ஞானி,விவாதங்கள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

ஞானி கட்டுரைத்தொடர் பலவகையிலும் முக்கியமானது. ஓர் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையேயான முப்பதாண்டுக்கால உறவு பற்றிய ஒரு அற்புதமான சித்திரம். இப்படி ஒரு சித்திரம் மிகக்குறைவாகவே பதிவாகியிருக்கிறது. ஓரளவு ஒப்பிடவேண்டும் என்றால் க.நா.சு பற்றி சுந்தர ராமசாமி எழுதியதைச் சொல்லவேண்டும். இன்னொரு நூல் சுந்தர ராமசாமி பற்றி நீங்கள் எழுதிய நினைவின் நதியில்

உரையாடலும் உரசலுமாக ஆசிரிய மாணவ உறவு எப்படி நிகழ்கிறது என்பதை இந்தக்கட்டுரைகள் அழகாகக் காட்டுகின்றன. நீங்கள் ஞானியுடன் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் சுந்தர ராமசாமியுடனான பேச்சு போல பரந்துபட்டதாக அது இல்லை. உங்கள் படைப்பியக்கம் சார்ந்ததாகவும் ஓரளவு ஞானியின் மெய்யியல்- அரசியல் தேடுதல் சார்ந்ததாகவுமே உள்ளது. நீங்கள் இந்நூலில் ஞானியின் மெய்யியல் தேடல் எப்படி அவருடைய தொடக்க காலத்திலிருந்து உருவாகி வந்தது எப்படி அது படிப்படியாக மேலே சென்றது என்று காட்டுகிறீர்கள்

நான் ஞானியின் இரண்டுநூல்களை வாசித்திருக்கிறேன். கடவுள் ஏன் சாகவில்லை, மார்க்சியமும் தமிழிலக்கியமும் ஆகிய இரண்டு நூல்கள். எனக்கு அந்நூல்களை முழுமையாகப்புரிந்துகொள்ள உதவியவை இக்கட்டுரைகள். ஞானி பேசிய பல விஷயங்களை நோக்கி அவரைக் கொண்டுசென்று சேர்த்த கேள்விகள் எவை, அவையெல்லாம் எப்படி அவரிடம் வந்தன என்பதை இந்தக்கட்டுரைகள் காட்டுகின்றன.

மார்க்ஸியத்தின் அறச்சிக்கல்களில் இருந்து அவர் தொடங்குகிறார். மார்க்சியம் ஏன் அன்னியமாக இருக்கிறது என்று ஆராய்கிறார். இந்த இரண்டு கேள்விகளுமே எந்த சாமானியனுக்கும் வருபவைதான். நாம் அறிந்த மார்க்ஸியர் அளவுக்கு தியாகமும் அறிவுத்திறமையும் உடைய அரசியல்வாதிகள் இல்லை. ஆனால் ஏன் அவர்களை மக்கள் ஏற்கவில்லை? ஏன் மார்க்ஸியர்களுக்குள்ளேயே அத்தனை குரோதமான மோதல்கள் ஏற்படுகின்றன? ஏன் வெளியே போன மார்க்ஸியர்களை உள்ளே இருப்பவர்கள் அவ்வளவு கீழ்த்தரமாக அவதூறுசெய்கிறார்கள்? அந்தக்கேள்வியிலிருந்தே ஞானி செல்கிறார்

இந்நூலில் ஞானி சென்றடையும் இடங்களை விரிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். கடவுளோ பாரம்பரியமோ இல்லாமல் ஒரு எதிக்ஸை உருவாக்கிக்கொள்ள ஞானி விழைகிறார். அதுக்காக அவர் மெய்யியலை நாடுகிறார். மெய்யியல் என்றால் தியாலஜி என்று புரிந்துகொள்கிறேன். அவர் நாடுவது ஒருவகையான லிபரேஷன் தியாலஜியை. பிற்பகுதியில் அந்த தியாலஜியின் மூன்று அடிப்படைகளை அவரும் எஸ்.என்.நாகராஜனும் சேர்ந்து கூர்மையாக வரையறைசெய்கிறார்கள்.

அந்தப்பகுதி இந்த நூலிலேயே மிகமிக முக்கியமானது. ஒரு மாற்று மார்க்ஸியத்தை எங்கிருந்து உருவாக்கிக்கொள்வது, எதனுடன் எல்லாம் அது உரையாடமுடியும், அப்படி உறவாடும்போது வரும் சிக்கல்களை எப்படி சமாளிப்பது எல்லாமே இந்தப்பகுதியிலே பேசப்படுகின்றன. மார்க்ஸியம் ஏன் இனிமேல் கனிந்து இன்குளூஸிவாக ஆகவேண்டும் என்று ஞானி சொல்வது மிகமிக முக்கியமான பகுதி

இத்தகைய விவாதங்கள் எல்லாம் தொடர்ச்சியாக ஓர் ஆசிரியருக்கும் மாணவருக்கும் நடுவே நடைபெறுவதெல்லாமே புனைவுகளிலேதான் நடக்கும் என்று நினைத்திருந்தேன். சமகாலத்திலேயே நடைபெறுவது ஒரு பெரிய மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இப்பேற்பட்ட ஞானி ஏன் அவ்வளவு தனிமையிலே இருந்தார்? ஏன் அவரைப்பற்றி எவருமே ஒன்றும் எழுதவில்லை? அஞ்சலிக்கட்டுரைகளிலேயே கூட மிகமிகச் சம்பிரதாயமான வரிகள்தான் இருந்தன?

அதற்கான பதிலை சமூக ஊடகங்களிலே கண்டேன். அங்கே பேசப்பட்டதையெல்லாம் வாசித்திருந்தால் மண்டையில் அடித்துக்கொண்டிருப்பீர்கள். சிற்றிதழ்சார்ந்த இலக்கியவாதிகள் வாசகர்கள் எவருக்கும் இந்த விவாதங்கள் ஒரு பொருட்டாக தெரியவில்லை. எவருக்கும் எதுவும் புரிந்ததுமாதிரியும் தெரியவில்லை. இதிலிருந்து அற்ப வம்புகளை எடுத்துவைத்து சலம்பிக்கொண்டே இருந்தார்கள். சலிப்படைந்து நான் விலகி வந்துவிட்டேன். இந்த உலகுக்கும் அந்த உலகுக்கும் எவ்வளவு வேறுபாடு. ஆனால் இப்படித்தான் இருக்கிறது. அந்த உலகம்தான் பெரியது. எல்லாரும் அங்கேதான் வந்துசேர்கிறார்கள். இங்கே வருவது கஷ்டம். அங்கே உழன்றுகொண்டிருந்தால் காலம் அப்படியே ஓடிவிடும்.

எங்களுக்கு இந்த சமகாலம் உருவாக்கி அளித்திருப்பது இந்த முகநூல் சலம்பல்கள்தான். ஞானி போன்றவர்களுக்கு பெரிய இலட்சியவாதங்களும் கனவுகளும் தத்துவப்பிரச்சினைகளும் இருந்தன. அதெல்லாம் அவருக்கு அன்றைய சூழலில் இருந்தே கிடைத்தன. அவரெல்லாம் தனிமையில் இருந்தாலென்ன, வாழ்க்கைக்கு ஓர் அர்த்தமிருந்தது. எங்கள் காலத்தில் அப்படி ஓர் அர்த்தத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றால் சமகாலச்சூழலில் இருந்து தப்பி ஓடவேண்டியிருக்கிறது.

எம்.ராகவேந்திரன்  

 

அன்புள்ள ஜெயமோகன்,

ஞானி தொடர்கட்டுரை வாசித்தேன். மூன்று சரடுகளால் பின்னப்பட்டுள்ளது இக்கட்டுரைத்தொடர். ஒன்று ஞானி என்ற ஆளுமையின் வளர்ச்சியும் தேக்கமும், இரண்டு நவீன இலக்கியத்தின் வளர்ச்சிநிலை அல்லது ஒரு முக்கியத்திருப்பம் இக்கட்டுரையில் பதிவாகியுள்ளது. மூன்று அரசியல், குறிப்பாக தமிழ்நாட்டில் கம்யூனிஸத்தின் ஒரு அரைநூற்றாண்டு மாற்றங்கள். மேலும் இரண்டு ஆசிரியர்களின் சித்திரம்.

இக்கட்டுரையுனூடாக உங்களது எழுத்தின் துவக்கக் காலகட்டமும் பதிவாகியுள்ளது. இக்கட்டுரைத்தொடரில் பின்னிணைப்பாக கொடுக்கபட்டுள்ள ஒவ்வோரு கதையும் (போதி, மாடன் மோட்சம், திசைகளின் நடுவே) அது கொண்ட பேசுபொருளில் கூறுமுறையில் அக்காலத்திற்கு புதியவை. திசைகளின் நடுவே கதையிலிருந்து வெண்முரசு வரை நீளும் ஒரு கோட்டினை கற்பனை செய்து கொள்கிறேன். யதார்த்த உலகிலிருந்து தொன்மங்களுக்குள் கனவின் மொழிக்குள் ஒரு நுழைவு. இதில் ஒவ்வொரு கதையும் ஞானியால் வரவேற்கப்படுகிறது. தொடர்ந்து விஷ்ணுபுரம் எழுத ஊக்குபவராகவும் ஞானி இருக்கிறார்.

1989ல் காலச்சுவடு துவங்கப்படுகையில் ஜேஜே சில குறிப்புகளின் வெற்றி மேல் அமர்ந்துள்ளார் சு.ரா. இதை மாற்றத்திற்கான ஒரு நிமித்தமாகக் கொண்டு காலச்சுவடு இதழ் தத்துவம் நாட்டாரியல் ஆகியவற்றையும் சிந்தனை வெளிக்குள் கொண்டு வரும் நோக்குடன் உருவாக்கப்படுகிறது. ஆனால் இவற்றின் இலக்கியப் பிரவேசத்தை அவரால் ஏற்கமுடியவில்லை. முரண்களையெல்லாம் மீறி ஜெயமோகனின் பேச்சில் எழும் ஆளுமையாக சு.ரா இருப்பது போல் இத்தொடர் சுரா மீதான ஆர்வத்தையே வாசகனிடம் விதைக்கிறது.

விஷ்ணுபுரம் உருவான காலகட்டம் அதற்கான வரவேற்புகள் எதிர்வினைகள்  விரிவாக பதிவாகியுள்ளன. பின் தொடரும் நிழலின் குரலின் துவக்கம் ஞானியுடனான உரையடலில் நாவலின் போக்கு துலங்கி வருவது, வெளியான பின் அது பெற்ற வரவேற்பும் எதிர்ப்பும் பதிவாகியுள்ளது. ஒரு வாசகனாக நான் வாசித்து அறிந்த படைப்புகள் உருவான காலகட்டத்தினை அச்சூழலின் எதிர்வினைகளை அறிவது ஆர்வமூட்டியது.

இக்கட்டுரையின் மனம் தோய்ந்த  மற்றொரு பகுதி ஞானியின் சிந்தனை வளர்ச்சி பதிவாகும் இடங்கள்.  “பொருளாதார அடித்தளம் கலாச்சார மேற்கட்டுமானத்தை உருவாக்குகிறது ஆனால் அப்புறம் கலாச்சாரம்தான் பொருளாதாரத்த தாங்கி நின்னுகிட்டு இருக்கு”. இயந்திரவாத மார்க்ஸியத்திலிருந்து பண்பாடு நோக்கி ஞானி திரும்புகிறார். பண்பாட்டின் ஊடகமாக நவீன இலக்கியத்தில் ஆர்வம் கொள்கிறார். ஆனால் ஒரு காலகட்டத்தில் அதிலிருந்து  தன் இலக்கியச் செயல்பாடுகளிலிருந்து வெளியேறி விடுவதாகவும் பதிவாகியுள்ளது கட்டுரையில்.

மார்க்ஸியம் இயந்திரவாதத் தன்மையருத்து தன் சூழலில் உள்ள பல்வேறு தரப்புகளுடன் உரையாடக் கூடியதாக அமைய வேண்டும் என ஞானி விழைகிறார். நிலப்பிரபுத்துவ அடிமைப்படுத்தும் விழுமியங்களுக்கு எதிரான எதிர்ப்பரசியலாக துவங்கிய மார்க்ஸியம் , நுகர்வு கலாச்சாரம் போலவே இயற்கைக்கு எதிரான மானுடமைய நோக்குடையது. ஆகவே அழிவுசக்தியும் கூட. மானுடமைய நோக்கிலிருந்து இயற்கைக்கு எதிரான அழிவுசக்தியாக நிற்கும் நிலையிலிருந்து ஒரு கனிவை தன்னுள் கொள்ள வேண்டிய இடம் இருப்பதாக ஞானி உணர்கிறார். அது அத்வைதத்துடனான உரையாடலால் சாத்தியம் என கண்டுகொள்கிறார். 5000 வருடம் கழித்தும் மார்க்ஸியம் நிலைக்க வேண்டுமெனில் அது தமிழின் மெய்யியலில் தன்னைப் பொறுத்திக்கொள்வதாலேயே சாத்தியம் எனக் காண்கிறார்.

இங்கிருந்து தமிழ்த்தேசியம் நோக்கி நகர்ந்து விடுகிறார் ஞானி. சற்றே கிலி உண்டாக்கிய இடம் கட்டுரையில் வரும் மதத்திற்கும் அரசியலலுக்குமான உறவு பற்றிய இடம். நூற்றாண்டு கம்யூனிஸ ஆட்சியின் பின் மீண்டும்  மதம் ரஷ்யாவில் எழுந்து வருகிறது. சமூகமனதின் தொன்மங்களை தன்னுள் கொண்டது  மதம். மனிதனின் ஆழ்மனத்துடன் தொடர்புடையது. குகை மனிதனின் காலத்திலிருந்து அதற்கும் முன்பிருந்தும் கூட எழுந்து வருபவை. ஆனால் இவை வாக்கு வங்கி நோக்கி திசைதிருப்பப் பட்டால் என்ன ஆவது?

டி.பி ராஜீவன் விஷ்ணுபுரம் கூடுகை ஒன்றில், படிமம் என்பது சுதந்திரமல்ல அது பார்வையை குறுக்குவது என்று கூறி ஹிட்லரின் ஜெர்மனியில் ஸ்வஸ்திக் பயன்படுத்தப்பட்ட விதம் பற்றிக் கூறினார். (கவிதையில் படிமம் சுதந்திரம்தான். ஒரு படிமத்தின் மீது பல்வேறு வாசிப்பு சாத்தியமானது என அன்று விவாதிக்கப்பட்டது). ஆனால் மூவாயிரம் வருடங்களாக உருவாகிநிற்கும் தொன்மங்களை அரசியல் பயன்படுத்தத் துவங்கினால்? அதுதான் நிகழ்வதாகவும் படுகிறது.

தளத்தில் வெளியான “மதமும் நல்லாட்சியும்” இது பற்றி விரிவாக பேசுகிறது. நான் அறிந்திராத அரசியலின் இலக்கியத்தின் காலகட்டம் இக்கட்டுரையில் காணக்கிடைக்கிறது. வெற்றி தோல்வி பற்றிய எண்ணமில்லாத இலட்சிய வாழ்வு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது இக்கட்டுரையில். இந்த நுகர்வின் காலகட்டத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு விலை மதிப்பிடப்படும் காலகட்டத்திலிருந்து அக்காலத்தை நோக்குவது ஒரு புதிய அனுபவம்.

மேலும் இத்தொடரில் வரும் ஆசிரிய மாணவ உறவு நான் கண்டறிந்திராதது. சிந்தனையில் முரணும் அன்பும் ஒன்றே திகழும் ஓர் உறவு. எந்த ஒரு வாசிப்பும் அறிதலின் இன்பத்தில்தான் நிறைவுகொள்கிறது. அதே நிறைவை இக்கட்டுரைத் தொடர் அளித்தது. “அறிதோரு அறியாமை கண்டற்றால்” என ஒவ்வொரு வாசிப்பின் போதும்  இன்னும் வாசிக்கப்பட வேண்டியவற்றின் முன் மலைத்து நிற்கிறேன்.

இக்கட்டுரைத்தொடரிலிருந்து சு.ராவை முழுக்க வாசிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைசென்றடைகிறேன். ஞானியின் நூல்கள் அனைத்தும் ஆன்லைனிலேயே டவுன்லோட் செய்து வாசிக்கக் கிடைக்கின்றன. பண்பாடு சமூகவியல் வரலாறு அரசியல் சார்ந்து வாசிக்க வேண்டுமென மனதில் குறித்துக்கொள்கிறேன்.

அன்புடன்

ஸ்ரீநிவாஸ்

திருவாரூர்

அன்புள்ள ஜெ

ஞானி தொடர்கட்டுரைகள் இன்றைய வாசகர்களுக்கு முக்கியமானவை. சுந்தர ராமசாமியின் நினைவோடைக் குறிப்புகள், எம்.வி.வெங்கட்ராமின் என் இலக்கிய நண்பர்கள், தொ.மு.சி.ரகுநாதனின் புதுமைப்பித்தன் வரலாறு, வ.ராவின் பாரதியார் வரலாறு, யதுகிரி அம்மாளின் நான் கண்ட பாரதி போன்ற நூல்களின் வரிசையில் வருவது இது. ஓர் இலக்கிய- கருத்தியல் செயல்பாட்டாளரைப் பற்றிய நினைவுகள். அவரைப்பற்றிய தனிப்பட்ட நினைவுகளாக இல்லாமல் அவருடைய சூழல், அவர் ஆற்றிய விவாதங்கள் ஆகியவற்றுடன் ஒட்டுமொத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் என்ன அவற்றின் பின்னணி என்ன என்பதெல்லாம் விரிவாகவே திரண்டு வருகிறது.

ஜே.செந்தில்குமார்

 

ஞானி-21

ஞானி-20

ஞானி-18

ஞானி-17

ஞானி-16

ஞானி-15

ஞானி-14

ஞானி-13

ஞானி-12

ஞானி-11

ஞானி-10

ஞானி-9

ஞானி-8

ஞானி-7

ஞானி-6

ஞானி-5

ஞானி-4

ஞானி-3

ஞானி-2

ஞானி-1

முந்தைய கட்டுரைபுழுக்களின் பாடல்-சரவணக்குமார்
அடுத்த கட்டுரைகடல், ஆமை, முகங்கள்- வினோத் பாலுச்சாமி