வண்ணங்களை மீட்டெடுத்தல்

எங்கள் சாரதாநகர் நுழைவில் ஒரு சிறிய குளம் இருக்கிறது, பஞ்சாயத்துக்குச் சொந்தமானது. அதற்கு சற்று உயரத்திலேயே பேச்சிப்பாறை கால்வாய் ஓடுகிறது. ஆகவே பெரும்பாலும் நீர் இருக்கும். ஆனால் அடித்தளம் சேறுதான். நீர் தூய்மையானது அல்ல.

தூய்மையற்ற நீர்தான் தாமரைக்கும் அல்லிக்கும் விருப்பமானது. இப்பகுதியின் சேற்றுக்குளங்கள் முழுக்க தாமரை மலர்ந்து பொலிந்திருக்கின்றன. நான் ஒரு சுற்று காலைநடை முடித்து மீள்வதற்குள் குறைந்தது நான்கு தாமரைக்குளங்களை பார்த்துவிடுகிறேன். பெரும்பாலும் இளஞ்சிவப்புத்தாமரை. ஒரே ஒரு ஏரியில் மட்டும் வெண்தாமரை

ஆனால் இந்த சிறிய குளத்தில் மட்டும் செவ்வல்லி. செந்நிறம் என்று சொல்லமுடியாது, இன்றைய புடவையழகியலில் அதை மெரூன் என்று சொல்லவேண்டும். அருண்மொழி இன்னும் துல்லியமாக நிறம் சொல்வாள். ஆனால் எல்லாமே அஞ்சறைப்பட்டி, தீனி நிறங்கள்.

வெந்தயக்கலர், பாசிப்பருப்புக் கலர் இரண்டுக்கும் நடுவே மெல்லியவேறுபாடுதான். மாம்பழக்கலர் ஆரஞ்சுக்கலர் இரண்டும் வேறுவேறு என்பது பெண்களுக்குத்தான் தெரியும். பெண்களை அறிந்த ஜாக்கெட்பீஸ் விற்பனையாளர்களுக்கும் தெரியும். ஆனால் அவர்களேகூட வாடாமல்லிக் கலர்,தீப்பெட்டிக் கலர், கத்திரிப்பூ கலர் நடுவே திக்கு தெரியாமல் நின்றுவிடுவதைக் கண்டிருக்கிறேன்

ஒவ்வொரு நீர்நிலையின் அருகிலும் கொஞ்சநேரம் நின்று பூக்களைப் பார்க்கவேண்டும் என்று வைத்திருக்கிறேன். காரணம், அப்படி திட்டமிட்டு நின்று பார்க்காவிட்டால் நாம் பூக்களை பார்க்கமாட்டோம் என்பதுதான். பெரும்பாலும் கடந்துசென்றுவிடுவோம். இருபது ஏக்கர் பரப்புள்ள சோழர்கால ஏரி மொத்தமாகவே தாமரையாய் மலர்ந்து செவ்வெளியாக கிடக்கிறது. அருகே காலைநடை செல்பவர்கள் திரும்பியே பார்ப்பதில்லை

ஏனென்று யோசித்தபோது தோன்றியது, இந்நூற்றாண்டின் சிக்கல் அது என. நான் சின்னப்பையனாக இருக்கும்போதே செயற்கை வண்ணங்கள் குறைவு. பெயிண்ட் வண்ணங்கள் வந்துவிட்டன, ஆனால் அவை விலைகூடியவை. வீடுகளுக்கு வண்ணம்பூசும் வழக்கமே அன்றெல்லாம் இல்லை. எல்லா வீடுமே வெண்சுண்ணப்பூச்சு கொண்டவைதான். பத்திரிகைகளில் அட்டையில் மட்டும் இரண்டு வண்ணம். உள்ளே கறுப்புவெள்ளை படங்கள்தான். சினிமாக்களிலேயே வண்ணம் அரிது. “வண்ணக்கலர்’ என்று படங்களுக்கான போஸ்டர்களில் குறிப்பிடுவார்கள்.சினிமா போஸ்டர்கள்கூட கருப்புவெள்ளைதான். நடுவே ரத்தம் மட்டும் சிவப்பாக பூசப்பட்டிருக்கும்.

திரைச்சீலைகள் என்ற ஏற்பாடே இல்லை. பெண்கள் ஓரிருவர் வண்ணப்புடவைகள் அணிவார்கள். பருத்தித்துணியில் வண்ணங்கள் பளிச்சிடுவதில்லை. நூலால் உருவாக்கப்பட்ட வண்ணங்கள் பெரும்பாலும் மங்கலானவை. இளம்பெண்கள் முக்கியமான ஏதாவது நிகழ்ச்சிக்குச் சென்றால் மட்டும்தான் வண்ணங்கள் கொண்ட ஆடைகள் அணிவார்கள். அதிலும் மலையாளிப்பெண்கள் ஜாக்கெட் மட்டும்தான் சிவப்பு நீலம் என அணிவது. புடவை எப்போதுமே சரிகையிட்ட வெள்ளைதான்.

ஆண்கள் வண்ண ஆடை அணிவது ‘பொட்டைத்தனம்’ என்று கருதப்பட்டது. நானெல்லாம் வண்ணச்சட்டை அணிந்தது இருபது வயதுக்குமேலேதான். என் அப்பா இளநீலம், தவிட்டுநிறம், சாம்பல்நிறம் என மூன்றுநிறங்களில் பின்னி சீட்டித்துணியைத்தான் எங்களுக்கு எடுத்துத் தருவார். கால்ச்சட்டை எப்போதுமே காக்கி அல்லது கருப்புதான்.

மொத்தத்தில் வண்ணம் என்பதே இயற்கையில் தான் இருந்தது. ஆகவே வண்ணம் என்பது ஒரு எதிர்பாராத பரிசு. அல்லது காத்திருந்த கொடை. காட்டில் வேங்கை பூத்திருக்கிறது என்று கேட்டு கிளம்பிச் சென்று பார்த்துவருவோம். பட்டாணிக்குளத்தில் தாமரையைப் பார்க்க பெண்கள் கிளம்பிச் செல்வார்கள். எந்தப் பூ எப்போது பூக்கும், எந்த வண்ணம் கொண்டிருக்கும் என்றெல்லாம் தெரியாதவர்களே இல்லை

இன்று எங்கும் வண்ணங்கள். வீடுகளெல்லாம் பலவண்ணங்களில் பளிச்சிடுகின்றன.ஆடைகள் கண்களை நிறைக்கின்றன. தொலைக்காட்சியில் வண்ணம். செல்பேசியில் வண்ணம். விளம்பரப்பலகைகளில், விளக்கொளிகளில் வண்ணம். திடீரென்று கண்கள் வண்ணத்துக்குச் சலித்து வண்ணத்தை காணாமலாகிவிட்டன. பூமிமேல் வண்ணம் சலித்துப்போன ஒரு காலம் வந்துவிட்டது.இன்று வண்ணம் தன் உட்பொருளையும் மேன்மையையும் இழக்கிறது

வண்ணத்துக்கு மீள்வதென்றால் திட்டமிட்டு, கண்களைப் பழக்கிக்கொண்டு மலர்களுக்குச் செல்வதுதான். எந்த வண்ணத்துப்பூச்சியும் பெயிண்ட் பரப்பில் வந்தமர்வதில்லை. துணிகளை தேடிச்செல்வதில்லை. அவை இயற்கை வண்ணங்களை அறிகின்றன. அவற்றையே நாடுகின்றன. அந்தக் கண்களை நாமும் பழகிக்கொள்ளவேண்டும்.

ஜெ
செவ்வல்லியின் நாள்
முதல்மழைக்குப்பின்…
செல்வது மீளாது
பார்வதிபுரம் கணியாகுளம் பாறையடி ஓர் ஏக்கம்
கணியாகுளம்,பாறையடி…
கணியாகுளம்-ஆலம்பாறை:என் மாலைநடை வழி
ஆனைக்கல் துளிச்சொட்டு சாஸ்தா
குன்றுகள்,பாதைகள்
முதல் மழை
வரம்பெற்றாள்
இடவப்பாதி
குருகு
ஒருநாள்
வாசிப்பறை கடிதங்கள்
அம்மை
முந்தைய கட்டுரைகதைகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு சுவரொட்டிகள்