மானுடம்

அமெரிக்காவுக்கோ ஐரோப்பாவுக்கொ செல்லும்போது நாம் உணரும் ‘ஹாய்’ ஆன மனநிலை ஒன்றுண்டு. அங்கே மக்கள்நெரிசல் மிகக்குறைவு. சதுக்கங்கள், பொதுஇடங்கள், தெருக்களில் மட்டுமே கொஞ்சம் நெரிசல் இருக்கும். மற்றபடி அமைதிதான்.

கண்ணுக்குப் படுபவர்களும் ஒழுங்காக சீராகச் செல்வார்கள். ஆகவே ஒருவர் இன்னொருவரின் இருப்பை அறியாமலேயே உலவிக்கொண்டிருக்கலாம். பொதுவாக வெட்டவெளியில் தன்னந்தனியாக நடமாடும் உணர்வு உருவாகும். மலையுச்சிகளில் ஏறி நின்றால் வருவதுபோல பறக்கவேண்டும் என்னும் தவிப்பு

ஆஸ்திரேலியாவில்தான் அவ்வுணர்வை மிகவும் அடைந்தேன்.அங்கே ஒரு பரவசம் இருந்துகொண்டே இருந்தது. கண்நிறைய திறந்து அகன்று தொடுவான் முட்டி நின்றிருக்கும் பரந்தநிலம். புல்வெளியின் அலைகள். கவிழ்ந்த தூயவானம்

ஆனால் ஒருமாதம் ஆகுமென்றால் நாம் தவிக்க ஆரம்பிப்போம். என்ன தவிப்பு என்று தெரியாது. திரும்பி இந்தியா வந்திறங்கி மீனம்பாக்கத்தின் நெரிசலைக் கண்டதுமே அட இதற்காகவா என்ற எண்ணம் வரும். நாம் பழகியது இது. இப்படி கூட்டத்தில் ஒரு துளியாக அலைக்கழிவது.

நமது கொண்டாட்டங்கள் எல்லாமே நெரிசலில்தான். திருவிழாக்கள், சந்தைகள், கடைவீதிகள், திரையரங்குகள். ‘கூடல் நகரில் கூட்டம் பார்க்க கூட்டம் கூட்டம்’ என்று கவிஞர் மீராவின் கவிதை ஒன்று உண்டு. திருப்பதியின், பாண்டிபஜாரின் கவற்சியே அங்கே கூட்டம் அலைமோதும் என்பதுதான்

ஆனால் அது பொதுவாகவே மானுட உயிர்களுக்குரிய மகிழ்ச்சி. மேலைநாட்டிலும் அன்றாடவாழ்க்கை தனிமையானது, அமைதியானது. ஊர்கள் ஓய்ந்தவை. ஆனால் கொண்டாட்டத்துக்காக சிறிய அறைகளுக்குள் முட்டிமோதி நடனமிடுகிறார்கள். கால்பந்துவிழாவிலும் இசைநிகழ்ச்சிகளிலும் பெருந்திரளாக மாறி அலைகொள்கிறார்கள்.

இந்த ஊரடங்கில் நான் தவறவிட்டது எது? இன்று மாலை ஒரு மருந்து வாங்குவதற்காக பார்வதிபுரம் சென்றேன். ஜேஜே என்றிருந்தது. எவரையும் தொடாமல், ஆனால் கண்களால் தொட்டுத்தழுவியபடி, நெரிசலில் ஒருவனாக எண்ணிக்கொண்டு வெட்டூர்ணிமடம் வரைச் சென்றேன்.

பார்வதிபுரம் பாலம் திறக்கப்பட்ட நாட்களின் நினைவுகள்தான் ஓடிக்கொண்டிருந்தது. அன்று இந்தப்பகுதியே உயிர்வெள்ளத்தால் நிறைந்திருந்தது.மானுடவெள்ளம்.திரும்பி வரும்போது மனம் நிறைந்திருந்தது. ஆகா, இதைத்தான் தேடினேனா என்று எண்ணிக்கொண்டேன்

“மானுடசமுத்திரம் நான் என்று கூவு” என்று சும்மா சொல்லவில்லை. கூவுவது அறிவுஜீவிக்கு கொஞ்சம் கஷ்டம்தான், ஆனாலும் அதுதான் உண்மை.

முந்தைய கட்டுரைமணி ரத்னம் உரையாடல், கடிதங்கள்- 5
அடுத்த கட்டுரைவெண்முரசு வினாக்கள்-10