ஓரே பாதை

அமெரிக்காவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் ஒன்று அறிந்தேன், அவர்கள் அறிந்த அமெரிக்க வெள்ளையர்களில் பெரும்பாலானவர்களுக்குச் ‘சொந்த ஊர்’ என்ற உணர்வு இல்லை. ஏனென்றால் அவர்கள் அப்படி ஒரே ஊரில் நீண்டநாள் வாழ்ந்ததில்லை

அவர்கள் இளமையிலிருந்தே இடம்பெயர்கிறார்கள். புதிய வாய்ப்புகளுக்காக இடம்பெயர்தல் வழக்கமானது. வாழ்க்கைமாற்றங்களும் சிலநெருக்கடிகளும்கூட இடமாற்றத்தை உண்டுபண்ணுகின்றன. சிலருக்குச் சில ஊர்கள்மேல் ஒருவகையான பற்று உண்டு. ஆனால் எந்த ஊரும் ‘அவர்களின்’ ஊர் அல்ல

அது ஒரு நல்ல பண்பாகவே அங்கிருந்த இந்தியநண்பர்கள் சொன்னார்கள். அமெரிக்கா ஒட்டுமொத்தமாகவே ஒன்றுதான். ஊர்களுக்கிடையேகூட பெரிய வேறுபாடு இல்லை. ஊரிலேயே இருக்கவேண்டும் என்ற எண்ணம் சலிப்பூட்டுவது. ஊர்மாறுவதென்பது ஒரே வாழ்க்கையில் பலவாழ்க்கைகளை வாழ்வது- இதுவே அவர்களின் எண்ணமாக இருந்தது

அதில் உண்மையில்லை என்று சொல்லமாட்டேன். வெவ்வேறுவகையான ஊர்கள் வழியாகக் கடந்துசெல்வது மிக அவசியமானது. இளமையில் தான் பிறந்து வளர்ந்த சூழலில் இருந்து அறியாச்சூழலுக்கு வாழ்வுதேடிச் செல்பவன் ஒரு பெரிய அனுபவத்தை அடைகிறான். அந்தக் கிளர்ச்சியும் ,கொண்டாட்டமும் வாழ்க்கையில் வேறெப்போதும் வராது. அவன் தன்னுடைய சாத்தியக்கூறுகளை கண்டடைகிறான். அது தன்னைத்தானே கண்டடைதல்.

என் வாழ்க்கையில் நான் பல ஊர்களில் வாழ்ந்திருக்கிறேன். இளைஞனாக அலைந்து திரிந்த ஊர்கள் பழனி காசி திருவண்ணாமலை மும்பை என பல. சென்னை, காசர்கோடு, பாலக்கோடு, தருமபுரி ஊர்களில் நீண்டகாலம் வாழ்ந்திருக்கிறேன். அது தவிர இப்போது அலைந்துகொண்டேதான் இருக்கிறேன்.என் ஒவ்வொரு பயணமும் ஒரு துளிவாழ்க்கைதான்

பதியெழுவறியாப் பழங்குடி என்று சிலம்பு சொல்கிறது. புகாரின் பெருவணிகர்கள் அப்படிப்பட்டவர்கள். அன்று ஊர் ஊராக பிழைப்புக்காக இடம்பெயர்தல் கீழானது என்று கருதப்பட்டிருக்கிறது, அவ்வாறு பதியெழாதவர்கள் உயர்ந்தவர்கள் என வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதன் அர்த்தம் அன்று பெரும்பாலானவர்கள் ஊர் பெயர்ந்துகொண்டே இருந்திருக்கிறார்கள் என்பதே.

ஆனால் இன்னொன்றும் உண்டு. ஒரே ஊரை, ஒரே தெருவை ஆண்டுக்கணக்காக அறிவதும் ஒரு பெரிய அனுபவம்தான்.சொந்தவீடு அளிக்கும் இன்பங்களில் ஒன்று அது மாறாது என்பது. இருபதாண்டுகளாக நான் குடியிருக்கும் இந்த வீடு எனக்கு இனியது. காலைநடை முடிந்து திரும்ப வரும்போது என் வீட்டை ஒளியில் தொலைவில் பார்க்கையில் அத்தனை இதமான அணுக்கமான உணர்வு உருவாகிறது

ஒரே சாலையில் நடக்கப்போவது, ஒரே மலையை பார்ப்பதும் அவ்வாறே. அதிலும் ஓர் இனிமை உண்டு. நாம் புதிதாக அதைக் கண்டடைந்தபடியே இருக்கிறோம். ‘ஒரேஇடத்தில் ஒரே உணவை ஒரே சமயத்தில் பெறும் நாய் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்பது நாய் வளர்ப்பின் பாடங்களில் ஒன்று. மனிதர்களும் விதிவிலக்கல்ல.

வேளிமலைகளை நான் 1978ல் கல்லூரிப்படிப்புக்காக வந்த காலம்முதல் நாள்தோறும் பார்த்துவருகிறேன். இடைவெளிக்குப்பின் 1997 முதல் மீண்டும் நாள்தோறும் பார்க்கிறேன். நாள்தோறும் பார்ப்பதனாலேயே இது ‘என்னுடைய சொந்தமலை’யாக மாறிவிட்டிருக்கிறது. அந்த சொந்த உணர்வு உருவாக்கும் நெகிழ்வு மலையை இன்னும் அழகாக ஆக்குகிறது

வேளிமலைநோக்கிச் செல்லும் இந்தப்பாதையும் அவ்வாறே அணுக்கமானது. இது மாறிக்கொண்டே இருக்கிறது. குறுக்காக நாற்கரச்சாலை வரவிருக்கிறது. இன்னும் இரண்டுமூன்றாண்டுகளில் இந்தச் சாலை இல்லாமலாகிவிடக்கூடும். ஆகவே இது இன்னும் அணுக்கமானதாகத் தெரிகிறது. இச்சாலையில் நான் என் படைப்புக்களை நினைத்துக்கொண்டு நடந்திருக்கிறேன். அருண்மொழியுடனும் அஜிதனுடனும் சைதன்யாவுடனும் நடந்திருக்கிறேன். இந்த பாதையை நான் கால்களைக்கொண்டு தொட்டுத்தொட்டு அணைத்துக்கொண்டிருக்கிறேன்.

பழகியபாதை என்பது நமக்கு ஏதோ பிறவியாலமையும் உறவு போல.

முந்தைய கட்டுரைஉடையாள்- 2
அடுத்த கட்டுரைவெண்முரசு வினாக்கள்-2