ஞானி,விவாதங்கள்- கடிதங்கள்
ஞானி- கடிதங்கள்
ஜெயமோகன் கவனத்திற்கு…..
வணக்கம்
முதலில் ஒரு சந்தேகம். மெய்யியல் என்பதை எந்தப்பொருளில் புழங்குகிறீர்கள் என்று தெரியவில்லை. நண்பர்களிடம் விசாரித்ததில் philosophy, ideology, metaphysics என்று விதம் விதமாகச் சொன்னார்கள். தத்துவம் என்ற சொல்லையும் நீங்கள் சேர்த்துச் சொல்லியிருப்பதால் இந்தக் குழப்பம். இந்த மூன்று சொற்களிலும் சேராமல் தமிழ்க்கருத்துலகப்பின்னணியில் மெய்யியல் என்பது ஒரு புதிய அர்த்தத்தைக் கூட உருவாக்கிக் கொள்ளலாம். மேற்கூறிய மூன்றும் இணைந்ததாகக் கூட அச்சொல்லாக்கம் அமையலாம். நடைமுறை வாழ்க்கையில் புலனறிவை உள்ளடக்கியும், புலனறிவைத்தாண்டியும் தத்துவார்த்தப் பார்வை கொண்டவர்கள் இந்தியர்கள். எங்கெங்கும் காணப்படும் நடைபாதைக் கோயில்கள் இதற்கு உதாரணம். எனது சம்பந்தியிடம் ‘உங்கள் குலதெய்வம் எது? ‘ என்று கேட்டேன். ‘அப்படியொன்றுமில்லை. கெடாய் வெட்டும்போது ஒரு சாமியைப் பிடித்து வைப்போம். அதுவே குலதெய்வம்’ என்று சொன்னார்.
இந்தப் பெயர்க்குழப்பம் தான் ஞானி அவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தைப் பெறாமலிருந்தத்தற்குக் காரணம் என்று தோன்றுகிறது. உங்களது கட்டுரைகளைப் படித்த பின் ஞானியைப் பற்றி நான் உருவாக்கி வைத்திருந்த பிம்பம் உடைந்து அதை விட முற்றிலும் மாறுபட்ட வசீகரமான ஒன்றாக மாறியிருக்கிறது. ஏற்கனவே இருந்த பிம்பம் நோய்க்கூறு படிந்த ஒன்றாக இருந்ததற்குக் காரணம் அவர் மார்க்சீயம் என்பதை சர்வரோக நிவாரணியாகக் காட்டியதால் தான். வெகுசனப் புரிதலில் மார்க்சீயம் என்பது அரசியல் சித்தாந்தத்தோடேயே பிணைக்கப் பட்டு விட்டதால் அவரை நிராகரிப்பது வெகு எளிதாகப் போயிற்று. என்னைப் போலவே வேறு பலரும் இத்தகைய அலட்சியத்தைக் காட்டியிருப்பார்கள். உங்கள் கட்டுரைகள் அவர்களது புரிதலில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும்.
இந்திய சூழலில் மார்க்சீயத்தை வைத்துப்பார்த்து, பெரும் அலசல்களுக்கு அதை உட்படுத்தி அதன் இயங்கியல் பண்புகளை முன்னிறுத்திய அவர் (அல்லது நீங்கள்) இந்தக் கண்டுபிடிப்புக்கு ஏன் புதிய பெயர் கொடுத்திருக்கக் கூடாது? மார்க்ஸ் தொழிற்புரட்சிக்குப் பின்னான, பெரும்பாலும் ஒற்றைத்தன்மையுடைய பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய சமூகத்தைச் சார்ந்தே தனது சித்தாந்தத்தை உருவாக்கினார், ஆனால் ஞானி அதை விட பன்மடங்கு ஆழமான, பலவகைகளில் சிக்கலான இந்திய, தமிழ் சமூகத்தை தன்னால் உருவாக்க முடிந்த வரையிலான ஆய்வு அளவு கோல்களால் உருவாக்க முயற்சி செய்திருக்கிறார். அந்த சித்தாந்தத்தை வெறும் மார்க்சீயம் என்ற அளவுகோலால் மட்டும் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? அசலான சிந்தனாவாதம் என்பது இந்தியர்களுக்கு எட்டாத ஒன்றா அல்லது தனது சித்தாந்தத்திற்கு ஒரு புதிய பெயர் கொடுக்க முடியாத அளவுக்கு ஞானியின் படைப்பாற்றல் வற்றியிருந்ததா? மாறிவரும் அரசியல், சமூக, பொருளாதார, அரசியல் கூறுகளைப் புரிந்து கொள்ளாமல், அதற்குரிய கருத்தாக்கங்களையும், கருதுகோள்களையும் உருவாக்கிக் கொள்ளாமல் முற்றிலுமாகத் தேய்ந்துபோன ஒரு சொல்லைத் தனது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொண்டிருந்ததே ஞானியின் தீயூழுக்குக் காரணம்.
நீங்கள் இவரைப் பற்றிய இத்தனை தகவல்களை இதற்கு முன் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. அப்படியில்லையென்றால் ஞானியின் மாற்றுப்பிம்பத்தை உருவாக்குவதில் ஏன் இத்தனை தாமதம் செய்தீர்கள் என்று புரியவில்லை. அவருக்கு நீங்கள் எந்த அளவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறீர்கள் என்று அறிந்த பிறகு இதைக் கேட்கத் தோன்றுகிறது
ஒரு தமிழ் மாணவனாகிய எனக்கு ஞானி ஓர் இலக்கிய விமர்சகராகவே அறிமுகமானார். ’வெளிச்சங்கள்’ தொகுப்புக்கு எழுதிய முன்னுரை போன்ற அவரது சில கவர்ச்சிகரமான எழுத்துக்கள் என்னைக் கவர்ந்திருந்தாலும் பேராசிரியர் ஜேசுதாசன் நெறிப்படுத்திய அழகியல் வெளிச்சத்தில் படைப்புக்களைப் பார்த்துப் பழகிப்போன எனக்கு அவரது தெரிவுகள் குழப்பத்தை ஏற்படுத்தின. பேராசிரியர் மூலம் தெரிய வந்த அழகியல் பள்ளியைச் சேர்ந்தவர்களுடைய தெரிவு பெரும்பாலும் மோசம் போகாது.ஆனால் தனக்கென்று ஒரு சித்தாந்தப் பள்ளியைத் தேர்வு செய்து கொண்ட ஞானிக்கு இதில் எந்தப் பயிற்சியும் இருக்கவில்லை. சந்தையில் காய்கறி வாங்கும்போது அதன் தரம் பார்த்து வாங்காமல் முத்தல், சொத்தல் எல்லாவற்றையும் (அது காய்வகை என்ற ஒரே காரணத்திற்காக) கூடையில் அள்ளிப் போட்டுக்கொள்ளும் அவரது பாணி சலிப்பையும், எரிச்சலையும் ஊட்டியது.
அவர் சிலாகித்த எத்தனை எழுத்தாளர்கள் காலத்தை வென்று நின்றார்கள்? மறுபடியும் ‘வெளிச்சங்கள்’ தொகுப்புக்கே வருகிறேன். அதில் 33 கவிஞர்களின் 55 கவிதைகள் சேர்க்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட ‘வானம்பாடி’ இயக்கத்தின் கொள்கை அறிக்கையாகவே அது இருந்தது. முன்னுரையில் இறுதியில் ஞானி சொல்கிறார்: ‘ஒன்றை உறுதியாகக் கூறுவேன். இவர்களிலிருந்து மகாகவிகள் உருவாவர். இவர்களால் தமிழ்க்கவிதை உலகக் கவிதையின் உயரத்திற்கு நிமிர்ந்து நிற்கும்’. இவரது எதிர்பார்ப்பில் இப்போது தென்படுகிற பெயர்கள் சிற்பி, புவியரசு, மேத்தா, மீரா, இன்குலாப் ஆகியவை மட்டுமே. இதில் உலகக் கவிதையின் உயரத்திற்கு எழுதியவர்கள் எத்தனை பேர் என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். ஒரு சிந்தனையாளராக ஞானியின் பெயரை ஆட்டம் காண வைத்தது அவரது இலக்கிய விமர்சன அளவுகோல்கள். அவர் தனக்கான ஒரு ரசனை நம்பகத்தன்மையை உருவாக்கிக் கொள்ளவில்லை. ஓர் இலக்கிய விமர்சகராகத தரசனை நம்பகத்தன்மையே இல்லாதபோது சித்தாந்த நம்பகத்தன்மை எப்படி உருவாகும்?
ஞானி மீதான கனவு பொய்த்துப் போனதற்கு மேலும் சில காரணங்களைச் சொல்லலாம்.
இலக்கியத்தைத் தாண்டி அரசியல், சமூகம், பண்பாடு என்று வந்து விட்டாலே அவர் ஒரு பொதுவெளி அறிவு ஜீவி ஆகிறார். அப்படியானால் அவர் ஒரு ‘நடுத்தெருப்போராளி’ என்று அர்த்தம். கர்நாடகத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தி, கிரீஷ் கார்நாடு, ஜி.கே.கோவிந்தராவ் ஆகியோர் பலமுறை தெருவுக்கு வந்து போராடியிருக்கிறார்கள். இறப்பதற்கு சில மாதங்கள் முன்பு கூட ‘நான் ஒரு நகர்சார் நக்சலைட்’ என்ற போர்டை மாட்டிக்கொண்டு கார்நாடு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சமீபத்தில் ராமச்சந்திர குஹா டவுன்ஹால் முன்னால் குடியுரிமை எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட போது போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்டார். ஞானி எத்தனை போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்?
ஐரோப்பிய நவமார்க்சீயவாதிகள் ’சாய்வு நாற்காலி சித்தாந்தவாதிகள்’ என்று சொல்வீர்களானால் ஞானி மட்டும் அவர்களிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகிறார்?
தமிழாசிரியர்களின், தமிழ் ஆய்வாளர்களின் சீரழிவு இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்கிவிட்டது. அதாவது அவர்கள் சமூகத்திலிருந்து, அதன் பண்பாட்டுப்பிரச்சினைகளிலிருந்து விலகிப் போனார்கள். நாயக வழிபாடாகத் தேய்ந்துபோன திராவிட இயக்கம் இதற்குப் பெரும் பங்களிப்புச் செய்தது. பல்கலைக்கழக ஆசிரியர்களின் நிலையே இதுவானால் பள்ளித்தமிழாசிரியர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஆனால் ஞானியின் வழிபாட்டுக் கேந்திரம் அவர்களாகவே இருந்தது. பெரியாரின் சீர்திருத்த வழிமுறைகளையும், அதற்குப் பயன்படுத்தப் பட வேண்டிய மொழிநடையையும் நன்கு அறிந்திருந்த ஞானி, அதை நியாயப் படுத்திய ஞானி அவர்களை நோக்கி எந்தச் சாட்டையையும் சுழற்றியதாகத் தெரியவில்லை. மாறாக நாயக வழிபாட்டை உள்ளூர ரசித்துக் கொண்டிருந்தவராகவே தெரிந்தார். (சந்திப்புகளில் இனிக்க இனிக்கப் பேசும் இவர்கள் அதே நபர்களைப் பற்றி அவர்களுக்குப் பின்னால் என்னவெல்லாம் பேசுவார்கள் என்பது ருசிகரமான விஷயம்) இப்போதிருக்கும் பண்பாட்டுச் சீரழிவை தமிழாசிரியர்கள் முற்றிலுமாகத் தவிர்த்திருக்க முடியும் என்று சொல்லவில்லை. ஆனால் நிச்சயமாக சில அணைகளைப் போட்டிருக்கலாம். அதறகுத் தகுதியான ஒரே தமிழாசிரியராக ஒட்டு மொத்தத் தமிழகத்திற்கும் ஞானி ஒருவரே இருந்தார். அவர் காளீஸ்வரர் நகரை விட்டு வெளியே வந்ததாகத் தெரியவில்லை
ஞானியின் சித்தாந்த முடிவுகள் எல்லாமே புத்தக வழிப்பட்டவை. கள ஆய்வு, வாய்மொழி வரலாறு என்பதை முன்னிறுத்திச் செய்யப்பட்டவை அல்ல. இவற்றின் வழியாகவே தங்களது ஆய்வு முடிவுகளைக் கண்டறிந்த கோசாம்பி போன்றவர்களது ஆய்வு நெறிமுறைகள் கூட ஞானியைப் பாதிக்கவில்லையா? எழுபதுகளில் ஐயப்ப வழிபாடு பிரபலமாகிக் கொண்டிருந்தபோது அது ஒரு சமூக அங்கீகாரத்திற்கான மலினமான குறுக்கு வழி என்று ஞானி சொன்னார். இதையே அனந்தமூர்த்தி இதில் சமூகச் சமநிலையைப் பார்க்கிறேன் என்று சொன்னார். இத்தனைக்கும் அப்போதைய ஐயப்ப பக்தர்கள் எல்லோருமே சமூகத்தின் கீழ்த்தட்டில் இருந்தவர்கள்.
எத்தகைய சமூக ஆய்வாளனும், பண்பாட்டு விமர்சகனும் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திலிருந்தே தொடங்குவான். ஞானியைச் சுற்றி இருந்தவை வரலாற்று இறுக்கமுடைய உழவர் சமூகமும் (நிலம் உடையவர்களாக இருந்தாலும் அது நில உடைமைச் சமூகமல்ல) அப்போது தான் தோன்றியிருந்த முதலாளித்துவ சமூகமும் தான். அவரது தாய் வழியில் முந்தைய சமூகத்துடனும், அவரது மனைவி வழியில் பிந்தைய சமூகத்துடனும் அவருக்குப் பரிச்சயம் இருந்திருக்க வேண்டும். இந்த இரண்டு சமூகங்கள் குறித்து இவரது புரிதல்கள் என்ன? ஓற்றைத்தன்மையுடைய சித்தாந்த அளவுகோல்களைக் கொண்டாவது இவற்றை எடை போட்டிருக்கிறாரா? இதன் ஊள்ளூர்த்தன்மைகளைப் (native characteristcs) பற்றி முடிவுகள் கண்டிருக்கிறாரா?
திராவிடச் சமூகம் பற்றியும், திராவிடப் பண்பாடு பற்றியும் பற்றியும் நீதிக்கட்சியிலிருந்து தொடங்கி, பெரியார் வழியாக பல கட்டுக்கதைகள் புனையப்பட்டு அவைகள் இப்போதும் செல்வாக்கோடு இருக்கின்றன. கடவுள் மறுப்பு, எதிர்மறையான பகுத்தறிவு என்பவை இந்தக் கட்டுமானத்தின் மிக மிக வெளிப்படையான உதாரணங்கள். தனிப்பட்ட முறையில் இதற்கு எதிரான அபிப்பிராயங்கள் வைத்துக் கொண்டிருந்தாலும் பொதுவெளியில் இது பற்றித் தான் கண்ட உண்மையான தோற்றத்தை ஞானி எங்காவது முன் வைத்திருக்கிறாரா? தொன்மங்கள், நம்பிக்கைகள், புராணங்கள், சாதி மரபு வழியாக வந்த மேன்மையான விழுமியங்கள் என்பவற்றை அடித்தளமாகக் கொண்டு காலங்காலமாக வந்த இந்த சமூகங்களை மேற்கூறிய எளிமைப்படுத்தப்பட்ட (கடன் வாங்கிய) அளவுகோல்களால் மட்டும் அளந்துவிட்டு நிறுத்திக் கொண்டது ஏன்?
தன்னளவில் கூர்த்த சிந்தனைகளை வைத்துக்கொண்டிருந்தாலும் ஞானி ஒரு சிந்தனைப்பள்ளியை உருவாக்கிக் கொள்ளவில்லை. ஒரு பள்ளியை உருவாக்கும் அளவுக்கு அவரது சிந்தனைகள் ஏன் செல்வாக்குப் பெறவில்லை? இந்த வகையில் உடனடியாக நமக்கு நினைவுக்கு வருபவர் நா.வானமாமலை. அவரது ‘ஆராய்ச்சி’ பத்திரிகையும், நாட்டாரிலக்கியத்திற்கு அவரது பங்களிப்பும் மட்டுமல்லாமல் ஆ.சிவசுப்பிரமணியம் போன்ற ஆய்வாளர்களையும் உருவாக்கியது குறிப்பிடத்தக்க விஷயம். கல்விப்புலத்தில் கூட வானமாமலையின் பாதிப்பு கவனிக்கத்தக்கதாக இருந்திருக்கிறது.
ஞானியின் சித்தாந்தப் பிடிப்பு நம்ப முடியாத ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாக இருந்திருக்கிறது. அதற்கான உடனடி உதாரணம் உங்களை ‘வெளியாளாக’ப் பார்த்தது தான். கொஞ்சம் விட்டிருந்தால் ‘தாக்கரே’ மாதிரியாகக் கூட உருவாகியிருப்பாரோ என்னமோ?
அறச்சீற்றம், அறக்கோட்பாடுகள் என்பவை அறப்போராட்டத்திற்கே இட்டுச்செல்லும். ஒரு பண்பான மனிதர் என்ற வகையில் அவருக்கிருந்த தொடர்புகளை வைத்துக்கொண்டு ஞானி பிராந்திய அளவில், மாநில அளவில் ஏன் இந்திய அளவில் கூட ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கலாம். அந்த அமைப்பு ஒரு மெய்நிகர் அமைப்பாகக் கூட இருந்திருக்கலாம். ஆதிக்கக் கருத்தாக்கங்களுக்கெதிராக தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்கக் கூடிய சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருந்திருக்கலாம். கருணாநிதி, ஜெயலலிதா விலிருந்து சாலமன் பாப்பையா வரை எத்தனையோ பேர் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்கள் அந்த முயற்சியில் சில சறுக்கல்கல் ஏற்பட்டிருக்கலாம். அது நடக்கக் கூடியது தான்.
இவையெல்லாம் தமிழ்க்கருத்துலகிற்கு ஞானியின் பங்களிப்பை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடும் முயற்சியாகக் கருதப்படக்கூடாது. அவரைப்பற்றிய உங்கள் நினவு கூறலுக்கு ஒரு எதிர்வினை மட்டுமே.
மேலோட்டமாகப் பார்க்கிறபோது உங்கள் நினைவு கூறல் உங்களது படைப்பாக்கங்களுக்கான பின்னணியில் அவரது பங்களிப்பு என்ன என்பதைப் பற்றியும், உங்களது ஆளுமை உருவாக்கத்தில் (வெவ்வேறு பிரக்ஞைகளாக) அவரது பாதிப்பு என்ன என்பதைப்பற்றியும் பேசுவதாகவே தெரிகிறது. இதைத் தவிர்த்திருக்கலாம். ஒரு காலகட்டத்திய தமிழ்ச்சிந்தனைப் போக்கிற்கு உங்கள் இருவரது பங்களிப்பு என்ன என்பதில் கவனம் செலுத்தியிருந்தால் இது மேலும் பொருளுடையதாக இருந்திருக்கும். பிறிதொரு சந்தர்ப்பத்தில் நீங்கள் இதைச் செய்யலாம்.
அன்புடன்
ப.சகதேவன் (ப.கிருஷ்ணசாமி)
பெங்களூர்
அன்புள்ள ப.கிருஷ்ணசாமி அவர்களுக்கு,
நலம்தானே? ஓய்வு வாழ்க்கை எப்படிச் செல்கிறது?
உங்கள் கடிதம் விரிவானது. சிலவற்றுக்கு மட்டும் நான் விளக்கம் அளிக்கிறேன். மற்றபடி ஞானியின் மீதான உங்கள் விமர்சனங்களின் கோணத்தை ஏற்கிறேன்
மெய்யியல் என்ற சொல் ஞானி உருவாக்கியது அல்ல. சோவியத் ருஷ்ய மொழியாக்கங்கள் வழியாக இங்கே நுழைந்தது அது. அது சோவியத் மொழியாக்கங்களில் epistemology க்கு நிகரான சொல்லாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் Ontology க்குச் சமானமான சொல்லாக அது கையாளப்பட்டது. மெல்லமெல்ல Alethiologyக்கு சமானமான சொல்லாக மாறியது. இப்போது அந்தப்பொருளில்தான் அது கையாளப்படுகிறது.
ஞானி போன்றவர்கள் அதைக் கையாண்டவிதம் என்பது மதம் அற்ற Theology என்ற பொருளில். Theology அவர்களால் இறையியல் என அழைக்கப்பட்டது. மெய்யியல் என்னும் சொல் அடிப்படைக் கேள்விகள்,விழுமியங்கள்,அறவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்று.
பொதுவாக தத்துவ விவாதம் என்பதே சொற்களை தொடர்ச்சியாக அர்த்தவிரிவு, அர்த்த மாற்றம் அடையச்செய்வதாகவே இருக்கும். எல்லா விவாதங்களுக்குப்பிறகும் கலைச்சொற்களின் அர்த்தங்கள் சற்று மாறுதல் அடைகின்றன. மெய்யியல் என்ற சொல் அப்படி அரைநூற்றாண்டு விவாதங்கள் வழியாக உருமாற்றம் அல்லது பரிணாமம் அடைந்த சொல்.
ஒரு சூழலில் ஒரு சொல் ஒரு பண்பாட்டுச்சூழல், அறிவியக்கச்சூழல் வழியாக பொருளேற்றம் செய்யப்படுகிறது. அது ‘சரியான’ மொழியாக்கமாக இருக்கவேண்டும் என்பதில்லை. அதற்குச் ‘சமானமான’ ஆங்கிலச் சொல்லை கண்டடையவேண்டும் என்பதுமில்லை.
மெய்யியல் என்பதை தமிழ்த் தத்துவ விவாதச் சூழலுக்கே உரிய ஒரு கலைச்சொல்லாகக் கொள்ளலாம். ஈராயிரமாண்டு மதச்சிந்தனைகளும் அதனடிப்படையிலான அறவியலும் கொண்ட ஒரு பண்பாட்டில் மதத்தைக் கடந்த ஒரு தத்துவத்தை எதிர்கொள்ளும்பொருட்டு உருவாக்கப்பட்ட கலைச்சொல் அது
*
நான் ஞானியின் சிந்தனைகளை ஒட்டுமொத்தமாகச் சுருக்கி அளித்த நான்கு உரைகளை ஆற்றியிருக்கிறேன். இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஓர் உரை அவர்முன்னாலெயே நிகழ்த்தப்பட்டது. அவற்றில் இப்போது விரிவாக எழுதியவற்றையே சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். அவருக்கு இயல்விருது கிடைத்தபோது ஆற்றிய உரை என் தளத்திலும் வெளியானது.
ஆனால் அவர் தொடர்ச்சியாக விவாதித்துக்கொண்டிருந்தவர். எழுதிக்கொண்டே இருந்தவர். இப்போது அவர் மறைந்தபிறகே ஒட்டுமொத்தமாக அவர் என்ன சொன்னார் என்று தொகுக்க முடிகிறது. அதுவே முறையானது
*
ஞானி மார்க்சியம் சர்வரோக நிவாரணி என நம்பியவரா? ஆமாம், அதுதான் அவருடைய கொள்கை. கடைசிவரை அவ்வாறே இருந்தார். அவரை அழகியல் விமர்சகர்களுடன் ஒப்பிடமுடியாது. அவர் மார்க்ஸியர்தான், மார்க்சியராகவே இலக்கியவிமர்சனம் செய்தார், அவருடைய அளவுகோல் முதன்மையாக மார்க்ஸியக்கோட்பாடுதான்
நீங்கள் சொன்ன வெளிச்சம் தொகுதியை அவர் எண்பதுகளில் முன்வைத்தார். அவர்தான் வானம்பாடிக் கவிதை இயக்கத்தின் கோட்பாட்டு அடிப்படையை அமைத்தவர். ஆனால் அந்த காலகட்டத்தில் இருந்து அவர் பின்னாளில் விலகி வந்தார். அந்த மாறுதல்களை என் கட்டுரையில் விரிவாகச் சொல்லியிருக்கிறேன்
*
ஞானியின் இலக்கியத்தெரிவுகள் அழகியலடிப்படையில் அமைந்தவை அல்ல. அவை மார்க்ஸிய அரசியலின் அடிப்படையிலும் பின்னர் தமிழிய அரசியலின் அடிப்படையிலும் அமைந்தவை. ஞானி படைப்புக்களின் அரசியலையே முதன்மையாக கருதினார். ஆனால் அதை மட்டுமே கருத்தில்கொள்ளவில்லை. அவருடைய பரிணாமத்தின் இரண்டாவது கட்டத்தில் அவர் அழகியல் அளவுகோல்களை கொண்டிருந்தார். இலக்கியத்தின் அகவயமான இயக்கத்தை கருத்தில்கொண்டார். அவ்வகையில் மற்ற மார்க்சிய விமர்சகர்களிலிருந்து வேறுபட்டிருக்கிறார்
*
என் கட்டுரையிலேயே சொல்லியிருக்கிறேன், தமிழில் வேறெந்த இலக்கியவிமர்சகர் அடையாளப்படுத்துவதற்கு முன்னரே கோணங்கியையும் என்னையும் அடையாளப்படுத்தியவர் ஞானிதான்.சுகுமாரனை அடையாளப்படுத்தியவரும் அவர்தான். எங்கள் இலக்கியத்தகுதி பற்றி எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. \
*
தமிழாசிரியர்கள், கல்விப்புலத் தமிழ்க்கல்வியின் சரிவு குறித்து தன் நூல்களில் மிகமிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் ஞானி. உலகத்தமிழ்மாநாட்டின்போது மாற்றுத்திட்டங்களை முன்வைத்து எதிர்ப்பிதழ் வெளியிட்டிருக்கிறார். தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டபோதும், அதையொட்டிய திட்டமிடல்களிலும் கடுமையான விமர்சனங்களுடன் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் சொல்லியிருக்கிறார். தமிழ்ச் சிந்தனையாளர்களில் கல்வித்துறையின் தமிழாய்வு பற்றி ஞானி அளவுக்கு கண்டனமும் விமர்சனமும் ஆக்கபூர்வ யோசனைகளும் தெரிவித்த இன்னொருவர் இல்லை.
ஆனால் இங்கே ஞானி ஒரு சிற்றிதழாளர். சிற்றிதழாளரின் குரல் எங்கு சென்று சேரும்? எவருடைய குரல் கவனிக்கப்பட்டிருக்கிறது?
*
ஞானி விழியிழந்தவர். ஆகவே அவர் களப்பணிகளில் ஈடுபடுவதற்கு எல்லையுண்டு. ஆனால் அவர் கோவையிலும் சுற்றுப்புறங்களிலும் நடைபெற்ற நூற்றுக்கணக்கான எதிர்ப்புக்கூட்டங்களில், எதிர்ப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார். பசுமையியக்கங்களில் பங்குபெற்றிருக்கிறார். வாழ்க்கை முழுக்க அவர் ஏதேனும் இயக்கங்களுடன் இணைந்து தெருப்போராட்டங்களில்தான் இருந்தார். தொண்ணூறுகளில் சூழியல் போராட்டங்களுக்காக அவர் தொலைதூரங்களுக்கெல்லாம் சென்றிருக்கிறார்
உண்மையில் அவருடன் ஒப்பிடும்போது யூ.ஆர்.அனந்தமூர்த்தியும் கிரீஷ் கர்னாடும்தான் சொகுசான உயர்குடிவாழ்க்கை வாழ்ந்தவர்கள், மக்களிடமிருந்து விலகி நின்றவர்கள், விளம்பரத்துக்காக மட்டும் ஓரிரு போராட்டங்களைச் செய்தவர்கள். அவர்கள் கர்நாடகத்தின் அடித்தளப்போராட்டங்கள் எதிலும் கலந்துகொண்டதில்லை. அவர்கள் தங்களை முன்னிறுத்தும் தனிப்பட்ட போராட்டங்களையே செய்தார்கள்
மாறாக ஞானி அடித்தள மக்களுடன் அவர்களில் ஒருவராக நிலைகொண்டவர்.கடுமையான சர்க்கரைநோய் கொண்டவராகையால் பையில் ஒரு மேரி பிஸ்கட் பொட்டலத்துடன், ஈருருளிகளின் பின்னால் அமர்ந்து பயணம்செய்து போராட்டங்களில் கலந்துகொண்டவர். வெறுந்தரையில் படுத்து ஓய்வெடுக்கும் அவரைப் பார்த்த நினைவு எனக்குள்ளது
ஞானி இயக்கங்களில் ஈடுபட்டவர் அல்ல. இயக்கங்களை உருவாக்குமிடத்திலும் அவர் இருக்கவில்லை. வானமாமலை அவ்வாறல்ல. ஆனால் ஞானியின் நிகழ், தமிழ்நேயம் இரண்டுமே இரு வகையான அறிவியக்கங்கள்தான். நிகழில் இருந்து உருவாகி வந்த எழுத்தாளர்கள் பலர் உண்டு, நான் அவர்களில் ஒருவன்.அடுத்த தலைமுறையில் இளங்கோ கிருஷ்ணன் போன்ற பலருடைய உருவாக்கத்திலும் அவருக்குப் பங்களிப்புண்டு.
ஜெ