உடையாள்-10

19, தேடல்

பிரபஞ்சம் மிகமிகப்பெரியது. அதற்கு முடிவே இல்லை. முடிவு என ஓர் எல்லை உண்டு என்று வைப்போம். அதற்கு அப்பால் என்ன இருக்கும்? அதற்கு அப்பால் என்ன இருந்தாலும் அதுவும் பிரபஞ்சம்தானே?.

பிரபஞ்சத்தின் மிகமிக தொலைவில் ஒரு கோள் இருந்தது. அதற்கு நீலப்பந்து என்று பெயர். அது பசுமையான காடுகளால் நிறைந்திருந்தது. அதில் ஏராளமான உயிரினங்கள் இருந்தன. விலங்குகள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள் எல்லாமே இருந்தன. அங்கே மனிதர்கள் வாழ்ந்தார்கள்.

அந்த உயிர்கள் எல்லாமே பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கே வந்து குடியேறியவை. அங்கிருந்த மனிதர்கள்தான் அவற்றை கொண்டு வந்தார்கள். அவர்கள் முன்பு சூரியன் என்ற நட்சத்திரத்தின் ஒரு கோளான பூமியில் வாழ்ந்தனர்.

பூமியில் அவர்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டார்கள். பூமியை துளையிட்டு அதன் உள்ளிருந்த கரியை வெளியே எடுத்து எரித்தனர். கார்பன்டையாக்சைட் வெளிவந்து பூமியை மூடியது. அதன் வெப்பம் அதிகரித்தது.

விளைவாக காடுகள் அழிந்தன. மக்கள் அங்கே வாழமுடியாமலாகியது. அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டனர். பெரிய போர்கள் நடந்தன. எளியவர்களை ஆற்றல் மிக்கவர்கள் அழித்தனர்.

அந்தப்போர்களில் எஞ்சியவர்கள் வேறு இடம் தேடி விண்வெளியில் பயணம் செய்தார்கள். அவர்கள் பல்வேறு இடங்களில் பயணம் செய்து புதிய கோள்களை கண்டுபிடித்தனர்.

கடைசியில் அவர்கள் கண்டுபிடித்த கோள்தான் நீலப்பந்து. அதில் பூமியில் இருந்தது போலவே ஆக்சிஜன் இருந்தது. தண்ணீர் இருந்தது. எல்லா விஷயங்களும் பூமியைப் போலவே இருந்தன. மிகமிக அழகான கோள் அது.

நீலப்பந்து என்ற கோளில் மனிதர்கள் புதிய வாழ்க்கையை ஆரம்பித்தனர். அங்கே அவர்கள் தங்களுக்கான வீடுகளைக் கட்டிக்கொண்டார்கள். எல்லா உயிரினங்களையும் அங்கே கொண்டு வந்தார்கள். அவை அங்கே பெருகின.

மனிதர்கள் தங்கள் எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைத்தார்கள். தங்கள் தேவைக்காக அவர்கள் காடுகளை அழிக்கவில்லை. விலங்குகளையும் அழிக்கவில்லை. நீலப்பந்து என்ற கோளை அவர்கள் மிகச்சிறப்பாக பேணினார்கள்.

ஆகவே அவர்கள் அங்கே சிறப்பாக வாழ்ந்தார்கள். அங்கே அவர்களின் அறிவு வளர்ந்தது. அவர்கள் பூமியில் இருந்து கொண்டுவந்த அறிவை பலமடங்கு வளர்த்துக் கொண்டார்கள்

பூமியில் இருந்தபோது மனிதர்களின் அறிவு தனித்தனியாக ஒவ்வொருவர் மூளையிலும் இருந்தது. அறிவாளிகளும் அறிவில்லாதவர்களும் இருந்தார்கள்.

நீலப்பந்துக்கு வந்தபின் அவர்களின் அறிவு எல்லாருக்கும் பொதுவானதாக ஆகியது. ஒருவரின் மூளை இன்னொரு மூளையுடன் நுட்பமான கருவிகளால் இணைக்கப்பட்டிருந்தது. ஆகவே அவர்கள் அனைவருமே அறிவாளிகளாக இருந்தனர்.

நீலப்பந்தில் இருந்த மனிதர்களில் ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் சாரா. அவளுடைய அக்காவின் பெயர் சாரதா. அவர்கள் இருவரும் அன்பாக இருந்தார்கள்.

நீலப்பந்திலிருந்து விண்வெளிக் கலங்கள் கிளம்பி எல்லா பக்கமும் சென்றுகொண்டிருந்தன. நீலப்பந்தில் இருந்தவர்கள் வேறெங்காவது உயிர்கள் இருக்கின்றனவா என்று அறிய ஆவல் கொண்டிருந்தனர். பல லட்சம் ஆண்டுகளாக அவர்கள் தேடிக்கொண்டிருந்தனர். அவர்கள் எங்குமே உயிர்களை கண்டுபிடிக்கவில்லை.

இன்னொரு விண்வெளிக்கலம் கிளம்பவிருந்தது. சாரா அந்த விண்வெளிப்பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டாள். அவளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

பயிற்சிகளை ஒரே நாளில் அளித்துவிட்டார்கள். அவளுக்குத் தேவையான எல்லா அறிவும் அவள் மூளைக்குள் ஒரு சிறிய கருவி வழியாக அனுப்பப் பட்டது. நுண்ணலைக் கதிர் வழியாக அனுப்பப்பட்ட செய்திகள் அவள் தலைக்குள் பதிவாயின.

சாரா தன் அக்கா சாரதாவிடம் விடைபெற்றுக் கொண்டாள். சாரதா சாராவை கட்டித்தழுவி முத்தமிட்டாள். விண்வெளிக்கலத்தில் ஏறிக்கொண்டாள்.

அந்த விண்வெளிக்கலம் மிகப்பெரியது. அது அணுவாற்றலால் இயங்குவது. அது பல லட்சம் ஆண்டுகள் நிற்காமல் செல்லக்கூடியது. அந்த விண்வெளிக்கலம் முழுக்க முழுக்க இயந்திரங்களால் இயக்கப்பட்டது.

சாரா அதற்குள் நுழைந்ததுமே ஒரு கருவியின் முன் நின்றாள். அதிலிருந்து ஒரு கதிர் வந்து அவள் மூளையை தொட்டது. அது அவளுடைய உடலில் இருந்த எல்லா செயல்பாடுகளையும் நூறில் ஒருபங்காக குறைத்தது.

பூமியில் முன்பு வாழ்ந்த உயிரினங்களில் சிலவற்றுக்கு இருந்த வழக்கம் அது. அவை கடுங்குளிர் பகுதியில் வாழ்ந்தன.குளிர்காலத்தில் அவை உடலின் உயிரியக்கத்தை குறைத்துக்கொண்டன. ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றன.

அவற்றுக்கு அப்போது உணவு தேவையில்லை. மூச்சும் மிகக்கொஞ்சமாகத்தான் ஓடும். ஏனென்றால் அவற்றின் உடலில் ஆற்றல் கொஞ்சமாகத்தான் செலவாகும்.

அந்த இயல்பைத்தான் மனிதர்கள் உருவாக்கிக் கொண்டார்கள். மூளையில் கதிரியக்கம் வழியாக அந்தத் தூக்கத்தை உருவாக்கிக் கொண்டார்கள்.

அப்போது அவர்களின் உடலில் செல்கள் எல்லாமே நூறில் ஒருபங்குதான் வளரும். எல்லாச் செயல்பாடும் நூறில் ஒரு பங்கே இருக்கும். மூச்சு நூறில் ஒருபங்குதான். இதயத்துடிப்பும் நூறில் ஒரு பங்குதான்

ஆகவே அவள் வயதும் நூறில் ஒரு பங்குதான் கூடும். அவள் நூறு ஆண்டுகள் கழித்து விழித்துக்கொள்வாள். அப்போது அவள் உடலுக்கு ஒரு வயதுதான் ஆகியிருக்கும்.

சாரா ஆயிரம் ஆண்டுகள் அந்த விண்கலத்தில் பயணம் செய்தாள். அது கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் சென்ற விண்கலம். அது வான்வெளியில் சென்றுகொண்டே இருந்தது

அந்த விண்கலத்தில் வேவுபார்க்கும் கருவிகள் இருந்தன. அவற்றின் நுண்கதிர்கள் பல லட்சம் கிலோமீட்டர் தூரம் சென்றன. அவை சுற்றிச்சுற்றித் தேடின.

எங்காவது ஆக்சிஜன் இருந்தால் உடனே அவற்றால் கண்டுபிடிக்க முடியும். உடனே அந்தக்கருவி தானாகவே சாராவை எழுப்பிவிடும். சாரா எழுந்து ஆக்ஸிஜன் உள்ள அந்த இடத்துக்குச் செல்லவேண்டும். அங்கே உயிர்கள் இருக்கிறதா என்று ஆராயவேண்டும்.

சாரா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். விண்கலம் சென்றுகொண்டே இருந்தது. அந்தக்கருவி தேடிக்கொண்டே இருந்தது. திடீரென்று அது ஆக்ஸிஜனை கண்டுபிடித்தது. உடனே சாராவின்மேல் ஒரு நுண்கதிரை வீசியது. சாராவின் மூளையில் அந்தக்கதிர் பட்டது. அவள் விழித்துக்கொண்டாள்.

சாரா எழுந்து அமர்ந்து கருவிகளை ஆராய்ந்தாள். அருகே ஒரு நட்சத்திரம் இருப்பது தெரிந்தது. அந்த நட்சத்திரம் மங்கலானது. மஞ்சள்நிறமாக இருந்தது. அதற்கு ஒரே ஒரு கோள் இருப்பது தெரிந்தது. அந்த கோளில்தான் ஆக்ஸிஜன் இருப்பதாக கருவிகள் கூறின.

சாரா தன் விண்கலத்தை அந்தக் கோளத்தை நோக்கிச் செலுத்தினாள். விண்கலம் மேலும் ஓராண்டு பறந்தது. அந்தக்கோளை அடைந்தது. சாரா வெளியே பார்த்தாள். விண்ணில் இருந்து பார்த்தபோதே அந்தக்கோள் தெரிந்தது. அது மென்மையான பச்சைநிறத்தில் இருந்தது.

சாரா அந்த கோளை நோக்கி விண்கலத்தைச் செலுத்தினாள். கோளை மெல்ல நெருங்கினாள். அந்தக் கோள் முழுக்க பச்சைப்பசேலென்று காடு நிறைந்திருந்தது.

காட்டின் நடுவே பெரிய பாறைகளுடன் மலைகள் எழுந்து நின்றன. மரங்களுக்குமேல் கூட்டம்கூட்டமாக பறவைகள் பறந்தன. மேலும் கீழே சென்றபோது அவள் அங்கே பூச்சிகளும் நிறைந்திருப்பதைக் கண்டாள்

அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அங்கே உயிர்கள் இருக்கின்றன. பல லட்சம் ஆண்டுகளாக மனிதர்கள் பிரபஞ்சத்தில் வேறு உயிர்கள் இருக்கின்றனவா என்று தேடிக்கொண்டிருந்தனர். அது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதோ அவள் கண்டுபிடித்துவிட்டாள்.

“நான் உயிர்கள் வாழும் கோளத்தை கண்டுபிடித்துவிட்டேன்” என்று சாரா தன் கட்டுப்பாட்டு அறைக்கு செய்தி கொடுத்தாள்.

விண்கலம் மேலிருந்து கதிர்களை அனுப்பி கீழே இருந்த காட்டை ஆராய்ந்தது. அவளுக்கு செய்திகளை அளித்தது. “கீழே அபாயகரமான கதிர்கள் ஏதுமில்லை. ஆக்ஸிஜன் இருக்கிறது. பெரிய விலங்குகள் எதுவும் இல்லை.”

அதன்பின் அது செய்தியை அளித்தது. “கீழே லட்சக்கணக்கான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூட்டம்கூட்டமாக வாழ்கிறார்கள்”

“கீழே போகலாமா?” என்று சாரா கேட்டாள்.

விண்கலத்தில் இருந்த இயந்திரம் “போகலாம். அவர்களிடம் எந்த ஆயுதங்களும் இல்லை” என்று கூறியது.

சாரா “நான் கீழே போகிறேன்” என்று சொன்னாள்.

20. அன்னை

அந்த விண்கலத்தை தரையில் இறக்கவேண்டிய தேவை இல்லை. அது வானத்திலேயே நிற்கும். அதை மேலேயே நிறுத்திவிட்டு சாரா கீழே இறங்க முடிவுசெய்தாள்.

சாரா தன் கவச ஆடைகளை அணிந்துகொண்டாள். அவை மென்மையான தோல்போல அவள் உடலில் படிந்திருந்தன. தன் தோளில் ஒரு கருவியை அணிந்துகொண்டாள். அதன் உதவியால் அவள் பூச்சிகளைப் போல பறக்கமுடியும்.

அவள் தன் நெற்றியில் ஒரு கருவியை பொருத்திக் கொண்டாள். அதற்கு மூன்றாம் கண் என்று பெயர். அது ஒரு சிறிய லென்ஸ். அதிலிருந்து ஒரு நுண்கதிர் வெளிவரும். அந்தக் கதிர் எதைத் தொடுகிறதோ அது விண்கலத்தில் இருக்கும் கருவிகளுக்கு தெரியும். அது என்ன என்று கருவிகள் உடனே சொல்லிவிடும். அந்தச் செய்தி நேரடியாகவே அவள் மூளைக்குள் தெரியவரும்.

சாரா பறந்து கீழே இறங்கினாள். கீழிருந்த காட்டின்மேல் சென்று நின்றாள். கிளைகளின்மேல் இருந்த பறவைகள் எழுந்து கலைந்து பறந்தன. சாரா வண்ணத்துப்பூச்சி போல அந்த இலைப்பரப்பின் மேல் பறந்தாள்.

மரங்களில் காய்களும் கனிகளும் நிறைந்திருந்தன. பலமரங்கள் பூத்துக் குலுங்கின. ஆனால் அந்த மரங்களின் இலைகள் எல்லாமே இளம்பச்சை நிறத்தில் இருந்தன.

மரங்களின் பச்சை இலைகளின்மேல் மஞ்சளாக ஒரு தோல் படர்ந்திருந்தது. அவள் அந்த தோலை கிழித்து எடுத்து பார்த்தாள். அவளுடைய மூன்றாம் கண்ணில் இருந்து கதிர் வந்து அதைத் தொட்டது.

“அது பாக்டீரியா. அந்த பாக்டீரியாக்கள் மரங்களுடன் ஒத்துயிராக வாழ்கின்றன. அவைதான் குளூக்கோஸைத் தயாரிக்கின்றன. இந்த கோளின் ஆக்ஸிஜனும் உணவும் இந்த பாக்டீரியாக்களால்தான் தயாரிக்கப்படுகின்றன” என்று விண்கலம் கூறியது.

சாரா கீழே இறங்கினாள். மண்ணில் சருகுகள் உதிர்ந்து மெத்தை போலிருந்தது. அவள் அதன்மேல் நடந்தாள். அப்போது விண்கலம் அவளை எச்சரிக்கை செய்தது. அவளை மனிதர்கள் சூழ்ந்துகொள்கிறார்கள் என்று அது சொன்னது.

சாரா எச்சரிக்கையுடன் நின்றாள். அவர்கள் தாக்கவந்தால் அவள் ஒரே கணத்தில் வானில் துள்ளி எழுந்து மறையமுடியும்..

ஆனால் மரங்களுக்கு நடுவிலிருந்து பெண்கள்தான் வெளிவந்தனர். அனைவருமே சிறுமியர். ஒவ்வொருவராக வெளியே வந்து அவளைப் பார்த்தனர்.

அவர்கள் அத்தனைபேரும் ஒரே முகமும் ஒரே தோற்றமும் கொண்டிருந்தனர். ஒரே அச்சில் வார்த்து எடுத்ததுபோல. அவர்கள் சாராவை திகைப்புடன் பார்த்தனர்.

அப்போதுதான் சாரா ஒன்று கவனித்தாள். அவர்கள் அனைவருமே சாராவைப் போலவே இருந்தனர். சாரா உடனே தன் விண்கலத்துடன் தொடர்புகொண்டாள்.

“நான் ஆறுவயதாக இருக்கும்போது இருந்த படம் தேவை” என்று சாரா கேட்டாள்.

விண்கலம் படத்தை அனுப்பியது. அதை அவள் கண்முன் ஒளிவடிவாக பார்த்தாள். அவளுடைய அதே தோற்றம் அந்தச் சிறுமிகளுக்கு இருந்தது.

அத்தனைபேரும் ஒரே வயது கொண்டவர்கள். ஒரே தோற்றம் கொண்டவர்கள். ஒரே போன்ற அசைவு கொண்டவர்கள்.

அவர்களில் ஒரு சிறுமி முன்னால் வந்து “யார் நீ?” என்று கேட்டாள்

சாரா திகைத்துவிட்டாள். அவள் கைகள் நடுங்கத் தொடங்கின. அவர்கள் எப்படி மனிதமொழி பேசமுடியும்? அவர்கள் மனிதர்களின் ஏதேனும் கிளையா?

“நீங்கள் யார்?” என்று அவள் திருப்பிக் கேட்டாள்.

“நாங்கள் தியோக்கள்” என்று அந்தப் பெண் சொன்னாள்.

“நாங்கள் அத்தனை பேருமே தியோக்கள்” என்று இன்னொரு பெண் சொன்னாள்.

“உன் பெயர் என்ன?” என்று என்று சாரா கேட்டாள்

“என் பெயர் சாரா” என்று அந்தப்பெண் சொன்னாள்.

“ஆ! என்பெயரும் சாரா!” என்றாள் சாரா.

“நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று அந்த சாரா கேட்டாள்.

“நான் நெடுந்தொலைவில் நீலப்பந்து என்ற கோளில் இருந்து வருகிறேன்” என்று சாரா சொன்னாள்.

“ஆனால் நீ எங்களைப் போலவே பேசுகிறாய்” என்றாள் அந்த சாரா.

“என் பெயர் லட்சுமி” என்று ஒரு பெண் சொன்னாள்.

“நீங்கள் எல்லாருமே ஏன் ஒரே தோற்றத்துடன் இருக்கிறீர்கள்?” என்று சாரா கேட்டாள்

“நாங்களெல்லாம் இப்படித்தான் இருக்கிறோம்” என்று லட்சுமி சொன்னாள்.

“இங்கே வேறு தோற்றம்கொண்ட மனிதர்களே இல்லையா?” என்றாள் சாரா.

“மனிதர்களா? நாங்கள் தியோக்கள்” என்று அந்த சாரா சொன்னாள்.

“இங்கே ஆண்கள் இல்லையா? வயது மூத்தவர்கள் இல்லையா?” என்று சாரா கேட்டாள்.

“நாங்கள் தியோக்கள். எங்களில் ஆண்கள் இல்லை. எங்களுக்கு வயதாவதே இல்லை. எங்களுக்குச் சாவும் இல்லை. நாங்கள் இப்படியே லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருந்துகொண்டிருக்கிறோம்”என்று ஒரு பெண் சொன்னாள்.

“உன்பெயர் என்ன?” என்றாள் சாரா.

“என் பெயர் துர்க்கா” என்று அவள் சொன்னாள்.

இன்னொரு பெண் “என் பெயர் ஈவா” என்றாள்.

“எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. நீங்கள் மனிதர்கள் அல்ல. ஆனால் மனிதப் பெண்ணாகிய என்னைப் போலவே இருக்கிறீர்கள். மனிதமொழி பேசுகிறீர்கள். மனிதப்பெயர்கள் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று சாரா சொன்னாள்.

“எங்களுக்கு நீ யார் என்று புரிகிறது. நீ மனிதப்பெண். நீ பூமியிலிருந்து வந்திருக்கிறாய்” என்று லட்சுமி சொன்னாள்

“இல்லை, நாங்கள் பூமியில் இருந்து கிளம்பி ஐந்து லட்சம் ஆண்டுகள் ஆகின்றன” என்று சாரா சொன்னாள்.

“ஆனாலும் நீ மனிதப்பெண்தான். உன் உடல் வேறு, எங்கள் உடல் வேறு” என்றாள் துர்க்கா.

“உங்கள் உடலை நான் சோதித்துப் பார்க்கலாமா?” என்று சாரா கேட்டாள்.

“தாராளமாக” என்று ஏவா சொன்னாள்.

சாரா அவள் உடலை தன் மூன்றாம் கண்ணால் பார்த்தாள். உடனே விண்கலம் ஆராய்ந்து பதில் சொன்னது.

“அந்த உடல் அமீபாக்களால் ஆனது. அமீபாக்களே செல்களாக மாறியிருக்கின்றன” என்று விண்கலம் கூறியது.

சாரா திகைத்துவிட்டாள். “அமீபாக்களா?” என்றாள்.

“அமீபாக்கள் ஒன்றாகச் சேர்ந்து பரிணாமம் அடைந்து உடலாக மாறியிருக்கின்றன. அவர்கள் மனிதர்கள் அல்ல. அமீபாக்களிலிருந்து வந்தவர்கள்” என்றது விண்கலம்.

“நீங்கள் எப்படி மனித வடிவில் இருக்கிறீர்கள்?” என்று சாரா கேட்டாள்.

“உன் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு முன் உனக்கு ஓர் இடத்தை காட்டவேண்டும்” என்று இன்னொரு பெண் சொன்னாள். “என் பெயர் ஹெலென். எங்களுடன் வா”

சாரா அவர்களுடன் சென்றாள். அவர்கள் காடு வழியாகச் சென்றார்கள். காட்டிலிருந்து பறவைகளின் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது.

சாரா பாறைகளைப் பார்த்தாள். “இந்தப் பாறைகள் எல்லாம் கந்தகத்தாலானவை” என்று விண்கலம் கூறியது

அவள் மரங்களைப் பார்த்தாள். “மரங்களின் பட்டைபோல தென்படுபவை பாக்டீரியாக்கள்” என்று விண்கலம் கூறியது.

அவள் செல்லும் வழியில் ஏராளமான தியோக்களை பார்த்தாள். அத்தனை பேரும் ஒரேபோன்ற தோற்றம் கொண்ட சிறுமிகள். அவர்கள் சிரித்துப் பேசிக் கொண்டார்கள். கூச்சலிட்டபடி ஓடினார்கள். மரங்களின்மேல் ஏறி தாவி விளையாடினார்கள்

“இங்கே எண்பது லட்சம் பேர் இருக்கிறோம். இந்த எண்ணிக்கை கூடவேண்டாம் என்று நெடுங்காலம் முன்னாலேயே முடிவெடுத்துவிட்டோம். ஏனென்றால் இங்கே சாவு இல்லை” என்று துர்க்கா சொன்னாள்

அவர்கள் ஒரு பெரிய கண்ணாடிக்குமிழியை கண்டார்கள். சாரா அதைக்கண்டு திகைத்து நின்றுவிட்டாள்.

“அது என்ன? அதை நீங்கள் கட்டினீர்களா?” என்று சாரா கேட்டாள்.

“இல்லை. நாங்கள் இங்கே உருவாகி வருவதற்கு முன்பே அது அங்கே இருக்கிறது. அதை மனிதர்கள் இங்கே வந்து கட்டினார்கள். அவர்கள்தான் இந்த கோளுக்கு தங்கத்துளி என்று பெயரிட்டார்கள். இந்த சூரியனை அவர்கள் மஞ்சள்குள்ளன் என்று அழைத்தார்கள்” என்று ஈவா சொன்னாள்.

“அதுதான் மனிதர்களுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பா?” என்று சாரா கேட்டாள்

”ஆமாம். நாங்கள் இதை நீண்டகாலமாக பார்த்து வருகிறோம். அதன்பின் இதற்குள் புகுந்து அங்கிருக்கும் கருவிகளை இயக்கினோம். எங்களுக்கு அதுவே எல்லாவற்றையும் கற்றுத்தந்தது” என்றாள் துர்க்கா

“அதன்பிறகுதான் நாங்கள் தியோக்கள் என்று அறிந்தோம். எங்களுக்கு நாங்களே பெயர்கள் சூட்டிக்கொண்டோம்” என்று லட்சுமி சொன்னாள்.

“இப்போது பூமியின் வரலாறே எங்களுக்கு தெரியும்.அங்கே இருந்த எல்லா மொழிகளும் தெரியும். அங்கே இருந்த எல்லா உயிர்களைப்பற்றியும் தெரியும்” என்று ஈவா சொன்னாள்.

சாரா அந்தக் குமிழிக்குள் சென்றாள். அங்கிருந்த கணிப்பொறியை லட்சுமி இயக்கினாள். அதில் குரு தோன்றியது. அது வியாசரின் வடிவில் இருந்தது.

“இது பூமியில் வாழ்ந்த வியாசர் என்ற முனிவரின் உருவம்” என்றாள் சாரா.

“ஆமாம். நான் ஒரு மென்பொருள் ”என்று குரு சொன்னது. “நீ எதையெல்லாம் அறிந்துகொள்ளவேண்டும்?” என்று கேட்டது

லாரா “நான் தகவல்களை அறிந்துகொள்ள ஒரு கருவி உள்ளது. அதன்வழியாக தெரிந்துகொள்வேன்” என்றாள்.

அந்த கணிப்பொறியின் தகவல்சேமிப்பு முழுக்க ஒரு உள்ளே இருந்தது. அதை அவளுடைய மூன்றாம் கண்ணிலிருந்து வந்த நுண்கதிர் தொட்டது. மொத்த செய்தியும் அவளுடைய விண்கலத்திற்குச் சென்றது. அங்கிருந்து தேவையானவை மட்டும் அவளுடைய மூளைக்குள் வந்தன.

அவள் அனைத்தையும் தெரிந்துகொண்டாள். “நீங்கள் எல்லாம் இங்கே வாழ்ந்த நாமி என்ற பெண்ணின் வடிவங்கள்” என்றாள்.

“ஆமாம். அவளை நாங்கள் பல பெயர்களில் குறிப்பிடுகிறோம். எங்கள் முகம் அவளுடைய முகம்தான்” என்று ஹெலென் சொன்னாள்.

“உனக்கு அவள் முகம் எப்படி வந்தது?” என்றாள் லட்சுமி.

“முன்பு பூமியில் வாழ்ந்த ஒரு பெண்ணின் முகம் இது. அவளுடைய கருவில் இருந்து நாமி பிறந்திருக்கலாம். அதே கருவில் இருந்து என் முன்னோர்களும் பிறந்திருக்கலாம்” என்றாள் சாரா.

“உனக்கு நாமியை காட்டுகிறோம்” என்று சொல்லி அந்தச் சிறுமிகள் சாராவை அழைத்துச் சென்றார்கள்.

”எங்கே போகிறோம்?” என்று சாரா கேட்டாள்.

“வா, காட்டுகிறோம்” என்று சொல்லி அவர்கள் கூட்டிச்சென்றார்கள்.

அவர்கள் ஒரு பெரிய மலைமேல் அவளை கூட்டிக்கொண்டு சென்றார்கள். மலைமேல் ஏறி உச்சிப்பாறைமேல் சென்று நின்றார்கள்.

“பார்” என்று லட்சுமி சுட்டிக்காட்டினாள்.

“எங்கே?” என்றாள் சாரா.

“அதோ பார்” என்றாள் துர்க்கா.

அதற்குள் சாரா பார்த்துவிட்டாள். ஒரு மலையின் அளவுக்கு ஒரு முகம் தெரிந்தது. முகம் மட்டும்தான். அது சாராவின் முகம். நாமியின் முகமும் அதுதான்.

“சிலையாகச் செதுக்கினீர்களா?” என்று சாரா கேட்டாள்.

“இல்லை. புழுதியில் பெரிய பள்ளமாகச் செய்தோம். அதில் அமீபாக்கள் வந்து நிறைந்தன. அவை அந்த முகமாக மாறின. அதை அப்படியே தூக்கி எடுத்து வைத்தோம்”

“அப்படியென்றால் அது உயிருள்ள முகமா?” என்று சாரா கூவிவிட்டாள்

“ஆமாம். மூன்று லட்சம் ஆண்டுகளாக அந்த முகம் இருக்கிறது. இப்போது அதன் அமீபாக்கள் ஒன்றாக சேர்ந்து ஒரே உடலாக ஆகிவிட்டன” என்றாள் லட்சுமி.

அந்த முகம் கண்களை மூடி தியானத்தில் இருந்தது. மிகப்பெரிய முகம். மலைபோன்ற முகம்.

”அழிவில்லாத முகம்!” என்று சாரா சொன்னாள்.

“ஆமாம், சாவே இல்லாத முகம். நாமி, காலிகை, ஏகை, ஜெனி, ஜனனி என்றெல்லாம் நாங்கள் அவளைச் சொல்கிறோம். அவள்தான் எங்கள் தெய்வம்” என்று லட்சுமி சொன்னாள்.

“எங்கள் பெயர்கள் எல்லாமே அவள் பெயர்கள்தான்” என்றாள் ஹெலென்.

”அவளை நாங்கள் உடையாள் என்று அழைக்கிறோம். ஏனென்றால் இந்த கோள் அவளுக்கு உரியது. இந்த கோளில் உள்ள எல்லா முகமும் அவள்தான்” என்று ஈவா சொன்னாள்.

“அவளை நாங்கள் அம்மா என்று அழைக்கிறோம்” என்று லட்சுமி சொன்னாள். “மனித மொழிகளில் எல்லாம் அந்த வார்த்தைக்கு ஒரே அர்த்தம்தான்”

”அம்மா என்று கூப்பிடு… சத்தம்போட்டு கூப்பிடு” என்றாள் ஈவா.

“அம்மா! அம்மா! அம்மா!” என்று சாரா கூவினாள்.

நாமியின் முகத்தில் கண்கள் திறந்தன. அவள் உதடுகளில் புன்னகை விரிந்தது. அந்தப்புன்னகை மிகமிக அழகாக இருந்தது.

[நிறைவு]

முந்தைய கட்டுரைஎழுத்தாளர்களை வழிபடுவது- கடிதம்
அடுத்த கட்டுரைஉடையாள், முடிவில்