ்சில் இருக்கின்றன. தமிழில் இத்தனை மகத்தான ஒரு கனவு விரிக்கப்பட்டதே இல்லை. நான் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இருபதாண்டுகளாக வாசிப்பவன்.என் வாசிப்பில் இதற்குச் சமானமாக உலக இலக்கியத்திலேயே கொஞ்சம்தான் சுட்டிக்காட்டமுடியும்
இதுகாட்டும் வாழ்க்கைச் சிக்கல்களெல்லாமே கிளாஸிக்குகளுக்கு உரியவை. குந்தியின் மகன் வெளிவந்ததுமே அவள் மனம்மாறி அவன் அரசனாகவேண்டும் என்று தீர்மானிக்கும் இடம் ஓர் உதாரணம். அதுவரை அவளுக்குத்தெரியாது, அவ்வாறு ஓர் ஆசை அவளுக்குள் இருக்கிறது என்று. மாத்ரி சிதையேறும் காட்சியின் நுட்பமும் சரி அம்பிகையும் அம்பாலிகையும் ஓடிவந்து அணைத்துக்கொண்டு பாண்டுவின் சாவுக்காகக் கதறும் காட்சியும் சரி மகத்தானவை.
எஸ்.ஜெ.ராமகிருஷ்ணன்
வெண்முரசில், பாரதத்தின் அனைவருக்கும் தெரிந்த சுருக்கமான கதைவடிவில் இல்லாத பாத்திரங்கள் கொள்ளும் விரிவையும், கதையோட்டத்தில் அவற்றின் பங்களிப்பையும் நாம் முதற்கனலிலிருந்தே கண்டு வருகிறோம். அத்தகைய பாத்திரங்களைப் பற்றி தனியாகவே எழுதலாம்
சுருதை
பாரதத்தை அல்ல , பாரதம் என்ற அழியாத கனவை எழுதுகிறேன்.எழுத்தாளன் எழுத விரும்புவது நிஜத்தை அல்ல. இலட்சியத்தை. உலகமெங்கும் உண்மையில் உள்ள இயற்கை அளவுக்கே பெரியது எழுத்தாளர்களும் கவிஞர்களும் உருவாக்கிய இயற்கை.