அப்பா பழக்கமில்லாத குடியினால் ராத்திரி ரொம்ப அவஸ்தைப்பட்டார். இருமுறை கைத்தாங்கலாக தூக்கி வாந்தியெடுக்க வைத்தார்கள். விடியற்காலையில் விழித்துக்கொண்டு கனகு கனகு என்று கூவியதில் மொத்த வீடுமே அவரைச் சுற்றி கூடிவிட்டது.
அன்று காலை நானே மிகவும் பிந்தித்தான் எழுந்தேன். வெயில் அசிங்கமான மஞ்சள் நிறத்துடன் விரிந்து கிடந்தது. எழுந்த மறுகணமே கண்கள் விண் விண்ணென்று தெறித்தன. மனசை சூனியம் வந்து அப்பிக்கொண்டது. அப்போது அப்பாவின் குறட்டை உரக்க ஒலித்துக்கொண்டிருந்தது. அப்பு மாமா விடை பெற்றுப் போனார். பத்து மணிக்கு வருவதாய்க் கூறினார். அம்மா சோர்வாகவே இருந்தாலும் மீண்டுவிட்டாள் என்றுதான் பட்டது.
நான் மக்ரூணியைத்தான் முதன் முதலாய் ஓடிப்போய் பார்த்தேன். தொழுவில் குவியலாக விழுந்துகிடந்தது அது. தூக்கி வெளியே கொண்டு வந்து வெயிலில் நிறுத்தினேன். அதற்கு குரல் கட்டி விட்டிருந்தது. உடம்பு குளிர்ந்து போய், கண்களில் மிகமெலிதாய் படலம் போல எதுவோ படர்ந்து, பயமூட்டும்படி இருந்தது. நிற்க முடியாதபடி அதன் கால்கள் நடுங்கின. அடிக்கடி அது குரலெழுப்ப முயன்றது. உடம்பு உலுக்கிக்கொண்டதே ஒழிய, ஒலியே எழவில்லை.
அது தொடர்ந்து உயிர் வாழப்போவதில்லை என்று உள்ளூர எனக்குத் தோன்றிவிட்டது. அதன் மீது ஏற்பட்ட பரிதாபம் என்னை நெகிழச்செய்துகொண்டிருந்தது. அதே சமயம், ஒருவித காவிய முடிவு என்ற ரீதியில், முத்தாய்ப்பு போல அதன் மரணத்தை நான் விரும்பினேன் என்றும் தோன்றியது. சுய வெறுப்பு ஏற்பட்டது. ஒன்றும் ஆகாது. தேறிவிடும் என்று இன்னொருவருக்கு கூறுவதுபோல எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன். மக்ரூணியின் கால்கள் வெடவெடத்தன. அது சரிந்து சரிந்து விழுந்துகொண்டிருந்தது.
அப்போதுதான் அறைக்கதவு கிரீச்சிட்டது. அப்பா பாய்ந்து வெளியே வந்தார். நேராக அந்தச் செடியை நோக்கி ஓடினார். அவிழ்ந்த வேட்டியை அள்ளிப் பிடித்தபடி, அதைப் பார்த்தார். “முளைச்சிட்டது டேய்” என்று வீரிட்டார். நான் அப்போதுதான் அந்தச் செடியைப் பார்த்தேன். அது ஒரு சாண் உயரத்தில் புதிதாக முளைத்து எழுந்திருந்தது.
அப்பா வெறி மிளிர்ந்த முகத்துடன், “முளைச்சிட்டது. அடியேய் ஆனந்தம்! பாத்தியா முளைச்சிட்டது” என்று கூவினார். என்ன செய்வது என அறியாதவர் போல அலை மோதினார். “வாளியை எங்க…. டேய் எடுடா வாளியை..” என்று கத்தினார். தாங்க மாட்டாதவராக சிரித்தார். சுற்றிச் சுற்றி வந்தார். தண்ணீர் மொண்டு வந்து ஊற்றினார். கைகளால் தளிரைத் தடவிக் கொடுத்தார். அவர் கண்களில் கண்ணீரைப் பார்த்தேன். உள்ளே ஓடினேன். அம்மாவிடம் போய் நின்றேன். மூச்சிரைத்தது. பேச முடியவில்லை. “ஏண்டா” என்றாள் அம்மா.
“அது…. அந்தச் செடி” என்று விக்கினேன்.
“முளைச்சிருக்கு. பாத்தேன்” என்றாள் அமைதியாக.
“அம்மா!”
“அது இல்லாட்டி அப்பாவால இருக்க முடியாதுடா. வேறு வழியே இல்லை”
நான் பீதியுடன் அம்மாவைப் பார்த்தேன். என்னைப் பார்ப்பதை தவிர்த்தவளாய் அவள் செம்பை எடுத்தபடி புழக்கடை பக்கம் போனாள். நான் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். கண்களைத் துடைத்துக்கொண்டிருந்தாள்.
மக்ரூணி இரண்டு நாள் உயிரோடிருந்தது. அதைக் காப்பாற்ற நான் தான் வெகுவாய் முயன்றேன். அப்பு மாமா “அது தேறாதுடா” என்று கூறிவிட்டார். அப்பா டார்த்தீனியத்தை விட்டு நகரவேயில்லை. அம்மாவும் சமையலறையை விட்டு வெளியே வரவில்லை. நான் மக்ரூணிக்கு வாழைப்பழங்கள் வாங்கித் தந்தேன். கழுநீரும், கஞ்சியும் கொண்டு வந்து வைத்தேன். அது சாப்பிடவில்லை. வாழைப்பழத்தை அதன் வாயைத் திறந்து ஊட்டினேன். அதன் வாய் உலர்ந்து தவிட்டு நிறமாக இருந்தது. அதன் நாக்கு வாய்க்குள்ளே உள்நோக்கி மடங்கி, ஒட்டியிருந்தது. கக் கக் என்று இருமியது. பழம் கூழாக வெளியே வந்தது.
சாயந்திரமானபோது, அதன் நாசியிலிருந்து நீர் வடிய ஆரம்பித்தது. கண்களில் பீளை கட்டிவிட்டது. மூச்சில் அழுகல் வாடை வந்தது. “புகை போட்டுப்பார்” என்று பிள்ளை மாமா விட்டேத்தியாகச் சொன்னார். புகை எப்படி போடவேண்டும் என்று முத்தனை நச்சரித்தேன். முத்தன் உதவியுடன் வெங்காயத்தோல், பூண்டு, யூகலிப்டஸ் இலை எல்லாம் போட்டு மூச்சுக்குள் எரியும் புகையை எழுப்பி மக்ரூணிக்குக் காட்டினோம். சிறிது ஆசுவாசம் கண்டதுபோல மக்ரூணி காதுகளை விடைத்தது. மூக்குத் திரவம் நின்று விட்டது. என் வேட்டி நுனியை கடித்து மெல்ல ஆரம்பித்தது. அதன் கண்களும் உயிர் பெற்றன.
எனக்குள் நம்பிக்கையும் களிப்பும் பெருகியது. எழுந்தோடி வாழைப் பழத்துடன் வந்தேன். அதற்குள் மீண்டும் பழையது போல ஆகிவிட்டது. காதுகள் விழுந்துவிட்டன. மூக்கை தரை மீது ஊன்றி, குனிந்து விட்டது. வாலின் அசைவும் பூரணமாக நின்றுவிட்டது. நான் அதன் காதில் “மக்ரூணி, மக்ரூணி” என்று அழைத்தேன். அதன் வெதுவெதுப்பு என்னை இளக வைத்தது. என் கண்ணீர் அதன் முகத்தில் கொட்டியது. மக்ரூணி தன் முகத்தை பிரயாசைப்பட்டு தூக்கி என்னைப் பார்த்தது. கண்கள் உருண்டன. ஒரு கணம் என் பார்வை அதனுடன் இணைந்தது.
என் மனம் அதிர்வடைந்தது. அக்கண்களில் தெரிந்த வெறுமையை என்னால் தாங்க முடியவில்லை. கடவுளே! என்ன இது! மக்ரூணிக்கு என்னைத் தெரியவில்லையா? அதன் மனசில் இப்போது நான் இல்லையா? ஒரு கணத்தில், என் செய்கையின் எல்லா முக்கியத்துவத்தையும் இழக்கப்பெற்று அசட்டுத்தனமாய் உணர்ந்தேன். அதன் விழி உருளைகள் சுழன்று செருகின. அதன் உடம்பு தொய்வடைந்தது. என் பிடியை நான் விட்டேன். பெரிய வெறுமை உணர்வு என் மீது கவிந்தது. மக்ரூணி இறந்து விட்டது என நான் உணர்ந்த அக்கணமே அந்த உடல் அருவருப்பு தருவதாய் ஆகிவிட்டது எனக்கு. அதன் தலையை மெல்ல தரை மீது விட்டு விட்டு எழுந்துகொண்டேன்.
விலகி ஓடிவிட வேண்டும் என்று தோன்றியது. சற்று நடந்து திரும்பிப் பார்த்தேன். மக்ரூணி அசைவற்றுக் கிடந்தது. ஆனால் அது சாகவில்லை என்று பட்டது எனக்கு. என்னால் அதை உதறிவிட்டுப் போகவும் முடியவில்லை. அப்படியே பார்த்தபடி நின்றேன். மக்ரூணியின் வால் சட்டென்று அசைந்தது. அதன் கால்கள் துடித்தன. தலையை சட்டென்று தூக்கியது. முன்னங்கால்களை ஊன்றி, எம்பி எழ முயன்றது. எனக்குள் உவகை ஒரு அடிபோல விழுந்தது. பிழைத்துக்கொண்டுவிட்டதா?! அதை நோக்கிப் பாய்ந்தேன். இல்லை என் உடம்பு அசையாமல் அப்படியேதான் நின்றேன். மனம் தாவி அதை அணைத்துக்கொண்டது.
மக்ரூணி இருமுறை வாயைத் திறந்து உஸ்ஸ் என்று மூச்சுவிட்டது. வால் பெரிதாக சுழன்றது. சட்டென்று அதன் குரல் விடுபட்டது. “அம்பேய்” என்று அண்ணாந்து இருமுறை உச்சஸ்தாயியில் கூவியது. என் மனசை பிய்த்து உதறியது அந்த ஒலி. மக்ரூணி குப்புற விழுந்தது. கால்கள் விலுக்கிட்டன. அதன் நாக்கு வெளியே வந்தது. ஒரு புழு ஊர்ந்து வெளிவர துடிப்பது போல நெளிந்தபடி. மெல்ல அக்கணம் வரை இல்லாதிருந்த ஒரு சிலைத்தன்மை அதன் மீது கவிந்தது.
மறுகணம், சட்டென்று என்னை திடுக்கிடச் செய்தபடி, கருப்பன் ஓலமிட்டது. மிகச் சரியாக மக்ரூணி இறந்த கணம். எனக்கு பீதி ஏற்பட்டது. அதன் கண்களைப் பார்த்தேன். அவை மக்ரூணியின் மீது நிலை குத்தியிருந்தன. அவற்றில் கருப்பனுக்கே உரிய அந்த புத்திசாலித்தனமோ, சதா மின்னும் ஆர்வமோ இல்லை. அது எல்லா தனித்தன்மைகளையும் இழந்து, ஒரு மிருகம் மட்டுமாக ஆகிவிட்டிருந்தது. அதன் வால் நீளமாக விரைப்பாக இருந்தது. காதுகள் விடைத்து, நாசி ஈரமாம இருந்தது. நிலை கொள்ளாமல் கால் மாற்றி தவித்தபடி, “பவ்! பவ்!” என்று ஒலி எழுப்பியது. சட்டென்று பின்னங்கால்களில் அமர்ந்து, வாயை வான் நோக்கி தூக்கி, மிக நீளமாய் ஊளையிட்டது. திடீரென்று ஏதோ புதிய ஜந்து எங்கள் தொழுவத்தில் வந்து குடியேறி விட்டது போலிருந்தது.
முன்பு, கனகுவின் மரணத்தின் போதும், சரியாக அது இறந்த கணத்தில், இதன் ஊளை கேட்டது ஞாபகம் வந்தது. இவ்வளவுக்கும் அது கனகுவை கண்ணால் காணவே இல்லை. எப்படித் தெரிகிறது? அசட்டுத்தனமும், பிரியமும் கொண்ட ஒரு எளிய ஜீவன் அல்ல அது என்று உணர்ந்தேன். அமானுடமான ஏதேதோ வல்லமைகள் உடைய தனி ஆத்மா. அதன் மீது அந்நிமிடம் வரை எனக்கிருந்த பிரியம் அப்போது இல்லை என உணர்ந்தேன். இனி ஒருபோதும் அதை நான் முன்பு போல நேசிக்க முடியாது. அது இனி என் விளையாட்டுத் தோழன் இல்லை. என் மனம் ஜில்லிட்டது. அதன் ஒரு புலன் என் மரணத்திற்காகவும் காத்திருக்கிறதா, சதா விழிப்பு நிலையில்? அதைப் பார்க்கவே என்னால் முடியவில்லை.
நான் பிரமை பிடித்தவன் போல ஆனேன். ஏழெட்டு நாள் கல்லூரிக்குப் போகவில்லை. யாரும் அது பற்றி விசாரிக்கவும் இல்லை. வீடே வெறிச்சிட்டிருந்தது. அங்கு என் மீது பிரியம் கொண்ட எந்த ஜீவனும் இல்லை என்று தோன்றியது. எனக்கும் எதன் மீதும் அன்பு இருக்கவில்லை. டார்த்தீனியம் வளர்ந்து அப்பாவின் அறைச்சன்னலை அடைந்தது. கூரை மீது ஏறிப் படர்ந்தது. அறைக்குள் அதன் கரங்கள் நீண்டன. தளிர்ச்சுருள்களினால் அது மேஜை நாற்காலிக் கால்களைப் பற்றி, இறுக்கிக் கொண்டது.
அப்பாவின் அறைக்குள் கன்னங்கரிய இலைகள், இருட்டு அடர்ந்து இருப்பது போல. முற்றம் இருண்டு விட்டது. அந்தப் பிராந்தியமே இருண்டு விட்டது. நடுப்பகலிலும் கூட இருட்டு! அப்பா அறைக்குள், கரிய இலைகளின் ஊடாக பரம் சந்தோஷத்துடன் படுத்துக் கொண்டார். திண்ணையெங்கும் அப்பியிருந்த கொடிப் பின்னல்களின் இடையே பகல் முழுக்க உட்கார்ந்து கொண்டார். அவருடைய மனநிலை சீர்குலைந்து விட்டதோ என்று தோன்றியது.
தெளிவான தடயங்கள் அதற்கு இருந்தும் நான் அதை நம்ப தயங்கினேன். எனக்கு அந்த எண்ணமே பிடிக்கவில்லை. அவர் உணவு கொடுத்தால் சாப்பிட்டார். மெல்ல மெல்ல சுத்தமாய் பேச்சே இல்லாமல் ஆயிற்று. அவரைப் பார்க்கவே பயம் ஏற்படும் அளவு அவரில் மாற்றங்கள் ஏற்பட்டன. முதலில் நான் கவனித்த விஷயம் அவர் மேலும் இளமையாகத் தோற்றம் தருகிறார் என்பதுதான். என்னை வியப்பிலும் மனக் குழப்பத்திலும் ஆழ்த்திய விஷயம் இது. ஆனால் தினம் அவரைக் கண்டபடி இருப்பதனால் எதையும் தெளிவாக உணர்வது சிரமமாக இருந்தது. ஒரு நாள், சற்று தூரத்திலிருந்தபடி அவரைக் கவனித்தபோதுதான் பளீரென்று புரிந்தது. ஆம். அவருடைய நரை மயிர் பூரணமாய் கருப்பாக மாறிவிட்டிருந்தது! பிறகு மெல்ல அவருடைய முகமும் உடலும் கூட கருமையாக ஆவதைக் கண்டேன்.
அப்பாவின் நீண்ட விடுமுறையை விருப்ப ஓய்வாகக் கணித்து, அவரை வேலையிலிருந்து விடுவித்து விட்டது அரசாங்கம். அது பற்றி யோசிக்கும் நிலையிலேயே அவர் இருக்கவில்லை. வீட்டில் மெல்ல வறுமை பரவ ஆரம்பித்தது. சற்றும் அக்கரையற்றுப்போய், மௌனத்தில் ஆழ்ந்துவிட்டிருந்த, அம்மா நான் சாமான் வாங்கி வந்து போட்டால் சமைத்தாள். இல்லாவிட்டால் பேசாமல் இருந்தாள். அவளுடைய தலைமயிர் நன்கு நரை படர்ந்துவிட்டது. முகம் சுருக்கங்கள் பரவி, தளர்ந்தது. கண்கள் கூட நரைத்துப் போயின.
எங்கள் வீட்டுக்கு யாருமே வராமல் ஆனார்கள். ஊருக்குள் நான் நடந்தால் உறுத்துப் பார்த்தார்கள். எங்கள் வீட்டுக்கு முன், சாலையில் எப்போதும் சிறு கூட்டம் நின்று, டார்த்தீனியத்தையும் அப்பாவையும் வேடிக்கை பார்த்தது. நான் யாரிடமாவது பேசினேன் என்றால் அவர்களுடைய இயல்பு நிலை உடனே மாறுதலடைந்தது. விரைப்பாக பதில் கூறிவிட்டு என் கண்களைச் சந்திக்காமல் அகன்றனர். நான் பார்க்காதபோது தங்களுக்குள் பார்த்துக்கொண்டனர். முதுகுக்குப் பின்னால் நான் முணுமுணுப்புகளைக் கேட்டேன்.
எங்கள் தோட்டத்தின் சகல மரங்களும், செடி கொடிகளும் கருகிப்போயின. அரை ஏக்கர் தோட்டத்தில் அந்தச் செடியின் கன்னங்கரிய இலைகள் காற்றில் அசைவது தவிர வேறு உயிர்ச்சலனமே கிடையாது. அனைத்தயும் விட, இவற்றையெல்லாம் அதிர்ச்சியின்றி ஏற்கும்படி நான் ஆனதுதான் பேராச்சரியம். எனக்கே சில சமயம் என் மாறுதல் பீதியூட்டியது. நானும் அம்மாதிரி ஆகிக் கொண்டிருப்பதாய் சிலசமய்ம் தோன்றும். உடனே மூளையில் ஒரு மின் அடி விழும். இக்கணமே எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவிடவேண்டும் என்று தோன்றும். ஆனால் எங்கே போக? எந்த வழியும் தெரியவில்லை. ஒரு பெரிய பீப்பாய்க்குள் அடைபட்டவனாய் கன்னங்கரிய தார்க்கடலுக்குள் மூழ்கியபடி இருப்பதாய் பட்டது.
வீட்டுக்குள் உலவவே முடியாதபடி ஆனது. ஒருமுறை நான் அப்பாவின் அறைக்குள் நுழைய நேர்ந்தது. அது மதியம். அப்பா அதுவரை உறங்கி எழவில்லை. குறட்டையொலி கேட்டுக்கொண்டிருந்தது. நான் அவருடைய அறைக்கதவைத் தள்ளித் திறந்தேன். உள்ளே டார்த்தீனியத்தின் இலைகள் காற்றில் சரசரத்தன. நிழலும் இலைகளும் கருமையாக மூடிய அறைக்குள் அப்பா தூங்கிக்கொண்டிருந்தார். அவருடைய கால்கள் தாம் தெரிந்தன. அந்த நகங்களை சட்டென்று கவனித்தேன். அவை கருமையாய் பளபளத்தன. டார்த்தீனியத்தின் இலைகளைப்போல! திடுக்கிட்டவனாய், நான் பின்னடைய கதவில் மோதினேன். அது கிரீச்சிட்டது. என் மிக அருகே சடாரென்று ஒரு நிழல் தலை தூக்கியது.
ஒரு கருநாகம்! அதன் மணிக்கண்களையும் செக்கச்சிவந்த பிளவை நாக்கையும் மிக அருகே கண்டேன். பழகிய பார்வையில் அறையெங்கும் ஆங்காங்கே உயிர் கொண்டன நிழல்கள்!
அடுத்த வாரமே எனக்கு தப்பும் வழியொன்று கிடைத்துவிட்டது. இந்திய விமானப் படைக்கு கன்னியாகுமரியில் ஆள் எடுத்தார்கள். போனேன். என் துடிப்பு ஒவ்வொரு சோதனையிலும் வெளிப்படவே, தேர்வு செய்யப்பட்டுவிட்டேன். வீட்டுக்குப் போய் விபரம் சொல்லி, பெட்டியை எடுத்துக்கொண்டு வந்துவிடு என்றார்கள். அம்மாவிடம் கூறினேன். அம்மாவிற்கு முதலில் ஏதும் புரியவில்லை போலிருந்தது.
எனக்கு ஒரு ஆங்காரம் ஏற்பட்டது. என் அகங்காரம் அடிபட்டது. “நான் போறேன். இனிமேல் வரமாட்டேன்” என்றேன்.
அம்மா சட்டென்று அதிர்ந்து, என்னை வெடவெடக்கும் தலையுடன் அப்படியே உற்றுப் பார்த்தாள். பிறகு “போயிரு” என்றாள்.
என் மன வரட்சி நொடியில் நீங்கி ” அம்மா” என்று தழுதழுத்தேன். அவள் கைகளைப் பற்றியபடி, ” நான் போய் வீடு பாக்கிறேம்மா. உங்க ரெண்டு பேரையும் உடனே கூட்டிப்போயிடறேன்” என்று தழுதழுத்தேன். ஆனால் அது பொய் என்று அப்போதே என் உள் மனசுக்கு தெரிந்திருந்தது.
அம்மாவின் உதடுகள் சிரிப்பு போல சற்று வளைந்தன. “ஜாக்கிரதையா இரு ராஜு” என்று மட்டும் சொன்னாள்.
ஆனால் அப்பாவிடம் விடைபெற இயலவேயில்லை. நான் சொன்னபோது அவர் காதிலேயே அது விழவில்லை. ஈரத்துணியினால் டார்த்தீனியத்தின் இலைகளில் படிந்திருந்த தூசியை மெதுவாக துடைத்து மெருகிட்டுக்கொண்டிருந்தார். “அப்பா” என்று ஆத்திரத்துடன் கூவினேன். திரும்பி ஏறிட்டுப் பார்த்தார். அவருடைய கண்களின் வெள்ளைப் பரப்பில் கருநீல நரம்புகளின் வலை பின்னியிருப்பதைக் கண்டேன். பிறகு குரல் எழவேயில்லை.
புறப்பட்டபோது, அம்மா என் பின்னாலேயே வந்தாள். கேட்டருகே தயங்கி நின்றாள். என்னால் ஒரு அடிகூட முன்னால் எடுத்து வைக்க முடியாது இனி என்று தோன்றியது. திரும்பிப் போய் நான் போகவில்லை என்று கூறிவிடலாமா என்று தவித்தேன். அவள் அழுவாள் என்று எதிர்பார்த்தேன். அழவில்லை. முகம் மட்டும் நெளிந்தபடியே இருந்தது. திரும்பி வந்து அவள் தோளைத்தொட்டேன். கை நடுங்கியது. ஸ்பரிசம் பட்ட கணம், அவளுடனான என் விலகல் மறைந்தது. மீண்டும் அவள் மடியின் குழந்தை போல ஆனேன். பேசமுடியாதபடி திணறல். மார்பு விம்மித் தெறித்தது. அம்மா என் கை மீது தன் கரத்தை வைத்தாள். அழுகிய பழம் போல அவள் கரம் சதை தளர்ந்து, கொள கொளவென்று ஆகிவிட்டிருந்தது.
நான் சற்று பீதியுடன் அவள் முகத்தைப் பார்த்தேன். என்ன இது, இப்படி இருக்கிறாள். படு கிழவி போல! யார் இவள்? இவள் என் அம்மா இல்லை. வேறு ஏதோ ஒரு வடிவம் அவள் மீது கவிந்து விட்டிருக்கிறது. எனக்கு அன்னியமான ஒன்று. என் நெகிழ்ச்சி வடிந்தது. “வரேம்மா” என்றேன் உணர்ச்சியற்று. போய் விட வேண்டும். இவளை இனி பார்க்கக்கூடாது. இவள் என் அம்மா இல்லை. வேறு ஏதோ.
“போய்விட்டு வா ராஜு” என்றாள். “ஜாக்ரதையா இரு”.
நான் வளைவு திரும்பிய பிறகு திரும்பிப் பார்த்தேன். வீட்டின் முகப்பில் கூரை முனை தெரிந்தது. மீண்டும் என் மனம் நெகிழ்ந்தது. கண்கள் ஈரமாயின.
ஜாக்ரதை சற்று அதிகமாகவே தேவைப்பட்டது. பயிற்சி என்னை வதைத்தது. எனக்கு சிறிதும் பழக்கம் இல்லாத உடற்பயிற்சிகள், மனப் பயிற்சிகள், ஈவிரக்கமற்ற கட்டுப்பாடு. அன்பில்லாத அதிகாரம். மற்றவர்கள் முதல் இரண்டு வாரங்களுக்குப் பிறகு சமாதானமாகி, சரசமாக இருந்தார்கள். நான் மட்டும் வேறு ஒரு உலகிலிருந்து வந்தவன் என்று உணர்ந்தேன். காம்ப்பின் இளமையின் துடிப்புகளிலிருந்து விலகி, வெகு தூரத்தில் வாழ்ந்தேன். கூண்டிலடைபட்ட பறவைபோல சதா ஒரு சோகம். இறகிறகாய் உதிர்ந்துகொண்டிருந்தேன். மணிக்கணக்காய் படுத்து, கண்களை மூடியபடி, ஏதேதோ பழைய நினைவுகளில் ஆழ்ந்தேன்.
முதலில் தோழர்கள் என்னை இழுக்க முயன்றாலும், பிறகு விட்டுவிட்டார்கள். என் மனம் எல்லா பயங்கரங்களையும் மறந்துவிட முயன்றது போலும். திரும்பத்திரும்ப பிரகாசமான ஞாபகங்களே வந்தன. இளமையும் குதூகலமும் கண்டிப்பும் நிறைந்த அம்மா. உற்சாகமான அப்பா. நினைவுகளை எடுத்து, கண்முன் படமாக ஒட்ட எவ்வித சிரமமும் இல்லை. பழக்கமான என் நாடாக் கட்டிலில் படுத்துக்கொண்டால் போதும். சில சமயம் இருவரையும் டெல்லிக்கு அழைத்துக் கொண்டு வருவது பற்றி பகற்கனவு காண்பேன். விதவிதமாய் அதை மனசுக்குள் நாடகமாய் நிகழ்த்துவேன். அது சாத்தியமேயல்ல என்று நன்கறிந்திருந்தேன். பெருமூச்சுடன் தான் விடுபடுவேன்.
வீட்டுக்கு ஓரிரு கடிதங்கள் எழுதினேன். பதிலே வரவில்லை. வரும் என எதிர்பார்த்ததே அசட்டுத்தனம்தான். அப்பு மாமாவிற்கு எழுதிய கடிதத்திற்கு அவர் பதில் போட்டிருந்தார். அவருடைய அபிப்ராயத்தில் அந்தச் செடி மூலம் யாரோ எங்களுக்கு சூனியம் வைத்து விட்டிருக்கிறார்கள். எங்கள் குடும்பத்தின் உற்சாகமான சூழல் பரவலாக பொறாமைகளை எழுப்பியிருந்ததாம். அப்பா மிகவும் மாறிவிட்டாராம். கடிதத்தில் எழுத முடியாதபடி. வீட்டுப் பகுதியில் கருநாகங்கள் சகஜமாய் நடமாடுகின்றனவாம். இனிமேலும் தாமதிப்பது ஆபத்தாக முடியும். மலைக்காணியை வரவழைத்து உடனே எதிர் சூனியம் வைத்துவிட வேண்டும்.
தனது வாதத்திற்கு ஆதாரமாய் மாமா எழுதியிருந்த ஒரு தகவல் எனக்கு பீதியூட்டியது. எப்றாய் டாக்டர் அப்பாவிற்கு செடி ஏதும் தரவில்லை என்று கூறுகிறாராம். அப்படி ஒரு செடியோ, விதையோ அவர் அறிந்ததே இல்லையாம். அப்படியானால் அப்பா பொய் சொன்னாரா? பொய் இல்லை என்று அவருடைய அந்த முகபாவங்களை நினைவு கூர்ந்து உணர்ந்தேன். அப்படியானால் அந்தச் செடியை அப்பாவிற்கு யார் தந்தது? எப்றாய் டாக்டர் வடிவில் ஏதாவது…. சே.. அபத்தம்! அபத்தமில்லை. என் கண் முன்னே அதைவிட அபத்தங்கள் நிகழ்ந்துவிட்டன. ஊர் போகவேண்டும். சீக்கிரமே….
பயிற்சி முடிய எட்டு நாள் இருக்கும்போது தந்தி வந்தது. அம்மா மரணமடைந்து விட்டிருந்தாள். அந்தச் செய்தி முதலில் ஒருவித உதறலையே ஏற்படுத்தியது. பிறகு மனம் அடங்கி ஒரு விதமான மந்தமான புறக்கணிப்பு மனோபாவம் ஏற்பட்டது. அதை மெல்ல மடித்து, சட்டைப் பைக்குள் போட்டுவிட்டு, வந்து படுத்துக் கொண்டேன். பளீரென சிரிக்கும் அம்மாவின் முகம் வந்தது. “ராஜூ…” என்று சிரித்தாள். சட்டென்று கோபித்தாள். கனகுவும் அவளுமாய் மழையில் நனைந்த, தவிட்டு நிறமான, மண் வழியாக நடக்கிறார்கள். வெயில் அடிக்கிறது. ஈரமான பூமியிலிருந்து ஆவி எழுகிறது. சொக்க வைக்கும் மணம் எழுகிறது. அது அம்மாவின் மணமா? இல்லை. அம்மாவின் சேலை மணம். இன்னும் சற்று உப்பு வீச்சம் உடையது. கனகுவின் மணம் மேலும் தூக்கலானது. தென்னை ஓலைகள் ஒளி ஒளியாகச் சொட்டுகின்றன. கனகுவின் முதுகின் மீது ஈரமான காகம் ஒன்று வந்து அமர்ந்து, தன் இறகுகளை சிலுப்புகிறது. அம்மா திரும்பி அதை விரட்டுகிறாள். அது பறந்து மீண்டும் அமர்கிறது. நான் அதை நோக்கி கை வீசினேன். அது என்னை திரும்பிப் பார்த்தது. காகத்தின் கண்களல்ல அவை. ஒளிரும் இரு கண்ணாடி மணிகள். அதன் அலகு பிளந்து இரட்டை நாக்கு வெளிவந்தது. கடவுளே அது காகமல்ல, கருநாகம்! கனகுவின் முதுகின் மீது வளைந்து அமர்ந்து, படமெடுத்து, திரும்பி…
விளக்கு எரிந்தது. கண்களை விழித்தேன். ஒரு கணம் மிரண்டு போய் “கோன் ஹை?” என்றேன்.
ஸ்குவாட்ரன் லீடர். பரபரப்புடன் எழுந்தேன். என் அருகே வந்து குனிந்தார். என் நெற்றியை தொட்டார். “க்யாவோ பேட்டா?”.
என் கண்கள் ததும்பின. “ஜீ” என்றேன்.
“என்ன ஆச்சு உனக்கு? உடம்பு சரியில்லையா?” என்றார் இந்தியில்.
“என் அம்மா இறந்து போய்விட்டாள் ஸ்குவாட்ரன் ஜி…:. ”
“என்னது?”.
நான் தந்தியை நீட்டினேன். அவர் முகம் இருண்டது. எல்லோரும் எட்டி எட்டிப் பார்த்தனர். சோயித்ராமும், மல்யாவும் என் பெட்டியைத் தயார் செய்தனர். மதுரை வரை போகிற காப்டன் பிரகாஷுடன் என்னைச் சேர்த்து அனுப்பினார்கள். “பிரகாஷ்ஜி, பி கேர்ஃபுல்! ஹி இஸ் சிக்”.
பிரகாஷின் மனைவி ஆரஞ்சு சாப்பிடு என்றாள். அம்மா ஆரஞ்சு ஜூஸில் ஒரு விதமான பானம் செய்வாள். ஆரஞ்சு வாங்கினோம் என்றால் அப்பா தோலை நசுக்கி கண்ணில் பாய்ச்சி, என்னையும் கருப்பனையும் கண்கலங்க வைத்துவிடுவார். எல்லோரும் கை வீசினார்கள். ரயிலின் தடக் தடக். ஓயாத தாளம். இல்லை, அது என் தலைக்குள் ஒரு நரம்பு அடிக்கிற ஒலிதான். இதோ நான் என் காம்ப்பில் நாடாக் கட்டிலில் படுத்துக்கொண்டிருக்கிறேன். லட்சுமண் சிங் கூந்தலை சீவிக்கொண்டிருக்கிறான். “லேலா மெ லேலா…”
எனக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி இருக்கிறேன்? என் மூளையை என்னால் ஏன் கட்டுப்படுத்த இயலவில்லை? இப்போது உண்மையில் எங்கே இருக்கிறேன்? மதுரை? ” ராஜூ போயிடுவீங்க இல்லியா? கூட வரணுமா?” கையசைப்பு. நாகர்கோவில் மணிமேடையில் ஒரு பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். பஸ் போகிறது இல்லை குப்புற ஒரு கிணற்றுக்குள் விழுகிறது.
நான் ஊருக்கு வந்து மூன்றாவது நாள். அம்மாவை தருமக்கொள்ளி போட்டு எரித்துவிட்டிருந்தனர். பஸ்ஸை விட்டு இறங்கியபோது மதிய வெயில் கொட்டிக்கொண்டிருந்தது. நடக்க முடியவில்லை. கண்கள் இருண்டன. கால்கள் திடீரென்று பிடிப்பு விட்டு கொளகொள வென்று ஆடின. கூட்டம் சேர்ந்துவிட்டது என்னைப் பார்க்க. யாரோ ஆதரவாய் பிடித்துக்கொண்டார்கள். தண்ணீர்! யாராவது கொஞ்சம் தண்ணீர் தாருங்களேன்! யாருமே அதை பொருட்படுத்தவில்லையே! அய்யோ, நான் கேட்கவே இல்லையா?
அப்பு மாமா அம்மாவின் பிணம் கிடைத்த விதத்தை சொன்னார். நாலு நாளாய் கருப்பனின் ஊளை கேட்டதாம். மரணம் தான் என எல்லோரும் சொன்னார்கள். ஆனால் வீட்டுக்குள் நுழைய யாரும் தயாராக இல்லை. பிறகு வேறு வழியில்லாமல், பிலாக்காட்டு விளையில் இருந்து நாடார் பையன்களைக் கொண்டுவந்து, சாராயம் வாங்கிவந்து ஊற்றி, உள்ளே போனால் சமையலறையில் மட்கிப் போய் கிடக்கிறாள். அருகே நாய். “கோரம்!” என்று உடலைக் குலுக்கினார். அவருடைய பேரன் விவேக் என்னருகே வந்து, மொட்டைத்தலையை ஆட்டி ஆட்டி உற்சாகமாய் “நாந்தானே பாட்டிக்கு கொள்ளி போட்டது” என்றான்.
வீட்டுக்கு போக வேண்டாம் என்றார் மாமா. நான் அதை ஏற்கவில்லை. நேராக நடந்துகொண்டிருந்தேன். கூட்டம் என்னைத் தொடர்ந்து வருவதை உணர்ந்தேன். ஒரு வேளை இதெல்லாம் என்னுடைய கனவில் நிகழ்வதாகவே இருக்கலாம். தலை வலிக்கிறது.
வீட்டை அணுகுமுன்பே டார்த்தீனியம் என் கண்களை அறைந்தது. பெரிய ஆலமரம் போல அது வளர்ந்து விழுதுகளை ஊன்றி பரவியிருந்தது. கிளைகள் பந்தலித்து வீட்டின் மீது பரவி படர்ந்திருந்தன. அப்பகுதியிலேயே ஆழ்ந்த இருளும் குளிரும் நிலவியது. காற்றில் கனத்த இலைகள் உரசி உரசி ஒலித்தன. அந்தப் பகுதியிலேயே பசுமை நிறம் இல்லை. பெரியதோர் வனவிலங்கு கருமயிர்களை சிலிர்த்தபடி, நிற்பதுபோல் ஒருந்தது. அகப்பட்ட இரையை அது முனகியபடியும், பெருமூச்சு விட்டபடியும், தின்று கொண்டிருப்பது போல இருந்தது. நான் பிரமை பிடித்தவன் போல வீட்டை அணுகினேன்.
கேட்டின் அருகே நான் தயங்கி நின்றேன். வீடு முழுக்க உள்ளும் புறமும், கரிய இலைகள் நெருங்கியிருந்தன. ஆழ்ந்த அமைதி நிலவியது. துருப்பிடித்த கேட்டை திறந்தபோது, நாராசமாய் ஒலி எழுந்தது. உள்ளே நுழைய முடியவில்லை. சட்டென்று உட்புலன்களுன் உணர்ச்சி தாங்காது புல்லரித்தேன். யாரோ அல்லது எதுவோ என்னைப் பார்ப்பதுபோல இருந்தது. அபாயத்தை எதிர்நோக்கி நிற்கும் விலங்கு போல அப்படியே நின்றேன். வெகுநேரம்! அல்லது சில கணங்களாய்க் கூட இருக்கலாம்.
திடீரென்று மிக அருகே “பஹ்ஹ்” என்று ஒரு வினோத ஒலி கேட்டது. என் உடம்பு ஜில்லிட்டது. அப்படியே விரைத்துப்போய் நின்றேன். கண்களைத் திரும்பிப்பார்ப்பது கூட கஷ்டமாக இருந்தது. முதலில் எனக்கு எதுவும் தெரியவில்லை. பிறகு, இருண்ட இலைகளின் இடையே அந்தக் கண்களைக் கண்டேன்! மிகப் பெரிய கருநாகம் ஒன்றின் கண்கள்! கண்ணாடி உருண்டைகளைப் போல, நிறமற்ற ஜ்வலிப்புடன். என் கண்கள் அதனுடன் இணைந்தன. என் முதுகுவடம் சொடுக்கிக்கொண்டது. அந்தக் கண்களில் அமானுடமான ஜ்வலிப்பு தவிர ஏதுமில்லை.
சட்டென்று அந்தக் கண்களுக்குப் பின்புலமான அந்த உடலைக் கண்டேன். கன்னங்கரிய ஒரு மனித வடிவம்! அது மிக லாகவமாய் பாய்ந்து இலைகளின் கருமைக்குள் அமிழ்ந்தது. அதைத் தொடர்ந்து போன ஒரு நாயையும் கண்டேன். ரோமமே இல்லாத கரிய உடலுடன், அது ஒரு வினோதமான அழுகல் பொருள் போல இருந்தது. அந்த முகம் சற்று தெளிவின்மையுடன் எனக்குள் இருமுறை மின்னியது. சட்டென்று என் மார்பில் நரம்புகள் முறுகி, இதயத்தை இறுக்கிப் பிசைந்தன.
“அப்பா!” என்று கூவினேன். காலின் கீழே பூமியை ஒரு கம்பளம் போல யாரோ இழுத்தார்கள். தள்ளாடினேன். குவியலாக கீழே சரிந்த்தேன். தரையிலிருந்து கற்களும் புற்களும் என் முகம் நோக்கி எம்பி வருவதைக் கடைசியாகக் கண்டேன்.
[மேலும்]