டார்த்தீனியம்[குறுநாவல்]-3

அம்மா வெலவெலத்துப் போய்விட்டாள்.  அப்படியே ஆவேசமாய் பாய்ந்து திண்ணைக்கு வந்தாள்.  அப்பா காலாட்டியபடி பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.  முற்றத்தில் யோசனையிலாழ்ந்த கருப்பன்.  அம்மா ” இத பாருங்க, இப்பவே வெட்டியாகணும் இந்த பீடையை” என்றாள்.

அப்பா பேப்பரைத் தழைத்தார்.  “ஏண்டா ராஜு கக்கிட்டியா?” என்றார்.  “பயலுக்கு கற்பனை பத்தாது.  வர்ணனையெல்லாம் சினிமாத்தனமா இருக்கு”

அம்மா முகமும் கண்களும் சிவந்து பழுக்க கத்தினாள்.  ” அதை இனிமே இங்க வைச்சிருக்கப்படாது…. அது என்னமோ வெஷச்செடிதான்.  மகாதேவ எம்பெருமானே… நேத்து எம்புள்ளைய காப்பாத்தினேப்பா…. கருநாகம் வரதுன்னா… வேண்டாங்க… சொல்றத கேளுங்க”

“ராஜு நீ என்ன பண்றே,  சாயந்திரம் முழுசா ஒரு எலுமிச்சம் பழத்த தலையில தேச்சு குளிக்கறே.  அப்புறம் ஒரு அரைமணி நேரம் ஜபம்.  தூங்கறதுக்கு முன்னாடி…”

அம்மா படாரென்று தன் மார்பை அறைந்தாள்.  வீரிட்டு அழ ஆரம்பித்தாள்.  ஆவேசமும் ஆத்திரமுமாய் ஏதேதோ கூவினாள்.

அப்பா உடம்பு துடிக்க எழுந்தார்.  ” நிறுத்துடி பீடை.  எதுக்கு இப்படி அழறே?” நிறுத்துடின்னா….”

“மாட்டேன் நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன்.  போயிடறோம்.  நானும் எம்புள்ளையும் போயிடறோம்”

அப்பா ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தார்.  அவர் கரம் எழுந்து தாழ்ந்தது.  கண்ணிமைக்கும் நேரம்.  நான் ஸ்தம்பித்து நின்றுவிட்டேன்.  உறைந்து போய் அம்மாவும் அப்படியே நின்றாள், நம்ப முடியாதவள் போல.  அப்பாவா, அடிக்கிறாரா?

சிவந்து துடித்த முகத்துடன் அப்பா உறுமினார்.  “நாடகமா போடற நாயே? முடியாதுன்னு சொல்றேன்.  ஆட்டம் போட்டா விட்டிருவேன்னு நெனைச்சியா? மறுபடி யாராவது இதைப்பத்தி பேசினீங்கன்னா, படவா செருப்பு பிஞ்சிடும்.  ஜாக்கிரதை”

அம்மா அப்படியே சுவரில் சாய்ந்தபடி வெறித்துப் பார்த்தாள்.  அப்பா திண்ணையில் அமர்ந்து பேப்பரை விரித்துக்கொண்டார். அவரது கைகள் நடுங்கவே பேப்பர் கடகடத்தது.

அம்மாவின் முகம் அப்படியே வெறிச்சிட்டு நின்றது.  பிறகு திடீரென்று கோணியது.  வினோதமான குரலில் ஒரு விசும்பல் வெடித்தது.  பிறகு பாய்ந்து உள்ளே ஓடினாள்.  நான் அவளைத் தொடர்ந்து ஓடினேன்.  சமையலறைக்குள் புகுந்து விம்மி விம்மி அழுதாள்.  நான் அவளருகே சென்று நின்றேன்.  எனக்கு இதெல்லாம் என்ன என்றே புரியவில்லை.  அம்மா என்னை கவனிக்கவில்லை.

“அம்மா” என்றேன்.

அம்மா ” நீ போடா, போய் படி” என்றாள்.

என் மனசில் ஒரு அடி விழுந்தது.  அம்மா அப்பாவாக இருந்தாலும் அவர்கள் உலகில் எனக்கு இடமில்லையோ?

அதன் பிறகு எங்கள் வீட்டுச் சூழலே மாறிவிட்டது.  அம்மாவின் முகம் சதா சீற்றமும் ஆங்காரமும் கொண்டதாக இருந்தது.  அப்பா மேலும் மேலும் இறுகி மௌனமானவராக  ஆனார்.  எதிர்ப்பினாலோ என்னமோ, அவர் சதா சமயம் அந்தச் செடியின் பக்கத்திலேயே இருந்தார்.  எனக்குத்தான் தாங்க முடியவில்லை.  வீடெல்லாம் இருட்டு கவிந்துவிட்டது போலிருந்தது.  மூழ்கிக்கொண்டிருப்பவன் போல காற்றுக்காக தவித்தேன்.  இன்று சரியாகிவிடும், நாளை சரியாகிவிடும் என்று தினம் எதிர்பார்த்தேன்.  மனச்சுமையுடன் தூங்கப்போனேன்.  நம்பிக்கையுடன் விழித்தெழுந்தேன்.  இரவில் விழித்துக்கொண்டால் தலையணையில் முகம் புதைத்து அழுதேன்.  இருட்டில் கட்டிலை விட்டு இறங்கவே பயமாக இருந்தது.  தரையெல்லாம் இருண்ட வழவழப்பான நிழல்கள் நெளிந்தன.

டார்த்தீனியம் வளர்ந்த வேகம் பிரமிக்கச் செய்வதாக இருந்தது.  அதில் இலைகள் விரிந்தன.  முதலில் அவை கருமையான ஒளியுடன், ஃபிலிம் ரோல் போல சுருண்டு மேலெழுந்தன.  பிறகு விரிந்து, வெற்றிலை வடிவ இலைகளாக ஆயின. கிராஃபைட்டால் செய்யப்பட்டவை போல, கரிய வழவழப்பான, இலைகள்.  வெயிலில் அவை மினுமினுப்புடன் அசைந்தன.  அப்பா அந்தச் செடியின் அற்புதத்தில் ஆழ்ந்து போய்விட்டிருந்தார்.  தினம் காலையிலும் மாலையிலும் நீரூற்றி, களை பிடுங்கி, இலைகளை நீவிவிட்டு, அதை சீராட்டினார்.  அவர் முகம் சட்டென்று அன்னியமாக ஆகிவிட்டிருந்தது.  அவரை அணுகவிடாமல் அது தடுத்தது.

இரண்டு வாரத்துக்குமேல் தாக்கு பிடிக்க அம்மாவால் முடியவில்லை.  ஒரு காலையில் டீக்காக நான் சமயலறைக்குப் போனபோது, அப்பா சிரித்தபட அவளுடன் பேசியபடி, டைனிங் மேஜையில் அமர்ந்திருந்தார்.

“அப்பா” என்று வியப்புடன் கூவினேன்.

அப்பா வெட்கத்துடன் சிரித்தார்.  பிறகு, “வாடா பயலே” என்றார்.  ” சாயந்திரம் திற்பரப்பி மஹாதேவரைப் போய் விசாரிச்சுட்டு வரலாம்னு உங்கம்மா சொல்றாள்” என்றார்.

“ஏன் உங்க சண்டை முடிஞ்சதனாலியா?”

“இல்லை.  இவளுக்கு நல்ல புத்தி வந்திட்டதை கொண்டாடறதுக்கு.  டார்த்தீனியம் நின்னுட்டு போகட்டும்கறா”

“உண்மையா அம்மா?” என்றேன், சற்று கோபத்துடன்.

அம்மா வெட்கத்துடன் சிரித்தாள்.  “ஆமாண்டா.  இது பிடிச்ச பிடிய விடறதா இல்லை.  அவ்வளவு இஷ்டம்னா வளர்த்துட்டு போகட்டுமே”

“உனக்குப் பைத்தியம்” என்றேன்.

ஏனோ அம்மாவின் முகம் சிவந்தது.  சிரித்தாள்.

“இன்னைக்கு ஸ்பெஷல் வாழையிலை அப்பம்!” என்றார் அப்பா.  “நாங்க காலைல எந்திரிச்சாச்சு”

நான் வாழைஇலையும், நெய்யும், மாவும், வேகும் அந்த இனிய கலவை மணத்தை அப்போதுதான் உணர்ந்தேன்.  எனக்கு சந்தோஷமாகவே இருந்தது.  மழை வானம் வெளுத்ததுபோல்.

சாயந்திரம் திற்பரப்பிற்கு போனோம்.  அம்மாவிற்கு வேண்டுதல் இருந்தது.  சர்க்கரைப் பொங்கல்.  கோயில் பெரிது.  கூட்டமே இல்லை.  அருகே நதி. அது நாலாள் உயரத்திலிருந்து அருவியாகக் கொட்டியது. தண்ணீர் குறைவுதான் என்றாலும் ஆக்ரோஷம் இருந்தது.  வானவில்லுக்கு கீழே நுரையாகக் கொட்டியது.  கரிய பாறைகள் வழுவழுப்பாய், ஈரமாய் இருந்தன.  யானை மீது வெண்பட்டுச் சேலையை போட்டது போலிருந்தது நீர் வீழ்ச்சி.  அருவியில் நானும் அப்பாவும் குளித்தோம். அம்மா கரையில் அமர்ந்து அப்பாவின் தொந்தியைக் கிண்டல் செய்தாள். அவளையும் குளிக்க வைக்க அப்பா பெரு முயற்சி செய்தார்.  பிரயோசனமிருக்கவில்லை.  துரத்திக்கூட பார்த்தார்.  பிடிப்பதற்குள் உத்தரிணியும் கையுமாய் ஒரு அய்யர் வந்துவிட்டார்.

பிரசாதத்தை சுழித்தோடும் நதியின் நடுவே, துருத்தி நின்ற பாறைகளில் கொண்டு சென்று சாப்பிட்டோம்.  தண்ணீரின் ஒலிதான் நான்கு திசைகளிலும்.  காற்றே ஈரமாக இருந்தது.  பொங்கல் நெய்மணமும், தேங்காயும் இழைந்து நன்றாக இருந்தது.  பாதியை மீன்களுக்கு வீசினோம்.  அதற்குள் குரங்குகள் பாறைகளைத் தாவித்தாவி கடந்து வந்தன.  ஒன்று குழந்தை வைத்திருந்தது.  ஒன்று பூதாகாரமான தலைவன்.  இரண்டு பையன் குரங்குகள் தாவுவதில் காட்டிய உற்சாகத்தை பொங்கலில் காட்டவில்லை.  முதலில் தலைவன் வேண்டுமளவு வாங்கிக் கொண்டது.  பிறகு தாய் மிகவும் பணிவோடு வாங்கியது.  ஒன்றின் மூஞ்சி சிவப்பாக இருந்தது.

“ருதுவாயிருக்கு” என்றார் அப்பா.

“சீச்சீ. உளறாதீங்க”

“போடி உனக்கென்ன தெரியும்?  பார், அதோட நாணத்த, ஏண்டிம்மா, குளிச்சிண்டிருக்கே இல்லியோ?”

அம்மாக் குரங்கு அக்கறையாக பிள்ளைக்கு ஊட்டி விட்டது.  பிள்ளைக்கு அது கௌரவக்குறைச்சலாய்ப் படவே, கை நீட்டி அள்ள முயன்றது.  வாயை அசைத்து வாங்க மறுத்தது.  தாய் பலவந்தமாய் ஊட்டி விட்டு, உர்ர் என்று அதட்டியது. குட்டி நாலாபக்கமும் தாவ முயன்றது.  பராக்கு பார்த்த மாதிரி இருக்கும் அன்னை, பிள்ளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே போனால் வெகு கணக்காக வாலைப் பிடித்து ஒரு இழுப்பு இழுத்தது.

“உங்கம்மா மாதிரியே இல்ல?” என்றார் அப்பா.

“மீனாட்சி மாதிரிப்பா.  கறுப்பு வேற”

“ஒதைப்பேன் ராஸ்கல்! விட்டா தோள் மேலே ஏறிடுவியே” அப்பா அடிக்க வந்தார்.  அம்மா குலுங்கி குலுங்கி சிரித்தாள்.

பொன் வெயிலில் திரும்பி வந்தோம்.  அம்மா வேர்த்திருந்தாள்.  எங்கள் வீடு யாருமற்று, தூரத்திலிருந்து பார்த்தபோது யாருடையதோ போல இருந்தது.

முற்றத்து மாமரத்தை சுட்டிக்காட்டி அம்மா கூவினாள்.

“அய்யோ அந்த மாமரத்தைப் பாருங்க”

“என்னடி?”

“அதன் தளிரெல்லாம் கருகிப் போச்சு”

எனக்கு ஜில்லென்றது.  உண்மைதான்!  இளமை மதர்ப்போடு நின்ற மாமரம் தளிர்கள் கருகி, இலைகள் பழுத்து, சோர்ந்து நின்றிருந்தது!  அனல் பட்டதுபோல!

“அந்தச் செடிதான்!  அது பயங்கர விஷம்!” அம்மா மூச்சிரைக்க கூவினாள்.

“ஆரம்பிச்சுட்டியா?” என்றார் அப்பா கோபமாய்.

அம்மா மௌனமாய் கண்ணீர் விட்டாள்.

“வேர்ல புழு அரிச்சிருக்கும்.  உடனே செடிமேல பழி.  எனக்கு அதைப் பிடிச்சிருக்கு. அதான் ஒரே காரணம்.”

“இல்லீங்க, சொல்லலிங்க….”

அன்றிரவு மௌனமாய் சாப்பிட்டோம்.  எனக்கு இரவில் தூக்கமே வரவில்லை.  அர்த்தமற்ற என்னென்னவோ கற்பனைகள், சஞ்சலங்கள்.  புரண்டு புரண்டு படுத்தேன்.  புலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு எச்சரிக்கையுணர்வு என்னை அமைதியிழக்கச் செய்தது.

அப்பாவிற்கு என்ன ஆயிற்று?  அந்தச் செடியின் மீது அவருக்கென்ன மோகம் அப்படி?  எதையுமே ஏற்காதவராய் எப்படி மாறினார்.  அவருடைய நடத்தையில் பழைய இயல்பான உற்சாகம் இல்லாமல் ஆயிற்று.  அந்தச் செடி ஒரு மோஹினிப் பேய் போல அவரைப் பிடித்துக் கொண்டுவிட்டிருந்தது.

எனக்கு உடம்பு சிலிர்த்தது.  அந்தச் செடியை அருகே போய் பார்த்தேன்.  மோஹினியேதானா?  அப்பாவின் கதைகளில் வருகிற, உயிரை அணுஅணுவாய் உறிஞ்சிக் கொல்கிற மோஹினிதான் செடியாக வந்ததா?  குரூரமான கருமை நிறம்.  கடும் விஷம்.  நாகமோஹினியோ?  சே! என்ன பைத்தியக்காரத்தனம்.

அந்தச் செடி வளர்ந்த வேகம் பிரமிக்கத் தக்கதாய் இருந்தது.  இப்போது அது என் மார்பளவு உயரத்தில் இருந்தது.  இரண்டு தளிர்ச்சுருள்கள் காற்றில் அலைபாய்ந்து எங்கள் வீட்டை நோக்கி தாவி நின்றன.  ஒரு விபரீத சிற்பம் போலிருந்தது அது.  என்ன கருமை!  கண்ணை நிறைக்கும் கருமை.  அதைப் பார்த்தபடி நின்றால் கருமை கண்ணுக்குள் புகுந்து பார்வையை மூடுவது போலிருக்கும்.

எத்தனை தருக்க போதம் இருந்தும் அது ஒரு செடியல்ல என்றே எனக்கு உள்ளூர தோன்றிக்கொண்டிருந்தது.  அது அப்பாவின் அறைச்சன்னலைப் பிடித்து படர்ந்தேறியது.  அதைப் பார்க்க அவ்வப்போது ஆட்கள் வந்தனர்.  வெளியூர் ஆட்களும் கூட வந்தார்கள்.  அதன் விதைகளுக்கு பலர் ஏற்பாடு செய்துகொண்டனர்.  அப்பாவிற்கு ஏகப் பெருமை.  மணிக்கணக்கில் வந்தவர்களிடம் அதைப் பற்றியே பேசினார்.  அதனருகிலேயே அமர்ந்து பார்த்தவாறிருந்தார்.  ஈஸி சேரையே அதன் அருகே தூக்கிக்கொண்டு போய் போட்டுக்கொண்டார்.

மெல்ல மெல்ல பசு, நாய், நாங்கள் எல்லாமே அவருடைய பிரக்ஞையை விட்டு உதிர்ந்து, பரிபூர்ண டார்த்தீனிய தாசனாக அவர் ஆனார்.  எங்கள் முற்றத்து மாமரம் முற்றிலும் பட்டுப் போய்விட்டது.  தன் அருகே நின்ற ரோஜாச் செடிகளும், செம்பருத்தி மரமும் கருகிப் போயின.  சற்று தொலைவில் நின்ற தோட்டத்துப் பலா மரமும் காய்ந்து போக ஆரம்பித்தது.  இலைகள் உதிர்ந்து பெரியதோர் சுள்ளியை நட்டு வைத்தது போல நின்றது அது.  அப்பாவிடம் இதைப் பற்றியெல்லாம் பேசவே முடியாத நிலை.  அம்மா அந்தச் செடிப் பக்கம் திரும்பவே மறுத்தாள்  சமையலறைக்குள் ஒண்டிக்கொண்டாள்.

ஒரு நாள் யதேச்சையாக அவளைச் சற்று கூர்ந்து கவனித்தபோது, திடுக்கிட்டேன்.  அவள் பல் தேய்த்துக்கொண்டிருந்தாள்.  நான் கனகுவிற்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த்தேன்.  அம்மாவின் கன்னம் ஒட்டிப் போயிருந்தது.  கண்களின் கீழே அழுத்தமாய் கருமை.  சருமம் வரண்டு கைகள் செதில் செதிலாக இருந்தன.  கழுத்தின் எலும்பு துருத்திய பள்ளம்.

நான் அவளிடம், ” உடம்புக்கு என்னம்மா?” என்று விசாரித்தேன்.

“ஒண்ணுமில்லேடா” என்றாள்.

“பின்ன ஏன் இப்படி இருக்கே?”

“எப்படி?”  என் கண்களைச் சந்திக்க மறுத்தாள்.

“நீ கண்ணாடி பாத்துக்கறதுண்டா?  ஜுரம் வந்தது மாதிரி இருக்கே”

“உனக்கு சும்மா தோண்றது”  என்றபடி  வாயைக் கொப்பளித்தாள்.

“இல்லம்மா, நீ இப்பல்லாம் சரியா சாப்டறதில்லைன்னு நெனைக்கிறேன்”.

“போடா உளறாமல்”  என்றபடி போய்விட்டாள்.

நான் ஆத்திரத்துடன், தண்ணீர் குடிக்காமல் வெறித்த பார்வையுடன் நின்று கொண்டிருந்த கனகுவை கயிற்றின் நுனியால் அறைந்தேன்.  தோலைச் சிலிர்த்தது.  பீளை கட்டிய கண்களால் என்னப் பார்த்தது.  நான் அதையும் அப்போதுதான் கவனித்தேன்.  சதை வற்றி, வயிறுகள் குழி விழுந்து, விலாவெலும்புகளும் பின்னெலும்புகளும் புடைத்து, அடிமாடு போல இருந்தது.  அதன் கண்களின் அந்த ஈரமான மினுக்கம் இல்லை.  மையிட்ட கருமை இல்லை.  நாசி வரண்டு விட்டது.  முகத்தில் நரம்புகள் இருபுறமும் புடைத்து நின்றன.  “என்னடி ஆச்சு உனக்கு”  என்று உத்வேகத்துடன் கேட்டபடி அதை அணைத்தேன்.  மெல்ல விடுவித்துக்கொண்டது.  அவிழ்த்தபோது பேசாமல் தொழுவை நோக்கி நடந்தது.  அதன் எலும்புகள் தெளிவாகத் தெரிந்தது.  மனம் பிசையப்பட்டது போல் வலித்தது.

மறுநாள் கனகு இறந்து போயிற்று.  இயற்கை மரணம் அல்ல.  அன்று நான் அறைக்குள் இருந்தபோது, வெளியே கனகுவின் குளம்பொலி கேட்டது.  நான் அதை அவ்வளவாய் கவனிக்கவில்லை. மாலை மயங்கினால் கனகு அமைதி இழந்து, தொழுவில் நின்று தவிக்கும்.  கயிற்றை அறுத்துவிட முயலும்.  ஏழெட்டு தடவை அறுத்தும் விட்டது.  எங்கும் போகாது.  அப்பாவின் அறைச்சன்னலின் அருகே வந்து, உள்ளே பார்த்தபடி, அப்படியே நிற்கும்.  எந்த விதமான ஒலியும் எழுப்பாது.  மக்ரூணி அழுதாலும் கவனிக்காது.  அப்பா கண்ணில் பட்டாரென்றால் மிக மெலிதாக, வயிற்றை எக்கியபடி ஒரு ஒலி எழுப்பும்.  அப்பா பார்த்துவிட்டு அதை சற்றும் மனசுக்குள் ஏற்காதவராய், வெற்றுக் கண்களுடன் போய்விடுவார்.  கனகு அவரை தொடர முயலாது.  அப்படியே நிற்கும்.

ஒரு முறை திண்ணையில் அப்பாவின் துண்டு கிடந்தது.  அதனருகே கனகு நின்றிருப்பதைக் கண்டேன்.  பெருமூச்சு விட்டபடி, முகர்ந்தபடி, மெல்ல அதை உரசியபடி.   நான் அதைக் கண்டால் இழுத்துச்சென்று மீண்டும் தொழுவில் கட்டுவேன்.  முரண்டெல்லாம் அதனிடம் இல்லை.  தளர்ந்த நடையுடன், கூடவே வந்துவிடும்.  அன்றும் அப்படி நின்றுகொண்டிருக்கிறதாக்கும் என்றுதான் நினைத்தேன்.  மெதுவாகப் பிடித்துக் கட்டலாம் என்று இருந்து விட்டேன்.

வீடு முழுக்க நிலவிய ஆழ்ந்த சோர்வு என்னையும் ஆட்கொண்டுவிட்டிருந்தது. மணிக்கணக்காய் ஏதேதோ வெற்று எண்ணங்கள் ஓட, ஜன்னல் வழியாக அர்த்தமின்றி பார்த்தபடி உட்கார்ந்திருப்பது என் வழக்கமாய் ஆகிவிட்டிருந்தது.  கனகுவின் குளம்பொலி சற்று அருகே கேட்கவே, நான் எழுந்து வந்து பார்த்தேன்.  அது முற்றத்தில் நின்றிருந்தது.  அது டார்த்தீனியத்தின் அருகே குனிவதற்கும் நான் பார்ப்பதற்கும் சரியாக இருந்தது.

ஒருகணம் என் மூளை வேலை செய்யவில்லை.  அது ஒரு இலையை கடித்த பிறகுதான் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.  “அய்யோ” என்றபடி பாய்ந்தேன்.  அதற்குள் கனகு மென்றுவிட்டது.  நான் அதை இழுத்தேன்.  வாயில் கரி இலைத்துணுக்குடன் அது இரண்டடி எடுத்து வைத்தது.  ஒரு கணம் அப்படி நின்றது.  மின் கம்பியொன்றை மிதித்தது போல அதன் உடம்பு அதிர்வதைக் கண்டேன் உடம்பை முன்னும் பின்னும் அலைத்தபடி, ஒரு நிமிடம் தள்ளாடியது.  மறுகணம் தடாலென்ற ஒலியுடன் அது பக்கவாட்டாய் சரிந்து தரையில் விழுந்தது.  விழுந்த அழுத்தத்தில் மறுபுறம் அதன் வயிறு கும்மென்று பலூன் போல உப்பி எழுந்தது.  இரண்டு கால்கள் அந்தரத்தில் உயர்ந்து நாலைந்துமுறை உதைத்துக்கொண்டன.

கண்கள் உருண்டு கருவிழிகள் மேலே செருகிக்கொண்டன.  வாய் திறந்து, பற்களின் மஞ்சளான அடிப்பாகம் தெரிந்தது.  வால் தரைமீது பாம்புபோல நெளிந்தது.  அது அலற முயல்வதாகவும் குரல் வரவில்லை என்றும் தோன்றியது.  நானும் கனவுக்காட்சியில் போல குரலின்றி, அசைவின்றி நின்றிருந்தேன்.  அதன் உடம்பு கடைசி முறையாக உலுக்கிக் கொண்டது.  பிறகு அசைவின்மை.  ஒருகணம் அப்படியே பார்த்தபடி நின்றேன் அதன் வயிற்றில் மெல்லிய மயிர்களை.  பிறகு என் குரல் திறந்துகொண்டது.

ஊர் கூடிவிட்டது.  நான் பிரமை பிடித்தவன் போல திண்ணையில் உட்கார்ந்து விட்டேன்.  அம்மா மயக்கம் போட்டு விட்டாள்.  அவளுக்கு சிசுரூஷை செய்யும் பெண்களின் குரல்கள் கேட்டன.  என் மூளை மந்தமாக ஆகிவிட்டிருந்தது.  துயரமே இல்லை.  கண்ணீரோ விம்மலோ இல்லை.  மக்கு போல நடப்பதை வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன்.  அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று கூட தோன்றவில்லை.

கனகுவின் வயிறு பெரிதாகியபடியே வந்தது.  அதன் கால்கள் மேலும் அந்தரத்தில் உயர்ந்தன.  அடிவயிற்றின் வெண்மை மேலும் துலங்கியது.  முலை வீங்கி காம்புகள் நான்கும் புடைத்து நின்றன.  யாரோ மக்ரூணியை அவிழ்த்துவிட, அது ஆவலாக வந்து நேராக முலையை நோக்கி முகம் கொண்டு சென்றது.  “யார்ரா அது.  பிடி அதை.  வெஷம் தின்ன பசு…” என்று அப்பு மாமா கத்தினார்.  விலக்கப்பட்டபோது மக்ரூணி ஓலமிட்டது.

“அப்ப ஆக வேண்டியதை கவனிக்கிறது” என்றார் மாமா.

“அதெப்படி.  பிள்ளை வரவேணாமா?”

“ஆளனுப்பியாச்சா?”

“அப்பவே”

“குழியை வெட்டி போடுவோம்.  ரொம்ப தாமசம் பண்ண வேணாம்.  விஷம் தின்ன உடம்பு”

“இதைப் போய் முத்தத்தில் கொண்டு வந்து நட்டிருக்கார் பாவி மனுஷன்”

“பாவம்யா.  பசுன்னா உசுரு அவருக்கு”

“அப்பவே கவனிச்சேன்.  இப்ப ஒரு மாசமா பிள்ளை ஆளே சரியில்லை.  உடம்புக்கு ஏதாவது தீனமா?”

அப்பா வியர்த்து வழிய பரபரப்பாக வந்தார்.  முற்றத்தில் கனகுவை காண்பது வரை இருந்த தைரியம் திடீரென்று பறந்தது.  அவருடைய கால்கள் தள்ளாடின.  இருவர் அதை எதிர்பார்த்தவர்கள் போல, தாங்கிக்கொண்டனர்.  அவருடைய தலை மட்டும் வெட்டுக்கிளி போல வெட வெடவென்று நடுங்கியது.  அப்படியே திண்ணையில் படுக்க வைத்தனர்.  திரும்பி, சிவந்த கண்களால் கனகுவைப் பார்த்தார்.  அவருடைய முகம் ஒரு புறமாக கோணியது.  ஒரு கையும் ஒரு காலும் ஒரு முறை இழுத்துக்கொண்டன.  ஏதோ சொன்னார்.  குடிகாரன் உளறல் மாதிரி இருந்தது.  இரு முறை வெறுமே வாயைத் திறந்து மூடினார்.  பிறகு மானுடக் குரல்தானா என்று சந்தேகம் ஊட்டும் வினோத ஒலி அவரை விட்டு பீரிட்டெழுந்தது.

அப்பா” என்று நான் அவரைப் பிடித்துக் குலுக்கினேன்.  நினைவே இல்லை.

“எடுக்கலாம்” என்றால் பிள்ளை மாமா.  “அப்பு நீ இங்கயே நின்னுக்க.  முழிச்சா தண்ணி குடுக்கணும்.  பாவம்”.

கனகுவின் கால்கள் நான்கும் இரண்டு ஜோடிகளாய் சேர்த்து கட்டப்பட்டன.  நெடுக்கு வாட்டாக பெரிய மரக்கிளையொன்று செலுத்தப்பட்டு மூலைக்கு இருவராய் அதைத் தூக்கி தோளில் வைத்துக் கொண்டனர்.  அதன் வயிறு ஒரு புறமாய் சரிந்து நீர் நிறைந்த பெரிய தோற்பை போலக் குலுங்கியது.  வால் தரையை வருடியது.  தலை கீழ் நோக்கி வளைந்து, மூக்கு தரையை உரசியபடி சென்றது.  நாக்குகூட தொங்கி லேசாக அசைந்தது.  அது மறைவது வரை நான் பார்த்திருந்தேன்.

அன்றிரவு எங்கள் வீடு, வீடுமாதிரியே இருக்கவில்லை.  அம்மா நினைவு திரும்பியபோதெல்லாம் வீரிட்டலறியபடி, மீண்டும் மயங்கிக் கொண்டிருந்தாள்.  வீடு முழுக்க பக்கத்து வீட்டுப் பெண்கள்.  திண்ணை முழுக்க ஆண்கள்.  யாரோ ஒரு பெண் என்னை வற்புறுத்தி சாப்பிட வைத்தாள்.

அப்பா கண் விழித்தபோது, முழுச் செம்பு தண்ணீர் குடித்தார்.  சாப்பிட சொன்னபோது வெறுமே “உம்… உம்…”என்று மட்டும் கூறினார்.

“நீ வந்து சொல்லுடா ராஜூ”  என்றார் அப்பு மாமா.

“அப்பா”

“உம்”

“அப்பா.  சாப்பிட வாங்கப்பா”

“உம்..உம்”

அப்பா திடீரென்று பாய்ந்து எழுந்தார்.  தாக்க வருகிறாரென்று அனிச்சையாகப் பயந்து நான் பின்னால் தாவினேன்.  அவர் வெறியுடன் மண்வெட்டியை நோக்கிப் பாய்ந்தார்.  எடுத்து ஒரே வெட்டு.  டார்த்தீனியம் துண்டாக விழுந்தது.  வெறியுடன் உளறியபடி, அப்பா அதை வெட்டிக்கொண்டேயிருந்தார்.  “பிள்ளை, என்ன இது விடுங்க”  என்று அப்பு மாமா அள்ளிப் பிடித்துக் கொண்டார்.

அப்பாவை இழுத்துச் சென்று படுக்க வைத்தார்கள்.  அப்பா உளறியபடி ஏதேதோ கூவினார்.  பிறகு சில நிமிட மௌனம்.  பிறகு இருட்டைக் கிழித்து வானில் எழுகிற அலறல்.  முத்தன் துண்டால் மூடியபடி, பாட்டில் ஒன்றை கொண்டு வருவதைக் கண்டேன்.   அப்பு மாமா என்னிடம் டம்ளர் கேட்டார்.  நான் தந்த பிறகு தயங்கி அப்பாவின் அறையின் மூலையில் நின்றேன்.  “போய்ப் படு. போ” என்றார் மாமா.  வந்துவிட்டேன்.

படுக்கையை விரிக்காமலேயே படுத்துக்கொண்டேன்.  பேச்சொலிகள், காலோசைகள்… பிறகு அப்பாவின் குரல் குழறி குழறி இழுப்பது கேட்டது.  என் மனம் திக்பிரமை பிடித்தது போல அப்படியே நின்றது.  எவ்வித சம்பந்தமும் இல்லாத ஞாபகங்கள் திரைப்படம் போல காட்சிகளாக மனசுக்குள் ஓடின.  எகனாமிக்ஸ் வாத்தியார் என்னைத் திட்டுகிறார். ஆமாம்;  நான் அவருடைய பல்லின் இடைவெளியைப் பார்த்தபடி இருந்தேன்!

அது கனவா?  நான் தான் தூங்கவில்லையே!  குரல்களை கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்!  விழித்துத்தானிருக்கிறேன்.  அப்படியானால் ஏன் இந்த ஞாபகம் வருகிறது?   ” த பாப்புலேஷன்  தியரி ஆஃப் மால்த்தஸ் இஸ்…..” அசட்டுத்தனம்.  தூங்கு.  ஆனால் நான் தான் தூங்கிக்கொண்டிருக்கிறேனே.  மழை தூறுகிறது.  குடை இல்லை.  உடம்பெல்லாம் ஈரம்.  கொட்டும் மழையில் எகனாமிக்ஸ் வாத்தியார் சொன்னார்.  “ஃப்ரொபஸர் லயனல் ராபின்ஸ் இஸ் அப்போஸிங் திஸ் ஆன் த பேசிஸ் ஆஃப் டூ பாயிண்ட்ஸ்”   குளிர் அடிக்கிறது.  தலையெல்லாம் ஈரம்.  குளிர்.  விழித்துக்கொண்டேன்.  உடனே வீட்டுக்குள் கேட்டுக்கொண்டிருந்த ஒலிகள் முன்னை விடவும் தாழ்ந்து ஒலித்தன.  உடம்பு தெப்பலாய் வியர்வை.  காற்று ஜன்னல் வழியாக குளிர்ந்து போய் பீரிடுகிறது.  இவ்வளவிற்கும், நான் எழுந்துபோய் திண்ணையை பார்த்தேன்.  அப்புமாமா, முத்தன், பிள்ளைமாமா, தங்கராஜ் ஆகியோர் அமர்ந்து டம்ளர்களில் பருகிக் கொண்டிருந்தனர்.  நடுவே ஒரு தட்டில் ஊறுகாய்.

நான் அப்படி பார்த்தபடி நிற்பதும் கூட தூக்கத்தில் தான் என்று பட்டது.  என் கண்ணிமைகள் அழுந்தின.  கால்கள் தள்ளாடின.  முகம் புசுபுசுவென்று மூடி வீங்கியிருப்பது போலிருந்தது.  மறுபடி பிரக்ஞையின் கீற்று மின்னியபோது நான் படுத்திருந்தேன்.  எப்போது இங்கு வந்தேன்?  ஒரு வேளை, எழவே இல்லையா?  சுய நினைவற்று மீண்டும் தூக்கத்தில் அமிழ்ந்தேன்.  பின்னிரவில் தூக்கம் மீண்டும் மங்கியது.  நான் கனகுவைக் கண்டேன்.  அது ஒருக்களித்துப் படுத்திருந்தது.  வாய் அசைபோட, கழுத்துச் சதை அசைந்தது.  மிகவும் பிரகாசமான வயல்வெளி.  இளம் காற்று உடைகளை சிலுசிலுக்க வைத்தது.  கனகுவின் அடிவயிற்றோடு ஒட்டிப் படுத்துக்கொண்டேன்.  வெதுவெதுப்பாக இருந்தது.  அதன் வால் சுழன்று என்மீது பட்டது.  நான் கனகுவின் முலையை சப்பினேன்.  மென்மையான இளம் சூடான காம்பு.  பால் பெருகியது.  என் கண், மூக்கு, முகம் எல்லாம் பால்.  மூடமுடியாதபடி சிக்கிக்கொண்ட குழாயிலிருந்து கொட்டுவதுபோல அது கொட்டியது.  பாலின் பெருக்கில் மூச்சுத் திணறினேன்.  குளித்தேன்.  புல்வெளி வெண்ணிறமாக ஆயிற்று.  என் சட்டை, உடம்பு, கனகுவும் கூட, வெண்ணிறம்.  கண்களை மூடி நிறைக்கும் வெண்ணிறம்.  கனகு என் முதுகை நக்கியது.  இதமாய், மிருதுவாய்….   கனகு! கனகு! ” என்றேன்  அது குனிந்து என் புறங்கழுத்தை முத்தமிட்டது.  மூச்சு என் மீது பரவியது.   “கனகு” என்றேன்.  “ராஜூ” என்றது கனகு.  என்னது கனகு பேசுகிறதா?  கனகு நீயா?  “ராஜு” என்றது அது.  மிகவும் பழக்கமான குரல்.  என்ன இது, கனகுவிடம் நான் இவ்வளவு நாள் பேசிய குரல்தான் இது.  “ராஜூ” என்றது கனகு மீண்டும்.  கனகு நீ சாகலியா?  எனக்குத் தெரியும் அப்பவே. எல்லாமே பாவ்லாதான்.  கனகு, நீ பெரிய கள்ளி.  மறுகணம் நான் தடுக்கி விழுந்தேன்.  கிணற்றுக்குள், இருட்டில், ஆழங்களுள்…. கனகூ.. என்று வீரிட்டபடி கண்விழித்தேன்.  ஒரு முகம் என் முகத்தருகே.  அம்மா! “அம்மா” என்று வீரிட்டபடி அவள் மடியில் முகம் புதைத்தேன்.  அம்மா என் தலை மீது வருடினாள்.  “அம்மா…. கனகு…” என்று விம்மினேன்.  அம்மா குனிந்து ” அழாதேடா.  கண்ணுல்ல” என்றாள்.  அவள் கரம் என் முதுகைத் தடவியது.  தூரத்தில் ஒரு பெரிய பறவை அகவுவது போலக் கேட்டது.  பிறகு மிக அருகே ஒரு குழந்தையின் வீரிடல் போல அது மாறியது.  நெஞ்சைப் பிளக்கும் அலறல்.  “ம்மா… ம்மாஆவ்….”  பரிச்சயமான குரல்  ஆனால் மானுடக் குரல் இல்லை.  சட்டென்று அதை உணர்ந்தேன்.  மக்ரூணி உச்சஸ்தாயியில் இடைவிடாது கத்திக்கொண்டிருந்தது.

[மேலும்]

முந்தைய கட்டுரைவலி என்பதும் குறியீடே- கடிதம்
அடுத்த கட்டுரை‘மாறுபட்ட கருத்து இருந்தாலும்…’