பிணைப்பு [சிறுகதை]- தனா

“டீ குடிக்கிதியளா” என்றேன். பேயாண்டித்தேவர் சரி என்று தலையாட்டினார். பேரையூர் பஸ் ஸ்டாண்டில் கால்மணி நேரம் பஸ் நிற்கும். நான் பஸ்ஸிலிருந்து இறங்கி டீக்கடைக்கு சென்றேன். வெயில் கசகசத்தது. மனம் மாறி இரண்டு கொககோலா பாட்டில் வாங்கி அதில் ஒன்றை ஜன்னலோரமாக அமர்ந்திருந்த பேயாண்டித்தேவருக்கு நீட்டினேன்.

“வெயிலு நல்லா ஒரைக்குது” என்றபடி வாங்கிக்கொண்டார். நான் மறுபடியும் கடைக்கு சென்று ஒரு சிகரெட் வாங்கி பற்ற வைத்துக்கொண்டேன்.

தேவர் கொககோலாவை அண்ணாக்காக தூக்கி குடித்தார். ஒவ்வொரு மடக்கிற்கும் ஒரு முறை தோளில் கிடந்த துண்டால் வாயை துடைத்துக்கொண்டார். நான் அவரை கூட்டிக்கொண்டு வர சின்னமனூரில் இறங்கி அங்கனத்தேவன்பட்டிக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. அவர் உயிருடன் இருக்கப்போவதில்லை என்றே நினைத்தேன். ஆனால் ஆச்சர்யமாக தொன்னூரு வயதிற்கு மேலும் உயிருடன் இருந்தார்.

ஊர்க்காரர் ஒருவர் வழிகாட்ட பொட்டபுஞ்சை காட்டிற்கு சென்றேன். சுற்றிலும் தென்னையும் வாழையுமாக நின்றிருக்க நடுவில் உழுதுகிடந்த ஒரு துண்டு நிலத்தில் கிடை போட்டு அதில் ஒரு மூலையில் பெரிய குச்சியை கையில் பிடித்தபடி பேயாண்டித்தேவர் வரப்பில் குத்த வைத்து அமர்ந்திருந்தார். உடல் வற்றி ஒடுங்கி போயிருந்தாலும் உறுதியாக இருக்கிறார் என்று தெரிந்தது. தலையில் உருமாள் கட்டியிருந்தார். கசங்கி மக்கிய வெள்ளை ஜிப்பாவும் வேட்டியும் கட்டியிருந்தார். வழிகாட்ட வந்தவரிடம் “இவுகதேன் பேயாண்டிதேவரா? என்றேன்.

அவர் ஆமென்று தலையாட்டினார். சந்தேகம் தீராமல் “அண்ணன வெட்டிட்டு ஜெயிலுக்கு போனாரே?” என்று கிசுகிசுகித்தேன்.

“இவருதேன் அவரு” என்றபடி அவர் திரும்பிச் சென்றார். நான் பேயாண்டிதேவரிடம் சென்று “வணக்கம்ங்யா” என்றேன்.

அவர் என்னை கூர்ந்து பாத்தடி பொதுவாக “வாங்கயா.. வாங்கயா.. சொல்லுங்க” என்றார்.

நான் யாரென்று சொன்னேன். எதற்கு வந்திருக்கிறேன் என்று சொன்னேன். சரி சரி என்று எனக்கு தலையாட்டியபடியும் தடுப்பு கயிற்றை தாண்ட முயன்ற ஆடுகளை ஓவ் ஓவ் என்று அதட்டியபடியும் கேட்டுக்கொண்டார்.ர் அதன் பின் ஆடுகள் மேய்வதையே பார்த்துக்கொண்டிருந்தார்.

நான் அவர் பதிலுக்காக காத்திருந்தேன்.

என் பக்கம் திரும்பி “இப்ப நான் வரணும்ங்றியளா? என்றார்.

“அதுக்குத்தான அம்புட்டுத் தொலவுலருந்து வந்திருக்கேன்” என்றேன்.

“சீனியம்மாளுக்கு மூணு ஆம்பளபுள்ளகளும் ரெண்டு பொட்ட புள்ளைகளும் தான? நீங்க யாருக்கு மகென்? என்றார்.

“நா மூத்தவுக மகென்” என்றார்.

சில நிமிட அமைதிக்குப் பின் “ஓவ்வ்வ்வ்” என்று இழுத்து கத்தினார்

தொலைவிலிருந்து ஒவ்வ்வ் என்று பதில் வந்தது.

நான் சுற்றிலும் பார்த்தேன். எங்கும் யாரும் தென்படவில்லை.

தேவர் மறுபடியும் ஓவ்வ்வ் என்று கத்தினார். சில நிமிடங்களில் அருகிலிருக்கும் தென்னந்தோப்பு பாதை வழியாக கறுத்த இளைஞன் ஒருவன் சட்டையில்லாமல் லுங்கியின் ஒரு முனையை கையில் பிடித்தபடி இன்னொரு கையால் குச்சியை பிடித்துக்கொண்டு சில ஆடுகளை ஓட்டி வந்தான். ஆடுகளை கெடையில் அடைத்தவிட்டு தேவருக்கு அருகில் வந்தான்.

“சீல்தூருக்கு போறேன். வந்துர்றேன்..” என்றபடி குச்சியை பிடித்தபடி எழுந்து என்னுடன் நடந்தார். நடை மிகவும் தளர்ந்திருந்தது. மேடுபள்ளங்களில் அவர் என் தோளை பிடித்துக்கொண்டு நடந்தார். நாங்கள் தேனிக்கு வந்து அங்கிருந்து ராஜபாளையம் போகும் பஸ் பிடித்தோம். பேரையூர் வந்து நிற்கும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. தேவர் தலையை பின்னால் சாய்த்து வாய் திறந்து தூங்கிக்கொண்டே வந்தார். அவர் மேல் ஆட்டின் கொச்சை வாடை அடித்தது.

பேரையூரில் இருந்து விட்டு மறுபடியும் பஸ் கிளம்பி ஶ்ரீவில்லிபுத்தூரை நோக்கி சென்றது. அவர் தூங்காமல் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டே வந்தார். விவசாய நிலங்களை கடந்து பஸ் சென்றுகொண்டிருந்தது.

“அன்னைக்கெல்லாம் இந்தப்பக்கம் பெருசா வெவசாயம் எதுவும் இல்ல. மொட்டக்க்காடா கெடக்கும்.. இன்னைக்கு கெலோ மீட்ரு கணக்குல பைப்ப போட்டு எங்கிட்டிருந்தாவது தண்ணிய இழுத்துக் கொண்டு வந்து வெள்ளாமைய பாத்துறாங்ய” என்றார்

நான் ஆமாம் என்றேன்.

நமக்கு ரெண்டு குழி நெலமிருந்துச்சு. கிணத்துல தண்ணி மேல கெடக்கும். வாழ போடுவேன்.. இடைக்கெடைக்கு மல்லி போடுவேன். அப்பறம் நெலமெல்லாம் கேசு நடத்தியே காலியா போச்சு” என்றார்.

நான் என்னையறியாமல் “அண்ணனையே வெட்டி போட்டியளே” என்று சொல்லிவிட்டேன்.

பேயாண்டிதேவர் எதுவும் பதில் சொல்லவில்லை.

பஸ் கல்லுப்பட்டி தாண்டி மதுரை ராஜபாளையம் ரோட்டில் ஏறியது. அவர் எதையோ யோசித்தபடி இருந்தார்.

பின் அவரே “பெரிய பாவமப்பா” என்று உச்சுக்கொண்டிக்கோண்டார்.

அவர் பேசப்போகிறார் என்று தெரிந்தது.

“எட்டுக்குழி நெலத்த எங்கய்யா அண்ணந்தம்பிக நாலு பேருக்கு பிரிச்சுவிட்டாப்ல.. கெணரு பொதுக்கெணரு.. ஆளுக்கொருநா மொற வச்சு தண்ணி பாச்சிகிருவோம்.. நான் மூணாமத்தவென்.. எனக்கு நேர்மூத்தவனுக்கு என்னமோ ஒரு சடவு அண்ணந்தம்பிக எல்லாபேர் மேலையும்.. எங்கலியாணத்துக்கு கூட வரல.. அவெ கட்டினவ சரி கிடையாது பாத்துக்க.. நம்மளப்பத்தி ஏறுக்குமாறா என்னத்தையாவது சொல்லிவிட்டிருவா போல.. இவெனும் அதுக்கேத்த மாதிரி எங்ககிட்ட வந்து சாமியாடுவியான்”

காற்று ஜன்னல் வழியாக விசிறி அடிக்க அவருடைய துண்டு அலைபாய்ந்தது.

“எனக்கு எந்நெலந்தேன் உசிரு.. இருக்க ரெண்டு குழிய வச்சு பொழச்சு வரனும்னு பழியா கெடந்தவென் நானு. வெள்ளாம இல்லாம கெடந்த நெலத்த ஒண்ணுக்கு ரெண்டுவாட்டி உழுது, கெடைய போட்டு, மண்ண ஒரமேத்தி வெவசாய பூமியாக்க நான் அம்புட்டு பாடுபட்டேன். ஒரு வழிக்கு அத கொண்டு வந்து பச்ச தளச்சு வந்தத பாத்த பொறவுதேன் ஒக்காரவே செஞ்சேன்..

பஸ் அழகாபுரியில் ஆட்களை ஏற்றிக்கொண்டு நகர்ந்தது

“என்னத்த சொல்ல.. அந்த நெலந்தேன் எனக்கு காசுதுட்டுன்னு குடுத்துச்சு.. கலியாணம் முடிச்சு வச்சுச்சு”

தேவர் அலைபாய்ந்த துண்டை தலையில் உருமாவாக கட்டிக்கொண்டார்.

“கெட்டிட்டு வந்த எட்டாநாளு மல்லி போட்டிருந்த என் நெலத்துக்கு போனேன். அன்னைக்கு எம்மொற தண்ணிக்கு. போயி பாத்தா அவெ நெலத்துல பாஞ்சிகிட்டிருக்கு. சரி போறியான் சில்றப்பயன்னு நான் ஒன்னும் சொல்லிக்கிறல. சத்தியமா என்னா ஏதுன்னு ஒரு வார்த்த பேசிக்கிறல. என்னயிருந்தாலும் மூத்தவென்.. அவெங்கிட்ட போயி என்னத்த கேக்கன்னு கண்டும் காணாப்புல வரப்புல மொழச்சி கெடந்த களைய வெட்ட ஆரம்பிச்சிட்டேன். திரும்பப்போவும் போது மாட்டுக்கு புல்லருத்துட்டு போணும். ஆனா அவென் என்னா செஞ்சியான் தெரியுமா? நான் வரப்ப வெட்டிகிருக்கும் போதெ எங்குழில அவென் மாடுகள் ரெண்ட ஏறக்கி விட்டு மேய விட்டியான். அதுக ஏறங்கி மல்லிய மிதிச்சிகிட்டே ஓரஞ்சாரத்துல கெடந்த புல்லையையும் மல்லியையும் சேத்து மேயுதுக.. எனக்கு சுர்ருன்னு ஆயிப்போச்சு. பொறவும் பல்லக்கடிச்சிகிட்டு ஏண்ணே மாட்ட அங்கிட்டு பத்திகிட்டு போ.. சும்மா போட்டு வம்புழுத்துட்டு திறியாதன்னேன்..

நான் அவர் சொல்வதையே உன்னிப்பாக கெட்டுக்கொண்டு வந்தேன்.

“ஏண்டா அவுசாரி மகனேன்னு ஆரம்பிச்சி என்ன அம்புட்டு பேச்சு பேசுறியான். நானும் எதையும் காதில வாங்காம மம்பட்டிய போட்டு வரப்புல இழுத்துட்டு கெடந்தேன். செத்த மண்ண எனக்கு தள்ளிவிட்டு நீங்கெல்லாம் நல்ல நெலத்த வச்சிகிட்டீக அப்டி இப்டின்னு என்னென்னமோ வாய்க்கு வந்தபடி பேசிகிட்டே போறியான். எனக்கு பொறும போய்கிட்டே இருக்கு. அன்னைக்கு சரியில்லாம போனது அவெ விதியா என் விதியான்னு தெரியல. வக்காளி என்னைகிருந்தாலும் ஒன் நெலத்த புடுங்காம விடமாட்டேண்டா.. அன்னைக்கி நீ உம் பொண்டாட்டிய வித்து காசோட வந்து நின்னாலும் உனக்கு உன் நெலம் கெடைக்காது தெரிஞ்சிக்கன்னியான்.. அம்புட்டுத்தேன். அத்தோட போச்சு பொறும. எப்ப அவெங்கிட்ட ஓடுனேன்.. எப்ப மம்பட்டிய எடுத்து அவெ மண்டயில வெட்டினேன்னு எனக்கே தெரியல. அன்னைக்கு அவனுஞ் செத்தியான்.. அவனோட சேத்து நானுஞ் செத்தேன்” என்றார்.

சிறிது நேரம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. வண்டி ஶ்ரீவில்லிபுத்தூருக்குள் நுழைந்தது. ஜன்னல் வழியே வடபத்ரர் கோவில் கோபுரம் தெரிய பேயாண்டித்தேவர் ஒரு கும்பிடு போட்டுக்கொண்டார். ஶ்ரீவில்லிபுத்தூரில் இறங்கி மம்சாபுரத்துக்கு பஸ் ஏறினோம். இன்னும் பத்து நிமிட பயணத்தில் ஊர் வந்துவிடும். நான் அவர் சொன்னதையே நினைத்துக்கொண்டிருந்தேன்.

“சின்ன விசயத்துக்கு போயி இப்டி ஆயிப்போச்சே” என்றேன்

பேயாண்டித்தேவர் “எத சின்ன வியம்ங்குற” என்றார் கோபமாக.

நான் அவரின் கோபத்தை எதிர்பாக்கவில்லை.

“எந்நெலம்ங்குறது எனக்கு எம்பொஞ்சாதி மாதிரி. அத நான் வாழ வைக்கனும் அது என்னய வாழ வைக்கனும். அதுல இன்னொருத்தேன் எறங்குறியான்னா பாத்துட்டு நிக்க முடியுமா? அவெ கூடப்பொறந்தவானவே இருக்கட்டும்.. தப்பில்லையா? என்று கேள்வி கேட்டார்.

நான் பொதுவாக தலையாட்டினேன்.”இன்னவரைக்கும் ஒரு நாதி சீண்டல. என்ன ஏதுன்னு கேக்கல. பாக்குறவெ கண்ணுக்கெல்லாம் நான் பாவி. கொலகாரென். நின்ணு பேசமாட்டாங்ய எவனும் எங்கிட்ட. ஆனா பேயாண்டி எதுக்கு இப்டி ஒரு காரியத்த செஞ்சியான்னு எவனும் நின்னு யோசிக்க மாட்டாங்ய”

பின் “போறங்ய. இனி என்னா இருக்கு எனக்கு” என்று திரும்பிக்கொண்டார்.

மம்சாபுரத்தில் இறங்கி அவரை மெதுவாக நடத்தி வீட்டிற்கு கூட்டி வந்தேன். வீட்டில் இப்பொழுது ஆள் அதிகமிருந்தது. சொந்தங்கள் சில பேர் வந்திருந்தார்கள். அப்பா வாசலுக்கு வெளியே சித்தப்பாக்கள் இருவருடன் சேர் போட்டு உக்கார்ந்திருந்தார். பேயாண்டித்தேவரை அவர்கள் யாருக்கும் தெரியவில்லை. நான் மெதுவாக அவர்களை கடந்து தாத்தாவை வீட்டிற்குள் அழைத்துச் சென்றேன். அம்மா எதிரி வந்தவள் யார் என்று சைகையில் கேட்டாள். நான் அவளை தவிர்த்துவிட்டு தேவரை கூட்டிக்கொண்டு உள்ளே சென்றேன்.

வராந்தாவை தாண்டி உள்ளே இடது பக்கத்தில் இருக்கும் அறையில் அம்மை கிடந்தாள். அவரை உள்ளே அழைத்துச்சென்று அம்மையின் கால் மாட்டில் அமர வைத்தேன். அவள் வலியால் நடுங்கும் உடலுடன் கண்மூடிக்கிடந்தாள். சின்ன அணத்தல் இருந்தது.

“அம்ம..அம்ம.. இந்தா கண்ணத்தொறந்து பாரு” என்றேன். அவளிடம் அணத்தல் மட்டுமே வந்தது. மெல்ல அவள் தோளை உலுக்கி எழுப்பினேன். கண்விழித்ததும் மிரண்டு பார்த்தாள்.

“இந்தா பாரு” என்று பேயாண்டித்தேவரை காட்டினேன். அவளுக்கு விளங்கியதா என்று தெரியவில்லை. நான் வெளியே வந்துவிட்டேன்.

அதற்குள் அப்பாவிற்கு விசயம் தெரிந்து விட்டது. என்னை நோக்கி கையை ஓங்கியபடி வீட்டிற்குள் விறு விறுவென்று வந்தார். சித்தாப்பாக்கள் இருவரும் அவரை தாவி பிடித்தார்கள்.

“என்ன மப்பெடுத்துப்போயி திறியிதியா? யார்ரா அவன கூட்டி வரச்சொன்னது ஒன்னய? என்றார்

வீட்டிற்குள் சிதறிக்கிடந்த பொம்பளை ஆட்கள் எல்லாம் ஒன்றுகூடி வந்து அப்பாவை தடுத்தனர்.

“ஒங்காத்தாதேன்” என்றேன் அவரிடம்.

அப்பா அப்படியே நின்றுவிட்டார். அவரை பிடித்திருந்த கைகள் தளர்ந்தது. அம்மா என்னை வெளியே தள்ளிக்கொண்டு போய் நிறுத்தினாள்.

“இப்ப என்னத்துக்கு இந்த வேல ஒனக்கு” என்றாள்

“அம்ம ஆசப்பட்டிச்சு” என்றேன். அம்மா அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை.

தெரு முக்கில் இருக்கும் பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி புகைத்தேன். எதையோ நிறைவாய் செய்துவிட்ட அமைதியை உணர்ந்தேன். நான் மறுபடியும் அம்மை இருக்கும் அறைக்குள் சென்றேன். தேவர் பாட்டியின் காலைப்பிடித்தபடி அமர்ந்திருந்தார். பாட்டி மூச்சு வாங்கியபடி அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள். இருவரும் பேசிக்கொண்டார்களா என்று தெரியவில்லை. அம்மைக்கு பேச முடியுமா என்றும் தெரியவில்லை.

இரண்டு நாளுக்கு முன் அம்மை என் பேர் சொல்லி அணத்தினாள்.

அம்மா” அம்ம உன்னயத்தேன் கூப்டுது.. என்னான்னு கேளு” என்று வந்து சொன்னாள்.

அம்மைக்கு கற்ப புற்று நோய் என்று சொன்னார்கள். மூன்று மாதமாக படுக்கையில் கிடந்தாள். எப்பொழுதும் வலியில் துடித்தபடியே கிடந்தாள். வீடு முழுவதும் அவள் வலியில் அணத்துவது கேட்டபடியே இருக்கும்.

“ஒரு ஆயிரம் பெரசவமாச்சும் பாத்த பொம்பள. அவளுக்கு இப்பிடி ஒரு நோயி. என்னத்தா சொல்றது” என்று அத்தையிடம் அம்மா நிஜமாகவே அழுதாள்.

நான் உள்ளே சென்று அம்ம என்றேன். சீலையை கட்டாமல் வெறுமனே அவள் மேல் சுற்றியிருந்தார்கள். அணத்தியபடியே என்னை பார்த்தாள். எதோ முனங்கினாள். குனிந்து “அம்ம சொல்லு” என்றேன். சிறுவயதில் என்னை இறக்கி விடாமல் இடுப்பிலேயே ஏற்றி வைத்து சுற்றியவள். “எங்கப்பாரு.. மொகத்த பாரு எங்கப்பாரு மொகம்” என்று எல்லோரிடம் என்னைக்காட்டி பொங்கியவள். என் கண்ணத்தில் மெலிந்த கைகளால் வருடினாள்.

“என்ன வேணும்.. சொல்லு அம்ம” என்றேன்

அவள் சொல்லிய பின்புதான் நான் பேயாண்டித்தேவரை பார்க்க கிளம்பி வந்தேன்.

அம்மை இப்பொழுது தளர்ந்து கண்களை மூடிக்கொண்டாள். சிறிது நேரம் அவளையே பார்த்த்துக்கொண்டிருந்த தேவர் மெல்ல கையூன்றி எழுந்தார். போவோம் என்று தலையசைத்தார். நான் அவரை வெளியே அழைத்து வந்தேன். வீட்டில் இருந்த எவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அப்பா வெளியே சேரில் அமர்ந்திருந்தார். அம்மா சைகையில் சாப்பிட்டு விட்டு போகச்சொல் என்றாள்.

தேவரிடம் “சாப்டுவோம்” என்றேன்.

அவர் இல்லை என்று கையை அசைத்தவாறே வெளியே வந்தார். அவர் வேறு யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவரை அழைத்துக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் வந்தேன்.

“பஸ்ஸேத்தி விடப்பா.. நான் போய்க்கிறேன்” என்றார்.

நான் சரி என்று சொல்லிவிட்டு அவரிடம் நூறுரூபாய் தாளை நீட்டினேன். அவர் சகஜமாக வாங்கி ஜிப்பா பையில் வைத்துக்கொண்டார்.

பின் “கொணமான பொம்பள..நெறமான பொம்பள” என்றார்.

“ஆமா.. அம்மெ எங்கள அப்பிடி பாத்துக்குச்சு” என்றேன்

“நான் கலியாண முடிச்சு கூட்டியாரும் போது கிளிக்குஞ்சு மாதிரி இருப்பா. கொரலும் கிளிக்கொரலுதேன். எங்காத்தா வழில யாருக்கோ இந்தூருல பொண்ணு கட்டி குடுத்துருந்தாங்க.. அத வச்சு எங்காத்தா இங்க வந்து சீனியம்மாள பாத்தா. எங்கிட்ட ஒரு வார்த்த கேக்கல.. எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டுதேன் வந்து சொன்னா. நான் வெள்ளாம பாத்து வெள்ள வேட்டி கட்டியிருந்த காலம். சரித்தேன்னுட்டேன்.

அம்மைக்கு என்னுடைய தாத்தா இரண்டாவது கணவர் என்று எனக்கு சிறுவயதில் இருந்தே அரசல் புரசலாக தெரியும். ஆனால் அதற்கு மேல் அதைப்பற்றி எங்கள் வீட்டில் யாரும் பேசுவதில்லை.

“வறண்ட பூமில கெடந்தவ.. பச்ச பசேர்னு வெளஞ்சு கெடக்குற நெலத்த பாத்து பாத்து சந்தொசப்பட்டுக்கிடுவா..என்னா இம்புட்டு கூதக்காத்து அடிக்குது இந்தூர்லன்னு முந்தானைய எடுத்து ஒடம்ப சுத்திக்கிடுவா..எட்டு நாள்ள அவ பேசி நான் கெட்டது ஒரு பத்து வார்த்த இருக்கும்.. அம்புட்டுதேன். கூழு குடிக்கியளா. வெள்ளன வந்திருவியளா.. இந்த மாதிரி.

“உங்கூரு பாஷையில பேசுவா. எனக்கு சிரிப்பாணியா இருக்கும். ஆனா கட்டின மறுநாளே தேரிஞ்சு போச்சு அவ எங்காத்தா மாதிரின்னு. ரெண்டு கண்ணையும் விரிச்சு என்னய பாப்பா.. நான் பாத்தா சிரிச்சிகிடுவா.  எங்கண்ணன வெட்டி போட்டு நான் நேரா போலிசு டேசனுக்கு போயிட்டேன். ஒரு தடவ வீட்டிக்கு போயி அவ மூஞ்சிய பாத்துருக்கனும். பாக்கல..”

அவர் பஸ் ஸ்டாண்டிலேயெ குத்த வைத்து அமர்ந்து கொண்டார்.

நானும் சுற்றிலும் பார்த்துவிட்டு அவர் அருகில் அமர்ந்தேன்.

“சீனியம்மா அண்ணெந்தம்பிக அவள வந்து கூட்டிட்டு போய்ட்டாங்ய. நான் ரெண்டு வருசம் கழிச்சு வெளிய வந்தேன். கேஸு போய்கிட்டுதேன் இருந்துச்சு.அதுக்கே நெலம் போச்சு.  வீட்டுக்கு வந்தா எங்காத்தா மட்டும்தேன் இருக்கா.. ஒரு ஆக்கருவாள எடுத்துகிட்டு கெளம்பிட்டேன். தடுத்தா அவென் அண்ணந்தம்பிகள வெட்டுறது.. வரமாட்டேம்னா அவள வெட்டுறதுன்னு.. போறேன் போறேன் நடந்தே போறேன்.. உசிலம்பட்டி கணவாகிட்ட எந்தம்பிக போலிசோட வந்து என்ன மறிச்சிட்டாங்ய. அப்பத்தேன் எந்தம்பி சொன்னியான்.. சீனியம்மாளுக்கு வேற கலியாணம் முடிச்சு புள்ள பொறந்தாச்சுன்னு”

அதன் பின் அவர் எதுவும் பேசவில்லை. டீ குடிக்கிறீகளா என்றேன்.. வேணாம் என்று தலையாட்டினார். எனக்கு போன் வந்தது. தேவரிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தேன். பின் சொல்லிவிட்டேன். அவர் தலை நிமிராமல் கேட்டுக்கொண்டார்.

“அவளுக்கு நெறையட்டும்” என்றார்.

நான் அவரை பஸ் பிடித்து பார்த்து போக சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தேன். அம்மையை குளிப்பாட்டி மாலை போட்டு நாடிகட்டி நாற்காலியில் அமர வைத்திருந்தார்கள். ஒப்பாரிகள் அப்பொழுதான் ஆரம்பித்திருந்தன. வெளியில் நிறைய சேர்கள் நிரம்பியிருந்தன. அப்பா சட்டையை கழட்டி விட்டு தோளில் துண்டுடன் நின்றிருந்தார். என்னை பார்த்து சைகை செய்தார். அவர் சொன்ன வேலைகளை மனதில் நிறுத்திக்கொண்டு ஒவ்வொரு வேலையாக செய்ய ஆரம்பித்தேன்.

ஒரு மணி நேரத்திற்குள் பந்தல் போடப்பட்டது. போனில் பலருக்கு தகவல் சொல்லப்பட்டது. நெல்லு வாங்கி வந்து அளாக்கில் போட்டு வைத்தேன். பிண வண்டிக்கு சொல்லிவிட்டு வந்தேன். உடன் ஒருவரை அழைத்துக்கொண்டு சுடுகாட்டிற்கு சென்றேன். அங்கு தாத்தாவின் சமாதிக்கு அருகிலேயே இடத்தை குறித்து குழி தோண்ட ஏற்பாடு செய்தேன். வரும் வழியில் ஒரு சிகரெட்டும் டீயும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். எதிர்பார்த்த சாவு என்பதால் வர வேண்டிய பலர் ஏற்கனவே வந்திருந்தார்கள். வீடு நிரம்பி வழிந்தது.

மறுபடியும் வண்டியை எடுத்துக்கொண்டு பிணவண்டிக்கு போட தேவையான மாலைகளுக்கும் பூக்களுக்கும் சொல்லி விட்டு வந்தேன். சித்தப்பா வெடி போட வேண்டும் என்றார். மம்சாபுரத்தில் வெடிக்கடை இல்லை. ஒருவரை ராஜபாளையம் அனுப்பினேன். எல்லாம் முடிந்து அம்மையை தூக்கி பிண வண்டியில் வைத்து கிளம்பும் போது மாலை ஆகிவிட்டது.

வண்டி குழுங்கி குழுங்கி மெதுவாக ஊர் மந்தையை கடந்தது. முச்சந்தியில் வண்டியை நிறுத்தி அத்தைமார்கள் இருவரும் குடத்துடன் மூன்றுமுறை வண்டிய சுற்றி வந்தவுடன் பெண்கள் தேங்கிக்கொள்ள வண்டி சுடுகாடு நோக்கி விரைவாக சென்றது. அம்மை கம்பீரமாக அமர்ந்திருந்தாள். வண்டியிலிருந்து பூக்களை பிய்த்து ரோட்டில் இரைத்தவாறு நடந்தோம். அமைச்சியார் பட்டி கடந்து சுடுகாட்டை அடைந்தோம். அங்கே ஏற்கனவே குறித்த இடத்தில் பள்ளம் வெட்டி தயாராக இருந்தது. ஒரு வாழை இலையில் சூடம் பொறுத்தி இளநீர் வெட்டி மாலையுடன் வைக்கப்பட்டிருந்தது.

வண்டியில் இருந்து அம்மையை இறக்கி படுக்க வைத்தோம்.

“தாய்க்கு தலைமகென் தகப்பனுக்கு எளைய மகென்” என்று நாவிதர் கூவினார்.

அப்பா துண்டை ஒருவரிடம் குடுத்து விட்டு நாவிதர் முன் போய் அமர்ந்திந்தார். நாவிதர் அப்பாவிருக்கு மொட்டை போட்டிருக்கும் போது அவருக்கு பின்னால் பூவரசம் மரத்தடியில் பேயாண்டித்தேவர் குத்த வைத்து அமர்ந்திருப்பதை பார்த்தேன். எனக்கு ஆச்சர்யமாக எதுவும் படவில்லை. ஒருவகையில் நான் எதிர்பார்த்ததுதான்.

அப்பா மழித்துவிட்டு வந்ததும் அம்மையை குழிக்குள் இறக்கினோம். அப்பாவின் தோளில் நீர் நிறைந்த களிமண் சட்டியை வைத்து குழியை சுற்றி வந்தார். எல்லோரும் குழிக்குள் மண்ணள்ளி போட்டனர். நான் மூன்று முறை மண்ணை இடது கையால் தள்ளி விட்டு நிமிர்ந்து பேயாண்டி தாத்தாவை பார்த்தேன். அவர் நாவிதர் முன் அமர்ந்து தன் தலையை மழித்துக்கொண்டிருந்தார்.

முந்தைய கட்டுரைகதைகளின் வழியே… கடிதங்கள்
அடுத்த கட்டுரைமழைப்பாடலின் குரல்கள்