உடையாள்-7

13, படைப்பு

நாமி மறுநாள் வெளியே சென்றபோது கதிரியக்கக் காப்புக்கான கவச உடையை அணியவில்லை. ஆக்ஸிஜன் கொண்டு செல்லவுமில்லை. இயல்பாக கதவை திறந்து வெளியே சென்றாள்.

அங்கே அவளுக்கு ஒன்றுமே ஆகவில்லை. அவள் கைகளை விரித்து கூச்சலிட்டாள். சிரித்துக்கொண்டே அந்த தங்க நிறமான மணலில் ஓடினாள்.

பிறகு அவள் அந்தப்புழுதியில் அமர்ந்து தன் கையை அதில் வைத்து அழுத்தினாள். குனிந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்தப் புழுதியில் பெரும்பகுதி அமீபாக்கள் என்பதை அவள் கண்டாள். அவை மணல்போல ஒன்றாகத் திரண்டிருந்தன. அவை அவளுடைய கைபதிந்த பள்ளத்தில் வந்து நிறைந்தன.

சற்றுநேரத்தில் அவளுடைய கையின் வடிவத்தில் அமீபாக்கள் திரண்டு உடலாக மாறின. அந்தக் கை ஒரு பிராணியாக மாறியது. ஐந்து விரல்களையும் ஐந்து கால்களாக ஊன்றி தாவி ஓடியது.

நாமி சிரித்தபடி அந்த கையை பிடிக்க முயன்றாள். அந்தக்கை தன் சுட்டுவிரலையும் நடுவிரலையும் கால்களாக ஊன்றி நின்று துள்ளியது. கட்டை விரலையும் சிறுவிரலையும் இரண்டு கைகளாக விரித்தது. நின்று சுழன்று நடனமாடியது.

நாமி உரக்கச் சிரித்துக்கொண்டு மேலும் மேலும் கைகளை புழுதியில் வைத்து அழுத்தினாள். ஒவ்வொன்றிலிருந்தும் கைவடிவமான உயிர்கள் உருவாகி வந்தன.

அவை துள்ளித்துள்ளி அங்கெல்லாம் அலைந்தன. அவற்றில் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டன. உடனே அவை இணைந்தன. இரண்டு கைகள் மட்டும் இணைந்துகொண்டு ஒரே உடலாக மாறின. அவை பத்து விரல்களையும் ஊன்றி பாய்ந்து ஓடின.

நாலைந்து கைகள் ஒன்றாக இணைந்தன. ஆனால் அப்போது அவற்றால் வேகமாக ஓடமுடியவில்லை. ஆகவே அவை ஆங்காங்கே விழுந்து உடைந்து பிரிந்துவிட்டன. நான்கு கைகள் இணைந்த வடிவம் உதவியானது அல்ல என்று தெரிந்தது. ஆகவே இரண்டுகைகள் இணைந்த வடிவம் மட்டுமே மிஞ்சியது

இரண்டு கைகளும் இரண்டு கால்கள் போல மாறின. அந்தக்கால்களில் ஐந்து ஐந்து விரல்கள் குட்டிக்கால்கள் போலிருந்தன. அந்த வடிவம் அங்கெல்லாம் ஓடி பாக்டீரியாக்களை பொறுக்கி தின்றது

பாக்டீரியாக்கள் சிறிய விதைகளைப்போல ஒன்றுதிரண்டிருந்தன. அவை காற்றில் உருண்டு ஓடின. கை வழிவ பிராணிகள் அவற்றை பொறுக்கி உண்டன.

அந்த கைவடிவ உடலில் கண்ணோ வாயோ இருக்கவில்லை. உணவை அவை தங்கள் முழு உடலாலும் உணர்ந்தன. பாக்டீரியாவின் உடலில் இருந்து உருவான வெப்பம்தான் அமீபாக்களுக்கு தெரிந்தது. அதைத்தேடி அமீபாக்களாலான அந்த கைகள் சென்றன.

அந்த கைவடிவ உடலில் வாயும் இருக்கவில்லை. பாக்டீரியாவை கண்டதும் அந்த உடலின் விளிம்புகள் கலைந்து பாக்டீரியாவை சூழ்ந்துகொண்டன. அப்படியே தங்கள் உடலுக்குள் இழுத்துக்கொண்டன. பாக்டீரியா உருளைகள் அமீபாக்களுக்குள் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து எரிந்து ஆற்றலாக மாறின.

நாமி அமீபாக்களில் இருந்து கைகளையும் கால்களையும் உருவாக்கிக் கொண்டே சென்றாள். அவை அவளைச் சுற்றி ஓடிவிளையாடின. தனக்கு ஏராளமான விளையாட்டுப் பொம்மைகளை உருவாக்குவதே அவளுடைய எண்ணமாக இருந்தது

அதன்பின் அவள் களைத்துப்போய் ஒரு பாறையின் அடியில் சென்று அமர்ந்தாள். அவளுக்கு நல்ல தூக்கம் வந்தது. அவள் அப்படியே தூங்கிவிட்டாள்

அந்த தூக்கத்தில் ஒரு கனவு வந்தது. அதில் அவளைப் போலவே இருந்த ஒரு பெண் அவளை தேடிவந்தாள். நாமி பாறையில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். கனவில் வந்த நாமி அவளை தொட்டு எழுப்பினாள்.

நாமி விழித்துக் கொண்டபோது புழுதியில் விழுந்து கிடந்தாள். அவள் உடலின் பாதி புழுதியில் அழுந்தியிருந்தது.

நாமிக்கு ஒருகணத்தில் ஓர் எண்ணம் வந்தது. அந்த எண்ணம் வந்ததுமே அவள் உடல் அதிர்ந்தது. அவளுக்குள் எந்த சிந்தனையும் இல்லாமலாகியது.

பின்னர் அவள் பரபரப்பாக தன் ஆடைகளை எல்லாம் அவிழ்த்தாள். வெற்று உடலுடன் அந்தப் புழுதியில் குப்புறப் படுத்தாள். நன்றாக தன்னை புழுதியில் அழுத்திக் கொண்டாள்

அதன்பிறகு மெல்ல எழுந்தாள். அவளுடைய உடலின் முன்பக்க வடிவம் புழுதியில் அச்சு வடிவில் பதிந்திருந்தது. அதில் அமீபாக்கள் எல்லாப் பக்கங்களில் இருந்தும் வந்து நிறையத் தொடங்கின

அவள் அந்த பள்ளத்தின் அருகிலேயே மல்லாந்து படுத்தாள். தன் உடலின் பின்பக்க வடிவத்தை அந்தப் புழுதியில் அச்சுவடிவில் பதியவைத்தாள். அவள் எழுந்ததும் அதிலும் அமீபாக்கள் வந்து நிறைந்தன.

இரண்டு குழிகளும் நிறைந்தன. அந்தப் பள்ளத்தில் பதிந்த அமீபாக்கள் ஒரே உடலாக மாறின. முதலில் நாமியின் முன்பக்க உடலின் வடிவம் கொண்ட உடல் எழுந்தது.

நாமி திகைத்துப்போய் அதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். அவளைப் போலவே இருந்தது அந்த உருவம். அவளை அப்படியே பொன்னிறமான புழுதியில் சிலையாகச் செய்தது போல

நாமியின் பின்பக்க உடலின் வடிவம் அப்போதுதான் உருவம் கொண்டு முடிந்தது. நாமி அந்த முன்பக்க வடிவத்தை பிடித்து தள்ளி பின்பக்க வடிவத்தின்மேல் படிய வைத்தாள்

அவை இரண்டும் ஒன்றாக மாறின. முன்பக்கமும் பின் பக்கமும் சேர்ந்து ஒரே உடலாக ஆயின. நாமி படபடப்புடன் ஓடி விலகிச் சென்று நின்றாள். அந்த மஞ்சள்நிற உருவம் அவளை நோக்கி வந்தது

அவள் ஓடியபோது அதுவும் அவளை துரத்தி வந்தது. அவள் அஞ்சி விரைவாக ஓடினாள். அதுவும் அதேபோல ஓடி வந்தது. அவள் விரைந்து தன் கண்ணாடிக்குமிழிக்குள் நுழைந்தாள். கதவை மூடிக்கொண்டாள்.

மூச்சிரைத்தபடி அவள் அங்கேயே நின்றாள். வெளியே அந்த உருவம் அங்குமிங்கும் அலைபாய்வதை அவள் கண்டாள். அவளுக்கு பயமாக இருந்தது. மிகப்பெரிய தவறு செய்துவிட்டோமா என்று தோன்றியது.

14.பொறுப்பு

நாமி கணிப்பொறியை இயக்கினாள். குரு அதில் தோன்றியது. குருவின் வடிவம் நாமி என்ன உணர்வில் இருக்கிறாளோ அதற்கு ஏற்ப மாறுபடுவது. அவள் பதற்றமாக இருந்ததனால் குரு ஓர் அழகான அம்மாவின் வடிவில் தோன்றியது.

நாமி பயத்துடன் “எனக்குச் சில கேள்விகள் உள்ளன” என்று சொன்னாள்.

“கேள்” என்று குரு சொன்னது.

“நான் என் உடலை அச்சு ஆக மாற்றினேன். அதில் அமீபாக்கள் ஒன்றாகச் சேர்ந்தன. அவை என்னைப் போன்ற உடலாக மாறின. அந்த உருவம் என்னைப்போலவே ஓடியது. என்னை துரத்தி வந்தது”

“ஆமாம், அது வெளியே சுற்றிக்கொண்டிருக்கிறது” என்று குரு சொன்னது.

“அது எப்படி உருவாகியது?” என்று நாமி கேட்டாள்.

குரு உடனே சார்ல்ஸ் டார்வினின் வடிவத்தை அடைந்தது. “அந்த அமீபாக்கள் ஒன்றாக இணையும் தன்மை கொண்டவை” என்று கூறியது.

“என் உடலின் வடிவம் அதற்கு வந்தது சரி. எப்படி அது என்னைப் போல இயங்குகிறது? எனக்கு என் கைகால்களை இயக்க நரம்பு மண்டலம் உள்ளது. அதன் மையமாக மூளை உள்ளது அதற்கு நரம்பு மண்டலம் இல்லை. மூளையும் இல்லை. அது வெறும் உடல்தான்” என்று நாமி சொன்னாள்.

“ஆமாம். ஆனால் உன் கால்களும் கையும் மட்டும் எப்படி இயங்கின?” என்று குரு கேட்டது.

“எப்படி?” என்றாள் நாமி. அவள் அதைப்பற்றி அதுவரை யோசித்திருக்கவில்லை.

“ஏனென்றால் உன் கைகளும் கால்களும் பூமியில் பற்பல லட்சம் ஆண்டுகளாக பரிணாமம் அடைந்து வந்தவை. அவை எப்படி இயங்கவேண்டும் என்பது அவற்றின் அமைப்பிலேயே உள்ளது. அவை அப்படித்தான் இயங்க முடியும்” என்று குரு சொன்னது.

நாமி தன் கைகளை பார்த்தாள். விரல்களை அசைத்துப் பார்த்தாள். அது உண்மை என்று தோன்றியது.

“அதை மனிதர்கள் சைபர்னெடிக்ஸ் என்று அழைத்தார்கள். மனித உடலில் உள்ள சைபர்னெட்டிக்ஸ் அந்த வடிவத்திலேயே அமைந்துள்ளது. அந்த வடிவம் எடுத்த அமீபாக்களின் தொகுப்பு செயல்பட விரும்பினால் அந்த உடல் அதற்குரிய அசைவைத்தான் அளிக்கும்.”

“அப்படியென்றால் நரம்பு அமைப்பு எதற்கு?” என்று நாமி கேட்டாள்.

“உன் எண்ணங்களை உடலின் உறுப்புகளுக்கு கொண்டு போகத்தான் நரம்புகளும் மூளையும் தேவையாகின்றன. உன்னுடைய உணர்ச்சிகளுக்கு ஏற்ப உடல் இயங்க வேண்டுமென்றால் அவையெல்லாம் தேவை.”

“அந்த உருவம் என்னை ஏன் துரத்தியது?” என்று நாமி கேட்டாள்.

“அது உன்னை உன் உடல்வெப்பத்தால் அறிந்தது. உன்னை நோக்கி வந்தது. நீ விரைவாக ஓடியபோது அதுவும் விரைவாக ஓடியது” என்றது குரு.

“அது என்னைப்போலவே கைகளை வீசியபடி ஓடி வந்தது” என்று நாமி சொன்னாள்.

“ஆமாம். அந்த உடல் அப்படித்தான் ஓடமுடியும். உன் உடல் எப்படி அசைகிறதோ அப்படித்தான் அதுவும் அசையும். அதன் சைபர்னெட்டிக்ஸ் அப்படிப்பட்டது.”

“அது என்னை தாக்குமா?” என்று நாமி கேட்டாள்.

“வாய்ப்பில்லை. ஏனென்றால் அது பாக்டீரியாக்களைத்தான் உண்ணும்” என்று குரு சொன்னது.

“இந்நேரம் அது கலைந்திருக்குமா என்ன?” என்று நாமி கேட்டாள்.

“கலைய வாய்ப்பே இல்லை” என்று குரு சொன்னது.

“ஏன்?” என்று நாமி கேட்டாள்.

“அமீபாக்கள் ஏன் உன் காலில் உள்ள பாதத்தின் வடிவத்தை அடைந்தன? ஏனென்றால் அவை ஏற்கனவே இருந்த எந்த வடிவத்தை விடவும் பாதத்தின் வடிவம் மேலும் வசதியானது. பாதத்தைவிட கையின் வடிவம் சிறந்தது. உடல்களிலேயே மிகச்சிறந்த வடிவம் மனித உடல்தான். அதை நீ கொடுத்துவிட்டாய். அதை அடைந்தபின் அமீபாக்கள் அதை விடவே விடாது.”

நாமி பதற்றம் அடைந்தாள். அவள் கைகளை கோத்து நெஞ்சில் வைத்துக்கொண்டு அசையாமல் அமர்ந்திருந்தாள். அவளுக்கு முன்னால் கணிப்பொறியின் திரையில் குரு ஷோப்பனோவரின் முகத்தை அடைந்தது.

நாமி ‘நான் செய்தது தவறா?’ என்று கேட்டாள்.

“தவறும் சரியும் இப்போது சொல்லமுடியாது. நீ செய்த செயலின் விளைவுகளை கொண்டுதான் முடிவெடுக்கமுடியும்” என்றது குரு.

“நான் செய்த செயலின் விளைவுகள் எப்போது தெரியும்?”

“செயலின் விளைவு நீண்டு நீண்டு போகும்… முழுவிளைவும் தெரிய பல ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம். பல லட்சம் ஆண்டுகள்கூட ஆகலாம்” என்றது குரு.

நாமி வியப்புடன் பார்த்தாள்.

“உதாரணமாக ஒன்று சொல்கிறேன். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த மனிதர்கள் தீயைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அது அப்போது நல்லதாகவே இருந்தது. குளிரில் இருந்து தீ அவர்களைக் காப்பாற்றியது”

“ஆமாம்’என்று நாமி சொன்னாள். “தீயை வைத்துத்தான் அவர்கள் உணவை சமைத்து உண்டார்கள்.”

“மனிதர்கள் தீக்காக விறகுகளை எரித்தார்கள். நிலக்கரியை எரித்தார்கள். பெட்ரோலியத்தை எரித்தார்கள். அவர்கள் வளரவளர எரிப்பது கூடியது. பூமியில் கார்பன்டையாக்சைடு கூடிக்கூடி வந்தது. பூமியின் வாயுமண்டலம் மாறியது.”

“ஆமாம், அதை இந்த கணிப்பொறியில் பதிவு செய்திருக்கிறார்கள்” என்று நாமி சொன்னாள்.

“பூமியில் கார்பன்டையாக்சைடு மிகுதியானபோது பூமியின் வெப்பம் கூடியது. துருவங்களில் இருந்த பனிமலைகள் உருகின. பலபகுதிகள் கடலில் மூழ்கின. காடுகள் அழிந்தன. பல இடங்களில் வரட்சி வந்தது. இயற்கையின் சமநிலை இல்லாமலாகியது” என்று குரு சொன்னது.

அது சொல்லப்போவதை நாமி செவிகொடுத்து கேட்டாள்.

“மொத்தமாக பூமியையே கைவிடவேண்டியிருந்தது. அங்கிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அழிந்தார்கள். மிஞ்சியவர்கள் வேறு கோள்களை தேடிச் சென்றார்கள். இப்போது பூமியில் மனிதர்கள் எவரும் இல்லை” என்று குரு சொன்னது.

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?” என்று நாமி கேட்டாள்.

”தீயை மனிதன் கண்டுபிடித்தது சரியா தப்பா?”

நாமியால் பதில் சொல்லமுடியவில்லை.

“அதேபோலத்தான் இதுவும். நீ செய்தது சரியா தவறா என்று சொல்ல இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளாகும்.”

நாமி “நான் அதற்கு என்ன செய்யமுடியும்?” என்றாள்.

குரு “ஒன்றுமே செய்யமுடியாது” என்றார்.

நாமி அழத்தொடங்கினாள்.

குரு வியாசராக மாறியது. மெல்லிய குரலில் “நீ ஏன் அழுகிறாய்?”என்று கேட்டது.

“நான் செய்தது தவறு என்றால் என்ன செய்வது?” என்று நாமி அழுதாள்.

“நீ செய்தது மிகப்பெரிய நன்மை என்றால் என்ன செய்வாய்?” என்று குரு கேட்டது.

நாமி திகைத்தாள்.

“அது நன்மையாக இருந்து நீ அதைச் செய்யாமலிருந்தால் அதுவும் தவறுதானே?” என்றது குரு.

“ஆமாம்” என்றாள் நாமி.

“அப்படியென்றால் எதையாவது செய்வது நல்லதா? தவறு நடந்துவிடும் என்று நினைத்து எதையுமே செய்யாமலிருப்பது நல்லதா?” என்று குரு கேட்டது.

“செய்வதுதான் நல்லது” என்றாள் நாமி.

“அதைத்தான் நீ செய்தாய். நல்ல நோக்கத்துடன் செயலை செய்யவேண்டும். நன்மை நிகழவேண்டும் என்று விரும்பவேண்டும். அவ்வளவுதான் நீ செய்யமுடியும். அதை நீ செய்தாய். ஆகவே வருந்தவேண்டியதில்லை.”

“தீங்கு நடந்தால்?” என்று நாமி கேட்டாள்.

“அதற்கு நீ பொறுப்பல்ல. எதனால் மஞ்சள்குள்ளனில் கதிரியக்கம் வந்தது? எதனால் இங்கே ஆக்ஸிஜன் கூடியது? அதன் ஒரு பகுதியாகவே நீ இதைச் செய்தாய். எதனால் இதெல்லாம் நடக்கிறது என்று உன்னால் அறியவே முடியாது” என்றது குரு.

“ஆமாம்” என்றாள் நாமி.

“பிரபஞ்சம் என்பது மிகமிகப் பெரியது. இங்கே நடக்கும் எல்லாமே பிரபஞ்சத்தில் நடப்பவற்றுடன் தொடர்புடையவை. நீ பிரபஞ்சத்தின் ஒரு துளிதான்” குரு சொன்னது.

நாமிக்கு அந்த வார்த்தைகள் ஆறுதலை அளித்தன. அவள் முகம் மலர்ந்தாள்.

“பிரபஞ்சத்தில் நடப்பதற்கெல்லாம் நீ பொறுப்பேற்கமுடியாது. நீ செய்தவை கூட உன்வழியாக நடந்தவைதான். பிரபஞ்சம் அதன் போக்கில் நடக்கட்டும். நீ அமைதியாக இரு” என்றது குரு.

நாமி புன்னகை செய்தாள்.

“நீ படைப்பை தொடங்கிவிட்டாய். உனக்கு இன்னும் ஒரு பெயரை போட்டுக்கொள்ளலாம்” என்று குரு சொன்னார்.

“சொல்லுங்கள்” என்று நாமி சொன்னாள்.

“ஜனனி… சம்ஸ்கிருதத்தில் பிறப்பிப்பவள் என்று பொருள்” என்று குரு சொன்னது. “அல்லது லத்தீனில் ஜெனி என்று வைத்துக்கொள். எல்லாம் ஒரே பொருள்தான்.”

“இரண்டுமே இருக்கட்டும்”என்று நாமி சொன்னாள்.

[மேலும்]

சைபர்நெட்டிகஸ் [Cybernetics]

இயந்திரங்கள் இயங்கும் முறையைப் பற்றிய அறிவியல் சைபர்னெடிக்ஸ். நெம்புகோல், சக்கரம் போன்றவை நாம் அறிந்த எளிமையான சைபர்னெடிக்ஸ் விதிகள். அதைப்போல பலநூறு விதிகள் உள்ளன. நம் உடலும் ஓர் இயந்திரம். இயந்திரவியல் விதிகளின்படித்தான் நம் உடலும் செயல்படுகிறது. ’அனைவருக்குள்ளும் இயங்கும் சைபர்த்தினியம்’ என்ற நூலில் இது விளக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கான றிவியல்நூல். ரஷ்யாவிலிருந்து வெளிவந்தது.

முந்தைய கட்டுரைசிவரஞ்சனியும் இன்னும் சிலபெண்களும்- கடிதம்
அடுத்த கட்டுரைஇளிப்பியல்