அன்புள்ள ஜெ
ஞானி பற்றிய கட்டுரைத்தொடரை ஆவலுடன் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு சிறந்த புனைவை படிக்கும் நிறைவு சில போது வந்தது. சிலசயமம் ஒரு தத்துவநூலை படிப்பதுபோலிருந்தது. ஆனால் அபாரமான வாசிப்புத்தன்மையுடன் இருந்தது. அந்த வாசிப்புத்தன்மை அதன் சரளமான செறிவான மொழியாலும் அழகான படிமங்களாலும் பகடிகளாலும் வந்தது. மார்க்சியம் –மைட்டோகாண்டிரியம் பற்றிய உவமை மிக அழகானது. எருது- யானை ஒப்பீடு அதைவிட அழகானது
ஞானி வாழ்க்கைபூரா என்ன சொல்லிக்கொண்டிருந்தார் என்று விளக்க இத்தனை பக்கங்களை எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். சோவியத் ருஷ்யாவின் ஒடுக்குமுறை அரசிலிருந்து அறக்கேள்விகளை எழுப்பிக்கொள்கிறார். மார்க்சிய அறம் என்ன என்று தேடுகிறார். மார்க்சிய மெய்யியலை வகுக்க முயல்கிறார். அதை ஒரு இன்குளூசிவ் மெய்யியலாக புரிந்துகொள்கிறார். இந்தியாவின் சிந்தனைகளுடன் மார்க்சியத்தை எப்படி இணைப்பது, அதை இந்தியசிந்தனைகள் அனைத்துக்கும் அடித்தளமாக எப்படி ஆக்குவது என்று யோசிக்கிறார்
அவருடைய தேடலும் அவருடைய வாழ்க்கைச் செய்தியும் அருமையாகச் சொல்லப்பட்டிருந்தன. ஆனால் அவர் மறைந்தபின் எழுதப்பட்ட இருபதுமுப்பது அஞ்சலிக்குறிப்புகளை வாசித்தேன். ஒன்றில்கூட அவர் சொன்னது இதைத்தான் என்று எவரும் சொல்லவில்லை. ஓரிருவரிகள்கூட. அவர் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை கண்டுபிடிக்க முயன்றார், மதத்துடன் சமரசம் செய்துகொண்டார் – இந்தவகையான ஒற்றைவரிகளையே காணமுடிந்தது
அதன்பின் இதோ இந்த தொடரில் நீங்கள் இத்தனை விரிவாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இதைவாசித்தவர்கள்கூட இந்தக்கட்டுரைத்தொடரில் மையமாகவும், அதிகமாகவும் பேசப்பட்ட இந்த விஷயத்தை கவனிக்கவே இல்லை. நான் பேசியவர்கள் பெரும்பாலும் உங்கள் எதிர்ப்பாளர்கள். அவர்களெல்லாமே சுந்தர ராமசாமி –நீங்கள்- ஞானி என்ற முக்கோணத்தின் பிரச்சினைகளைத்தான் கவனித்தார்கள். கீழைமார்க்சியம் சம்பந்தமான விவாதங்களை பொருட்டாகவே நினைக்கவில்லை. ஆச்சரியமென்னவென்றால் பெரும்பாலானவர்கள் ஸ்கிப் செய்துவிட்டார்கள். அதெல்லாம் எழுதப்பட்டதே அவர்களுக்குத் தெரியவில்லை
ஏனென்றால் அது ஒரு தேவையற்ற சிந்தனை, அல்லது பொருத்தமற்ற சிந்தனை என்பதுதான். மார்க்சியத்தின் இன்றைய இடம் இது. அது ஒரு விரிவான மெய்யியலும் தத்துவமும் வரலாற்றுப்பார்வையும் கொண்டதாக இருக்கலாம். ஆனால் இனி இந்தியாவின் அரசியல்சூழலில் அவற்றையெல்லாம் பேசுபொருளாக ஆக்கவே முடியாது. இப்போது இருப்பது மறுமுனையில் இந்துத்துவ ரிடக்ஷனிசம். அதை எதிர்க்க மார்க்சியம் ஒரு எளிமையான எதிர்ப்பரசியலாகவே திகழமுடியும். சென்றதலைமுறையினரைப்போல தத்துவசிந்தனையையும் மெய்யியல்தேடலையும் நிகழ்த்திக்கொள்ள இந்த தலைமுறைக்கு நேரமில்லை. மனமும் இல்லை. இன்று மார்க்சியம் இன்றைய அரசியலில் ஒரு டூல் ஒரு ஆயுதம் அவ்வளவுதான்
ஞானி பேசிய மெய்யியல்சிக்கல்களை நான் என் இரண்டு நண்பர்களுடன் பேசமுயன்றேன். மார்க்சியர்கள்தான் அவர்கள். ஆனால் அவர்களால் அவற்றை கேட்டுக்கொள்ளவே முடியவில்லை. அவர்களுக்கு அது தேவையில்லாத ஒரு தத்துவச்சிக்கலாகவே தோன்றியது. அவர்களுக்கு மார்க்சிய தத்துவத்திலே ஆர்வமே இல்லை. இன்றைக்கு எங்கேயும் அதெல்லாம் படிப்பிக்கப்படுவதில்லை. ஏனென்றால் அந்த தத்துவவிவாதம் இன்றைய சூழலில் தேவையற்ற சிக்கலை உருவாக்கும் என்பதனால்தன. இளையதலைமுறையிடம் ஞானியின் இந்தத்தேடலுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை
மன்னிக்கவும் உண்மையில் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நீங்களே பார்ப்பீர்கள். இந்தநூலை வாசிப்பவர்களிலேயே கூட இளைய தலைமுறைக்கும் இந்தப்பகுதியில் எந்த ஆர்வமும் இருக்காது. அப்படியே கடந்துசென்றுவிடுவார்கள். இந்தியாவுக்கான மார்க்சியம், கீழைமார்க்சியம் பற்றியெல்லாம் இனி பெரிய பேச்சுக்களேதும் நிகழாது. ஞானி அவ்வகையில் அவருடைய சொந்தத்தேடலை முன்னெடுத்தவர், சென்றகாலத்தின் தத்துவஞானி, அவ்வளவுதான்
ஆர்.ராஜசேகர்
அன்புள்ள ஜெ
ஞானியுடனான உங்களுடைய உரையாடல்கள், அனுபவங்கள் குறித்த நீண்ட நெடிய கட்டுரைகள் பெரும் ஆர்வமூட்டுவதாகவும், மேலும், ஞானியை வாசிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. கட்சி அரசியல் சாந்த, எளிய வறட்டு இடதுசாரிகளிடமிருந்து ஞானி பெரிதும் வேறுபடுகிறார். பண்பாட்டைப் பேசுதல், மெய்யியல் தேடல் ஆகியவைகளைக் கொண்ட ஞானி எனக்கும் அணுக்கமானவராகிறார். இவ்வாறு நேர்நிலைத்தன்மை கொண்ட எவரும் நமக்கு ஏதாவதொன்றைக் கற்பிக்க முடியும். அவர்கள் அனைவரும் நம் ஆசிரியர்களே.
உங்களின் தனிப்பட்ட இலக்கிய உரையாடல்கள் இலக்கியச் சூழலுக்கு உகந்தவையாக இருப்பினும், நான் இங்கு குறிப்பிட விரும்பும் இரண்டு விஷயங்கள்- தமிழ்த்தேசியம் குறித்த அவரது நோக்கு, மதங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு பற்றிய அவரது புரிதல்கள்.
இன்றைய சூழலில் தமிழ்த்தேசியம் மீது எனக்கு ஒவ்வாமையே உள்ளது. அது இன்று ஒருவகையான சாதிய அடிப்படைவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. எல்லாவகையான இன, மத, மொழி அடிப்படைவாதங்களும் தனக்கென நெடிய ‘வரலாற்று நியாயங்களைக்’ கொண்டிருக்கும் (அது இல்லையென்றாலும் கூட ஆங்காங்கு பொறுக்கி அதைக் கட்டமைத்துக்கொள்ளும்). ஏனெனில் எதிர்காலத்தில் அது செய்யப்போகும் ஃபாசிச செயல்பாடுகளுக்கு, குற்றவுணர்வில் இருந்து தப்பித்துக்கொள்ள அது உதவும். இவைகளோடு நாம் நம்மை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வியே எழுகிறது. இருப்பினும் அவைகளை இன்றைய மேடை அரசியல்களிலிருந்து நாம் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. குறைந்தபட்சம் ‘ஒரு சமூகம்’ என்றளவிலாவது ஒரு நடைமுறை வசதியாகவும், மையப்படுத்தப்பட்ட முற்றதிகாரத்தைத் தவிர்ப்பதற்கும் அவற்றைப் பேசவும், செயல்படுத்தவும் வேண்டியிருக்கிறது. ஞானி சொல்வதை போல, இன்று எல்லாம் கைமீறிப்போய்விட்டதா ? கங்கைச் சமவெளி ஒற்றை அடையாளமாகப் பேருருவம் கொள்கிறதா ? அவ்வாறெனில், அவரின் ஆதங்கம் நியாயமானதே. பொருளியல், நிர்வாகம் விஷயத்திலாவது ஒரு சமூகம் என்ற அளவில் நமக்கென கொஞ்சம் சுதந்திரமான, அனைவரையும் சென்றுசேரக் கூடிய அமைப்பை நாம் கொண்டிருப்பது சிறந்ததே. அது- ஞானி சொல்வது போல- பிரிவினைப்போக்காக இல்லாமல், குறைந்தபட்சம் தனித்தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
சோவியத் விஷயத்தில், கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளை மதமற்றவர்களாக வார்த்து எடுத்த பின்பும் மீண்டும் மதம் எவ்வாறு முளைத்தது ? என்ற அவருடைய கேள்வி ஆழமானது. அதன்மூலம் அவர் மனிதனின் அடிப்படைத் தேவை மெய்யியல் என்பதைக் கண்டடைகிறார். உண்மையில் மனிதனுக்கு மதம் தேவையில்லை; கடவுள்கூடத் தேவையில்லை. ஆனால் அவனுக்கு மெய்யியல் தேவை. அவனுடைய அடிப்படையான கேள்விகளுக்குப் பதிலோ, நீண்ட நெடிய கதையாடல்களோ தேவை. அந்த பதில் சிலருக்கு ஆறுதலளிக்கும் பொருட்டாகவும் இருக்கலாம். மறுபுறம் கலை, கவித்துவம், இசை என அகநிறைவுகள் தேவை. இவையனைத்தையும் மதம் வழங்குகிறது. அல்லது இவையனைத்தையும் சேர்த்து மதமாக நாம் ஆக்கிவைத்திருக்கிறோம். எனவே, மதத்தை நீக்கிவிட்டு அவ்விடத்தில் வேறொன்றை நிரப்ப வேண்டுமெனில், அது வழங்கும் அத்தனையையும் வழங்கியாக வேண்டும்.
சோவியத் விவகாரத்தில் அவருடைய இந்தக் கேள்வி, இங்கு நூற்றாண்டை நெருங்கப்போகும் பெரியாரிஸத்திற்கும் பொருந்தும். இவர்கள் இங்கு எத்தகைய பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் ? நாங்கள் மதத்தையோ, இறைவழிபாட்டையோ, ஆன்மிகத்தையோ, கலைகளையோ எதிர்க்கவில்லை; சமூகத் தீமைகளை மட்டுமே எதிர்க்கிறோம் என்று சொல்வார்களேயானால், இக்கேள்விகளை அவர்களிடம் கேட்கவேண்டியதில்லை. ஏனெனில் சில சமூகத் தீமைகளுக்கான எதிர்ப்புக் குரலாகவும், மறுப்புக் குரலாகவும் மட்டும் அவர்களை மதிப்பிட்டால் போதும். ஆனால், மதங்களுக்கு மாற்று நாங்கள் என்றோ, தாங்கள் முன்வைக்கும் அறிவியலும், பகுத்தறிவும் மனித வாழ்க்கைக்குப் போதும் என்றோ சொல்வார்களேயானால், அது மிகப்பெரிய அபத்தமாகும். வெறும் பகுத்தறிவு மதத்தை நீக்கிவிடும் என்று எப்படி இவர்கள் கணக்குப்போட்டார்கள் ? இன்னொன்று, மனிதனுடைய அகத்தை நிறைவுசெய்யவோ கூர்மைப்படுத்தவோ கூடிய எதுவும் அவர்களிடம் இல்லை.மாறாக அதை மறுக்கவே செய்கிறார்கள். கவிதை, கவித்துவம், இலக்கியம், கலை எல்லாம் ஒருவகைப் பிறழ்வு என்றும், ஏமாற்றுவேலை என்றும் சொல்லிவருகிறார்கள்.
இத்தகைய பொதுப்போக்குகளில் இருந்து ஞானி வேறுபடுகிறார். அதனால் அவர் எதோ ஒரு வகையில் உங்களுக்கு ஆசிரியராக முடிகிறது. எனினும், ஞானியும் ஜெயமோகனும் வேறுபடும் இடங்களில் முக்கியமானது- காலில் விழுவதைப் பற்றிய உரையாடல். ‘எப்படி மனிதன் காலில் மனிதன் விழுகிறான்’ என்று அவர் கேட்டதும், ‘நித்தியாவின் காலில் நானும் விழுவேன்’ என்று நீங்கள் சொன்னதும், அந்த வேறுபாட்டின் ஒரு குறியீடு. காலில் விழுவது என்ற ஒன்றை, ‘ஆண்டை காலில் அடிமை விழுவது’ என்பதையும், அது ஒரு சுயமரியாதை குறித்த விஷயமாகவே இங்கு பார்க்கப்படுகிறது. உண்மையில் அது குரு- சிஷ்ய உறவின் ஒரு தன்மை. அங்கு அது அடிமைத்தனத்தைக் குறிப்பிடுவதில்லை. இன்று நடைமுறையில், காலில் விழுவதென்பது ஒரு சடங்காகவும் சம்பிரதாயமாகவும் மட்டுமே உள்ளது. வயதில் மூத்தவர் காலில் விழுதல் என்பதாக மட்டுமே அது உள்ளது. இதற்கு எந்தப் பொருளும் இல்லை; இது ஒரு அபத்தம் மட்டுமே.
ஞானி வள்ளலாரை நேரில் கண்டிருந்தால் என்ன செய்திருப்பார் ? நீயும் நானும் சமம்தான் என்று தோளில் கைபோட்டிருப்பாரா ? செய்திருக்க மாட்டார். ஏனெனில் ஏற்கெனவே அவர் வள்ளலாரின் மாணவராகிவிட்டிருந்தார். ஒரு குருவை அணுகும் மனநிலையோடுதான் அணுகியிருப்பார். காலில் விழும் செயலை அவர் செய்யாமல் தவிர்க்கலாம். இருப்பினும் அதற்கான தன்மை அவருள் உருவாகியே இருந்திருக்கும். வாழ்வில் யாரையாவது தன் குருவாகக் கொண்டவர்கள், அவருடைய மாணவனாகத் தன்னை எண்ணுபவர்கள் மட்டுமே உணரக்கூடிய விஷயம் இது.
விவேக் ராஜ்