அன்புள்ள ஜெ
மழைப்பாடலை வாசித்து முடித்து இப்போது எழுதுகிறேன். உங்களுக்கு ஞாபகம் இருக்காது, 2014ல் மழைப்பாடலை வாசிக்க ஆரம்பித்து உற்சாகத்துடன் உங்களுக்குப் பதிலெழுதினேன். ஆனால் நாலைந்து அத்தியாயங்களுக்குள் நின்றுவிட்டேன். அதன்பின் வெண்முரசு வாசிக்கவில்லை
சுவாரசியமாக இல்லையா? நான் இதுவரை வாசித்த புனைவுகளிலேயே வெண்முரசு அளவுக்குச் சுவாரசியமான இன்னொரு படைப்பே இல்லை என்று உறுதியாகச் சொல்வேன். பயனில்லா வாசிப்பு என்று தோன்றியதா? அதுவுமில்லை. வெண்முரசு என்னைப்பொறுத்தவரை நம் மரபின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தத்துவத்தையும் புராணங்களையும் வாசிப்பதற்கான ஒரு மாபெரும் பயிற்சி
அப்படியென்றால் எப்படி வாசிக்காமலானேன்? என்ன காரணம் என்றால் நான் சிதறிக்கொண்டே இருந்தேன். போன் வரும், மெயில்பார்ப்பேன், டிவி பார்ப்பேன். அப்படி பல சிதறல்கள். இந்தமுறை ஒன்று செய்தேன். காலையில் எழுந்ததுமே ஒருமணிநேரம் வாசிப்பது என்று முடிவு செய்தேன். அப்போது வேறெந்த தொடர்பும் வைத்துக்கொள்வதில்லை. முக்கியமாக செல்போனை ஆஃப் செய்து போட்டுவிடுவேன்
இப்போது மூழ்கி மூழ்கிப்போனேன். அந்த நிலங்களில் அந்த மனிதர்களுடன் வாழ்ந்தேன். அது ஒரு பெரிய அனுபவம். அடையாதவர்கள் துரதிர்ஷ்டசாலிகள். நம்முடைய முன்னோர் வாழ்ந்த நிலம். அதில் நாம் கற்பனையால்தான் வாழமுடியும். நம்மைவிடப்பெரிய கற்பனை உடைய ஒருவர் அங்கே செல்கிறார். அவருடன் நாமும் அங்கே செல்லமுடிவது பெரிய கொடுப்பினை
மதநம்பிக்கை கொள்கைகள் கோட்பாடுகள் எல்லாமே பிறகுதான். இப்படி நாம் காந்தாரப்பாலையிலும் கங்கைவெளிப்புல்லிலும் வாழ்வதுபோல மகத்தான அனுபவம் வேறில்லை. அப்படி ஒரு காலப்பயணம் செய்தபிறகு இந்த மண் இன்னும் நெருக்கமாக ஆகிவிடுகிறது
எஸ்.சுதர்சன்
ஆகவே முதற்கனலில் இருந்த உணர்ச்சிகரமான, கூரிய நாடகத்தருணங்களுக்கு பதிலாக இதில் நிதானமான விரிந்த விவரணைகளும் விவாதங்களும் இருக்கலாம். அந்த பெரும் களத்துக்குள்தான் உணர்ச்சிகரத் தருணங்களும் கவித்துவ வெளிப்பாடுகளும் நிகழும்.
மழைப்பாடலின் வடிவம்
மழைப்பாடலின் கட்டமைப்பு யதார்த்தம் சார்ந்தது. பெரும்பாலும் இருத்தல்சார்ந்த பதற்றங்களாலும் அதைச்சார்ந்த உளவியல்சிக்கல்களாலும் ஆனது. மிகச்சிறிய அகச்சிக்கல்கள் மாபெரும் புறச்சிக்கல்களாக ஆகும் யதார்த்ததைச் சித்தரிப்பது. ஆனால் மகாபாரதத்தில் எப்போதுமிருக்கும் மிகைகற்பனை அம்சம் அதில் ஊடாடிச்செல்கிறது.