அன்புள்ள ஜெ
வெண்முரசு முடிந்துவிட்டது, இப்போது அது தமிழிலக்கிய வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்டிருக்கிறது. அதற்கான வாசகர்கள் உருவாகி நிலைபெற்றுவிட்டார்கள். சென்ற இருபதாண்டுகளில் இத்தனை வாசகர்கள் இத்தனை தீவிரமாக வாசித்த ஒரு இலக்கியப்படைப்பு வேறில்லை. அதைப்பற்றி இலக்கியச்சூழலில் மௌனம் நிலவுகிறது. ஊடகங்களில் மௌனம் உள்ளது. ஆனால் அதைப்பற்றி நீங்களும் கவலைப்படவில்லை. அதன் வாசகர்களாகிய நாங்களும் கவலைப்படவில்லை. தமிழ்ச்சூழல் எப்போதும் அப்படித்தான் இருக்கும். இனியும்தான். இலக்கியவாசகர்கள் வேறு ஒரு வட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எப்போதுமிருப்பார்கள்.
வெண்முரசு இனியும் விரிவாகப்பேசப்படும். என்றைக்கும் வெண்முரசிலிருந்து ஆழமான விவாதங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். முகநூலிலோ டிவிட்டரிலோ வெண்முரசு பேசப்படாத, மேற்கோள்காட்டப்படாத ஒருநாள்கூட இல்லை.எவரும் உருவாக்காமலேயே அந்த வாசிப்பு உருவாகி நிலைபெற்றிருக்கிறது. ஏனென்றால் வெண்முரசு பேசிக்கொண்டிருப்பது பழைய புராணத்தை அல்ல. சமகால வாழ்க்கையை. ஒவ்வொரு வாசகரும் உள்ளும் புறமும் பார்த்துக்கொண்டிருப்பதை. வெண்முரசின் வெற்றி அங்கேதான்
வெண்முரசு என்ன அளிக்கிறது? அது அளிக்கும் நிறங்கள் நம் வாழ்க்கையை ஒளிமிக்கதாக ஆக்குகின்றன. ஒரு மாயவெளியில் உன்மத்தவெளியில் சுற்றித்திரியும் அனுபவத்தை அது அளிக்கிறது. ஆனால் அதைவிட முக்கியமானது காமம் பற்றி அரசியல் பற்றி இன்னும் எல்லா வாழ்க்கைக்கூறுகளைப்பற்றி நமக்கு என்னென்ன தெரியுமோ அவற்றை எல்லாம் கடந்து மேலும் மேலும் சொல்கிறது. அனைத்தையும் ஒறாக திரட்டிவிடுகிறது. அதை மூவாயிரமாண்டுக்கால வரலாற்றின்மேல் கொண்டுசென்று வைக்கிறது. அதன்வழியாக வாசகனை ஒரு வரலாற்று மனிதனாக ஆக்கிவிடுகிறது
ஆனால் இன்றைக்கு வாசிக்கும்போது வெண்முரசு வெளிவரத்தொடங்கியபோது வந்த பழிப்புக்காட்டல்களும் அசட்டுத்தனமான விமர்சனங்களும் ஆச்சரியமளிக்கின்றன. ஒருவகையில் ஆச்சரியமளிக்கவுமில்லை. உங்கள் வாசகர்களிலேயே பலர் கடுமையாக அந்தச் சிறுமைகளுக்கு எதிர்வினையும் ஆற்றியிருக்கிறார்கள்.அந்தச் சிறுமைகளைச் சொன்னவர்களுக்கு வரலாற்றில் என்ன இடம்? அவர்கள் யாரென்பதே வரலாற்றில் இருக்குமா என்ன? அவர்களுக்கு எழுதப்படவிருப்பது என்னவென்றே தெரியாது. ஆனால் ஒரு பெரிய சிருஷ்டி தங்களை சிறியவர்களாக ஆக்கிவிடும் என்றுமட்டும் தெரிந்திருக்கிறது
பெரிதினும் பெரிதுக்கு முன் நின்றிருக்கும் அனுபவத்தை வெண்முரசு அளிக்கிறது. இன்னும் இன்னும் என்று இலக்கியத்திடம் கேட்கிறது
ஆர்.ராஜன்
பொருளற்ற ஒரு இயந்திர வாழ்க்கையில் சிக்கிக் கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருந்த வேளையில் ஒரு மீட்பாகவே வெண்முரசைக் காண்கிறேன். இந்த வாசிப்பின் பெருங்களியாட்டத்தில் இருந்து சற்று இறங்கிய பிறகே விரிவாக விமர்சன கண்ணோட்டத்தில் எழுத வேண்டும்.
வெண்முரசு இருகடிதங்கள்
இந்தக் கடிதம் உங்கள் மீதான விமர்சனங்கள் குறித்தல்ல… (ஞாநி மற்றும் மனுஷ்யபுத்திரன்)… எங்கள் (வாசகர்கள் மீதான) விமர்சனம்… ஏதோ விசிலடிச்சான் குஞ்சுகள் போல எங்களை ஞானி கற்பனை செய்கிறார்… மனுஷ்யபுத்திரன் வெண்முரசு படித்துவிட்டு நாங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் படையில் சேர்ந்துவிடுவோம் என்று பயப்படுகிறார்… இதை எல்லாம் படிக்க மிகவும் வருத்தமாக உள்ளது…
வெண்முரசு வாசகர்கள்- கடிதங்கள்
உண்மையில் இந்த விமர்சனங்கள் யாவும் வெண்முரசு சரியான திசையில் தனக்கான வாசகர்களுக்காக சென்று கொண்டிருக்கிறது என்றே காட்டுகின்றன. காலம் கடந்தும் நிற்க போகும் படைப்பு இது. இதைப் படிக்கும் வாசகர்களுக்கென்று ஓர் ஆளுமையை உருவாக்கித் தருவதும் இதன் சிறப்பு. ஆம். உங்களின், வெண்முரசின் வாசகன் என்பதில் எனக்கு தனி திமிர் தான். அது ஒருவிதமான பெருமிதத்தைத் தருகிறது.