கணையாழி,டார்த்தீனியம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். அண்ணன் அவர் வீட்டில் இருந்த பழைய  இதழ்களைக் கொண்டு வந்துக் கொடுத்தார். அதில் இருந்தது. படத்தை உங்களுக்கு அனுப்ப வேண்டுமென்று தோன்றியது :)

நன்றி,
சங்கர்

அன்புள்ள சங்கர்

மெடுஸாவின் தலையை வெட்டவேண்டுமென்றால் அதை நேருக்குநேர் பார்க்கக்கூடாது. அதைப்போலத்தான் தனிப்பட்ட கடுந்துயர்களும். நேரடியாக அவற்றை எழுதமுடியாது. நிலைகுலைந்துவிடுவோம். மிகையுணர்ச்சி வெளியாகலாம்.

டார்த்தீனியம் உண்மையில் என்னுடைய சொந்தவாழ்க்கையின் இன்னொரு வடிவம். என் சொந்தக்குடும்பத்தின் சிதைவு. ஆனால் அதை நேரடியாக எழுதமுடியுமா என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. வேறுவகையில் எழுதவேண்டும், முற்றிலும் வேறொன்றாக என எண்ணி முயன்றேன்.

அதை ஒரு மிகுபுனைவாக ஆக்கினேன். அதில் வரும் அப்பா அம்மா எல்லாமே வேறு. ஆனால் நாய் பசு எல்லாமே உண்மை. அது ஒரு விசித்திரமான கலவை. இன்று அக்கதையை திருப்பிப் படிக்க முடியுமா என்று தெரியவில்லை

ஜெ

***

அன்புடன் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம் விழைகிறேன்.  போன ஞாயிறு இந்தக் கணையாழியை எதேச்சையாக என் சிறு புத்தக சேகரிப்பிலிருந்து எடுத்தேன்.  புத்தகம் சற்றே பழசாகத் தொடங்கியிருந்தது. உங்களை நான் முதலில் படித்து இருபத்தேழு வருடங்களாகிவிட்டதென்பது ஒரு இனம்புரியாத உணர்வை அளித்தது.  பழைய புகைப்படங்கள், புத்தகங்கள், இடங்கள் அளிக்கும் நினைவுகள் சுகமானவைதான்.  பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் புத்தகக் கடையில் சொல்லிவைத்துத்தான் கணையாழி வாங்கவேண்டும் அப்போதெல்லாம்.  இதையும் அப்படித்தான் வாங்கினேன்.  ‘இரவு’ படித்துவிட்டு உங்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ‘டார்த்தீனியம்’ படித்த ஒரு இரவின் அனுபவத்தைப் பகிர்ந்திருந்தேன்.    ஒருமுறை மீள்வாசிப்பு செய்தபோது, சில அவதானிப்புகள் உங்களில் ஆரம்பத்தில் நிறைந்து பின் தற்போது பேருருக்கொண்டு தொடர்வதுபோலிருந்தது. இந்தக் கதையை தட்டச்சு செய்து இத்துடன் அனுப்பியுள்ளேன்.  இதைப் படிக்காத வாசகர்கள்  ஒரு புது அனுபவத்தைப் பெறக்கூடும்.

நன்றியுடன்

நா. சந்திரசேகரன்

சென்னை

***

அன்புள்ள சந்திரசேகரன்

டார்த்தீனியத்தை வாசிக்கும் மனநிலை கூடவில்லை. வாசித்துப் பார்க்கவேண்டும். அது பழையநினைவுகளுக்குள் செல்வதுபோல

ஜெ

***

முந்தைய கட்டுரைஎன்றுமுள ஒன்று
அடுத்த கட்டுரைகதைகள், கடிதங்கள்