எழுத்தாளர்களை வழிபடுவது- கடிதம்

எழுத்தாளர்களை வழிபடுவது

அன்புள்ள ஜெ வணக்கம்.

எழுத்தாளர்கள் முகம் தெரியாதவர்களுக்கும் இனி பிறக்கப்போகின்றவர்களுக்கும் குருவாக இருக்கிறார்கள். அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த பீடம் அவர்களை ஏற்றுக்கொண்டுவிடுகிறது. அவர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள் என்பதை மறுப்பவர்கள் இதயமும் அவர்கள் வழிபடவேண்டியவர்கள் என்பதை அறிந்தே இருக்கும்.

அறியாமையை விட பெரிய இருட்டு உலகில் இல்லை. எல்லா இருட்டும் தன்னை இருட்டு என்றே அறிந்தாலும்  அறியாமை மட்டும் அறிவுவரும்வரை தன்னை ஒளியென்றே எண்ணி தருக்கித்திரியும்.

அறியாமையில் இருக்கும்போது எத்தனை தர்க்கப்பூர்வமாக அறியாமை தன்னை அறிவென்று அறிவிலியை நம்பவைக்கிறது என்பதை அன்றாடவாழ்வில் பார்க்கும்போது ஏற்படும் நகைப்புக்கு அளவையில் இடமில்லை.

நல்லாசிரியர் ஏற்றும் ஒரு நற்சொல்தீபம் முழு பிறவியின் இருட்டையே அடித்து துறத்திவிடும் ஆனந்தஜோதியாக வென்று ஒளிர்கிறது உலகில்.  அதை உணரமட்டுமே முடியும், உணர்வதன்மூலமே  அதை அனுபவிக்கமுடியும். சொல்லி விளக்கமுடியாது.

திருக்கோட்டியூர் நம்பியிடம் ஒரு சொல் கேட்க, திருவரங்கத்தில் இருந்து திருக்கோட்டியூருக்கு 337மைல் தூரத்திற்கு பதினெட்டுமுறை நடந்து நடந்து தேய்ந்த ராமானுஜருக்கு தெரிந்திருந்தது குருவை பணியவேண்டிய அத்தியாவசியம். அவர் ஏன் நடந்தார்? எதற்காக நடந்தார்? இதை எப்படி சொல்லி விளக்குவது?

ஆசிரியர்களை வழிபடும் ஒருவனுக்கே அந்த ஞானதீபம் நுதல்விழியென்று முளைத்து ஆசிர்வதித்து வாழ்க்கை முழுவதும்  வழிகாட்டுகிறது.  ஆசிரியர்களை வழிபடாதபோதும் அந்த ஞானதீபம் ஒளிர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது ஆனால் அதை நோக்காதபோது, அதன் பாதத்தில் தன் இருள் விலக உட்காராதபோது அந்த தீபத்திற்கு அவன் முதுகுகாட்டி நடந்துபோய்கொண்டு இருக்கிறான். அவனே அவன் பாதைக்கு இருட்டாக இருப்பதை அறியாமல்.

எம்பெருமான் முருகனிடம் அருணகிரிநாதர்சாமிகள் தனக்கு சாகாவரம் வேண்டும் என்று கேட்டிருந்தால் கொடுத்திருப்பார். அவர் கூப்பிட்ட நேரத்திற்கு கூப்பிட இடத்திற்கு ஓடிவரும் முருகனுக்கு அது என்ன விநாயகர்கை மாங்கனியா? அருணகிரிநாதர் சாமிகள் முருகனிடம் “புகலியில் வித்தகர்போல அமிர்த கவித்தொடைபாட அருள்வாயே“ என்கிறார். அருணகிரிநாதர் சாமிகள் திருஞானசம்பந்தர் சொல்வழியாக அவர்பாதத்தில் உட்கார்ந்தபோது கண்டறிந்த உண்மை அந்த அமிர்த கவிதொடை. அருணகிரி அடைந்தது சொல்லிச்சொல்லிவரும் சொல்லின் கடலில் கண்டெடுத்த அமுதம். ஏடுதந்தவன் ஏட்டில் விளைந்த ஓளிமுத்து.

புமியதனிற் ப்ரபுவான     புகலில் வித்தகர்போல

அமிர்த கவித்தொடைபாடஅடிதைதனக்கு அருள்வாயே

சமரில் எதிர்த்த சுர்மாளத்     தனியயில் விட்டு அருள்வோனே

நமசிவயப் பொருளானே    ரசதகிரிப் பெருமாளே-

கயிலை திருப்புகழ்

அருணகிரிநாதர் சாமிகள் தனது இதயதெய்வத்திடம் குருவாக வந்தருள் என்ற ஞானத்தெய்வத்திடம் அமிர்தகவித்தொடைக்கேட்பது. குருசொல் அமிர்தம் என்பதால்தான். குருதாளில் தனது கபாளத்தை பிச்சை ஓடாக வைப்பன் அதனை அமுதசுரபியாக வளர்த்தெடுக்கிறான்.   விளக்கு விளக்கை ஏற்றுவதுபோல் ஆசிரியர் மாணவனை ஆசிரியர்போல அக்குகின்றார். ஆசிரியராகவே ஆக்குகின்றார். ஆசிரியருக்கும்மேலாக ஆக்குகின்றார். சூரியன் நீர் கண்ட இடமெல்லாம் சூரியன் சூரியனாக எழுவதுபோல நல்லகுரு நல்லமாணவனிடம் ஒளிர்ந்து ஒளிர்ந்து எழுகின்றார்.  குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் தாள்பணிந்த நரேந்திரன் விவேகானந்தர் ஆனதுபோல.

சுவாமி விவேகானந்தர் வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கின்றது.  அன்னை ராதையிடம் நரேனுக்கு தரிசனம் கொடு என்று  குருதேவர் வேண்டுகின்றார். அன்று நரேன் அன்னை ராதையின் தரிசனம் பெறுகிறார்.    அந்த தரிசனத்திற்கு பிறகே பிரேமையை உணர்ந்தேன் என்கின்றார் விவேகானந்தர். அந்த அனுபவம் கிடைக்காவிட்டால் வெறும் வரண்ட அறிவுடன் வாழும் ஜென்மமாக இருந்திருப்பேன் என்கிறார். பிரேமை என்னும் பேரன்பும் பெரும் அறிவு என்னும் கனிந்த ஞானமும் சேர்ந்த அந்த நரேந்திரன் என்ற  மாணவன் அடைந்தது என்ன  என்பது தெரிந்துக்கொள்ளமுடியுமே அன்றி அறிந்துக்கொண்டுவிடமுடியாது. விவேகானந்தராக ஆனல் மட்டுமே அறியமுடியும். இதுவே குருவருள் செய்யும் ரசவாதம்.

பிரேமையை பேருணர்வை, பெரும் ஞானத்தை பேருண்மையை ஆசிரியர் அன்றி வேறுயார் மாணவருக்கு அளிக்கமுடியும். தானகவே சமைத்துநிறைந்த பாத்திரம் அமுதசுரபி அன்றி வேறு ஒன்று உலகில் இல்லை. அமுதசுரபிகள் பிறக்கும் ஊரில் பசி என்ற ஒன்று இருக்கப்போவதில்லை. எல்லோரும் ஆசிரியர்களாக பிறந்துவிட்டாள் மாணவர்களாக இருக்கவேண்டியதில்லை.  குழந்தையாக  பிறந்து, ஆசிரியர் பாதத்தில் மாணவனாக இருந்து, மாணவன் ஆசிரியர் என்று ஆகின்றான்.

மனிதனுக்கு மூன்று பெரும்பசிகள் இருக்கிறது. ஒன்று வயிற்றுப்பசி அதற்கு சோறுப்படைக்கவேண்டும். இரண்டு உடம்புப்பசி அதற்கு உடம்பையேப்படைக்கவேண்டும்.  முன்னது எல்லோருக்கும் பொதுவானது. பறவை விலங்குக்கும்.  மூன்றாவது அறிவுப்பசி அதற்கு அறிவைப்படைக்கவேண்டும். அறி அறி என்று அறிவுப்பசி மனிதனுக்கு மட்டுமே எடுக்கிறது.   ஆசிரியர் இடம் அன்றி வேறு யாரிடம் இருந்து அறிதலை யாசிப்பது? பறவையில்கூட சுகர்கிளி குருவாக இருக்கிறது. விலங்கில்கூட நந்திகுருவாக இருக்கிறது. பணிவதே பணியென்று பணிந்து பணிந்து பெரும் குருவானவர்கள் அவர்கள். பணியாத மாணவன் அறிவுப்பசியில்லாத பெரும் தலையில்லா வெறும் உடல் கொண்ட மனிதன்தான்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் இந்த திருக்குறள் படித்தவனை பேரறிவாளன் பாதம் நாடிப்பணி என்கிறது. படித்தவனை படி என்கிறது. எத்தனை முரண்?. படிக்கப்படிக்க வரும் அறியாமை இருட்டை  ஓட்டும் விளக்கு அந்த பாதத்தில்தான் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது.

ஸ்ரீராமானுஜர் ஆளவந்தார் இருந்த இடத்தில் அமர்ந்தபின்பு  திருக்கோட்டியூர் நம்பியிடம்  பாடம் கேட்டப்பின்பு   அரையர் இடம் பாடம்கேட்க சென்று அவருக்கு மஞ்சள்காப்பிட்டு நீராட்டியது வெறும் சேவையா? ஆசாரியன் இடம் கொள்ளும் அன்பும் பணிவும் தாய் அன்பும்.

இளம் பருவத்தில் தனது ஆசான் வித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை சில வாரங்களாக  எண்ணெய் தேய்த்துகுளிக்கமுடியாமல் உடல்வாடுகின்றார் என்பதை அறிந்து தான் எண்ணெய் வாங்கிவைத்து குளிக்க செய்கிறார்.உ.வே. சாமிநாதஐயர். இது எல்லாம் சேவைக்கும் பணிவுக்கும் அப்பால் உள்ள தாயன்பின் உச்சம். இதுபோன்ற மாணவர்கள் தான் இந்த உலகுக்கு அழியாத ஒன்றை செய்தவர்கள் ஆகின்றார்கள். பணியாதவர்கள் விளைநிலத்தில் மறைந்துகிடக்கும் கல்போல் வாழ்ந்துவிட்டு எதையும் முளைக்கவிடாமலும் செய்துவிட்டுபோகிறார்கள். ஆசிரியரிடம் பணியும் மாணவர்கள் சிலையாகி தெய்வமாகிவிடுகின்றார்கள்.

இவர்கள் எல்லாம் பெரும் அவதாரபுருஷர்கள். அறிந்தும் அறியவந்தவர்கள். அறிவிக்க வந்தவர்கள். அவர்களால் அறியமுடியும் குருவின் இடத்தை. எளியவர்களும் அந்த இடத்தை அடைந்துவிடுகிறார்கள். நண்பன் சக்கரவர்த்தி பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்து கல்லூரிச்சேர்ந்த முதலாம் ஆண்டு ஊரில் உள்ள குழந்தைகளைத்திரட்டி ஒரு கலைஇரவுவிழா நடடித்தினான். நீயும் வந்து   செயல்படு என்றான். பின்தங்கிய கிராமம் உழவுத்தொழிலை முதன்மையாகக்கொண்ட கிராமம். மேடை ஏறிய குழந்தைக்கு எல்லாம் ந்தங்கள் பூமாலை கட்டிவந்துப்போட்டு அழகுப்பார்த்து ஆனந்தப்பட்டது.

ராமநாடகம் போடும் பாத்திரங்களுக்கு நடக்கும் சீரும் பாராட்டும் அது. குழந்தைகள் கலைவிழாவில்  அந்த அலை வந்து ததும்பி நிற்பதை கண்டு முகம் மலர்ந்தேன்.  கலைவிழா சிறப்பாக இருந்தது. மேன்மையாக இருந்தது. பன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியல் ஆசிரியர் கலந்துக்கொண்டு  வாழ்த்தி தலைமையேற்று உளமார நடத்திக்கொடுத்தது நிகழ்சியின் உச்சிதீபம். நண்பன் மேடையில் அவர் பாதம் தொட்டு சென்னி சூடினான். மகிழ்ச்சி ஆனந்தம் என்று பறந்துக்கொண்டிருந்த மனம் அதைப்பார்த்து ஒரு நிமிடம் சிலிர்த்து மலர்ந்து விரிந்து வாசம்வீசியது. ஒரு கணம் அசைவின்மை ஏற்பட்டு ஆட்டியது.  யாரும் எதுவும் செய்யாத அந்த ஊரில் அதைச்செய்யச்சொல்லி வழிக்காட்டி துணைநின்றது அந்த பாதமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொள்கின்றேன். அந்த பாதம் அதை எதிர்ப்பாக்கவில்லை. பதறி துள்ளி குதித்துவிட்டார் ஆசிரியர்.

வெண்முரசு -கிராதம் நாவலில் கிராதனிடம் பன்றிக்காக வில்போரில் தோற்று கொல்லப்பட அல்லது கொன்றுக்கொள்ள விழையும் அர்ஜுனனிடம் காளி அன்னை இப்படிச்சொல்கிறாள்.

அறிவிலியே என புன்னகையிலேயே செல்லமாக அழைத்து “தோற்றாய் என்றால் நீ அறியாத ஒன்றை சந்தித்திருக்கிறாய் என்றல்லவா பொருள்?  அதைக் கற்கும் ஒரு வாய்ப்பு உனக்கு அமைந்திருக்கிறது என்றுதானே கொள்ளவேண்டும் நன்மாணவன்?” என்றாள். அவன் உள்ளம் சொடுக்க, விழிதூக்கி அவளை நோக்கினான். உதடுகள் சொல்லில்லாமல் அசைந்தன. இனிய மென்குரலில் “நீ கற்றிராததை இவரிடமிருந்து கற்றுக்கொள். கற்பிக்கும் இவர் உன் ஆசிரியர். ஆசிரியனிடம் தோற்பதில் இழிவென ஏதுமில்லை. ஆசிரியன் முன்பு முற்றிலும் தோற்காதவன் எதையும் கற்கத்தொடங்குவதில்லை” என்றாள்.

காதலிக்கு ஒரு ரோஜா வாங்க கடையில் உள்ள பூமலையையே புரட்டிப்போடுவனை கடையில் உட்கார்ந்திருக்கும் வியபாரிகள் அறிவதில்லை. பூட்டிய வீட்டில் இருந்தாலும் காதலி அறிவாள்

எழுத்தாளர்களை வழிபடுவது என்ற நல்லதொரு கட்டுரை வழங்கிய உங்களுக்கு வணக்கமும் நன்றியும்.

அன்புடன்

ராமராஜன் மாணிக்கவேல்

முந்தைய கட்டுரைதலைவியர் எண்மர்
அடுத்த கட்டுரைஉடையாள்-10