மொழியாக்கம் பற்றி- ஸ்வேதா சண்முகம்

அன்புள்ள ஜெ,

எழுத்தாளர் அ. முத்துலிங்கம் உடனான உரையாடல் ஒரு சிறப்பான அனுபவம். பைலட் உடன் காக்பிட்டில் சவாரி செய்வது, பிடித்த எழுத்தாளரை விடாது விரட்டி சந்திப்பது என ஆர்வத்தின் அடிப்படையில் அமைந்த அவரது ”சாகசங்கள்” பெரும் வியப்புக்குரியவை. அவரை ஒரு முன்னோடி எழுத்தாளர், உலகத்தை ஆரத் தழுவி இலக்கியம் படைத்தவர் என்ற முறையில் பெரிதும் மதித்திருந்தேன். ஆனால் அவருடைய இந்த இயல்பு எனக்கு “அடுத்து என்ன” என்ற வாசகத்தை மஞ்சள் பெயிண்டில் வரைந்து எலுமிச்சையும் மிளகாயும் கட்டி ஹைவேயில் இறங்குவதற்கான உத்வேகத்தை அளிக்கிறது.

சந்திப்பில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று, உலக அளவில் தமிழ் இலக்கியத்தின் இடம் பற்றி. தமிழ் கவனம் பெறாத காரணங்களாக (மொழியாக்கம் சார்ந்து) எழுத்தாளர் இரண்டினை குறிப்பிட்டார்.

ஒன்று அதிர்ஷ்டம், கான்ஸ்டென்ஸ் கார்னெட் கண்டடைந்த ரஷிய படைப்புகளுக்கு வாய்த்த அதிர்ஷ்டம் போல், ஃபிட்ஸ்ஜெரால்ட் மொழிபெயர்த்த ஒமர் கயாம்மிற்கு அமைந்த அதிர்ஷ்டம் போல்.

இன்னொன்று முயற்சி, ஒர்ஹான் பாமுக்கின் ‘என் பெயர் சிகப்பு’ நாவலை ஆங்கிலத்தில் வெளிகொண்டுவந்த ஒரு குழுவினரை பற்றி குறிப்பிட்டார். மொழிபெயர்ப்பாளர் தேர்வை தீவிரமாக முன்னெடுத்த அவர்களை சுட்டி விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கு ஒரு வேண்டுகோளும் அவர் விடுத்தார்.

இந்த மொழியாக்க விடுபடல் பல நாட்களாக என்னைக் குழப்பிய ஒன்று. தமிழ் உட்பட எந்த ஒரு இந்திய மொழியின் மொழியாக்கமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஏன் இந்தியாவிலே பிறந்து வளர்ந்து, கல்வி எண்ணம் எழுத்து பேச்சு என அனைத்திலும் ஆங்கிலம் தழுவிய இந்திய-ஆங்கில எழுத்தாளர்களின் புனைவுகளுக்குக் கூட – நியூ யார்க் டைம்சில் இடம் பெற்றுவிடும் விமர்சனங்களை விட்டால் – எந்த நிற கம்பளமும் விரிக்கப்படுவதில்லை. இந்திய பூர்விகம் கொண்ட எழுத்தாளர்களே இன்று இந்திய இலக்கியத்தின் முகங்களாக உலக மேடையில் அங்கீகரிக்கப் படுகிறார்கள் – அரவிந்த் அடிகா, ஜீத் தயில், சித்ரா பேனர்ஜி திவாகருனி ஆகியோர். (Indian writers என கூகுளில் கடவுச் சொல் இட்டால் புரியும், அவர்களில் பெரும்பான்மையினர் வசிக்கும் நாடு இந்தியா அல்ல) இதற்குப் பின்னணியில் அரசியல் காரணங்கள் மட்டும் தானா? இத்தனை ஆங்கில பதிப்பகங்கள் இருந்தும் சர்வதேச அரங்கில் பரவலாக விவாதிக்கப்படும் வகையில் ஒரு சமகால இந்தியப் படைப்பு ஏன் இன்று இல்லை? என் கேள்வி அப்படைப்புகள் கவனத்திற்கு உரியனவா என்பதைக் குறித்து அல்ல. இந்திய ஆங்கில புனைவு மொழியின் எல்லைகள் குறித்து மட்டுமே.

சில நாட்களுக்கு முன் டேனியல் ஹான் என்னும் பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளரின் பட்டறையில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. மொழியாக்கத் திறனைச் செம்மை செய்வதற்கான பயிற்சி என்பதை விட இன்றைய மொழிபெயர்ப்பு சூழலை அறிய ஒரு வாய்ப்பாக அப்பட்டறை அமைந்தது.  டேனியல் ஹான் ஸ்பானிஷ், போர்ச்சுகிய ஆக்கங்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பவர். புக்கர் பரிசு தேர்வுக் குழுவிலிருந்தவர். மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்குப் பதிலாக அவர் சுட்டியவற்றைக் கொண்டு நான் விவாதிக்க விரும்பும் காரணங்கள் இவை.

இந்தியாவில் புழங்கும் ஆங்கிலத்தின் ரெஜிஸ்டர்கள் (Registers) வேறு. ஐரோப்பிய  பிரதேசங்களில் உபயோகிக்கப்படும் ரெஜிஸ்டர்கள் வேறு. ஒரே மொழிக்குள் சூழல் பொறுத்து, தளம் பொறுத்துத் தேர்வு செய்யப்படும் சொல் வழக்குகளை ரெஜிஸ்டர்கள் என வகுக்கலாம். புனைவில் மட்டுமே பயன்படும் சொற்கள் பேச்சு வழக்கில் அன்னியமாகத் தெரியலாம். பேச்சு வழக்கில் இயல்பாக வரும் ஒரு சொல் அரசியல் சாசன நூல்களில் பொருந்தாமல் போகலாம்.

தமிழில் ’ரத கஜ துரக பதாதிகள்’ என்ற சொல்லடுக்கு இந்திய ராணுவ அணிவகுப்பு குறித்த அரசாங்க செய்தியறிக்கையில் இடம்பெற்றால் தவறான ரெஜிஸ்டர் என்று வரையறுக்கப்படும். ஏனெனில் அது இலக்கிய வெளியிலோ, அங்கத குறிப்பிலோ, வரலாற்று எழுத்திலோ (நடிகர் அஜித்தின் அதிரடி பாடலிலோ) இயல்பாக இடம்பெறும் சொற்றொடர்.

இந்திய பதிப்பகங்கள் வெளிகொண்டுவரும் மொழியாக்கங்களின் சொற்தேர்வுகள் உயர் ரெஜிஸ்டர் வார்த்தைகளால் நிரம்பியவை. அதற்கு உதாரணமாக ஹான் “thrice” என்ற வார்த்தையைக் குறிப்பிடுகிறார். “Thrice” என்ற சொல் நம் அன்றாடத்தில், பேச்சு வழக்கில் பயன்படுத்துவது, “I lost my purse in this city, thrice!” போல.

ஆனால் இங்கிலாந்திலோ “thrice” என்பது பரண் மேல் கடாசப்பட்ட இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சொல். அதை இரண்டு பதின்பருவ பையன்களின் உரையாடலுக்குள் புகுத்தினால் அயல் நாட்டினர் வாசிப்பில் ஒரு விலக்கு ஏற்பட்டு விடுகிறது. பெங்குயின் இந்தியா, ஹார்ப்பர் காலின்ஸ் இந்தியா போன்ற இந்திய பதிப்பகங்கள் வெளிக்கொண்டுவரும் படைப்புகள் பெரும்பாலும் இந்தியர்களாலே மேற்பார்வையிடப்படுவதால் ”thrice” போன்ற வார்த்தைகள் கைகளால் அள்ளிய நீர்போல் கடலிடமே சேர்ந்து விடுகின்றன.

ரெஜிஸ்டர்களின் இவ்வேறுபாடு அமைய முக்கிய காரணம் ஆங்கிலத்திற்கு இந்தியாவில் இருநூறு ஆண்டு வரலாறு உண்டு என்பதே. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் வேரூன்றிப் படர்ந்த ஆங்கிலம் வேறு, இந்தியாவில் தளிர் விட்டுக் கிளை பிரிந்த ஆங்கிலம் வேறு. இந்த பரிணாமம் தவிர்க்கவியலாதது, ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதும் கூட.

இந்திய மொழிபெயர்ப்புகள் கவனம் பெறாமல் போவதற்கான மற்றொரு காரணம், புக்கர் போன்ற பரிசுகளின் தேர்வுக் குழுவினர் தன் நாட்டினருக்கே முன்னுரிமை அளிப்பது. (அது இயல்பே, நம் கையில் அகப்படும் வங்காள செவ்விலக்கியங்களே இதற்குச் சான்று). இக்குழுக்களில் ஒரே இனத்தவர் பெரும்பான்மை வகிப்பதும் ஒரு வழக்கம். ஹான், ஒரு சர்வதேச பரிசு தேர்வுக் குழுவில் 20 பேரில் 11 பேர் டச்சு ஃப்லெமிஷ் (Dutch Flemish) மொழியினரே இடம்பெற்றனர் என்றார். அவர்களின் மக்கள் தொகை மொத்தமே 60 லட்சம் தான். (ஒப்பு நோக்க இங்கிலாந்தும் சரி, தமிழ் நாடும் சரி மக்கள் தொகை 7 கோடிக்கும் மேல்)

இந்திய ஆங்கில மொழியாக்கங்களுக்கு இத்தகைய சவால்கள் இருக்க, எவ்வகையில் இந்திய-உலக புனைவு பரிவர்த்தனையைச் சாத்தியமாக்குவது? (அபுனைவு படைப்புகளுக்கு மொழி உண்டாக்கும் தடைகள் புனைவுடன் ஒப்பிடுகையில் குறைவு என்றே தோன்றுகிறது)

சர்வதேச வாசிப்புக்கு ஏற்ற மொழியாக்கத்தை இரண்டு-நிலை மொழியாக்கம் கொண்டு வெளியிட முடியும். அதாவது மூல மொழியிலிருந்து இந்திய ஆங்கிலத்திற்கும் இந்திய ஆங்கிலத்திலிருந்து பொது ரெஜிஸ்டர் நடை ஆங்கிலத்திற்கும் ஒரு தேர்ந்த ஆங்கில எழுத்தாளர் கொண்டு மறு ஆக்கம் செய்வது (இம்முறையை தாங்கள் பரிந்துரைத்திருக்கிறீர்கள்) சமீபத்தில், போரும் அமைதியும், கரமசோவ் சகோதரர்கள் போன்ற ரஷ்ய படைப்புகளுக்கு ரிச்சார்ட் பீவர் மற்றும் அவர் மனைவி லாரிசா வால்கொன்ஸ்கியின் இவ்வகை மொழியாக்கங்கள் மகத்தான வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

இரண்டு-நிலை மொழியாக்க முயற்சிகளுக்கு சவாலாக அமைவது மொழியாக்கத்திற்கு உண்டாகும் செலவு. ஐரோப்பிய நாடுகள் அளிக்கும் உதவித்தொகைகள் (Translation grant) 2000 தொடங்கி 18000 பவுண்டுகள் வரை நீளும். இந்தியாவில் இது போன்ற உதவித் தொகைகள் சொற்பமே.

ஹான், நல்ல மொழியாக்கங்கள் வெளியிடும் பதிப்பகம் என இந்தியாவின் சீகள் பதிப்பகத்தைச் சுட்டுகிறார். ஆனால் அது கல்கத்தாவில் இயங்குவதால் தன் சர்வதேச மொழிபெயர்ப்பாளர்களுக்கு தரும் ஊதியம் மிகவும் குறைவு என்றும் கூறுகிறார். (சீகள் பதிப்பகம் பெரும்பாலும் ஐரோப்பிய ஆக்கங்களின் மொழிபெயர்ப்புகளையே வெளியிடும். ஏனெனில் அதன் சந்தை சிகாகோ பல்கலைக் கழகத்தால் நிர்ணயிக்கப்படுகிறது)

அப்படி என்றால் இந்தியர்கள் வெறும் உதவி மொழிபெயர்ப்பாளர்களாக மட்டுமே நின்று விடுகிறார்களா? இந்தியாவுக்குள் இன்று இந்திய மொழி நூல்களை ஆங்கிலத்தில் வாசிப்போரின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. நல்ல இந்திய மொழிபெயர்ப்பாளர்களின் பங்களிப்பு இந்தியர்களின் (“Thrice” இங்குச் சுதந்திரமாகப் புழங்கலாம்) வாசிப்பிற்கு உகந்தது.

இன்று அருணாவா சின்ஹாவின் வங்காள மூல மொழியாக்கங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. கன்னட எழுத்தாளர் விவேக் ஷான்பாகின் ”காச்சர் கோச்சர்” (மொழியாக்கம் ஸ்ரீநாத் பெரூர்) ஆங்கிலத்தில் பரவலாக வாசிக்கப்பட்ட படைப்பு. அதே போல் இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் தங்கள் தாய்மொழி ஆக்கங்களை மொழிபெயர்க்க முனைவதும் வரவேற்கத்தக்க ஒன்று. (மராத்திய எழுத்தாளர் சச்சின் பைலட்டின் ”கோபால்ட் ப்ளூ” மொழியாக்கம் ஜெர்ரி பின்டோவால் செய்யப்பட்டது)

தமிழிலிருந்து மொழியாக்கம் மூலம் சென்று சேர்ந்த/ சேரும் படைப்புகள் பற்றி கடும் அதிருப்தி நம்மிடையே நிலவுகிறது. அ. முத்துலிங்கம் அவர்கள் கூறியதுபோல் நம் முன்னோடிகளை முன்வைக்க ஒரு மாபெரும் முயற்சி தேவையாக இருக்கிறது.  அழகியலைச் சார்ந்து வாசிக்கும் விஷ்ணுபுரம் போன்ற ஒரு தீவிர குழு தமிழ்ச் சூழலில் சாத்தியமாகியிருக்கிறது என்றால் எல்லைகளைக் கடந்து அவ்வழகியலை முன்னிறுத்த விழையும் நெஞ்சமும் அதனூடே முளைத்தெழும் என்பதே என் நம்பிக்கையும் கனவும்.

அன்புடன்

ஸ்வேதா

டேனியல் ஹானின் வலைத்தளம் http://www.danielhahn.co.uk/

அருணாவா சின்ஹா வலைத்தளம் https://arunavasinha.in/

சீகள் பதிப்பகம் வலைத்தளம் https://www.seagullbooks.org/

முந்தைய கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித் மின்நூல்கள்
அடுத்த கட்டுரைஉடையாள்- 2