தன்தேர்வு

பி.எல்.சாமி

அன்புள்ள ஜெ

சில காலமாகவே என் மனதில் இருப்பவை இந்த கேள்விகள். உங்களிடம் கேட்கலாமா வேண்டாமா என நினைத்து ஒத்தி போடப்பட்டிருந்தவை தான். இப்போது செயலை செய்ய தொடங்கி விடலாம் எனும்போது முடிவாக என் ஐயங்களை உங்களிடம் கேட்டு தீர்த்து கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். என்னை குழப்பத்திலிருந்து விடுவிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இக்கடிதத்தை எழுதுகிறேன்.

என் அம்மா மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமை பணி தேர்விற்கு தயாராக சொல்கிறார்கள். நானும் சரி என்று அரை மனதோடு கூறி வைத்திருக்கிறேன். இன்னும் எந்த செயலையும் தொடங்கவில்லை. அதற்கு காரணம் என் கேள்விகள் தான்.

ஒருபக்கம் எனக்கு அப்படி ஒரு தேர்வில் கலந்து கொள்ளலாம் என்ற எண்ணம் உள்ளது. இன்னொரு பக்கம் அந்த தேர்வில் நம்மால் வெற்றி பெற முடியாமா ? வெற்றி பெற்றால் அந்த வேலையில் சேர்ந்து பணியாற்ற நம் உடல் ஒத்துழைக்குமா ? நாம் கனவு காண்பது போல நேர்மையாக பணியாற்ற கூடிய திறன் நமக்கு உண்டா ? முக்கியமாக அப்படிப்பட்ட ஒரு பணி என் இயல்பிற்கு ஒத்து வருமா ? இப்படி கலந்து கொள்கிறேன் என்று சொன்னால் புத்தகங்கள் வாங்குவதற்கு தடை இருக்காது அதற்காகவே இப்படி செய்யலாமா ? அதுவும் கூட நீயாயமில்லை தானே ?

இவற்றை எனக்கு தெரிந்த இருவரிடம் கேட்டேன். அவர்கள் சொல்வது உன்னால் முடியும் எழுது. உன் வாழ்க்கைக்கு இந்த வேலை உதவியாக இருக்கும் என்றனர். உங்களிடம் கேட்ட எல்லா கேள்விகளையும் அவர்களிடம் கேட்கவில்லை. அங்கு கேட்கவும் மனம் வரவில்லை. அந்த பதில்களும் என்னை நிறைவுற செய்யவில்லை.

உங்களால் என் ஐயத்தை தீர்த்து வைக்க முடியும் என்ற எனது ஆழமான நம்பிக்கையினால் இக்கடிதத்தை எழுதுகிறேன். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஜெ.

அன்புடன்

எஸ்

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

அன்புள்ள ஜெ

இந்த கடிதத்திற்கு மீண்டும் பதிலளிக்க வேண்டும் என்று தொல்லைப்படுத்துவற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

என் கேள்விகள் பலவற்றில் உறுதியான முன் தீர்மானங்களுடனே உங்களை அணுகியிருக்கிறேன் என்பதாலேயே  அவற்றிற்கு  உங்களிடமிருந்து  பதில் கிடைக்கவில்லை என்பது நானே கண்டடைந்தது. இப்படி முன் முடிவுகள் இல்லாத கேள்விகளுக்கு தாங்கள் பதிலளித்து எனக்கு தெளிவும் ஊட்டி கொண்டு தான் உள்ளீர்கள்.

இந்த கடிதத்தில் உள்ளவையும் சோடை இல்லை என நம்புகிறேன். அதனாலேயே இந்த மறு விண்ணப்பம்.இறுதியாக இந்த தொந்தரவுக்காக மன்னிக்கவும்.

அன்புடன்

எஸ்

ஐராவதம் மகாதேவன்

அன்புள்ள எஸ்

இந்தக் கடிதத்திற்கு நான் முதலில் ஏன் பதிலளிக்கவில்லை என்றால் இது ஒருவரின் வாழ்க்கையில் உலகியல் சார்ந்து எடுக்கவேண்டிய முடிவு. அதை அவரேதான் எடுக்கவேண்டும். முடிவெடுக்கும் பொறுப்பை எந்நிலையிலும் இன்னொருவரிடம் நாம் அளிக்கலாகாது. அது நம்மை வாழ்நாள் முழுக்க இன்னொருவரைச் சார்ந்திருக்கச் செய்துவிடும்

என்ன நிகழும் என்றால், நமக்காக முடிவெடுக்க இன்னொருவரை நாடுவோம். அம்முடிவின் பொறுப்பையும் அவர்மேலேயே சுமத்துவோம். அந்த முடிவின்படி நாம் ஊக்கத்துடன் செயல்படவில்லை என்பதையோ, நாம் செய்யும் பிழைகளையோ நாம் கருத்தில் கொள்ளமாட்டோம்.

முடிவெடுக்கும் பொறுப்பை கையளிப்பவர்கள் பெரும்பாலும் அந்த முடிவெடுக்கும் இடத்தில் தாங்கள் வைத்திருப்பவர்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். மருத்துவர்களை, உணவகங்களை மாற்றிக்கொண்டே இருப்பவர்களைக் கண்டிருப்பீர்கள்.

குறிப்பாக உளவியல் சிகிச்சை செய்துகொள்பவர்கள் மருத்துவர்களை அடிக்கடி மாற்றுவார்கள். “அந்த டாக்டர் சரியில்லை புரோ, சும்மா ஏமாத்துறார்” என்பார்கள். ஒரு வட்டம் முடிந்து மீண்டும் அங்கேயே வந்துசேர்வார்கள். ஏனென்றால் உளவியலாளர் சொல்வது எதையும் அவர்கள் செய்வதில்லை. வெறுமே பேசிக்கொண்டிருக்கவும் கேட்டுவிட்டுச் செல்லவும்தான் வருகிறார்கள்.

ஒருவருக்கு இன்னொருவர் எப்படி உதவிசெய்யமுடியும், அல்லது ஆலோசனை செய்யமுடியும்? ஒருவர் தன்னுடைய பிரச்சினைகளை புறவயமாகத் தொகுத்துக்கொள்ள முடியாத உளச்சிக்கலில் இருந்தாரென்றால் இன்னொருவர் அவற்றை தொகுத்து அளிக்கமுடியும். அனுபவங்களால் முன்னோடியானவர் தன் அனுபவங்களைச் சொல்லமுடியும். அவ்வளவுதான், மற்றபடி தன் வாழ்க்கை சார்ந்த எந்த முடிவையும் எவரும் தாங்களாகவேதான் எடுக்கவேண்டும். அந்த முடிவுக்கு அவர் பொறுப்பேற்கவேண்டும். அதை நிகழ்த்துவதற்கான பொறுப்பையும் அவரே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

தியோடர் பாஸ்கரன்

இந்த விஷயத்தில் நான் சொல்வதற்கு என்ன உள்ளது? உங்கள் வாழ்க்கை சார்ந்த முடிவு. உங்களால் அதை முயலமுடியுமா, முயன்று வென்றபின் நீடிக்கமுடியுமா என்பதெல்லாமே உங்களுக்குத்தான் தெரியும். சம்பிரதாயமாக ‘அடித்து தூள்கிளப்புங்கள்’ என்ற ‘ஊக்குவிப்பு வரி’யை என்னிடம் எதிர்பார்க்கிறீர்களா என்ன? நான் இந்தத்தளத்தில் அவற்றை எழுதுவதில்லை. இவற்றில் நான் எழுதுவதெல்லாம் அடிப்படையில் வாழ்க்கைச் சிக்கல்களைப் பற்றித்தான்.

உங்கள் கேள்வியிலுள்ள வாழ்க்கைச்சிக்கல் என்பது இத்தலைமுறையில் பொதுவாகக் காணக்கிடைக்கும் ‘முடிவுக்குப் பொறுப்பேற்கத் தயங்கும் நிலை’ தான். ஆனால் இதெல்லாமே சிலவிஷயங்களில்தான். நீங்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். எவரிடமும் ஆலோசனை கேட்கமாட்டீர்கள். முடிவெடுத்து அதில் உறுதியாக நிலைகொள்வீர்கள் இல்லையா?

குடிமைப்பணித் தேர்வு என்பது ஓர் உச்சபட்ச தேர்வு. அதை இலக்காக்கி முழுவிசையையும் செலுத்துபவர்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு முக்கியமான தேர்வில் வெல்லமுடியும். ஆகவேதான் அது பரிந்துரைக்கப்படுகிறது.

அத்தேர்வில் ஏன் வெல்லவேண்டும் என்றால் அது உலகியல் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திவிடுகிறது, கவலைகளற்றதாக ஆக்கிவிடுகிறது. உலகியல் வாழ்க்கையின் கவலைகளை கடப்பவர்களால் தங்கள் அகவாழ்க்கையை சுதந்திரமாக முன்னெடுக்கமுடியும். கலைகளில் ஈடுபடுவதோ, பயணமோ, சேவையோ, ஆன்மீகமோ எதுவானாலும். இல்லையென்றால் இந்தியச்சூழலில் உலகவாழ்க்கையை நிகழத்தவே ஒருவன் தன் அறிவாற்றல், உணர்வுகள், பொழுது ஆகியவற்றில் பெரும்பகுதியைச் செலவிடவேண்டியிருக்கும்.

குடிமைப்பணியையே அறைகூவலாக ஏற்று  சாதிக்க நினைப்பவர்களுக்கான துறைகளும் அதில் உண்டு. அதை ஓர் அலைக்கழிப்பில்லாத வேலையாக மட்டுமே எடுத்துக் கொள்பவர்களுக்கான துறைகளும் உண்டு. தமிழின் மகத்தான ஆய்வாளர்களான பி.எல்.சாமி, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், ஐராவதம் மகாதேவன், தியோடர் பாஸ்கரன் போன்ற பலர் உயரதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள்தான்.

ஜெ

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

பி.எல்.சாமி

பாவைக்களியாட்டம்

நமது ஊற்றுக்கள்

முந்தைய கட்டுரைஞானி,அழகியல்- கடிதமும் பதிலும்
அடுத்த கட்டுரைஎன்றுமுள ஒன்று