பி.டி.எஃப் நூல்கள்

அன்பின் ஜெ.,

வணக்கம்.

சமீப காலங்களில், அதாவது சமீபத்திய இரண்டு மூன்று ஆண்டுகள் என்று வைத்துக்கொள்ளலாம், அதிக அளவிலான புத்தகங்கள் திருட்டு பிடிஎஃப்-களாக பொது வெளியில் பகிரப்படுகின்றன. தற்போது எழுதிவரும் எழுத்தாளர்கள் மற்றும் அவர்களது புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர்களுக்கு இந்தப் பிரச்சனை ஒரு குதிரை கொம்பாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ‘டெலிகிராம்’ என்ற செயலி வந்தவுடன் இதன் வீச்சு இன்னும் அதிகமாகியுள்ளது.

(இதுக்குறித்து ஏற்கனவே எழுதி இருக்கிறீர்களா என்று தெரியவில்லை. ஒருவேளை எழுதியிருப்பின் தேடிக்கொள்கிறேன்)

இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? ஒரு வாசகனாகவும் எழுத்தாளனாகவும் இருந்து பதில் எழுதவும்.

நன்றி

பிரேம்குமார்

 

அன்புள்ள பிரேம்குமார்

சிலநாட்களுக்கு முன் ஒரு சிறுவன் எனக்குப் ஃபோன் செய்தான். தக்கலை அருகே உள்ளவன்.அவன் ஓர் அறிவியல்பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ளவேண்டும். கொடுக்கப்பட்ட தலைப்பு பனிமனிதன் நாவல். அந்நாவல் எங்கே கிடைக்கும்? உங்கள் எண்ணை தொலைபேசிநிலையத்தில் கேட்டுப் பெற்றேன் என்று சொன்னான்.

நான் என் சேமிப்பில் பார்த்தேன். பனிமனிதன் இல்லை. நாகர்கோயிலில் கிழக்கு நூல்கள் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. ஹரன்பிரசன்னாவிடம் ஒரு நூலை அப்பையனுக்கு அனுப்பும்படிச் சொன்னேன். அவர் அனுப்ப ஒருவாரமாகும் என்றார்

அதற்குள் பையன் ஒரே அழுகை. புத்தகம் வேண்டும், ஞாயிற்றுக்கிழமைதான் போட்டி என்று. உங்களிடமிருந்தால் சொல்லுங்கள் ஏதாவது பைக்கில் தொற்றிக்கொண்டு வந்துசேர்கிறேன் என்றான். சரி மின்னூலை வாங்கு என்றேன். ஆனால் அதில் ஆயிரம் சிக்கல்கள். அவனுடைய அப்பாவிடமோ வேறு எவரிடமோ பணம்செலுத்தும் வசதி இல்லை

சரி என்ன செய்வது என்று இணையத்திலிருந்து பிடிஎஃப் நகலை நானே இறக்கி அவனுக்கு அனுப்பிவைத்தேன். அவனுக்கு பனிமனிதன் கைக்கு கிடைத்தது மேலும் ஆறுநாட்கள் கடந்து.

இங்கே வாசிப்பு இந்நிலையில் இருக்கிறது. சரி எப்படியாவது எவராவது வாசித்தால்சரி என்பதே என் நிலைபாடு. என் கதைகள், கட்டுரைகளில் பெரும்பகுதி என் தளத்திலேயே இலவசமாகத்தானே கிடைக்கின்றன?

என் நூல்கள் ஏறத்தாழ எல்லாமே பிடிஎஃப் பிரதியாக சுழல்கின்றன. அவற்றில் எத்தனைபேர் படிக்கிறார்கள்? அவற்றை தரவிறக்கம் செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் படிப்பதில்லை. அதிலும் குறிப்பாக என் நூல்களை அப்படி படிக்கவே முடியாது. கண்கள் பூத்துவிடும்.

பிடிஎஃப் நூல்களால் பாதிப்பு வணிக எழுத்துக்குத்தான். வேகமாக வாசித்துத் தள்ளுபவர்கள் அவற்றைத் தரவிறக்கம் செய்கிறார்கள். அவர்களால் அந்நூல்களை பிரசுரிப்பவர்களுக்கு இழப்பு. ஐயமே இல்லாமல் அது ஒரு திருட்டுதான். மின்னூல்களின் விலை மிகக்குறைவு. அவற்றை காசுகொடுத்து வாங்கமாட்டேன் என்று சொல்வதிலிருப்பது பொதுச்சொத்தை சூறையாடும் கயமை.

ஆனால் நம்மவரில் அந்தச் சுரணை மிகக்குறைவு. சொன்னால் நம்பமாட்டீர்கள். ஒருநாளில் இரண்டு மின்னஞ்சல்களாவது எனக்கு வரும்.  “ஐயா உங்களின் ….நாவல் பிடிஎஃப் எங்கே கிடைக்கும்?”. என்ன சொல்வது? நான் சுட்டிகொடுக்கவேண்டும் என அந்த ஆத்மா எதிர்பார்க்கிறது

என் கதைகளில் பல வாட்ஸப் நகலாக உலவுகின்றன. இரவு,அனல்காற்று,ஊமைச்செந்நாய் போல பலநூல்களே வாட்ஸப் செய்திகளாக சுற்றிவருகின்றன. வெண்முரசு நூல்கள் கூட கிடைக்கின்றன. தொழில்நுட்பச்சூழலில் அவற்றை கட்டுப்படுத்தவே முடியாது

வெண்முரசு நூல்கள் கிழக்கு பதிப்பகம் செல்லும் வழியிலேயெ சிவகாசி போலிப்பதிப்பாக வெளியிடப்பட்டு நாலில் ஒரு பங்கு விலைக்கு கிடைக்கின்றன. எவரை கட்டுப்படுத்த முடியும்?

ஆகவே கடைசியாக சொல்லவேண்டியது இதுதான். எந்த வடிவிலாயினும் படியுங்கள். படிப்பவன் அந்நூல்களால் உண்மையாகவே கவரப்படுவானாயின் அவன் பிறர்பொருளை திருடுவதற்குக் கூசுவான். இலக்கிய வாசகனாக தகுதியும் பெறுவான்

ஜெ

முந்தைய கட்டுரைமாடன்மோட்சம்- கடிதம்
அடுத்த கட்டுரைஅஞ்சலி- எஸ்.பி.பாலசுப்ரமணியம்