நாம் ஏன் அழகை உருவாக்க முடிவதில்லை?
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். தங்களின் நேற்றைய அந்த அழகை உருவாக்க முனையும் முனைப்பை குறித்த பதிவை கண்டேன். நண்பர் ராஜமாணிக்கம் குறிப்பிட்ட நூற்பாலை இயந்திரங்கள் நிறுவனமான ரீட்டர் (RIERER LMW) நிறுவனத்தில் (100% EOU) நான் 17 வருடங்கள் கோவையில் பணியாற்றியவன் என்ற முறையிலும் தற்போது அது தனித்து இயங்கும் பொருட்டு கூட்டை துண்டித்து புனே சென்றதினால் LMWக்கு பணி மாற்றம் பெற்று பணி புரிந்து வருவதாலும் இரண்டிற்குமான வேலை வித்தியாசங்களை நாங்கள் நேரடியாகவே உணர்ந்துள்ளோம்.
பணித்திட்டமிடலிலேயே தெளிவான ஆரம்பத்துடன் தான் துவங்கும். ஏதேனும் பிழை நேர்வதாக உணர்ந்தால் எவ்வித சமாளிப்புமின்றி உடன் சரி செய்த பின்னரே அடுத்த கட்டத்துக்கு நகரும். பணி ஆரம்பித்தது முதல் முடிவது வரை தொடர் செயல்பாடுகள் அனைத்தும் மிக எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் பின்னப்பட்டு அழகாக வெளிவரும் இயந்திரம்.எங்களுக்கு தலைமைச் செயல் அதிகாரியாக மூவர் ஸ்விட்சர்லாந்து நாட்டவர் பணி புரிந்தனர். மூவருமே வெவ்வேறு துறைகளில் முன்னர் பணியாற்றி இருப்பினும் தாங்கள் பதவியேற்றது முதல் முடிந்தது வரை அவர்களின் தொழில் நுணுக்கம் நமக்கு பிரமிக்கத் தக்க வகையில்தான் இருந்ததிருக்கிறது.
உதாரணத்திற்கு ஒன்று. மேலதிகாரியின் தனிப்பட்ட உபயோகத்திற்கு மூன்று மின் இணைப்பு பெட்டிகள் கேட்டிருந்தார். அந்த பணி என் அதிகாரி மூலம் எனக்கு பணிக்கப்பட்டது. எல்லாம் முடிந்து கொடுக்கலாம் என்ற நிலையில் என் அதிகாரி பார்வையிட்டு பெட்டியின் மூடியிலுள்ள ஸ்க்ரூ இரு மறைகள் அதிகமாக நீட்டிக் கொண்டிருப்பதாக சொல்லி அதை குறைத்து வருமாறு பணித்தார். நான் செய்ய முடைப்பட்டு கேள்வி எழுப்பினேன். பணியை அவரிடம் கொடுக்கும்போதே எழுப்பிய கேள்விகளை CEO பட்டியலிட்டதாகவும் அதனால் சிறு பிழைகூட இல்லாமல் செய்து போனால் ஒழிய தப்பிக்க இயலாது என்றார். அப்போதுதான் பணி நேர்த்தியின் அவசியத்தை முழுமையாக உணர்ந்தேன்.
எனக்கு ஒரு கேள்வி அக்கட்டுரையை வாசிக்கும் போது எழுந்தது. நம் நாட்டவரின் அழகுணர்ச்சி குறைபாடு அல்லது பணி நேர்த்தி குறைபாடு பற்றி குறிப்பிட்டதில் என் மனதில் சிறு ஐயம் வந்தது. நம் முன்னோர் ஆங்காங்கு கட்டி எழுப்பிய கோவில்களின் சிற்பக் கலை நேர்த்தியும் அழகுணர்ச்சியும் அக்கால மக்களின் வாழ்வு நிலையை பிரதிபலிப்பதாகத்தானே உள்ளது. அது எங்ஙனம் எப்படி இம்மாதிரி தற்போதுள்ள பாழ்பட்ட நிலைக்கு மாறியது?
நன்றி
கண்ணன்
கோவை
அன்புள்ள கண்ணன்,
நீங்கள் கேட்ட கேள்வி முக்கியமான ஒன்று. நம்முடைய கோயில்கள் மட்டுமல்ல பழைய கட்டிடங்களில்கூட பிரமிக்கத்தக்க தொழில்நேர்த்தி உள்ளது. அப்படியென்றால் ஏன் நவீன காலகட்டத்தில் தொழில்நேர்த்தி இல்லாமலாகியது?
அதற்கான விடையும் உங்கள் குறிப்பிலேயே உள்ளது. மேலைநாட்டில் தொழில்களில் தொழில்முறை அறம் [Professional ethics] நிறுவன அறம் [Corporate ethics] என்று இரண்டு உள்ளது. ஒரு தொழில்செய்பவர் அந்தத் தொழிலுக்குண்டான நேர்த்தியை அடைந்தே தீரவேண்டும். அது அவருடைய தொழிலின் கடமை. அதை அடையாவிட்டால் அவர் குறையுடையவர், தோற்றுப்போனவர். ஒரு நிறுவனம் தான் செய்வதில் அறத்தை கடைப்பிடித்தாகவேண்டும். தங்கள் தயாரிப்புக்கு அது உச்சகட்ட நேர்த்தியை அடைந்தாகவேண்டும். அந்த நேர்த்தியும் நம்பிக்கையும் ஒரு சந்தைப்பொருள். அது இல்லையேல் அந்நிறுவனம் அழியும்.
இந்தியாவில் இவையிரண்டும் உருவாகவேயில்லை. ஏனென்றால் மேலே சொன்ன இரண்டுமே முதலாளித்துவப் பண்புகள். போட்டிசார்ந்த தொழில்- வணிகச்சூழலுக்குரிய நெறிகள் அவை. இந்தியாவில் நாம் இன்னமும் முழுமையாக நவீன முதலாளித்துவத்திற்குள் செல்லவில்லை. நம் உழைப்பும் நுகர்வும் முதலாளித்துவத்திலும் மனநிலைகள் நிலப்பிரபுத்துவத்திலும் பலசமயம் அரைப்பழங்குடிப் பண்பாட்டிலும் உள்ளன.
அப்படியென்றால் அந்தக்காலத்தில் எப்படி தொழில்நேர்த்தி அமைந்தது? அது நிலப்பிரபுத்துவ காலகட்டத்தின் தொழில்நேர்த்தி.நம் நிலப்பிரபுத்துவம் மூவாயிரமாண்டு தொன்மை கொண்டது – உலகின் மிகத்தொன்மையான நிலப்பிரபுத்துவங்களில் ஒன்று. நிலவுரிமைசார்ந்த அரசு- சமூக அமைப்பு இங்கே நிலைபெற்று அத்தனை காலமாகிறது. ஆகவே எல்லா துறைகளிலும் நேர்த்தியை உருவாக்கியே ஆகவேண்டும். அதற்கான அமைப்புகளையும், அறங்களையும் கட்டமைத்தாகவேண்டும். அதற்கான ஒடுக்குமுறைகளையும் தண்டனைகளையும்கூடத்தான்.
நம்முடைய பேராலயங்கள் உள்ளிட்ட தொழில்நேர்த்திகளுக்குப் பின்னாலிருந்தது தொழிற்குழு என்னும் அமைப்பு. மேலைநாடுகளில் அது guild எனப்பட்டது. இங்கே அது சாதி,துணைசாதிகளாக இருந்தது. உலகம் முழுக்க பெரும்பாலும் எல்லா இடங்களிலும் அது பிறப்படிப்படையிலானது. ஏனென்றால் நிலப்பிரபுத்துவம் நிலையான, மாறாத அமைப்புகளையே எல்லா தளத்திலும் உருவாக்கியது. அரசர்களும் ஆட்சியாளர்களுமே பிறப்பின் அடிப்படையில்தான் அமைந்தனர்.
இங்கே முன்பு ஒரு கைவினைத் தொழில்செய்பவர் அதிலேயே பிறந்து வளர்ந்தார். அதுவன்றி ஏதும் செய்யாதவராக வாழ்ந்தார். அதிலேயே நிபுணத்துவம் பெற்றார். ஒருமுறை கல்சிற்பம் செய்யும் சிற்பியிடம் நாங்கள் ஒரு பேட்டி எடுத்தோம். அவருக்கு நாற்பத்தாறு வயது. அனுபவம் நாற்பதாண்டுகள். அவருடைய தந்தைதான் ஆசிரியர். அவருடைய தொழில்குழுதான் கல்விக்கூடம். அந்த முறை நீண்டகாலம் நீடித்து, அதன் உச்சத்தை அடைந்தது. ஆகவே அதில் தொழில்நேர்த்தி இருந்தது. அதைக் கட்டுப்படுத்திய அறம் குலக்குழு அறம் [clan ethics] எனப்பட்டது.ஓர் ஆசாரி அத்தொழிலில் முழுநேர்த்தியை அடைந்தாகவேண்டும். இல்லையேல் அந்த சாதிக்குள் அவர் மதிப்பிழப்பார்
பழையமுறை சிறந்ததா? அது நீடித்திருக்கவேண்டுமா? இல்லை, அது சிறந்தது அல்ல, அதைவிட முதலாளித்துவ தொழில்பிரிவினையும் தொழிலறமும் பலமடங்கு மேலாலனவை, செயலூக்கம் கொண்டவை. பழையமுறை சென்றகாலத்திற்குரியது எவ்வகையிலும் இக்காலத்தில் நீடிக்கமுடியாதது.
நிலப்பிரபுத்துவத்தில் தனிமனிதன் என்ற இருப்பு அனுமதிக்கப்படவில்லை. அவனுடைய பிறப்பு முதல் சாவு வரை அனைத்துமே அந்த சமூக ஒழுங்கால் கட்டுப்படுத்தப்பட்டது. அவனுக்கு எதிலும் தன்னைத்தானே முடிவெடுக்க அனுமதியில்லை. அது மனிதனை அவன் பிறப்புடன் கட்டிப்போடுவது. அது சமூகமே சிறையாகும் நிலை. அந்தச் சிறையை அறியாமல் வாழும்போது அது இயல்பாகக்கூட இருந்திருக்கலாம். இன்று அது இருண்ட பாதாளம். அதை எவரேனும் இன்று முன்வைத்தால் அவர் சென்றகாலத்தின் இருளில்வாழ்பவர், அல்லது தன்னலத்துக்காக பிறரை கடந்தகால இருளில் தள்ளவிழையும் கீழ்மகன்.
இன்று நவீன உலகம் உருவாகிவிட்டது. அதன் அடிப்படை அலகு தனிமனிதன். சமத்துவம்,ஜனநாயகம் ஆகியவை அதன் அடிப்படை விழுமியங்கள். இன்று ஒருவன் தன்னுடைய அகம் ஆணையிடும் பணியைச் செய்ய, தன் சொந்தவாழ்க்கையை தன் உணர்வுகளுக்குரியவகையில் அமைத்துக்கொள்ள, தனக்கும் தன் வாரிசுகளுக்கும் உகந்த அரசாங்கத்தை முடிவுசெய்ய, தன் ஆழம் விழையும் ஆன்மிகநிறைவை நோக்கிச் செல்ல உரிமைகொண்டவன். இந்த நான்கு உரிமைகளும் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் தனிமனிதனுக்கு இல்லை என உணருங்கள். நவீன அரசியல்சட்டங்களெல்லாம் இந்நான்கு அடிப்படை உரிமைகளையும் தனிமனிதனுக்கு வாக்களிக்கின்றன
அந்நிலையில் ஒவ்வொருவரும் தன்னுடைய தொழிலை தானே தெரிவுசெய்யும்நிலை உள்ளது. சந்தையும் போட்டியும் மறுமுனையில் அதை தீர்மானிக்கின்றன. இன்று ஒருவர் எங்கு எப்படிப் பிறந்திருந்தாலும் தன் அகம்நிறைவுகொள்ளும் தொழிலைச்செய்ய வாய்ப்புள்ளது. தன் தனித்திறமையை வெளிப்படுத்தி வெல்லும் வழிகளை முதலாளித்துவம் அளிக்கிறது, ஏனென்றால் அத்தகைய திறமைகளே அதற்குத்தேவை.
அதற்கு முதலாளித்துவம் தனக்குரிய பயிற்சியமைப்புக்களையும் தொழிலறங்களையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. முதலாளித்துவ தொழிற்பயிற்சி அமைப்புகள் முன்னர் இருந்த சாதிகள்,தொழிற்குழுக்களை விட மேலும் முறையானவை, ஒழுங்கமைக்கப்பட்டவை.ஆகவே மேலும் பலமடங்கு திறமையானவை. முதலாளித்துவத் தொழிலறம் பழைய இனக்குழு அறத்தைவிட புறவயமானது, தெளிவானது
நாம் பழைய நிலப்பிரபுத்துவகால தொழிற்குழுக்களில் இருந்து வெளிவந்துவிட்டோம். இன்று ஒருசில கைவினைத் தொழில்கள் அன்றி எங்கும் தொழிற்குழுக்கள் இல்லை. இனக்குழு அறம் இன்றில்லை, அதைக் கண்காணிக்கும் இனக்குழுத்தலைமைகளும் இல்லை. ஆனால் நாம் நவீன முதலாளித்துவப் பயிற்சியமைப்புக்களை சிறப்பாக உருவாக்கிக் கொள்ளவில்லை.முதலாளித்துவத்தின் தொழிலறங்களை கற்றுக்கொள்லவும் இல்லை. ஆகவே கையிலிருந்ததை இழந்தோம், மேலானதை அடையவுமில்லை.
நம் கல்விநிறுவனங்களில் இருந்தே சிக்கல் தொடங்குகிறது .உயர்நிலைப் பள்ளிக் கல்வி முதல் ஆய்வுப்புலக் கல்வி வரை இங்கே எல்லாமே சமாளிப்பதுதான். ஆசிரியரை சமாளிப்பது அதில் முதல் தகுதி. எங்கும் கச்சிதம், தேர்ச்சி,முழுமை கட்டாயமாக இல்லை. அங்கே இல்லாத நேர்த்தி தொழிற்கூடங்களில் அமைவதில்லை.
அத்துடன் இன்றுகூட இங்கே பெரும்பாலான கைவினை சார்ந்த தொழில்களில் முறையான பயிற்சியமைப்புக்கள் இல்லை. நான் அடிக்கடி நினைப்பதுண்டு, கொத்தனார் வேலைக்கு ஒரு பயிற்சிநிலையமே தமிழகத்தில் இல்லை. தச்சு,பிளம்பிங் உட்பட பெரும்பாலான வேலைகளுக்கு பயிற்சியளிக்கும் அமைப்புக்கள் இல்லை. அவை இன்றும் பழைமையான முறையிலேயே கற்றுக்கொள்ளப்படுகின்றன. அங்கே ஒருவகையான தொழிற்குழு முறையே இருக்கிறது.அங்கே எதுவும் முறையாகக் கற்பிக்கப்படுவதில்லை. தொழிலும் சரி, தொழிலறமும் சரி\
இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நண்பர் சொன்னார், இந்தியாவில் இன்று செய்யப்படும் 75 சதவீத தொழில்களுக்கும் எந்த முறையான பயிற்சியும் அளிக்கப்படுவதில்லை என்று. எதிலும் அடிப்படைத் தகுதி என எதுவும் வகுக்கப்படவில்லை. பெரும்பாலானவர்கள் பிழைப்புதேடி தற்செயலாக ஏதாவது ஒரு தொழிலில் சென்று விழுகிறார்கள். மூத்தவர்களைப் பார்த்துப்பார்த்து ஒருவாறாக கற்றுக்கொள்கிறார்கள். பிழைகள் வழியாக கொஞ்சம் தேர்ச்சி அடைகிறார்கள்.
முறையான கல்வி என அளிக்கப்படுவதற்கும் நடைமுறைத் தொழிலுக்கும் சம்பந்தம் இல்லை. ஐடிஐ அல்லது பொறியியல் படித்த ஒருவருக்கு பொறியியலில் என்ன செய்யத்தெரியும்? அவர் ஓர் பயில்முறையாளனாக தொழிற்சூழலில் சென்று சேர்ந்து உழன்று கற்றுக்கொள்வதுதான் அவருடைய தகுதி
இந்நிலையில் செய்நேர்த்தியை எப்படி எதிர்பார்க்கமுடியும்? இந்த உழைப்பாளரிடம் தொழிலறம் எப்படி திகழமுடியும்? நாம் அடிப்படையிலிருந்தே முதலாளித்துவத்தின் தொழில்பயிற்சியை திறம்படக் கற்பிப்பது, தொழிலறத்தை கட்டாயமாக்குவதுதான் ஒரே வழி. வருங்காலத்தின் சர்வதேசப்போட்டியைச் சந்திக்க அதுவே தேவை
ஜெ