திருமந்திரம்- இறுதியாக…

திருமந்திரம் கற்பது

திருமந்திரம் பற்றி…

அன்புள்ள ஜெ

திருமந்திரம் பற்றிய உங்கள் விவாதத்தைக் கவனித்தேன். திருமந்திரம் மெய்ஞானநூல். அதை தகுதியற்றோர் பேசலாகாது என்ற உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடுதான். கரு.ஆறுமுகத்தமிழன் என்பவர் வெறும் அரசியலைப் பேசுபவர்.அறியாதோர் சொல்லை நாம் பொருட்படுத்தவேண்டியதில்லை. ஆனாலும் உரியமுறையில் கண்டித்தாகவேண்டும். அதை செய்திருக்கிறீர்கள். அவருக்கு மொழியறிவும் ஞானமும் இல்லை என்பதுதான் என் கருத்து.

என்.எஸ்.ராம்

அன்புள்ள ராம்,

நல்லது, அது உங்கள் கருத்து. உங்கள் தகுதி என்ன என்று எனக்குத்தெரியாது.

என் கருத்து கரு.ஆறுமுகத்தமிழன் எனக்கு அடுத்த தலைமுறையின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் என்பது.அவருக்கிணையாக ஓரிருவரே இன்று தமிழில் உள்ளனர். சொல்தேர்ச்சியும் அதை மேடையில் மொழியும் தேர்ச்சியும் கொண்ட அவரைப்போன்றவர்களே இன்றைய சூழலில் தமிழும் சைவமும் நாளையும் செழிக்கும் என்னும் நம்பிக்கையை அளிப்பவர்கள்.

அவர் என்னை அண்ணன் என்கிறார் என்றால் அது அவருடைய இயல்பான பணிவால். நான் அவரை தம்பி என்று சொல்கிறேன் என்றால் அது என் அகவைமூப்பினாலும் நேர்ப்பழக்கத்தினாலும் மட்டுமே ஒழிய அறிவுமூப்பினால் அல்ல. அவர் தமிழறிவில், ஆய்வுத்தகுதியில் என்னைவிட பலநிலைகள் மேலானவர். அவரிடமிருந்து கற்குமிடத்திலேயே நான் இருக்கிறேன்.

நான் பேசிக்கொண்டிருந்தது திருமூலம் பற்றி. அதை மந்திர உபதேசமின்றி முழுதுற ‘வாசிக்க’வும் அதனடிப்படையில் ‘பொருள்கொள்ளவும்’ முயலக்கூடாது என்பதைப் பற்றி மட்டுமே. அது உருவாக்கும் இடர்களைப் பற்றி மட்டுமே சொல்லவந்தேன்.

ஜெ

திரு செயமோகன்,

குருமரபு இல்லாமல் திருமந்திரத்திற்கு பொருள்கொள்ளலாகாது என்றீர்கள். உங்கள் குருமரபு என்ன? எந்த தகுதியில் நீங்கள் பொருள்கொள்கிறீர்கள்? அதை நான் அறியலாமா?

என்.சிவகுருநாதன்

அன்புள்ள சிவகுரு,

நான் பொருள்கொள்ளவில்லை, ஏன் பொருள்கொள்ள மாட்டேன் என்றுதான் சொல்லியிருக்கிறேன். என் குறிப்பை படித்தால் தெரியும். நான் சிலபகுதிகளை பாடம்கேட்டதுண்டு, முறையான மறைஞான ஆசிரியரிடமல்ல. பயில்நிலையில் இருப்பவரிடம். அதன் விளைவுகளையும் அறிந்தேன். அதற்குமேல் சொல்வதற்கில்லை.

வேதாந்தத்தில் என் ஆசிரியர் மரபை எப்போதும் சொல்லிவந்திருக்கிறேன்.

இந்த விவாதத்தை முடித்துக்கொள்வோம்

ஜெ

அன்புள்ள ஜெ,

திருமந்திரம் பற்றிய விவாதத்தை ஏன் தேர்வுசெய்யப்பட்ட சிறு சூழலில் மட்டும் நடத்தவேண்டும் என்று நான் சொல்லிக்கொண்டிருந்தேன். அதற்கு ஆதாரமாக இந்த குறிப்பைக் காட்டினேன். இது டிவிட்டரில் ஒருவர் எழுதியது. ஓரளவு எழுதக்கூடியவர்தான். டி.எஸ்.கிருஷ்ணன் என்பவர்

திருமந்திரம் பற்றிய ஒரு விவாதம் ஜெமோ தளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. திருமந்திரத்தின் ஒன்பது தந்திரங்களையும் தெளிவாக விளக்க வல்லவர்கள் இன்று யாரும் இல்லை என்பது உண்மைதான்.கீதையைப் போலவே திருமந்திரத்தின் உட்பிரிவுகளுக்குள்ளேயும் முரண் உண்டு என்று புரியாமல் சொல்பவர்கள் இருக்கிறார்கள்

இப்படியிருக்க, திருமந்திரத்தை சுத்த அத்வைதியான ஒருவர் மட்டுமே சரியாக விளக்க முடியும் என்று சொல்வது சரியல்ல. சைவ சித்தாந்த மரபில் வந்த அறிஞரே அந்தச் சித்தாந்த நூலான திருமந்திரத்திற்குச் சரியான விளக்கமளிக்க இயலும். சைவ ஆதீனங்கள் பொறுப்பேற்று இந்த மரபு தொடர ஆவன செய்யவேண்டும்.

 “திருமந்திரத்தை சுத்த அத்வைதியான ஒருவர் மட்டுமே சரியாக விளக்க முடியும்”  என்று எவர் சொன்னார்கள்? நீங்கள் திருமந்திரத்திற்கு மூன்றுவாசிப்புக் கோணம் இருக்கக்கூடும் என்கிறீர்கள். சுத்தசைவசித்தாந்தம்,வாமமார்க்க சைவம், வேதாந்தமரபு. இவை மூன்றும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை, ஒன்றின் கோணம் இன்னொன்றுக்கு இல்லை என்கிறீர்கள். அதாவது வேதாந்தம் சார்ந்த ஒரு வாசிப்பும் சாத்தியம் என்று சொல்கிறீர்கள். முதற்கட்டுரையில் அதை தெளிவாகவே கூறினீர்கள். இரண்டாம் கட்டுரையில் அதை மீண்டும் மிகவிரிவாக விளக்கினீர்கள். அவ்வளவு பேசப்பட்டபின் அது இப்படி  ‘புரிந்துகொள்ள’ப்பட்டிருக்கிறது

இப்படி விவாதிப்பதனால் என்ன பயன்? அறியாமையை பலமடங்காக ஆக்கிக்கொள்ளலாம். இதுதான் இன்றைய பொதுச்சூழல். எவரும் எதையும் கவனிப்பதில்லை. எதையும் புரிந்துகொள்வதில்லை. அவரவருக்குத் தோன்றியதைச் சொல்கிறார்கள்.ஆனால் அத்தனைபேரும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஒருசாரார் எல்லா விவாதத்திலும் வம்புகளையும் சமகால அரசியல்சழக்குகளையும் மட்டுமே காண்கிறார்கள்.

இந்த வரியை இப்படியே விட்டால் ஒரு வருடம் கழித்து எவராவது திருமந்திரத்தை சுத்த அத்வைதியான ஒருவர் மட்டுமே சரியாக விளக்க முடியும் என்று ஜெமோ சொன்னார் என்பார்கள். அதெப்படி என்று ஒரு பத்துபேர் பொங்குவார்கள். ஆதாரம் கேட்டால் இந்த வரியைச் சுட்டிக்காட்டுவார்கள். இதெல்லாம் இப்படியே மட்காத குப்பையாக இணையவெளியில் இருந்துகொண்டிருக்கும். ஆகவேதான் இந்த இணையவெளியில் தத்துவ விவாதமே செய்யக்கூடாது என்று நான் நினைக்கிறேன்

லட்சுமணப்பெருமாள்

அன்புள்ள லட்சுமணப்பெருமாள்

நான் இணையவெளியில் திருமந்திரத்தை விவாதிக்கவில்லை- ஏன்  விவாதிக்கக்கூடாது என்று மட்டுமே எழுதினேன். அதுவே இந்த அளவுக்கு குப்பைகளைச் சேர்த்துவிட்டது

சுதாரித்துக்கொள்கிறேன்

ஜெ

அன்புள்ள ஜெ.,

உங்கள் தளத்தில் வரும் வாசகர் கடிதங்கள் எப்போதுமே புதிய கோணங்களை முன்வைப்பவை. கரு.ஆறுமுகத்தமிழனின் கடிதம் சிறந்த உதாரணம்.

இந்த அளவு பல துறைகளிலும் விரிவான அறிவான விவாதம் நடக்கும் வேறு ஒரு தளம் தமிழில் மட்டும் அல்ல, ஆங்கிலத்திலும் கூட என் கண்ணுக்கு அகப்படவில்லை.

அதிலும் தமிழில் அறிவார்ந்த விவாதங்ளே பொதுத்தளத்தில் இல்லாத நிலையில் இது ஒரு அறிவுப் புரட்சி என்றுதான் சொல்லவேண்டும். உங்களுக்கும், இந்தத் தளத்தை நிர்வகிக்கும் அனைவருக்கும் நெஞ்சக்கார்ந்த நன்றிகள்.

-ரத்தன்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்விருது,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள் -10
அடுத்த கட்டுரைஞானி- கடிதங்கள்