தன்தேர்வு
அன்புள்ள ஜெ
தன்தேர்வு படித்தேன். அதிலுள்ள மெல்லிய கடுமை என்னை திகைக்கவைத்தது. ஏனென்றால் அது உண்மை என்று எனக்குத்தெரியும். நான் சில ஆண்டுகளாகவே செயலின்மையில் இருக்கிறேன். ஒன்றிலிருந்து ஒன்றுக்காக தாவிக்கொண்டிருக்கிறேன். எதையாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் என்ன என்று தெளிவாக இல்லை. குழப்பங்களால் சூழப்பட்டிருக்கிறேன். ஏதாவது முடிவெடுப்பேன், ஆனால் அதைச்செய்வதற்கான முனைப்பு இல்லை. முதல் சிலநாட்களுக்குப் பிறகு அப்படியே விட்டுவிடுவேன். இப்படியே நாட்கள் சென்றுகொண்டிருக்கின்றன.ஏறத்தாழ வாழ்க்கையே இப்படியாகிவிட்டது
இதில் நான் செய்வது என்னவென்றால் எவரிடமாவது ஆலோசனை கேட்பது. ஆலோசனைக்கு ஏற்ப தொடங்குவேம்ன். ஆனால் அதை கைவிட்டபின் அந்த ஆலோசனை சொன்னவர்தான் தப்பு செய்துவிட்டார் என்று மாற்றிக்கொள்வேன். இன்னொருவரிடம் ஆலோசனை கேட்பேம். ஆலோசனைகளை அடிக்கடிக் கேட்பதே ஒரு சமாளிப்புதான். எப்படி என் செலவுகளை அப்பாவின் பென்ஷனால் செய்கிறேனோ அதேபோல அவர்களை பயன்படுத்திக்கொள்கிறதுதான் அது.
செயலாற்றுவதென்பது வேறு. கனவுகாண் என்கிறார்கள். வெறும்கனவு மாதிரி செயலுக்கு எதிரி வேறில்லை. நான் பெரிய கனவுகளுடன் இருக்கிறேன் என்று எனக்குநானே சொல்லிக்கொண்டு எதையும் செய்யாமலிருக்கலாம். உங்கள் தன்மீட்சி எனக்கு பெரிய அடி மாதிரி. அதன்பின் இந்தக்கட்டுரை. தொடர்ந்து வாசிக்கிறேன். பெரிய செயல்கள் அப்புறம், சின்ன செயல்களைச் செய்வோம். இதுதான் இன்றைக்கு நான் எனக்கே சொல்லிக்கொள்வதாக இருக்கின்றது
ராம்குமார் மாணிக்கம்
***
அன்புள்ள ஜெ
இன்று காலையே தன்தேர்வு பதிவை பார்த்து விட்டேன். என் கேள்விக்கு மறுமொழி வராது என்றே நினைத்திருந்தேன். பதில் வந்த உடன் சற்று திகைப்பாகத் தான் இருந்தது. மாலை நேரத்தில் படுக்கை அறையில் தனியாக உட்கார்ந்து படிப்பது என் வழக்கம். அங்கு படித்தால் எண்ண ஓட்டத்தில் தடை ஏற்படுத்தும் படியான புறச்சூழல் ஏதுமில்லாமல் இருக்கும். எனவே மாலை வரை காத்திருந்து வாசித்தேன்.
முந்தைய கடிதத்தில் குடிமை பணி தேர்வை எழுத முடிவெடுத்திருப்பதாக கூறியிருந்தேன். அந்த எண்ணம் உறுதியானதற்கு தன்மீட்சி நூல் தான் சரி பாதி காரணமாகும். மறுபாதி என் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தினில் இருந்து யான் பெற்ற தன்னம்பிக்கையாகும்.
தன்மீட்சியில் ஓரிடத்தில் அக வாழ்க்கைக்காக உலகியலை விட்டவர்கள் மீண்டும் உலகியலில் வீழ்வார்கள் என்பதை விரிவாகவே சொல்லியிருந்தீர்கள். இன்று எண்ணி கொள்ளும் போது அக பயணம் என்று ஒன்று உள்ளது என்றும் அதை நோக்கி செல்வதற்கான விழைவும் கொண்டவனாக இருக்க அடித்தளம் என் குடும்ப பொருள் நிலை தான் முதன்மை காரணம். என் வயதில் அப்பாவால் இப்படி சிந்தித்திருக்க முடியுமா என்றால் முடியாது என்றே சொல்வேன். ஏனெனில் அவருக்கு அப்பா இல்லை, குடும்பத்தை வழிநடத்திய மூத்த அண்ணன் திடிரென்று இறந்துவிட்டார். அதற்கு அடுத்ததாக முன்னின்று குடும்பத்தை சுமக்கும் பொறுப்பு இவரை வந்தடைந்தது. இன்று எனது உடல் குறைபாட்டை எண்ணி வருந்தும் போதெல்லாம் அப்பா சொல்வது,”அன்னைக்கு எங்க அம்மா சொல்லி சொல்லி அழுவுங குருவி தலையில பனங்காயா வச்சிட்டானேன்னு அப்ப எனக்கு எதுவுங தெரியல. இன்னிக்கு உன்ன நெனச்சு தான் நா அழுவரே…” அன்றைக்கு உலகியலில் முழு சக்தியும் செல்வான பின் அதை தாண்டி சிந்திப்பது எங்கனம் ?
இன்று பொருள் நிலை சற்று மேம்பட்டிருந்தாலுமே கூட நானும் என் தம்பியும் பொருள் கவலை இல்லாமலிருக்கும் அளவே அவரால் ஈட்ட முடிகிறது. அவருக்கே அவருக்கானது எனும் போது மொத்த ஆற்றலும் உலகியலுக்கே. மீச்சமும் அதற்கே அளிக்கப்பட வேண்டிய நிலை. இந்த ஐம்பதாண்டு காலத்தில் மனமே அதுவாகிவிட்டது. இனி எதுவுமே அங்கு புதிதாவதற்கு இல்லை. இந்த தெளிவை தன்மீட்சியில் தொடங்கி வந்தடைந்தேன்.
மறுபுறம் என் தன்னம்பிக்கைக்கு காரணம் என்னுடைய பள்ளி காலத்தில் உள்ளது. பள்ளியில் எப்போதுமே முதன்மை மாணவனாகவே இருந்தேன். என் வகுப்பில் மொத்தம் பதிமூன்று பேர் மட்டும் தான். அதிலும் எனக்கு போட்டியாக மூன்று பேர் மட்டும் தான் இருந்தனர். அதனால் அங்கு பெரிதாக எந்த தடையும் இல்லை. ஒன்பதாம் வகுப்பு புதிய பள்ளியில் சேர்ந்த பின்பு ஆசிரியர்களின் கருணையினால் வீட்டிலிருந்த படியே படித்து தேர்வு மட்டும் எழுதினேன். பத்தாம் வகுப்பில் அரைநாள் பள்ளிக்கு சென்றுவர ஏற்பாடாகியது. அவ்வகுப்பில் எண்பது மாணவர்களுக்கு மேல் இருந்தனர். அங்கு என்னை நிருபிக்க ஆண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெறுவது தேவையாயிருந்தது. வெளியில் அப்பாவின் ஊக்கம் துணை நின்றது.
அதை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தேன். கடைசி மூன்று மாதங்கள் நாள் தவறாது அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து படித்தேன். நள்ளிரவு 12:20ஐ அதிகாலை 4:00 என நினைத்து படித்த நாட்களும் உண்டு. அந்த அளவு ஊக்கத்தோடு இருந்தேன். எதிர்பார்த்ததை விட பத்து மதிப்பெண்கள் கூடுதலாக 460 எடுத்தேன். தன்மீட்சியின் இறுதி அத்தியாயங்களில் ஒரு வருடத்தை திரும்பி பார்க்கும் போது எத்தனை நாட்கள் நிறைவாக வாழ்ந்துள்ளோமோ அது தான் நாம் உண்மையாக வாழ்ந்த நாட்கள் என்று வரும். என் வாழ்க்கையில் அந்த ஓராண்டு முழுக்க நிறைவான நாட்களேயாகும்.
அதன்பின் பள்ளி காலத்தின் ஈராண்டுகளில் எம்முயற்சியும் எடுக்கவில்லை. ஏனெனில் என் கண்ணுக்கு போட்டியாக யாரும் இல்லை. அப்பா முன்பு போலவே ஊக்கமூட்டி கொண்டுதானிருத்தார்.ஆனால் என் மண்டைக்கு எதுவும் ஏறவில்லை. என் ஆணவ கணிப்பு தவறாக கூட போயிருக்கலாம்.அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது, ஊக்கம் என்பது உள்ளிருந்து ஊறிவருவது, வெளியிலிருந்து வரும் சொற்களால் எள்ளளவும் திணிக்க முடியாதது என்று.
தன் செயலுக்கு பொறுப்பேற்காமை என்ற வாழ்க்கை சிக்கலை சுட்டிக்காட்டி இருந்தீர்கள். பிரக்ஞை பூர்வமாக இல்லாவிடினும் அடித்து தூள் கிளப்பு என்பது போன்ற பதிலை தான் ஆழ்மனதில் விரும்பியிருக்கிறேன் என்று அறிகிறேன். இந்த இடத்தில் தன்மீட்சி கட்டுரைகள் குறித்த என் எண்ணத்தை சொல்ல வேண்டும். இந்த கட்டுரைகள் எவையுமே சாதாரணமான தன்னம்பிக்கை கட்டுரை வடிவில் இல்லை. மாறாக கொஞ்சம் சிந்தித்து குழப்பங்களை உண்டு பண்ணி கொள்பவர்களிடம் அவர்களின் வாழ்க்கை சிக்கலை அவர்களுக்கு மட்டுமேயானதன்று என விளக்குவதோடு மேலும் தெளிவாக சிந்தித்து முன்னேறும் படி கூறுகிறது. ஒட்டு மொத்தமாக எல்லா கட்டுரைகளையும் தன்மீட்சி நூலாக வாசிக்கும் போது உற்சாகம் தோன்றினாலும் அவ்வுற்சாகம் அதி உற்சாகமாக இல்லை. மீண்டும் வாசித்தால் நம்மை நாமே தொடர்ந்து அவதானித்து சீர்மை கொள் என்றே அறை கூவல் விடுக்கிறது. இந்த கேள்வியால் கொள் அனைவருமே கொஞ்சமேனும் இலக்கியமறிந்தவர்கள் அல்லது உலகியலை தாண்டிய ஒன்றுள்ளது என்பதை மிக சிறிதளவேனும் அறிந்தவர்களாய் உள்ளனர். அவர்களுக்கு தேவையான ஒரு தெளிவை வழங்குவதோடு அவர்களின் பாதை அவர்களிடமே ஒப்படைக்கப்படுகிறது.
இந்த கடிதத்தை இரவு ஆரம்பித்தேன். கையில் உள்ள சிறுகட்டி ஏற்படுத்தும் வலியினால் இரவே எழுதி அனுப்ப இயலவில்லை. காலையிலும் வலி தொடர்ந்து மதிய வேளை இப்போது தான் மீண்டும் கொஞ்சம் எழுதி முடித்தேன். நிறைய பேச வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். இடையில் நிறுத்தியதால் ஓர் ஒழுங்கில் வந்த பேச வேண்டும் தோன்றிய விஷயங்கள் மறந்துவிட்டன. வேறொரு கடிதத்தில் அவை ஞாபகம் வரலாம். என் கேள்விக்கு பதிலளித்த மைக்கு நன்றி ஜெ.
அன்புடன்
எஸ்
***