இந்தியா திரும்பலாமா?

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கங்கள்.

இது நான் உங்களுக்கு  எழுதும் முதல் கடிதம்.  இதுவே நான் ஒரு நாவலாசிரியர் அல்லது எழுத்தாளருக்கு எழுதும் முதல் கடிதமும் ஆகும். சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் விசும்பு சிறுகதை தொகுப்பு  மூலம்  உங்களை நான் அறியலானேன். விசும்பு நூலின் பின்புறம் உங்கள் வண்ணப்புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது, தங்களை நான் பார்த்தது அன்று தான்.

அன்று முதல் உங்கள் வாசகன் ஆனேன், உங்களை பின்தொடர்ந்து வருகிறேன். YouTube’ல் உங்கள் பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்கள் ஒன்று விடாமல் அனைத்தையும் பார்த்தாகிவிட்டது (மலையாளம் உட்பட). உங்கள் அனைத்து  நாவல்களையும் வாசிக்கத் திட்டமிட்டுள்ளேன். உங்களை வாசித்தமையால் நான் கண்டடைந்த பலவுள் முதன்மையானவை  என நான் கருதுவது மரபின் முக்கியத்துவம் மற்றும் மரபு  ரீதியான சிந்தனை.

ஒரு காலகட்டத்தில் நான் Broad  Mind  என்று  எனக்கு நானே கூறிக்கொண்டு வறட்சி மிகுந்த சிந்தனையோடும் பொருளற்ற விவாதங்களுடனும் நேரத்தை செலவிட்டிக்கொண்டு இருந்தேன். என்னுடைய சிந்தனைமுறையை மாற்றியமைத்ததில் பெரும்பங்கு வகிப்பது உங்கள் படைப்புக்களே.

என் வாழ்க்கையின் வெவேறான கட்டத்தில் யாரோ ஒருவர் அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ எனக்கு வழிகாட்டியாகவும், என்னை மேம்படுத்தும் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது அனைத்தும் கோவையில். என் கல்லூரி நாட்களில் எனக்கு ஆசானாக இருந்தது “முனைவர் க. மணி” அவர்கள். அவர் என் வகுப்பு ஆசிரியர் அல்ல. கோவை, பூ.சா.கோ காலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தவிரவியல் துறையில் பேராசிரியாக இருந்தார். அவர் கோவை “ஞான வாணி” எனும் பண்பலையில் வாரம் ஒரு நாள் நேரடி ஒலிபரப்பாகும் ‘அறிவியல் நேரம்’ என்ற  நிகழ்ச்சியில் நேயர்களின் கடிதங்கள் வாயிலாகவும்  தொலைபேசி அழைப்பு வாயிலாகவும் கேட்கும் அனைத்து அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கும் உடனுக்குடன் எளிய முறையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் புரியும் விதத்தில் சுவாரசியமான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கங்களை அளிப்பார். என்னை வியக்கவைத்தது அவருடைய நினைவாற்றலும், அறிவும், எளிமையும், கற்பித்தலும் தான்.

அவருக்கு அறிந்திராத அறிவியல் விஷயங்களே கிடையாது எனலாம். அறிவியல் மட்டும் இல்லை ஆன்மிகமும் அறிந்திருப்பார். ஆன்மிகம் சார்ந்த  கேள்விகளுக்கும் பதில் கூறுவார், சில சமையங்களில்  அறிவியலில் ஆரம்பித்து ஆன்மிகத்தில் வந்து முடிப்பார். அவரிடமிருக்கும் ஆற்றல் அபரிமிதமானது. இதில் ஏமாற்றமளிப்பவை எதுவென்றால் கோவையில் உள்ள பலருக்கும்  “ஞான வாணி” என்ற பண்பலை இருப்பதே அறிந்திருக்கமாட்டார்கள் அதிலும் அறிவியல் நேரம் கேட்கும் நேயர்கள் சொற்பதிலும் சொற்பம். ஆதலால்  க. மணி அவர்களின்பயனைப்பெற  பலருக்கும் வாய்ப்பில்லாமல் போனது.

ஒரு கடிதத்தில் நான் அவரிடம் ஏன் தாங்கள் ஒரு தொலைக்காட்சில் இதேபோல் ஒரு நிகழ்ச்சியை  நடத்தக்கூடாது  என்று கேட்டது  நினைவுக்கு வருகிறது. கல்லூரி காலத்தில்தான் நான்  நூல் வாசிக்க ஆரம்பித்தேன் அதற்கு அவரும் ஒரு  காரணம். கல்லூரி இறுதியாண்டில் நடந்த வேலைவாய்ப்பு நேர்காணலில்  க. மணி மூலமாக கற்றுக்கொண்ட அறிவியல் காரணமாகவே ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. என் வாழ்வில் திருப்புமுனையாக இருந்த சிலருள் முனைவர் க. மணி’யும் ஒருவர்.

சரி, இதை இப்பொது  நான் எதற்குக் கூறுகிறேன் என்றால் நான் இருக்கும் தற்போதைய நிலையில் எனக்கு ஆசானாக இருப்பது தாங்கள் தான். கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நானும் என் குடும்பத்தாரும் அமெரிக்காவில் வசித்து வருகிரோம். தற்போது கலிபோர்னியா மாகாணத்திலுள்ள சான் டியாகோ நகரில் வசித்து வருகிறோம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த சில லட்சம்பேர்களில் நானும் ஒருவன். உங்களிடம் உரையாட சில கேள்விகளை முன்னிறுத்த நான் விரும்புகிறேன்.

புலம்பெயர்தல் பற்றி: சில ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பி விடலாம் என்று எண்ணித்தான்  அமெரிக்காவிற்கு வந்தேன். ஆண்டுகள் சென்றுகொண்டே இருக்கிறது இன்றுவரையில் ஒரு முடிவு எடுத்தபாடில்லை. அமெரிக்காவிலே செட்டில் ஆகும் திட்டம் எனக்கும் என் மனைவிக்கும் இல்லை. இருப்பினும் எப்போது திரும்புவது என்ற திட்டமும் தீட்டவில்லை. என்னுடைய நான்கு வயது மகன் அமெரிக்காவில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்றவன் ஆதலால் எந்த ஒரு முடிவும் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்க விரும்புகிறோம்.

என் உள்ளுணர்வைப் பொறுத்தவரை இது என்னுடைய இடமோ நாடோ இல்லை, இங்குள்ள மக்கள் என் மக்கள் இல்லை என்பது தான்.  தனிமையை உணர்கிறேன். அமெரிக்கர்கள் அரசாங்கத்த்திற்கு என்ன  வரி கட்டுகிறார்களோ அதே வரி தான் நானும் கட்டுகிறேன். ஆனால் ஒரு பொது இடத்திற்கோ, கடைகளுக்கோ, பூங்காவிற்கோ  ஒரு விருந்தாளியாகுவோ, சூழலுக்கு ஒவ்வாத ஒருவனாகவோதான் செல்கிறேன். எந்த வித உரிமையும் எனக்கு இருப்பதாக  உணரமுடியவில்லை. இதுவே இந்தியாவில் உள்ள கோவிலுக்கோ, கடற்கரைக்கோ, ஷாப்பிங் மாலுக்கோ சென்றால் அப்படி தோன்றுவதில்லை.

இங்கு இந்தியரல்லாதவர்களிடம் மனதில் பட்டதை பேச முடியவில்லை, ஒரு வெளி வேஷம் தான் அணிந்துகொண்டு செல்கிறேன். மனதின் மொழியை மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் பேசுவதற்கு சோர்வாக உள்ளது. அதனால் பேசாமல் இருப்பதே மேல்  என்றும் தோன்றுகிறது.  மேலும் இங்கு சோசியல் லைப் என்பது மிக மிக குறுகிய  வட்டமாக உள்ளது. அனுபவ இழப்பு என்பது மாபெரும் இழப்பாக எனக்கு தோன்றுகிறது .சோசியல் லைப் இல்லாது அனுபவம் ஏது? .

இந்தியா திரும்பிவிடலாம் என்று என்னும்போது இந்தியாவில் அனேகம் பேர் அமெரிக்கா சென்று செட்டிலாக தவம் கிடக்கிறார்கள். அப்படியிருக்க கைக்கு கிடைத்த ஒரு சிறந்த விஷத்தை இழக்கப்போகிறோமா என்றும் தோன்றுகிறது. தொடர்ந்து இங்கே இருந்தால் வேறென்ன செய்யப் போகிறேன்? இந்தியாவில் மேலும் ஒரு வீடு, நிலம், மேலும் சில முதலீடுகள், பின்பு அமெரிக்காவிலே ஒரு  வீடு வேறென்ன? இது தான் வாழ்க்கையை? இதற்கு நான் தரும் விலை விலைமதிப்பற்றது. அதில் ஒன்று தாய் தந்தை மற்றும் நெருங்கிய உறவுகளின் பிரிவு.

இந்தியாவில் உள்ள கல்விமுறை, கல்வி வாய்ப்புகள், சுற்றுச்ச்சூழல், திறமைக்கேற்ற வாய்ப்பு என்று சிந்திக்கும்போது என் மகனுக்கு அமெரிக்காவே உகந்த இடமாகப்படுகிறது. ஒருவேளை இங்கேயே செட்டில் ஆகிவிடலாம் என்றாலும் அது எளிய காரியம் அல்ல உங்களுக்கே தெரிந்திருக்கும். குடியுரிமை பெற குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகளாவது காத்திருக்கவேண்டும் இது ஒரு விதத்தில் மன உளைச்சல் தான். அடுத்து என்ன நடுக்குமோ என்று மனஉளைச்சலில் உழன்றுகொண்டு காத்திருந்து குடியுரிமை கிடைத்தாலும் பெறுவது என்ன? எந்த உறவுச்சிக்கலுக்குள்ளும் சிக்காத தன்னந்தனிய சொகுசான வாழ்க்கை.

புலம்பெயர்வதில் பணத்தைத் தவிர நாம் பெறுவது என்ன? உண்மையில் இழப்பது என்ன? புலம்பெய்தலின் சிக்கல்கள் என்ன?  புலம்பெயர்ந்த பெற்றோருடைய பிள்ளைகளின் சிக்கல்கள், சவால்கள் என்ன?  நாடு திரும்பினால் பெறுவதும், சவால்களும் என்ன? இதைப்பற்றி ஒரு தெளிவு வேண்டும் என எண்ணுகிறேன். நீங்கள் எண்ணற்ற தேசங்களுக்குப் பயணம் செய்திருகிறீர்கள் பல புலம்பெயர்ந்தவர்களைக் கண்ட அனுபவம் உங்களிடம் இருக்கும். ஆகவே இதைப்பற்றி தாங்கள் அறிவொளி பரிப்பினால் எனக்குப் பயன்தரும்.

இப்படிக்கு
அருண்
.

அன்புள்ள அருண்,

ஏற்கனவே இதைப்பற்றி எழுதியிருக்கிறேன். இந்தத் தளம் தொடங்கப்பட்டபோது,பத்தாண்டுகளுக்கு முன்பு. அன்றிருந்த சூழல் இன்று இன்னும் வீழ்ச்சியடைந்துள்ளது. அன்று எழும் இந்தியா பற்றிய ஒரு நம்பிக்கை இருந்தது. இப்போது அது இல்லை. இன்னும் இருபதாண்டுக்காலம் இந்தியாவுக்கு பொருளியல்தேக்கமும் அதன் விளைவான வாய்ப்புக்குறைவும் கடுமையான சிக்கல்களுமே எஞ்சும் என்று நான் நினைக்கிறேன். மாறாக நிகழ்ந்தால் மகிழ்வேன்.

ஆகவே எவராயினும் அடைந்த எதையும் எதன்பொருட்டும் கைவிடவேண்டாம் என்பதே என் பதிலாக இருக்கமுடியும். இந்தியச்சூழலில் உலகியலை அமைத்துக்கொள்வதே மிகமிகக் கடுமையான போட்டியாக உள்ளது.ஆகவே திரும்பிவருவதென்பது இங்குள்ள சிக்கல்களில் மாட்டிக்கொள்வதாக அமையவே வாய்ப்பு.

உங்களுக்கு அமெரிக்கச் சூழலில் இருக்கும் தனிமை, சலிப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்கிறேன். அன்னியச்சூழலில் அது இயல்பானது. ஆனால் அதைவிடக் கொடியது ஒன்று உண்டு. ஒருவன் வெறுமே வேலைக்காகவே உயிர்வாழ்வது. விழித்திருக்கும் பொழுதில் பெரும்பகுதியை வாழும்பொருட்டு பொருளீட்டவே செலவழிப்பது. வாழ்வதற்காக உழைப்பது- உழைப்பதற்காக வாழ்வது என்னும் மாபெரும் அபத்தநிலை. வாழ்வை வீணடிப்பதென்பது இதுதான். இந்தியாவில் அதுவே இயல்பு வாழ்வாக உள்ளது.

இந்தியாவில் நீங்கள் இழப்பவை என்பவை இரண்டுவகை. ஒன்று ,தவிர்க்கமுடியாத வாழ்வுமாற்றங்களை இழப்பாக நீங்களே எண்ணிக்கொள்பவை. இரண்டு, உண்மையாகவே இழப்பவை.

அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ பணியாற்றும் பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் இளமைப்பருவத்தை இந்தியாவில் கழித்தவர்கள்.அதன்பின் வேலைக்கென வெளிநாடுபோய் மணமாகி வாழ்க்கையில் அமைகிறார்கள். இந்தியா அவர்கள் கடந்துவந்த இளமையின் நிகழ்களம். அந்த கடந்தகால ஏக்கத்தின் ஒளியை முழுக்க இந்தியாவின்மேல் ஏற்றிக்கொள்கிறார்கள். கடந்தகால ஏக்கத்தில் திளைக்கிறார்கள்

அவர்கள் திரும்பி வந்தால் அந்த இந்தியா இங்கே இருக்காது. அவர்களின் கடந்தகாலத்தில் உள்ளது அது. எவரும் கடந்தகாலத்துக்குச் செல்லமுடியாது. பெரும்பாலானவர்களுக்கு கடந்தகாலம் இனியதே. ஏனென்றால் இளமை இனியது. அந்தந்த தருணங்களில் அந்த இனிமையை அருந்துவதே மனிதன் செய்யக்கூடியது. திரும்பச்சென்று அடைவது இயல்வதல்ல.

பெரும்பாலானவர்கள் சொல்லும் அந்த இந்தியா இங்கில்லை. அவர்கள் சொல்லும் இந்தியா பத்தாண்டு, இருபதாண்டு பிந்தையது. அந்த இந்தியா இங்கே மாறிவிட்டது. இது அமெரிக்கா சென்றவர்களுக்கு மட்டுமே உள்ள சிக்கல் அல்ல. நகரங்களுக்குச் சென்றுவிட்டவர்களுக்குக் கிராமத்தைப் பற்றியும் இந்தக் கற்பனை உண்டு. அதை நம்பி திரும்பி வந்தால் பெரும் ஏமாற்றமே எஞ்சும். அந்த இடம் இங்கே இருக்காது.

உண்மையாகவே இழப்பவை சில உண்டு. அதை மறக்கமுடியாது. நான் ஏற்கனவே அதைச் சொல்லியிருக்கிறேன், மீண்டும் சொல்கிறேன். இங்குள்ள கலாச்சார வாழ்க்கையில், சமூகவாழ்க்கையில் ஒரு பங்களிப்பை ஆற்றவேண்டுமென ஒருவர் எண்ணினால் அவர் வரலாம். அளிப்பதன் இன்பத்தை அவர் அடையமுடியும். அங்கே இருக்கையில் அவர் அவ்வின்பத்தை இழந்திருக்கிறார்.அதைப் பெறுவதற்காகப் வரலாம். வேறு எதாவது எதையாவது உலகியலில் பெறுவதற்காக வந்தால் ஏமாற்றமே எஞ்சும்.

இந்தியாவுக்கு அளிப்பதற்கு சில உண்டு என எண்ணுபவர்கள் திரும்ப வந்தால் அவர்கள் அளிப்பதற்கான களம் ஏராளமாக உள்ளது. அவர்கள் தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்லமாட்டார்கள். அந்த எதிர்பார்ப்பே இருக்காது, ஆகவே ஏமாற்றமும் இருக்காது

ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இங்குள்ள கலாச்சார, சமூகச் சூழல் என்பது ஒருவகையான ஆறுதலூட்டும் பின்னணி மட்டும்தான். அத்துடன் ஒருவகை கேளிக்கையும்கூட. அவர்களுக்கு தங்கள் தொழிலும் வாழ்க்கையுமே முதன்மையானவை. அவர்கள்  பின்னணிச்சொகுசுக்காகவும் கேளிக்கைக்காகவும் சொந்த நிலத்தை நாடுகிறார்கள். அவர்கள் தொழிலையும் வாழ்க்கையையும் துறந்து இங்கே வந்தால் மண்டையில் பாறாங்கல்லால் அறைந்ததுபோன்ற ஏமாற்றமே எஞ்சும்

சுருக்கமாக இப்படிச் சொல்கிறேனே, இந்தியாவின் சமூகத்துக்கோ கலாச்சாரத்துக்கோ ஒரு பங்களிப்பை ஆற்றவேண்டும் என ஒருவர் நினைக்கிறார்.அதில்தான் தன் வாழ்க்கையின் நிறைவே உள்ளது என நினைக்கிறார். அதற்காக எதையும் இழப்பேன் என்று சொல்கிறார். அவர் வரலாம், அவருக்கு ஏமாற்றங்கள் இருக்காது. ஏனென்றால் அவர் அந்தப்பங்களிப்பை ஆற்றாமலிருந்தால் அடையும் ஏமாற்றம் பெரிது. அப்பங்களிப்பை போதுமான அளவு ஆற்றமுடியவில்லை என்ற ஏமாற்றம் ஒருவேளை இருந்தால்கூட முயன்றோம் என்னும் நிறைவு இருக்கும்

ஆனால் அத்தகையவர்கள் பல்லாயிரத்தில் ஒருவரே. மற்றவர்கள் தங்கள் பகற்கனவுகளில் அப்படி தங்களைப் பற்றி கற்பனைசெய்துகொள்ளலாம். பணியாற்ற, அளிக்க வருகிறோம் என்று சொல்லிக்கொள்ள்லாம்.அது உண்மையல்ல, தாங்கள் அப்படிப்பட்டவர்களல்ல என்று அவர்களுக்கே உண்மையில் தெரியும்.

இன்றைய வாழ்க்கையில் எவராயினும் இடம்பெயர வேண்டியிருக்கிறது, இன்னொரு சூழலுடன் இசையவேண்டியிருக்கிறது. கிராமத்திலிருந்து நகரம் செல்வது, தமிழகத்திலிருந்து வடநாடு செல்வது எல்லாம் அதைப்போன்றதே. அது வாழ்க்கையின் ஒரு பகுதி. சென்ற இடத்திற்கு ஏற்ப பொருந்தவேண்டியதுதான்

நான் அமெரிக்கா செல்லும்போது சிலர் இப்படி தங்கள் உளக்குறைகளைச் சொல்வதுண்டு. பொதுவாக எதிர்வினையாற்றமாட்டேன். ஒரேமுறை மட்டும் எதிர்வினையாற்றினேன். அந்நண்பரிடம் கேட்டேன், அமெரிக்காவில் உங்களை பொருத்திக்கொள்ள பிரக்ஞைபூர்வமான முயற்சிகள் எதையாவது செய்தீர்களா என. அவரால் பதில் சொல்லமுடியவில்லை. எதையும் முயன்று செய்துபார்க்கவேண்டும் அல்லவா?

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மொழி, அதன் உச்சரிப்பு பெரிய தடை.மொழி கைவந்ததுமே சிறகு முளைத்ததுபோல உணர்பவர்கள் உண்டு. அந்தத் தடையை மீறமுடியும்.அதை முறையாகக் கற்றுக்கொள்ள முடியும். அதற்கான அமைப்புகளும் வகுப்புகளும் உண்டு. அதைச் செய்தீர்களா என்று கேட்டேன். பெரும்பாலானவர்கள் அதை எண்ணிக்கூட பார்த்திருப்பதில்லை.

அமெரிக்காவின் பண்பாடு,சமூகச் சூழல்களில் இணைந்துகொள்ளும் வழிகளை ஆராய்ந்தீர்களா என்பது இன்னொரு கேள்வி. என் நண்பர் ஒருவர் இசைக்கலைஞர், இசைவழியாக அங்குள்ள பண்பாட்டுச்சூழலுடன் இயல்பாக அவரால் இணைய முடிந்தது. மலையேற்றம், நீண்டபயணம் என அங்குள்ள உலகம் ஒன்று உள்ளது. அதில் எவ்வகையிலேனும் இணையமுயன்றிருக்கலாமே? அதற்கு பயிற்சி எடுத்திருக்கலாமே

அத்தனைக்கும் மேலாக ஒன்றுண்டு. ஒருவர் ஒரு சமூகத்திலிருந்து பெற்றுக்கொண்டே இருந்தால் நிறைவு அமையாது. அளித்தால் மட்டுமே அந்நிறைவு உருவாகும். இங்கிருந்து சென்றவர்கள் அந்தப்பசுவிலிருந்து பால்கறக்க மட்டுமே செய்கிறார்கள், புல்லும் கொடுக்கலாம். ஒரு தமிழர் அந்த சமூகத்திற்கு ஏதேனும் பங்களிப்பை ஆற்றியிருக்கலாமே? சமுகத்திற்கு, பண்பாட்டுக்கு

எண்ணிப்பாருங்கள், அங்கே எந்தப் பங்களிப்பையும் ஆற்றமுடியாத ஒருவர்,அதற்கான மனஅமைப்பு இல்லாத ஒருவர், எஞ்சியபொழுதை முழுக்க ஏற்கனவே பழகிய எளிய கேளிக்கைகளில் செலவிடும் ஒருவர் இங்கே வந்து மட்டும் என்ன செய்துவிடமுடியும்?

அப்படி ஒரு இதமான பழகிய சூழலின் மகிழ்ச்சிக்காக இந்தியா திரும்புவதாக இருந்தால் அங்கே செய்யும் தொழிலின் தரமும் ஊதியமும் இங்கும் கிடைக்கவேண்டும். அதற்கன வாய்ப்பு இங்கே இல்லை.அங்குள்ள பணிச்சூழலில் பழகிய ஒருவர் இந்தியச்சூழல் மத்தியகால கொத்தடிமைச்சூழல் என உணர்வார். ஊதியமும் நிறைவாக இருக்க வாய்ப்புகள் மிக அரிது. இருக்குமென்றால் திரும்பலாம், அது தனிப்பட்ட தெரிவு

ஜெ

\

பழைய கட்டுரை

திரும்பி வந்து மகிழ்ச்சியாக நிறைவாக இருப்பவர்கள் பலரை நான் அறிவேன்.  அவர்கள் இலட்சியவாதிகள். ஒரு இலட்சிய நோக்குடன் இந்தியா வந்தவர்கள். இதை நான்செய்ய வேண்டும், எந்தத் தடை இருந்தாலும் செய்வேன் என எண்ணுபவர்கள். தடைகளும் சிக்கல்களும் அவர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தும். 

வாக்களிக்கும் பூமி

முந்தைய கட்டுரைஉடையாள்-4
அடுத்த கட்டுரைவெண்முரசு- வினாக்கள்-4