மதமாற்றம்-கடிதங்கள்

மதமெனும் வலை

JM,

It is funny because the lady’s letter is almost the summary of my life after marriage.

என்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி, நான் படித்தது ஒரு கிறித்துவ பள்ளியில். அதனால் எனக்கு கிறித்துவ பரிட்சயம் உண்டு.
எனக்குப் பெண் பார்த்த சமயத்தில். என்னுடைய மனைவி என்னிடம்,  தனக்கு ஏசுவின் மேல் ஈடுபாடு உண்டு என்று சொன்னாள். எனக்கும் ஏசுவின் மேல் மிகுந்த மதிப்பு இருந்தது , அதனால் நான் அதை அப்பொழுது பெரிதாக எண்ணவில்லை ..
ஏசுவின் மேல் மதிப்பு இருந்ததே தவிர , எனக்குக் கிறித்துவ அமைப்புகள் பற்றியும் , அவைகளின் செயல் முறைகளை பற்றியும் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை..
RC , CSI என்றால் ஓகே.. ஆனால், penthacostal கொஞ்சம் கிறுக்கு கூட்டம் என்று மட்டும் தெரியும்..

பின்னர் திருமண சமயத்தில், எனக்கு அவள் ஒரு penthacostal கன்வெர்ட், என்று தெரிய வந்தது.. கொஞ்சம் அதிர்ச்சி அடைந்த நான். திருமணத்தை நிறுத்தி விடலாமா என்று கூட யோசித்தேன்.
ஆனால், அது தவறு என்று தோன்றியதால், விட்டுவிட்டேன். பின்னர் ,அவளிடம் ‘நீ ஏசுவை வழிபடுவது எனக்கு பிரச்சனையை இல்லை, ஆனால், குடும்பம் தான்  முதன்மையாக இருக்க வேண்டும் ‘ என்று மட்டும் சொன்னேன். அப்போதும் கூட அவளது மனநிலை பற்றி எனக்கு ஒரு தெளிவான புரிதல் இல்லை.

திருமணதிற்கு பின்னர், அவளும் பக்கத்தில் இருந்த சர்ச்சுக்கு போவதும்  தினமும் பல முறை prayer செய்வதுமாக இருந்தாள்.

சினிமாவுக்கு கூப்பிட்டால். ஏன் வீண் செலவு என்று மறுத்து விடுவாள்.    சரி.. சும்மா வெளியே போய் வரலாம் என்றாலும் மறுத்து விடுவாள்.

வீட்டில் டிவி, பேப்பர் வாங்குவதில் கூட அவளுக்கு உடன் பாடு இருக்கவில்லை. நானும் ஏன் சண்டை என விட்டு விடுவேன். அப்புறம் அவளுக்கு நான் DVD யில் படம் பார்ப்பது, பாட்டு கேட்பது, இலக்கியம் படிப்பது கூட பிடிக்கவில்லை என்று தெரிந்தபோது நான் நொந்தே போனேன். வாழ்கையில் பல துயரங்களைச் சிறு வயதிலேயே பார்த்து. திருமணம் எல்லா இன்பங்களையும் மீட்டு தந்து விடும் என்று எதிர்பார்த்தே நான் 24 வயதிலேயே திருமணம் செய்ய சம்மதித்தேன்.ஆனால்,தினம் தினம் நரகமாகவே இருந்தது..

அப்போது தான், ஒரு நாள், அவளுடைய சர்ச்சுக்கு கிறிஸ்துமஸ் feast என அழைத்துப் போனாள், என்னுடைய வாழ்வின் மறக்க முடியாத.. இரவு அது. pentacostal சர்ச்சின் அனுபவங்களை மிக மிக அருகில் இருந்து பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.பேயைப் பார்த்தால் பயம் போய் விடும் என்று சொல்வதைப் போல.எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது..

அன்றிலிருந்து, பல மாதங்கள், நான் நிறைய படிக்க ஆரம்பித்தேன். பெரும்பாலும்.. மத, Cult practicies சம்பந்தமான கட்டுரைகள்.. கிறித்துவ வரலாறு.. மத தத்துவங்கள் சம்பந்தமான புத்தகங்கள். முக்கியமாகக் கீதை..ஓரிரு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு தெளிவு பிறந்து விட்டது.. இவள் எப்படி இந்த கூட்டத்தில் சிக்கினாள், அவர்களின் வரலாறு என்ன, நோக்கம் என்ன என எல்லாமே ஓரளவு தெளிந்து விட்டது.. இதனால் எனக்கு நேர்ந்த தத்துவ விசாரணை மூலமாக.. ‘நான் இந்த வலையில் சிக்கிக் கொள்வேனா’ என்ற பயமும் போய் விட்டது..
அவளும், இது தவிர ஓரளவு இனிதாக இருந்த இல் வாழ்க்கையினாலும். பின்னர் பிறந்த எங்கள் குழந்தையினாலும்..ஓரளவு மாறி விட்டாள்..
ஆனால் இதிலிருந்து முழுமையாக , என் மனைவியை மீட்க முடியுமா , என்ற கேள்விக்கு இன்னும் விடை இல்லை..

உதாரணத்திற்கு, இன்னும் கூட திருப்பதி லட்டு கொடுத்தால் சாப்பிட மாட்டாள்.ஆனால்..எது சரி என்று தொடருகிறதோ.. அதை எல்லாம் செய்து வருகிறேன்.

Thanks
-S
[Pls remove my name , if u publish this]

அன்புள்ள எஸ்,

இந்த விஷயங்களில் நீங்கள் கடுமையாகவே இருந்தாகவேண்டும் என்பதே என் எண்ணம். ஏனென்றால் இது ஒருவரின் தனிப்பட்ட மதவழிபாட்டு உரிமை மட்டும் அல்ல. இதில் குழந்தைகளுக்கு எந்தவகையான இளமைப்பருவத்தை, எந்தவகையான வீட்டுச்சூழலை, எந்தவகையான எதிர்காலத்தை நாம் அளிக்கிறோம் என்ற விஷயம் உள்ளது. ஒரு குடும்பத்தின் முதல் நோக்கமே குழந்தைகளுக்கு வீட்டை அளிப்பதுதான். குடும்பம் என்ற அமைப்பு உருவானதே மனிதர்களுக்கு நீண்ட குழந்தைப்பருவமும் கல்விக்காலகட்டமும் இருப்பதனால்தான். எந்த உயிர்களுக்கு நீளமான இளமைக்காலமும் மரபான ஞானத்தை கற்றாகவேண்டிய தேவையும் உள்ளதோ அவற்றில் எல்லாம் குடும்ப அமைப்பு உள்ளது. சிம்பன்ஸிக்கள்,  டால்ஃபின்கள் முதல் உதாரணம் காட்டலாம். மனிதனும் அப்படியே.

ஏதேனும் தனிப்பட்ட கிறுக்குகளினால் குழந்தைகளின் வாழ்க்கையை துன்பமயமாக்க எவருக்கும் உரிமை இல்லை. சமீபத்தில் ஒரு கத்தோலிக்க நண்பர் நேரில் இதைப்பற்றி பேசினார். அவரது மனைவி பெந்தேகொஸ்தே ஆக மாறிவிட்டார். [அவர்களுக்குத்தான் அந்த அபாயம் அதிகம்] குடும்பத்தில் கணநேரம் கூட மகிழ்ச்சி நிலவ அவர் விடுவதில்லை. எந்நேரமும் அழுகை, ஓயாத பிரார்த்தனை. குழந்தைகள் விளையாடுவது சிரிப்பது கதைபடிப்பது தொலைக்காட்சி பார்ப்பது எதையுமே அனுமதிப்பதில்லை. என்னிடம் ஆலோசனை கேட்டார். நான் சொன்னேன் பேசிப்பாருங்கள் , முடியவில்லை என்றால் விவாகரத்து செய்யுங்கள். உங்கள் மனைவியின் மனச்சிக்கலுக்காக குழந்தைகளை மனநோயாளிகளாக ஆக்க உங்களுக்கு அனுமதி இல்லை.

இந்தத் திடம் தேவை என்றே நினைக்கிறேன். ஏதோ ஒரு பலவீனத்தில் பல கணவர்கள் மனைவியின் பிடிக்குள் விழுகிறார்கள். அது அவர்களின் குடும்பத்தையே இருளில் தள்ளிவிடுகிறது.

ஜெ

அன்புள்ள திரு.ஜெயமோகன்,

வாழ்த்துகள்!

தங்களுடைய இணையதளத்துக்கு அவ்வப்போது வருபவன் என்ற முறையிலும், அஹிம்சை குறித்த தங்களுடைய கட்டுரைகள் மீது மதிப்பு உள்ளவன் என்ற விதத்திலும் மத நம்பிக்கைகள் பற்றிய தங்கள் மறுமொழி குறித்து இந்தக்கடிதம் எழுத வேண்டி இருக்கிறது.

அதில் தாங்கள் குறிப்பிட்டுள்ள குணாதிசயங்கள் கொண்ட மதக்குழுக்கள் பல உள்ளன என்பதில் தர்க்கமில்லை.

ஆனால் “பெந்தேகொஸ்தே சபைகள், யொகோவா சாட்சி , செவெந்த் டே அட்வெண்டிஸ்டுகள் போன்றவை மதங்கள் அல்ல, வழிபாட்டுக்குறுங்குழுக்கள். இவை ஒருவகை மனநோய் வட்டங்கள் என்றே நான் நினைக்கிறேன்” என்று சொல்லி அப்படியே யெகோவா தேவனையும் யெகோவாவின் சாட்சிகளையும் இதில் சேர்த்திருப்பது நியாயம் அல்ல ஐயா:-)

குறிப்பாக “யெகோவா ஒரு தண்டனைக்கடவுள்” என்பது எவ்வளவு உண்மையற்ற கருத்து என்பது மேம்போக்காக பைபிள் படிக்கும் ஒரு ஆளுக்கே புரியக்கூடிய உண்மை. “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் யாரைப்பற்றி சொல்லுகிறதாம்? “உன் முழு இருதயத்தோடு தேவனிடம் அன்பு செலுத்து” என்று இயேசு சொல்லிக்கொடுத்தது எந்த தேவன் மீது அன்பு காட்ட? ஒரு தண்டனை தரும் பாலைவனக்கடவுள் மீதா? அல்லது அன்பே உருவான ஒரு சிருஷ்டிகர் மீதா?

உண்மையில் “நித்திய தண்டனை தரும் ஒரு அக்கினி நரகம் இருக்கிறது” என்பதை வெளிப்படையாக “பொய்க் கோட்பாடு” என்று சொல்லுவோர் இந்த யெகோவாவின் சாட்சிகள் தான்:-) நீங்கள் புகழும் கத்தோலிக்கரும், ப்ரோட்டஸ்டண்டுகளும் “எரிநரக தண்டனை” நம்பிக்கை உடையவர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

நம்பிக்கைகளுக்கு அப்பால், சுட்டிக்காட்ட வேண்டிய சில உண்மைகள் :
உலக முழுதும் 75 லட்சத்துக்கும் அதிகமான “தாமாக முன்வந்த உறுப்பினர்கள்” உள்ளது இந்த மதம். குழந்தை ஞானஸ்நானம் கிடையாது, சிந்திக்கும் திறனுடன் முன்வருவோர் மட்டுமே அங்கத்தினர்.
400 -க்கும் அதிகமான மொழிகளில் பிரசுரங்கள் வெளியிடும் அமைப்பு, 230 -க்கும் அதிக நாடுகளில் செயல்படுகிறது.
உலகிலேயே அதிகம் பிரசுரமாகும் மத இதழ் இவர்களுடையது தான். (“தி வாட்ச் டவர் “, தமிழில் “காவற்கோபுரம்”)
யெகோவாவின் சாட்சிகள் அமைப்பு வணிக முறையிலான பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் நடத்துவதில்லை. தன்னார்வ சேவைகளில் இயன்ற வரை பங்கெடுப்பவர்கள், குறிப்பாக இயற்கை / செயற்கை பேராபத்துகளின் போது.
“இப்போது அற்புத சுகமளித்தல் நடக்கிறது” என்ற மூடநம்பிக்கை உள்ளவர்கள் அல்லர்
யாரையும் மூளைச்சலவை செய்வது கிடையாது, வீடு தோறும் போய் பைபிள் பற்றி வெளிப்படையாகப் பேசுபவர்கள் என்றாலும், தர்க்கமுறை அல்லாத அணுகுமுறைக்கு எதிரானவர்கள்
எல்லா மத நூல்களும், அறிவியல் நூல்களும் படிக்கும், ஆராயும் வழக்கம் உள்ளவர்கள். நடுநிலையான விதத்தில் பிபிசி இந்த மதத்தையும் இதன் உறுப்பினர்களையும் குறித்து இங்கே என்ன சொல்லுகிறது என்பதைத் தாங்கள் பார்க்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்:
http://www.bbc.co.uk/religion/religions/witnesses/

அல்லது, இதன் உறுப்பினராக பல பத்தாண்டுகளாக இருக்கும் என் போன்றோர் விவரங்கள் தர மகிழ்வுடன் இசைவோம். மேலும், இந்த அமைப்பின் அதிகாரபூர்வ இணையத்தளங்களிலும் படித்து விட்டு எழுதலாம்:
www.watchtower.org
www.jw-media.org

யெகோவாவின் சாட்சிகள் குறித்து உங்கள் அண்டை வீட்டுக்காரர்கள் சொல்வது மட்டும் தான் தூய உண்மை என்று நீங்கள் கருத மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன்

இன்பவண்ணன்,
டெட்ராய்ட், மிச்சிகன், யு எஸ்

அன்புள்ள இன்பவண்ணன் அவர்களுக்கு

என்னுடைய கருத்துக்கள் நான் கண்ணெதிரே கண்டுவரும் யதார்த்தங்களைச் சார்ந்தவை. அவற்றையே நான் முக்கியமாகவும் நினைக்கிறேன். பொதுவாக எந்த அமைப்பையும் அவை சொல்லும் கொள்கைகளை வைத்து மட்டும் நான் புரிந்துகொள்ள முயல்வதில்லை

ஜெ

முந்தைய கட்டுரைசாதி, இருகேள்விகள்
அடுத்த கட்டுரைதேர்வுசெய்யப்பட்டவர்கள்-கடிதங்கள்