வணக்கம் ஐயா,
நான் ஒரு தீவிர இலக்கிய வாசகன் இல்லை ஆனால் பல வருடங்களாக உங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன். இந்த கொரோனா காலம் உங்களது நூறு கதைகளுடனும் கதாபாத்திரங்களுடனும் கழிந்தது.
அவற்றில் பல கதைகளுடனும், கதை மாந்தர்களுடனும் உணர்வுப்பூர்வமாக ஒன்றிப் போனேன். உதாரணமாக பிறசண்டு கதையில் வரும் சிரோமணி. அதே போன்று காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய சம்பவம் எனக்கும் நடந்தது. அது நடந்தபோது மிகுந்த பரவசமாக இருந்தது. பிறசண்டு கதையை படித்த பிறகுதான் நான் சில ஆயிரங்களை அதற்காக இழந்திருந்தது உறைத்தது. இப்போதெல்லாம் சிரோமணியை நினைத்து நினைத்து சிரித்துக் கொள்கிறேன்.
இன்று எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.நான் எனது மனதில் மிக நெருக்கமான இடம் கொடுத்து வைத்திருக்கும் ஒரு நண்பனின் அழைப்பு அது. தனது வீட்டில் நடக்கும் ஒரு விஷேஷத்தை பற்றிய தகவலை சொன்னான். ‘தகவல் சொல்லவில்லையென்று குறை சொல்லக்கூடாது அல்லவா அவ்வளவுதான்’ என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான். என்னை விழாவிற்கு வரும்படி அழைக்க கூட இல்லை.
இயல்பாகவே இது போன்ற விஷயங்களில் நான் மிகவும் உணர்வுவயப்படக்கூடியவன். முன்பு இதுபோன்று எனக்கு நடந்திருந்தால் உண்மையில் அழுதிருப்பேன். அல்லது அவனிடம் சென்று தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்போன். ஆனால் நான் அவ்வாறு எதையுமே செய்யவில்லை. பத்து நிமிடங்களில் அதைவிட்டு வெளியேறிவிட்டேன். நிழல்காகமும், ஆமையும், நற்றுணையும், முதுநாவலும், பலிக்கல்லும் சதா உருண்டு கொண்டிருக்கும் மனதை சிறிய பிரச்சினைகள் எதுவும் அண்டி விட முடியாது என்பதை அனுபவப்பூர்மாக உணர்ந்தேன்.
நூறு கதைகளுக்கு முன்பு நுறுகதைகளுக்கு பின்பு என என்னை பிரித்துக் கொள்ள முடிகிறது. என்னை பொருத்தவரை இந்த வாழ்வை செழுமையுடன் வாழ்வதற்கு இந்த நூறு கதைகள் போதும். அதை தந்ததற்காக உங்களுக்கு பெரிதும் கடன்பட்டிருக்கிறேன், சிரம் தாழ்ந்து தலைவணங்குகிறேன்.
நன்றி ஐயா.
முத்து
வடகரை.
அன்புள்ள ஜெ
நூறுகதைகளையும் இப்போதுதான் வாசித்து முடித்தேன். மொத்தமாக ஒரு இரண்டாயிரம் பக்கம் இருக்கலாம். ஆனால் இரண்டாயிரம் பக்க நாவல்போல அல்ல. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வுநிலையில் உள்ளன.
எனக்கு முதலில் தோன்றிய நினைப்பு என்னவென்றால் பொதுவாக நம்முடைய சிறுகதைகள் இரண்டுவகையான சிக்கல்களுக்கு ஆளாகியிருக்கின்றன. ஒரு சிக்கல் சர்வசாதாரணமான ஏதாவது ஒரு விசயத்தை பொதிந்து வைத்து புதிர்போடுவது. ஒரு சின்ன வட்டத்திற்குள் விடுகதை போட்டுவிளையாடுவதுபோலவே பலர் கதைகளை எழுதினார்கள்.
இன்னொரு பாணி என்னவென்றால் வாழ்கையை அப்பட்டமாகச் சொல்கிறோம் என்றபேரில் காமத்தையும் வன்முறையையும் எழுதிவைப்பது.
காலந்தோறும் இலக்கியம் அளித்துவந்த அழகுணர்வும் அறவுணர்வும் இலக்கியத்தில் அருகிப்போய்விட்டது. இந்தக்கதைகளில் பலகதைகளில் கனவும் அழகும் அறவுணர்ச்சியும் நிறைந்திருந்தன. எனக்குப்பிடித்த பலகதைகள். நூறுகதைகளில் ஒரு நாற்பது கதைகளை கிளாசிக் கதைகள் என்று சொல்லிவிடுவேன்.
தங்கப்புத்தகம், கரு இரண்டுமே எனக்கு மிகப்பெரிய அனுபவத்தை அளித்தவை. ஆனால் மேஜிக்கலான இரண்டு கதைகள்தான் மனசிலேயே நின்றுகொண்டிருக்கின்றன. ஒன்று மாயப்பொன். இன்னொன்று ஆடகம். இரண்டுமே மாயம்கலந்த ஒருவகையான கனவுகள். நன்றி
எம்.பிரபாகர்