வாசிப்பு- ஒருகடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் மதுமிதா. திருச்சியை சேர்ந்தவள். ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். என் தமையன் கிஷோர். அவனும் தங்கள் வாசகனே. அவன்தான் எனக்கு தங்களை அறிமுகம் செய்தான். ஆரம்ப காலங்களில் வாசிப்புக்குள் என்னை கொண்டு வர தங்கள் சிறுகதைகளை வாசித்து காட்டுவான். தங்கள் பெரிய புத்தகங்கள் விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் எல்லாம் கதைகளாக சொல்லியிருக்கிறான்.

ஆரம்ப காலத்தில் தங்கள் எனக்கு எரிச்சலின் வடிவாக இருந்தீர்கள். ஒரு நாள் கூட என் அண்ணனின் நாவில் இருந்து தங்கள் பெயர் தப்பிவிடுவதில்லை. உங்கள் கதைகள் பிடித்தாலும் உங்களை மனதார வெறுத்தேன். பின்பு நானும் வாசிக்க விழைந்தேன். உங்களுக்குள் பிரவேசிக்க ஆயத்தமானேன்.

நான் வாசித்த முதல் புத்தகம், என் அண்ணன் எனக்கென வாங்கினது. பனிமனிதன். ஆரம்பத்தில் நான் சில chapterகளை படித்தவுடன் எனக்கு தலைவலி வந்து, உடல் சோர்ந்து, கழுத்து முறிந்து தூங்கிவிட்டேன். அதன் பின் கிஷோர் என்னிடம் வேறு கதைகள் ஏதும் சொல்லவில்லை. ஒரு நாள் பனிமனிதன் முழுவதும் வாசிக்க விழைந்தேன். பனிமனிதன் வாசிக்க  ஆரம்பித்து அதனுள் மூழ்கினேன். எனக்கு அது மிகவும் கிளர்ச்சியை அளித்தது.

பின்பு ஒரு இடைவேளை. சற்று அதிகமான இடைவேளை. அதன் பிறகு corona. அப்பொழுது என்னை எதிலேனும் முழுவதும் ஈடுபடுத்த விரும்பினேன்.

அதில் படங்கள் பார்ப்பது, வரைவது, விளையாடுவது, உடல் எடையை குறைப்பது, முடி வளர்ப்பது, போன்ற பல விஷயங்களை செய்து பார்த்தேன். நான் எதையாவது ஐந்து நாட்கள் தொடர்ந்து செய்தால் அனைவருக்கும் அது வியப்புக்குரிய செய்தி. உண்மைதான். என்னால் எச்செயலையும் தொடர்ந்து செய்ய முடியவில்லை.

பின்பு யாரும் எதிர் பார்க்காமல். எவருடைய அறிவுரையும் இல்லாமல சுஜாதவின் ‘என் இனிய இயந்திரா’ புத்தகத்தை படித்தேன். முடித்தேன். தொடரும் போது சற்று சோர்வு இருந்தாலும் முடிக்கும் போது பரவசத்தில் இருந்தேன். அதை நான் தொடர்ச்சியாக படிக்க விரும்பினேன். அடுத்து ‘மீண்டும் ஜூனோ’. அதற்கு அப்பறம் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பஷீர் நாவல்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘பதின்’ , ‘துயில்’, ‘ரத்தம் ஒரே நிறம்’ போன்ற புத்தகங்களை படித்தேன்.

நான் ஒரே எழுத்தாளனின் ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை படித்தால் அவர் எனக்கு அணுக்கமானவர் என்றே தோன்றியது. நான் சுஜாதாவையும், ஜெயகாந்தனையும் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் என்றே  எண்ணினேன். சுஜாதாவின் புத்தகங்கள் என்னை நிலையிழக்க செய்தது. எஸ்.ராமகிருஷ்ணனின் துயில் எனக்கு மிகவும் பிடிக்கும்.

எந்த புத்தகத்தை படித்தாலும் அதன் முடிவை பற்றியே என் எண்ணம் இருந்தது. எப்பொழுதும் புத்தகத்தின் முடிவைநோக்கியே ஓடிக்கொண்டு இருந்தேன். ஆனால் நான் புத்தகம் முடிய விரும்பவில்லை. ஒரு புத்தகத்தை முடிக்கும் பொழுது என்னை சூழ்ந்துள்ளது ஆழ்ந்த துயர் மட்டுமே. நான் எந்த புத்தகத்தையும் மறு வாசிப்பு செய்ததில்லை. எனக்கு பிடித்த ரொமான்டிக் மற்றும் காமெடி sceneகளை மட்டும் திரும்பி வாசிப்பேன். அதுவும் அரிது.

Corona களியாட்ட கதைகள் என் அண்ணன் எனக்கு வாசித்து கட்டுவது உண்டு. நான் சிறு கதைகளை வசிப்பதில்லை. நாவல் புத்தகங்கள் மட்டும்தான். அதனால் எனக்கு என் அன்னான் வாசித்து காட்டுவான். எனக்கு தங்கள் சிறு கதைகள் மிகவும் பிடிக்கும். அதை நினைத்து பித்தி போல தனியாக சிரித்து கொள்வதும் உண்டு. ஆனால் தங்களை எண்ணும் போது எரிச்சல் என்னும் சிறு துளி நஞ்சு என் நெஞ்சில் உறைவதுண்டு.

நான் தங்கள் ஒரு புத்தகத்தை மட்டுமே வாசித்து இருக்கிறேன். எஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டு புத்தகங்கள் படித்திருக்கிறேன். நான் படிப்பதெல்லாம் சுஜாதா, ஜெயகாந்தன், பஷீர். கிஷோர் படிப்பதெல்லாம் எஸ்.ராமகிருஷ்ணன், யுவன்சந்திரசேகர், தாங்கள் மற்றும் பல பல. நான் படிக்கும் எழுத்தாளர்களை அவன் அதிகம் படிப்பதில்லை. அவன் படிக்கும் எழுத்தாளர்களை நான் சுத்தமாக படிப்பதில்லை. அதனால் எனக்கு எந்த மாதிரி புத்தகங்கள் கொடுக்க வேண்டும் என்று அவனுக்கு சரியாக தெரியவில்லை.

என்னை வெண்முரசு படிக்க சொன்னான். நான் முடியாது என்றும், புரியாது என்றும், சிறியவள் என்றும் மறுத்தேன். ஆனால் என்னை அவன் சரியாக புரிந்து வைத்திருந்தான். வெண்முரசு நாவல்களில் என் வயதிற்குரிய மாணவன் ஒருவன் ஐந்து புத்தகங்களை படித்து முடித்து விட்டான் என்று சொன்னான். எனக்கு லேசாக தலை சுற்றியது. என் அண்ணன் வெண்முரசின் சில chapterகளை இரவு வாசித்து காட்டுவான். அந்த செம்மொழியை இச்சிறு வயதில் எப்படி வாசித்தான் என்பது வியப்பாக இருந்தது. கிஷோர் என்னிடம் வெண்முரசில் முடிவே இல்லை என்றும் 26 புத்தகங்கள் இருப்பதனால், 26 புத்தகங்களை முடித்த உடன் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று சொன்னான். எனக்கும் அது சரி என்றே பட்டது. அந்த சிறுவன் மேல் வெறுப்பும் இருந்தது.

முதற்கனல் படித்தேன். மூன்று மணி நேரத்தில் 30 பக்கங்கள் கூட முழுதாக முடிக்கவில்லை. அதன் பின் வெண்முரசுக்கு இடைவேளை. வேறு புத்தகம் எதுவும் என்னால் படிக்க முடியவில்லை. எனக்கு எதுவும் பிடிக்கவில்லை. முதற்கனல் புரியவில்லை.

அதனால் அதை விட்டுவிட்டு நான் மழைப்பாடலை படித்தேன், விரும்பினேன், மயங்கினேன். அம்மயக்கத்தில் இருந்து நான் இன்னும் தெளியவில்லை. அம்மயக்கத்திலேயே திளைக்கிறேன். தொடர்ச்சியாக வண்ணக்கடல், பிரயாகை, வெண்முகில் நகரம், இந்திரநீலம். இப்போது காண்டீபம் படித்து கொண்டு இருக்கிறேன்.

எப்போதும் புத்தகம் வாசிப்பது என்பது அனைவரையும் கவரும் செயல் என்றே எண்ணினேன். என்னதான் நான் முழு ஈடுபாடோடு வாசிதாலும், ஆழ் மனதில் நான் மற்றவர்களை விட வித்யாசமனவள் என்பதற்காகவே படித்தேன். ஆனால் வெண்முரசு படிக்கும் போது எனது அனைத்து கட்டுகளும் விலகிவிட்டன. என் முகத்தில் எப்போதும் புன்னகை குடிகொண்டு விட்டது. இரவில் தூங்கும் போதும் புன்னகைத்து கொண்டிருப்பேன். காலை எழுந்தவுடனும் புன்னகைதான்.

தினமும் எனக்கு கனவு வருவதுண்டு. இப்போது கனவுகளில் வெண்முரசை தவிர வேறு எதுவம் இல்லை. இனிய கனவு. சுஜயனை போல் போர் கனவுகளும் உண்டு. வெண்முரசு புத்தகங்களை முடிக்கும் போது ஒரு துளியேனும் எனக்கு துயர் இல்லை. நீலம் புத்தகத்தை நான் வாசித்து முடித்த புத்தகங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால் அதுதான் நான் மறுவாசிப்பு செய்த முதல் புத்தகம். எனக்கு மிகவும் பிடித்த மிகவும் புரியாத புத்தகம் அது.

இந்திரநீலம் எனக்கு  பிடிக்கும். அதை படித்து முடித்தவுடன் நான் காளந்தியை போல் இருக்க வேண்டும் என்றே விழைந்தேன். நான் எப்போதும் திமிரின் திருவடிவமாக இருந்தவள். காளந்தியன் அன்பும் , எளிமையும், மேன்மையும் எனக்கு பிடித்திருந்தது. அது தான் இளைய யாதவனையும் கவர்ந்தது. வெண்முரசில் நான் படித்த அனைத்து புத்தகங்களுமே எனக்கு  பிடிக்கும்.

இப்போது ஜெயமோகன் என்னும் பெயரை கேட்கும் போது இனிமை, மரியாதை, புதுமை போன்ற இனிய சொற்களே நினைவுக்கு வரும். அந்த ஒரு துளி நஞ்சை எண்ணி நான் கூசுவேன்.

நான் ஆயிரம் மணி நேர வாசிப்பு சவாலில் கலந்து கொண்டதால் எத்தனை மணி நேரம் வாசிப்பேன் என்பது தெரியும். இப்போது 370 மணி நேரம் முடித்துள்ளேன். சில சமயம் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் கூட கனவுக்குள் மூழ்கிவருவேன். இப்போதெல்லாம் நான் வாழும் நிஜ உலகம் பிடிப்பதில்லை. வெண்முரசுக்குள் நிஜம் நுழைய வழியேனும் உள்ளதா என்று தேடி கொண்டு இருக்கிறேன். கிஷோர் என்னிடம் தங்களுக்கு கடிதம் எழுத சொன்னான். எளியவள் நான். எனக்கு எதுவும் எழுத தெரியாது என்று சொல்லி மறுத்துவிட்டேன்.

நான் காண்டீபம் படிக்கும் போது வெண்முரசு disscussion ஐ காட்டினான். எனக்கு அந்த dissicussions பிடித்திருந்தது. என்னைப் போலவே பல மனிதர்கள் வெண்முரசு என்னும் உலகத்திற்கு செல்லும் வழியை தேடிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் வெண்முரசுசில் இருக்கும் எந்த ஒரு சிறு பகுதியையும் பற்றி என்னால் எழுத முடியாது. வர்ணிக்க வார்த்தைகள் கிடைக்காது. என் தாறுமாறான எழுத்தின் மூலமாக அதில் இருக்கும் உவகையை இழக்கவும் விரும்பவில்லை. அதனால் என் மனதில் தோன்றியவற்றை ஒரு இரவிலே என்னிடம் இருக்கும் அறிவுகள் அனைத்தையும் சேர்த்து எழுத நினைத்தேன். முடித்தும் விட்டேன்.

நன்றி.

இப்படிக்கு தங்கள் வாசகி,

மதுமிதா

***

அன்புள்ள மதுமிதா

வாசிப்பில் இருக்கும் தீவிரம் மகிழ்ச்சியடையச்செய்கிறது. வாழ்த்துக்கள். தொடர்ச்சியாக வாசியுங்கள்.

வாசிப்பில் சில விதிகள் உள்ளன. அவற்றை கடைப்பிடியுங்கள்.

அ. ஒவ்வொருமுறையும் உங்களால் இயல்பாக வாசிக்கத்தக்க நூல்களை விட ஒருபடி மேலான நூலையே தேர்வுசெய்யுங்கள். வாசிப்பில் தேக்கம் என்பது நமக்கு எது வசதியோ, எது எளிதோ அதையே வாசித்துக் கொண்டிருப்பது. நாம் வாசிக்க எடுக்கும் ஒரு நூல் எப்போதும் அடுத்தபடியாக இருக்கவேண்டும்

ஆ. புனைவுகளுக்குச் சமானமாக புனைவல்லாத நூல்களை வாசியுங்கள். வரலாறு, தத்துவம் போன்றவை. எந்தப் புனைவை வாசிக்கிறீர்களோ அத்துடன் இணைந்த கட்டுரை நூல்களை வாசிப்பது நல்லது. அது புனைவை வாசிக்கும்போது ஆழமாக வாசிக்கச் செய்யும். வரலாறு தத்துவம் போன்றவை நம்மிடம் ஆழமாக பதியவும் வைக்கும்

இ. வாசிப்புலகம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. உலகியல் வாழ்க்கையில் அதன் இடம் பாதிதான். வாசிப்பு உலகியல் சார்ந்த பயிற்சியையும் உழைப்பையும் குறைக்கக்கூடாது. அதாவது, கல்வியை விட்டுவிட்டு வாசிப்புக்குள் செல்லக்கூடாது. இரண்டையும் திறம்படக் கொண்டுசெல்வதே நல்ல வாசிப்பாளரின் இயல்பு

ஜெ

***

முந்தைய கட்டுரைமுதற்கனல் – சில வினாக்கள்
அடுத்த கட்டுரைஉடையாள்- கடிதங்கள்