தன்மீட்சி- அலைவுகள்,கண்டடைதல்கள்
தன்மீட்சி, எம்.எஸ்.உதயமூர்த்தி
தன்மீட்சி எனும் இயக்கம்
தன்மீட்சி- கடிதம்
அன்பு ஜெ,
தன்மீட்சியை இலவசமாகப் பெற்ற ஆன்மாக்களில் நானும் ஒருவள். தன்மீட்சி புத்தகத்திற்கான அத்துனை மரியாதையோடும் அதன் தோள் போர்த்தி வந்திருந்த அந்த பார்சல் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. ஒன்றால் பயனடைந்த ஒருவர் அதை சமூகத்திற்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதே தன்னறம். 200 புத்தகங்களை இலவசமாக ஒவ்வொருவர் இல்லம் தேடி அனுப்பி வைக்கும் சிறந்த ஆன்மாக்கள் வாழும் சமூகத்தில் நான் வாழ்வதில் மிகப் பெருமை எனக்கு. மனம் அந்த விடயம் ஒன்றாலேயே மகிழ்ந்து கிடக்கிறது.
புத்தகத்தைப் பெறுவதோடல்லாமல் அதை வாசித்து அதிலிருந்து கற்றவற்றை ஓரிரு வரிகள் எழுதியனுப்பச் சொல்லியிருந்தார்கள். அவர்களுக்கு அனுப்பியதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
”தன்மீட்சி”
தன்மீட்சி என்ற சொல் கூட என் உள்ளத்தில் ஊடுருவி ஒரு கரு உருவாகப் புறப்படத் தயாராக்குவது போல இருந்தது. கால நிகழத்தகவில் என் பயணப்பாதையில் நான் கடக்கும் ஒவ்வொன்றையும் மிகக் கூர்மையாக நான் அணுகுவதுண்டு. அப்படித் தான் இந்த நேரத்தில் என் கையில் கிடைத்த தன்மீட்சியைப் பார்க்கிறேன். தன்மீட்சி புத்தகத்தின் தன்மை விவேகானந்தர் மற்றும் J.KRISHNAMOORTHY அவர்களின் கேள்வி பதில் வரிசை போன்றதாக இருந்தது எனக்கு. பள்ளி, கல்லூரி காலங்கள் பின்னும் போட்டித் தேர்வு எழுதும் போதான கால கட்டம் யாவற்றிலும் நான் தன்னூக்கியாகத் தான் இருந்திருக்கிறேன். துன்பங்களைக் கடந்து செல்ல பல தன்னூக்கி புத்தகங்களை, தன்வரலாற்றுப் புத்தகங்களைப் பயன்படுத்தியிருக்கிறேன். இன்று இந்த கால கட்டத்தின் தேவையாக இந்த தன்மீட்சி புத்தகத்தை அணைத்துக் கொண்டேன். என் கேள்விக்கான பல விடயங்களை நான் இங்கே கண்டு கொண்டேன். அதைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
”உள்ளுணர்வு”: நான் முன்பு உள்ளுணர்வுகளால் தான் வழி நடத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் இடையில் இந்த சமூகத்தின் அழுத்தத்தினால் அதை எங்கோ தொலைத்து விட்டிருக்கிறேன். “எந்தத் துறையிலும் உள்ளுணர்வே முதன்மையானது. அடுத்தது கற்பனை” என்று ஜெ சொன்னபோது கண்ணீர் விட்டேன். நான் என் மேல் நம்பிக்கை இழந்தவளாக, என் உள்ளுணர்வை கொலை செய்து விட்டு தோல்விகளால் உந்தப்பட்டு நான்கு வருடங்களை இழந்துவிட்டதை எண்ணி வருந்தினேன். இன்று நான் அடைந்துபிட்ட உலகியல் வெற்றியில் என் சுர்றியிருப்பவர்கள் மகிழ்கிறார்கள். ஆனால் என்னுள் கனலாக எரியும் என் கனவு இலக்கு என்னை தூங்கவிடுவதில்லை. அதற்கான் ஊக்கியாய் இந்தப் புத்த்கம் அமைந்தது. “எது உனனுல்லூரிய செயலோ அது. எந்தச் செயலுக்காக நீ பிறந்திருக்கிறாயோ அது. அதைச் செய்யும்போதே மன நிறைவும் வாழ்வின் முழுமையும் கிடைக்கும்” இந்த வரிகளின் ஜெ -விற்கு நன்றி. மேலும் இலக்கியம் சார்ந்து ஈடுபடுகையிலும், உயர்ந்த இலக்கினை நோக்கிச் செல்கையிலும் உலகியலை துச்சமாகக் கருதிய என் செயல்களை எல்லாம் இங்கு தான் ஆணவம் என்று உணர்ந்து கொண்டேன். என் நேரங்களை முறையாக, முறையானவர்களுக்கு ஒதுக்காமைக்கு மனம் வருந்தினேன். காபி போட்டுக் கொள்ளும், துணி துவைக்கும், வீட்டைத் துப்புறவு செய்யும், கடைக்கு செல்லும் ஜெ –வை நான் நினைத்துப் பார்த்ததில்லை. ”எனக்கு உலகியல் சார்ந்த விடுதலை இருந்தால் நான் இன்னும் செய்வேன்” என்ற கீழ்மையான் என் எண்ணத்தை இங்கு இந்த புத்தகத்தில் ஆவியாக்குகிறேன். இயற்கையின் முன், நான் விரும்பும் கடவுளின் முன் என் உள்ளுணர்வை கொலை செய்ததற்கும், என்னை சார்ந்தோரை என் ஆணவத்தில் வெறுத்ததற்கும், என்னை தண்டித்துக் கொண்டதற்கும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு என்னை புதுப்பித்துக் கொண்டேன். சோம்பியிருப்பது, சும்மாயிருப்பது பற்றிய திறப்பையும் அடைந்தேன். “என் இயலாமையால் சோம்பியிருப்பேனானால் இவையனைத்தையும் அளித்த இயற்கையை அவமதிக்கிறேன்” என்ற வார்த்தை என்னை ஓங்கி அறைந்தது.
நாம் நமக்கு விருப்பமானபடி நம்மைத் தகவமைத்துக் கொள்ளுதல், ஒரு செயலைச் செய்யும் போது ஏற்படும் தடைகள் மூலம் சாத்தியக் கூறுகளைக் கண்டடைதல். தன்னிரக்க மன நிலையைக் களைதல், சோம்பல், கேளிக்கைகளைக் கலைந்து நம்மை முழுமையாக நாம் பயன் படுத்தல், என் தனித் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்தல், என் சமூகப் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் செய்தல், அகங்காரத்தைக் களைதல், என் காலையை எப்படி அமைக்க வேண்டும் என்ற ஒரு செயல்முறை இவையாவற்றையும் இந்த புத்தகத்தின் மூலம் ஜெ எனக்குக் கடத்தியிருக்கிறார்.
”வாழ்வதன் அகலம் அல்ல, வாழ்வதன் ஆழமே முக்கியம். வாழ்க்கை வெல்வதற்கும் நிறைவதற்கும் உரியது. ஆகவே செயல் புரிக!” என்ற வார்த்தைகளை என் நெஞ்சில் நிறைக்கிறேன், மீண்டும் மீண்டும் என்னுள் சொல்லிக் கொள்கிறேன். இனி எப்போதும் புரட்டிப் பார்த்துக் கொள்ளும் வார்த்தைகளாக மாறிவிடப் போகும் வார்த்தைகள்.
ஜெ -வினுடைய செயல்களால் படைப்புகளால் நான் ஊக்கமடைந்து செயல்படுவதுண்டு. ஆனால் ஒட்டுமொத்த்மாக ஒரு இளம் வயதில் ஒரு ஆன்மா அடையக்கூடிய அனைத்து சலனங்களுக்கும் பதில் கூறுவது இலக்கியவாதிகளால் முன்னெப்போதும் முன்னெடுக்கப்படாத மாபெரும் செயல். அவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். வாழ்த்துவதல்லாமல் நான் வாழும் தன்னறமான வாழ்க்கையால் தான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். உங்களைப் போல. உங்களின் செயலின் மூலம், வெற்றியின் மூலம் அவருக்கு நன்றியை உரித்தாக்கியது போல. எதிர்மறையான எண்ணங்கள் சூழ்ந்த இந்த நேரத்தில் என் சிந்தையை எட்டிய நேர்மறைக் கதிர் இந்த தன்மீட்சி. நன்றி. சிவராஜ், ஸ்டாலின், அவரின் நண்பர்கள், சிவகுருநாதன், சுயம்புச்செல்வி, நேசன், நந்தகுமார், இன்னும் பெயர் தெரியாத அனைத்து குக்கூ நண்பர்களுக்கும் நன்றி.
(நான் பயன்பெற்ற இந்த புத்தகத்தை என் வாழ்நாள் தோறும் தேவையான நபர்களுக்கு வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருப்பேன் தும்பிகளைப் போல.)
-இரம்யா.