இருட்டிலிருந்து வெளிச்சம்

எண்பதுகளின் இறுதியில் அசோகமித்திரன் இலஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியாவில் ஜெமினி ஸ்டுடியோவில் தன்னுடைய நாட்களைப் பற்றி ஒரு பத்தி எழுதினார். ஆங்கிலத்திலும் அவருடைய நடையில் அந்த உள்ளடங்கிய அங்கதம் இருந்தது, அது அன்று வெகுவாக ரசிக்கப்பட்டது

பின்னாளில் அசோகமித்திரன் அந்நினைவுகளை சற்று விரித்து தமிழிலும் எழுதினார். அந்த கட்டுரைகளுடன் அசோகமித்திரன் எழுதிய அத்தனை சினிமாக்கட்டுரைகளையும் ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட தொகுப்பு நற்றிணை வெளியீடாக வந்திருக்கும் இருட்டிலிருந்து வெளிச்சம். அசோகமித்திரனின் நடையை அறிந்தவர்களுக்கு புன்னகைத்தபடியே வாசிக்கத்தக்க ஒரு நூல். சினிமாவை அறியவிரும்புபவர்களுக்கு முக்கால்நூற்றாண்டுக்கு முந்தைய திரையுலக வாழ்க்கையைப் பற்றிய ஒரு சித்திரம்

அதற்குமேல் இது அசோகமித்திரனின் கதைகளைப் புரிந்துகொள்வதற்கான ஒரு பின்னணிவிவரணையும்கூட. அசோகமித்திரன் ஜெமினி ஸ்டுடியோவில் வேலைபார்த்த நாட்களில்தான் ஓர் எழுத்தாளராக உருவாகி வந்தார்.அவருடைய இளமையில் இருந்த இடமென்பதனால் அங்கிருந்த மனிதர்கள் அவருள் ஆழமாகப் பதிந்திருந்தன. ஆகவே அவர் படைப்புக்களில் அவ்வாழ்க்கை திரும்பத்திரும்ப வந்தது

அவர் எழுதிய மூன்று உலகங்கள், ஒன்று செகண்ட்ராபாத் லான்ஸர் பாரக்கில் இருந்த இளமைக்காலம். இரண்டு ஜெமினி ஸ்டுடியோ வாழ்க்கை. மூன்று அவருடைய சென்னைவாழ்க்கை, ஒண்டுக்குடித்தன பிரச்சினைகள். இவற்றில் லான்ஸர்பாரக் கதைகள் இனியநினைவுகளாலானவை. ஜெமினி ஸ்டுடியோ வாழ்க்கையில் விசித்திர மனிதர்கள் சற்றே அங்கதம் கலந்து சொல்லப்பட்டிருக்கும். சென்னையின் கீழ்நடுத்தர வாழ்க்கை சோகத்தால் அடிக்கோடிடப்பட்டது

இந்த ஜெமினி நினைவுகள் அக்காலத்தில் ஆனந்தவிகடன் ஆசிரியரும் வாசனின் மகனுமான பாலசுப்ரமணியத்தால் ரசிக்கப்படவில்லை. அசோகமித்திரன் ஆதாரமில்லாமல் அவதூறு செலுத்துகிறார் என்று கருதப்பட்டது. நீண்டகாலம் ஆனந்தவிகடனுக்கும் அசோகமித்திரனுக்குமிடையே கசப்பும் இருந்தது. அவரைப்பற்றி ஒருவரிகூட அவர்கள் வெளியிட்டதில்லை.

ஆனால் இன்று வாசிக்கையில் இந்நூல் வாசனைப்பற்றிய அழகான ஒரு நினைவுச்சின்னம் என்றுதான் படுகிறது. வாசனின் உறுதி, விழைவு, ஆட்சித்திறன் ஆகியவை வெளிப்பட்டபடியே இருக்கின்றன. கூடவே அவருடைய சூழ்ச்சி, வியாபாரிகளுக்குரிய நெளிவுசுளிவுகள், கலையை வணிகமாக மட்டுமே பார்க்கும் உலகியல்தன்மை ஆகியவையும் வெளிப்படுகின்றன. மறைந்த முன்னோர் பற்றி போற்றிப்பாடடியை மட்டுமே எண்ணும் தலைமுறையினருக்கு ஏன் கசப்பு வந்தது என்றும் புரிகிறது

ஜெமினியின் அக்காலச் சினிமாக்கள் மாபெரும் தொழிற்சாலைத் தயாரிப்புகள் போல தயாராகின்றன. எங்கும் எவரோ என்னென்னவோ வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். தின்றுகொண்டிருக்கிறார்கள். எவருக்கும் என்ன நடக்கிறதென்று முழுமையாகத் தெரியவில்லை. பல படங்கள் ஆண்டுக்கணக்கில் எடுக்கப்படுகின்றன. கதை இலகா கதையை உருவாக்குகிறது. இயக்குநர்களேகூட பலர்தான். கடைசியில்தான் வாசன் வந்து அமர்ந்து படத்தை வெட்டி ஒட்டி உருவாக்குகிறார்.

இந்த களேபரத்தில் அஞ்சியமுஞ்சூறு போல அரவமில்லாமலிருந்த இருபத்தைந்து வயது இளைஞன் கண்வழியாகத்தான் நாம் அவ்வுலகைப் பார்க்கிறோம்.அவனிடம் எப்போதும் ஒரு சிரிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. சந்திரலேகா படம் இந்திய அளவில் ஏன் அத்தனை மாபெரும் வெற்றிபெற்றது என அசோகமித்திரன் வியக்கிறார். அது வெளிவந்து இரண்டு ஆண்டுகள் வரை ரசிகர்களின் பரவசக்கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு ரஞ்சனுக்கும் எம்.கே.ராதாவுக்கும் வேறுபாடு தெரியவில்லை.

ஔவையார் பற்றி சொல்லும்போது அசோகமித்திரன் சொல்கிறார். அந்நாளில் அராஜகநிலைமைதான் இருந்திருக்கவேண்டும். பெண்ணான ஔவையார் தற்காத்துக்கொள்ள அதட்டல் இல்லாவிட்டாலும் உரத்தகுரலாவது தேவைப்பட்டிருக்கும். கே.பி.சுந்தராம்பாளிடம் அது நிறையவே இருந்தது. ஔவையார் படத்தை கல்கி கிண்டல்செய்வார் என்று எதிர்பார்க்கும் அசோகமித்திரனின் வரி இது. “தமிழ்ப்படங்களை கிண்டல்செய்ய பெரிதாக பிரயத்தனப் படவேண்டியதில்லை. கதைச்சுருக்கங்களைக் கொடுத்தாலே போதும்”

சுவாரசியத்துக்காகவும் நினைவுகளுக்காகவும் படிக்கப்படவேண்டிய நூல் இது. ஆனால் நடையில் ஒரு கவனமின்மை இருந்துகொண்டே இருக்கிறது. திரும்பத்திரும்பச் சொல்கிறார். பலசொற்றொடர்கள் பிழையாக உள்ளன. பலவறைச் சொல்லவந்து விட்டுச்செல்கிறார். சிறந்த புனைவுகளில் வெளிப்படும் அசோகமித்திரன் இதில் இல்லை

எஸ்.எஸ்.வாசன் பற்றிய பகுதிகளைப் போல மற்ற பகுதிகள் கவனமாக எழுதப்படவில்லை. பெரும்பாலான சினிமாபற்றிய எழுத்துக்கள் மேலோட்டமான முகநூல் குறிப்புகளாகவே உள்ளன. “ஸ்ரீதர் சேலைகட்டிய பெண்களை காட்டினார், பாலசந்தர் பெண்கள் சேலைகட்டுவதைக் காட்டினார் “ போன்ற நையாண்டிகள் முகநூலர்களுக்கே உரியவை.

அத்துடன் அசோகமித்திரனுக்கு தமிழ் சினிமா பற்றி இருக்கும அபிப்பிராயம் குழப்பமானது. அவர் அதிகம் ரசித்த படங்கள் ஹாலிவுட் மசாலாப்படங்களும் இந்தி வெகுஜனப்படங்களும்தான். அவற்றை ஒட்டி அமைக்கப்பட்ட தமிழ்ப்படங்களை அவர் விரும்பாமலில்லை. அதற்கப்பால் ஆழமான படங்களை அவர் பார்த்துரசித்தார் என்பதற்கான தடையங்கள் இல்லை.

உரையாடல்களில் சற்று மெல்ல ஓடும் கலைப்படங்களைப் பற்றி அவர் கேலியுடன் பேசியதை நினைவுறுகிறேன். அறுபதுகளுக்குப்பின் வந்த தமிழ்ப்படங்களை அவரால் ரசிக்கமுடியவில்லை. சொல்லப்போனால் அறுபதுக்குப்பின் வந்த ஆங்கிலப்படங்களையும் அவர் ரசிக்கவில்லை. அவர் சினிமாவை ரசித்ததெல்லாம் இளமையில்தான். சினிமா அவருக்கு ஓர் இளமைக்கால நினைவு, கடந்தகால ஏக்கம் மட்டும்தான்

இருட்டிலிருந்து வெளிச்சம் வாங்க

முந்தைய கட்டுரைடார்த்தீனியம் கடிதங்கள்- 4
அடுத்த கட்டுரைநீலத்தில் மலர்தல்