நாஞ்சில் உரையாடல்- கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நாடுவதும் அதுவே.
மாபெரும் எழுத்தாளர்களையெல்லாம் zoom-ல் கூட்டிவந்து இணைத்து வாசகர்களுடன் நீங்கள் உரையாட வைப்பது, இந்த இக்கட்டான காலகட்டத்தை கொஞ்சம் இனிமையுடன் கடந்து செல்ல உதவுகிறது. அதில் எனக்கும் சிறு பங்கை கொடுத்து, நானும் ஒரு பைசா பிரயோஜனத்தில் ஒன்று செய்கிறேன் என்ற சந்தோஷத்தை கொடுப்பதற்கும் மிக்க நன்றி.
எழுத்தாளர் அ. முத்துலிங்கத்திடம், நான் ஒன்றிரண்டு முறை பேசியவன் என்றாலும், நிகழ்வின் ஒருங்கமைப்பு சம்பந்தமாக பேசும் நாட்களில் அவருக்கு அணுக்கமானவனாக ஆனேன். அவருக்குத் தெரிந்த சௌந்தர்களில், இன்னும் ஒரு சௌந்தராக சேர்ந்துகொண்டேன். அவர் கதைகளை வாசித்ததை உரையாடலில் சொல்லி, அவரது கருத்துக்களையும், அனுபவங்களையும் கேட்டு மகிழும் வாய்ப்பு பெற்றேன். நான், சிறு வயதில் , தண்ணீர் கஷ்டத்தை அனுபவத்திவன் என்று சொல்லி, அவரின் .’பருத்திப் பூ’ , ‘ஒட்டகம்’ கதைகளை நினைவு கூர்ந்தேன். ‘பருத்திப் பூ’-வில் வரும் கதையும் கதாநாயகன் தணிகாசலமும் அப்படியே உண்மை என்று அவர் சொல்லக் கேட்டு நெகிழ்வடைந்தேன். உங்களின் சமீபத்திய நூறு கதைகளில், எழுபது கதைகளை அவர் வாசித்ததாகவும், அவருக்கு மிகவும் பிடித்தது ‘லூப்’ என்று சொல்ல இருவரும் அந்தக் கதைக்கு போய் வந்தோம். தங்கள் தளத்தின் வாசகர்களையும், அவர்களது கடிதங்களையும் வாசித்து அவர்களின் மீது உயர்ந்ததொரு மதிப்பை வைத்துள்ளார். அதைக் கலந்துரையாடலின்போது குறிப்படவும் செய்தார்.
எழுத்தாளர் நாஞ்சில் நாடனை, விஷ்ணுபுரம் விருது விழாக்களில் பார்த்து தெரிந்து இருந்தாலும், ஆகஸ்ட் பதினைந்திற்கான கலந்துரையாடலுக்காக பேசும்பொழுது , அவரிடம் மேலும் பேசவும், அவரை அறிந்துகொள்ளவும் நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. சொற்களின் மீதான அவரது பிரியம் என்னை எப்பொழுதுமே ஆச்சர்யப்படுத்தும். நான் ஒவ்வொரு பதிவு எழுதும்பொழுதும் , நான் சொற்களின் சிக்கலுக்கு ஆளாவதை, ‘என் சொல்லாழியில் சொற்களில்லை’ என்று அவர் சென்னை அண்ணா நூலகத்தில் பேசிய ஒரு சொற்பொழிவை நினைவுகூர்ந்து பதிவிட்டிருந்ததை சொல்லி மகிழ்ந்தேன்.
சிறு பதிவுகளை எழுதுபவன் என்றாலும், எழுதும்பொழுது உண்மையைச் சொல்ல இருக்கவேண்டிய தைரியத்தை தங்களிடமும், அவரிடமும்தான் கற்றுக்கொண்டேன் என்று சொன்னேன். அவரது கதைகளையும், கட்டுரைகளையும் தொடர்ந்து வாசித்து கும்பமுனியையும், அவரது பாத்திரங்கள் நீலவேணி டீச்சர், தன்ராம் சிங் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், அவரது முதல் நாவலை – தலைகீழ் விகிதங்களை ,நிகழ்விற்காக மீண்டும் வாசித்தேன். நிகழ்விற்காக செய்திருக்கும் ஏற்பாடுகளில், கேள்விகள் எதுவும் இருக்கிறதா என்று கேட்பதற்காக பேசிய ஒரு நாளில், எங்களது உரையாடலை இப்படி நினைவு கூறுகிறேன்.
“சிவதாணுவையும் / பார்வதியையும் படைத்தபொழுது உங்களது வயது, 25 / 26 – தானே இருக்கும்?” என்றேன். “ஆமாம்” என்றார். “எப்படி இப்படியொரு செவ்வியலைப் படைத்தீர்கள்” என்றேன். “எழுதினேன், அவ்வளவுதான். நல்ல நாவலா / இல்லையா என்றெல்லாம் அப்பொழுது எனக்குத் தெரியாது” என்று சிரித்தார். “உங்களின் முற்போக்கு கருத்துக்கள் எல்லாம் சிவதாணு பாத்திரத்திலேயே தெரிகிறது” என்றேன். அதற்கும் அப்படி ஒரு பூரிப்பான சிரிப்பு.
அந்த வயதிலேயே, மனிதர்களைப் புரிந்து வைத்திருக்கிறீர்கள், பக்கத்து தோட்டக்காரன் திருட்டுத்தனமாக உங்கள் வயல் நீரைத் திருடுகிறான். அதெல்லாம் புரிந்ததில், ஆச்சரியமில்லை. கல்யாணம் ஆகாத உங்களுக்கு , பார்வதி நீண்ட சடையை எடுத்து தலையணையின் அந்தப் பக்கம் போட்டுப் படுத்தாள் என்று எப்படித் தெரிந்தது” என்றேன். அதற்கும் ஒரு சிரிப்பு. படைப்பாளியிடம் அவரது படைப்பிலிருந்து ஒவ்வொரு காட்சியை சொல்லி அவரை மகிழ வைத்ததில் எனக்கு உறக்கம் பிடிக்க நள்ளிரவு ஆகியது.
வாழ்க்கையின் ஒவ்வொரு சொட்டையும் அனுபவிக்க சொல்வது உங்கள் போதனை. அதை என்னைப் போன்ற வாசகர்கள் செயலாக்கம் ஆக்கிக் கொள்ள இந்தக் கலந்துரையாடல்கள் வழி வகுக்கின்றன.
அன்புடனும் நன்றியுடனும்,
வ. சௌந்தரராஜன்
ஆஸ்டின்.
அன்புள்ள ஜெ
நலம்தானே?
நாஞ்சில்நாடன் இணைய உரையாடலை முழுக்க அமர்ந்து பார்த்தேன். இணைய உரையாடல்கள் பெருகியிருக்கும் காலம் இது. பெரும்பாலானவை சலிப்பூட்டுபவையாக ஆகிவிட்டிருக்கின்றன. விஷ்ணுபுரம் குழுமத்தின் உரையாடலில் இருக்கும் செயலூக்கமும் திட்டமிட்ட ஒழுங்கும் ஆழமான உரையாடலுக்கு வழிவகுத்தன. ஒவ்வொரு கணமும் பயனுள்ளதாகவும் மகிழ்வூட்டுவதாகவும் அமைந்த உரையாடல் அது.
ஜெயராரம்