பூனையும் தெய்வமும்

அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

இந்து சமய வழிபாடுகளில், தெய்வங்களோடு சேரந்து அவர்களின் வாகனமான நாட்டு, காட்டு விலங்குகளையும் வணங்குகிறோம். ஆனால் மனிதர்களோடு பரவலாக புழங்கும் பூனைகள் எந்த முதன்மை தெய்வங்களுக்கும் வாகனமாக உருவாகவில்லை. நமது தெய்வ வழிபாடுகளில் பூனை வாகனமாக இருந்து வழக்கில் இருந்து அழந்து போய் விட்டதா?

என்றும் அன்புடன்,

சிவமணியன்

***

அன்புள்ள சிவமணியன்,

ஆர்வமூட்டும் கேள்விதான். அதற்கு ஒரு பதிலைச் சொல்லமுடியாது. ஆனால் அதையொட்டி மேலும் சிலவற்றை யோசிக்கலாம்

முன்பு ஓர் உரையாடலில் நித்யா சொன்னார். மனிதன் அச்சத்தால் விலங்குகளை வழிபட்டான் என்கிறார்கள். கங்கைச் சமவெளியில் மிக அச்சமூட்டும் விலங்கு முதலைதான். அது கங்கைக்கு வாகனம், மற்றபடி ஒரு தெய்வமே அல்ல. ஏன்? அச்சத்தையே அளிக்காத குரங்கு எப்படி தெய்வமாக ஆனது?

அச்சத்தால் அல்ல. பயன்பாட்டலும் அல்ல. வேறேதோ காரணத்தால்தான் விலங்குகள் தெய்வங்களாகின்றன. என் பார்வையில் முழுக்கமுழுக்க அழகியல் காரணம்தான். அவை சில விழுமியங்களின் குறியீடுகளாக மாறுகின்றன. அவ்விழுமியங்கள் தெய்வங்களுடன் இணையும்போது அவையும் தெய்வ வடிவமாகின்றன.

பூனையை நாம் வளர்த்தோமா? தர்மசாஸ்திரங்களில் பூனையைக் கொன்றால் செய்யவேண்டிய பிழைநிகர் சடங்குகள் சொல்லப்பட்டிருக்கின்றன. கம்பன்

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென

ஆசை பற்றி அறையலுற்றேன் – மற்று, இக்

காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ!

என்று சொல்கிறார். பூச்சை என்று மலையாளத்தில் பூனையைச் சொல்கிறார்கள். இங்கே கம்பன் பூசை என்கிறார். ஓசை கேட்டு அறிந்து பாற்கடலைச் சென்றடைந்த பூனை நக்கியே குடித்துவிடலாம் என்று எண்ணுவதுபோல களங்கமற்ற ராமனின் கதையை வெறும் ஆசையால் நான் சொல்ல முடிவு செய்துள்ளேன் என்கிறான்.

பாலை பூனைக்குடிப்பது என்னும் குறிப்பு வீட்டுப்பூனையையே குறிப்பிடுகிறது. பூனை அன்றாட வாழ்க்கையின் அம்சமாக அமைந்திருந்தது. அதைப்பற்றிய வர்ணனைகள் பல காணக்கிடைக்கின்றன.

அது குறியீடாகவும் ஆகியிருக்கிறது. மூன்று குறியீடுகளை வேதாந்த மரபில் சொல்வதுண்டு. பூனைச்செவி [மார்ஜார கர்ணி] பூனையின் காது சிறிய ஒலிகளையும் கேட்பது. எப்போதும் விழிப்புடனிருப்பது. தூங்கும்போதும் அசைவது. இந்த உவமை மெய்யியல் மாணவனுக்கு, யோகசாதகனுக்குரிய முழுவிழிப்புநிலைக்கான உதாரணமாகச் சுட்டப்படும்.

பூனையின் வாசனை இரண்டாவது உவமை. [மார்ஜார கந்தம்] பூனையைக் குளிப்பாட்ட வேண்டியதில்லை. அது தன்னைத்தானே நக்கி முற்றிலும் தூய்மையாக வைத்திருக்கும். பூனையின் உடலில் பூனையின் வாசனை இருக்கும். அதேபோல சாதகன் தன் அகப்புற ஒழுக்கங்களால் தன்னைத்தானே தூய்மையாக வைத்திருக்கவேண்டும்.

பூனையின் சத்தம் இன்னொரு உவமை [மார்ஜார சப்தம்] பூனை எப்போதும் சத்தமிட்டுக்கொண்டிருக்கும். விழித்திருக்கும்போது மியாவ் என்று. தூங்கும்போது உர்ர்ர் என்னும் ரீங்காரமாக. அதைப்போல யோகசாதகனின் மந்திரம் அவனில் விழிப்பிலும் துயிலிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்

பூனை தர்க்கமுறையில் [நியாய சாஸ்திரத்தில்] இரண்டு இடங்களில் உவமையாகக் குறிப்பிடப்படுகிறது. ஒன்று பூனையின் தாவல். [மார்ஜார கரணம்] பூனை ஓர் இடத்திலிருந்து சாத்தியமான கடைசி எல்லைக்குத் தாவுகிறது, படிப்படியாக நடந்து செல்வதில்லை. அதேபோல ஒரு கருத்திலிருந்து அதன் இறுதிச் சாத்தியம் நோக்கிச் செல்வது பூனைத்தாவல் முறை. அல்லது பூனைபோல எப்படி பாய்ந்தாலும் சரியாக நான்கு காலில் சென்று விழுவது.

இன்னொன்று பூனைக்கும் எலிக்குமான உறவு. எலியும் பூனையும்போல இணையவே முடியாத தொடர்பு என்ற பொருளில் சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது. பூனை எலியை வைத்து விளையாடுவதுபோல என்றபொருளிலும் சொல்லப்படுகிறது

இரண்டு உவமைகளுமே பேச்சுவழக்கில் உள்ளன. நியாயத்தில் இருந்துதான் பேச்சுவழக்குக்கு இவை வந்தனவா அல்லது பேச்சுவழக்கிலிருந்து அங்கே சென்றனவா என்பது தெரியவில்லை. ஆனால் உள்ளங்கை நெல்லிக்கனி, வெள்ளிடைமலை போன்ற பல உவமைகள் நியாயசாஸ்திரத்திலுள்ளவை.

ஆனால் அதிகம் புழக்கத்திலுள்ளது மார்ஜார நியாயம் என வைணவர்கள் சொல்வது. பூனை தன்குட்டியையும் கவ்வுகிறது, எலியையும் கவ்வுகிறது. இரண்டு கடிக்கும் வேறுபாடுண்டு, அதேபோல இறைவன் பக்தர்களையும் தீயவர்களையும் நடத்துவதில் வேறுபாடுண்டு என்கிறார்கள்.

மற்றபடி பூனை எங்கும் தெய்வமாக கருதப்படவில்லை. ஏனென்றால் மேலே சொன்னதுபோல எளிய உவமைகளாகவே அது கையாளப்பட்டுள்ளது, அது வடிவத்தாலோ நடத்தையாலோ எந்த அடிப்படை விழுமியத்துக்கும் குறியீடாக ஆகவில்லை. ஆகவே தெய்வமும் ஆகவில்லை.

ஜெ

பூனைசாட்சி

முந்தைய கட்டுரைஉடையாள்-8
அடுத்த கட்டுரைவெண்முரசு – முதற்கனல் முதல் பிரயாகை வரை-சுரேஷ் பிரதீப்