இந்த ஆண்டு தி.ஜானகிராமனின் நூற்றாண்டு. கனலி இணையதளம் தி.ஜானகிராமனுக்காக சிறப்பிதழ் ஒன்று வெளியிட்டிருக்கிறது. பொறுப்பான உழைப்பு தெரியும் ஒரு மலர். தி.ஜானகிராமனின் அறியப்படாத எழுத்துக்கள், அவருடைய சமகாலத்தவரின் குறிப்புகள், இன்றைய மூத்த எழுத்தாளர்களின் விமர்சனங்கள், இளையபடைப்பாளிகளின் விமர்சனங்கள் என்று ஒரு முழுமையான தொகுதியாக அமைந்துள்ளது. தொகுப்பாளர்களுக்குப் பாராட்டுக்கள்.
தி.ஜானகிராமன் தமிழிலக்கியச்சூழலில் ஒப்புநோக்க பெரிய அளவில் வாசிக்கப்பட்ட இலக்கியப் படைப்பாளி. அவர் பெரும்பாலும் பிரபல வாரஇதழ்களில் எழுதினார், பெரும்பாலான நாவல்களை அவற்றில் தொடர்கதைளாகவே எழுதினார். ஆனால் அவருடைய படைப்புகளின் சரளம், உணர்ச்சிகரம் காரணமாக இன்னமும்கூட வாசிக்கப்பட்டிருக்கலாம் என்று அன்றும் இன்றும் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் அகலவாக்கில் இல்லை என்றாலும் நீளவாக்கில் அவருடைய வாசிப்புத்தளம் பெரியது.வணிக இலக்கியத்திற்கு இல்லாததும் இலக்கியத்திற்கு உரியதுமான சிறப்பியல்பு அது. இன்று அவரை நான்காம்தலைமுறை வாசகர்கள் வாசிக்கிறார்கள். அப்படிப்பார்த்தால் தமிழின் மிகவும் வாசிக்கப்பட்ட ஒருசில எழுத்தாளர்களில் ஒருவர் தி.ஜானகிராமன். அந்த வாசிப்பு இன்றும் தொடர்வதையே இந்த மலர் காட்டுகிறது.
வெவ்வேறு கோணங்களில் ஓர் ஆசிரியரின் மீதான பதிவுகளை பார்க்கையில் நாம் நம்முடைய உளப்பதிவுகளையும் மதிப்பீடுகளையும் ஒரே சமயம் கலைத்துக்கொள்ளவும் தொகுத்துக்கொள்ளவும் செய்கிறோம்.அது ஓர் அரிய அனுபவம். அவ்வகையில் இந்தத் தொகுதி மிக முக்கியமான ஒன்று.