ஞானி- கடிதங்கள்

அன்புள்ள ஜெ ,

வணக்கம் . கோவை ஞானி அவர்களைப் பற்றிய உங்களின் நினைவுத் தொடர் அற்புதம் . பின்தொடரும் நிழலின் குரலை திரும்ப வாசிப்பது போல இருந்தது (கொஞ்ச நாள் முன்புதான் அந்த நாவலை மூன்றாம் முறையாக வாசித்து முடித்திருந்தேன்). பல்வேறு நினைவுகள் அலை அலையாக வந்து சென்றன.

தபால் துறையில் தொழிற்சங்க தலைவராக இருந்த என் தந்தை சோவியத் உடைவின் போது அலைக்கழிந்த நிலையில் இருந்தார். (இப்போது சாதி சங்கத்தில் பற்று கொண்டு பக்தி மானாக இருக்கிறார்). கல்லூரியில் எங்கள் சீனியரான திரு செங்கதிர் விஷ்ணுபுரத்துக்கு முன்பணம் திரட்டியது (நானும் கூட கொடுத்த நினைவு), வீட்டில் படமாக தொங்கிய லெனின், மூலதனம் வாசிக்க ஆரம்பித்த பரவசம், கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி தேர்தலில் நண்பர் சாதியால் தோற்கடிக்கப் பட்டபோது ஏற்பட்ட கசப்பு, உங்களின் வாசகர் என்பதாலேயே பேச்சைக் குறைத்துக் கொண்டு விலகிய நண்பர்கள், தமிழ் தேசியம் சீமானால் கடத்தப் பட்டது குறித்து நண்பர்களுக்கு ஏற்பட்ட திகைப்பு, என பல.

நீங்கள் கூறியது போல் என்றும் இலக்கியமே ஆறுதல். இந்த தொடர் முழுவதும் ஒரு விறு விறுப்பான நாவல் போல சென்றது. பல்வேறு கேள்விகளுக்கு விடையாக அமைந்தது. இது நூலாக வரும் நாளை எதிர்நோக்கியுள்ளேன். நன்றி.

 

அன்புடன்,
ஆ .கந்தசாமி
புனே.

அன்புள்ள ஜெ,

ஞானி நினைவுநூல் ஓர் அருமையான வாசிப்பனுபவம். ஞானியின் இரண்டு முகங்கள் நூலில் பேசப்பட்டுள்ளன. ஒன்று, அவர் நவீன இலக்கியத்தை அணுகியவிதம், அதன் ஒருகாலகட்டத்தில் அவருடைய பங்களிப்பு. உங்களுடைய படைப்புகளுடன் அவருக்கிருந்த உறவு வழியாக அதைச் சொல்லியிருக்கிறீர்கள்

ஆனால் நூலின் பெரும்பகுதி அவர் இன்னொரு மார்க்ஸியவடிவத்துக்கான முயற்சிக்காக எடுத்துக்கொண்ட உழைப்பும் அதில் அடைந்த ஏமாற்றமும் அதன் வழியாக அவருக்குக் கிடைத்த வசைகளும் அவர் எப்படி எங்கே சென்றடைந்தார் என்பதும்தான்.

நூலில் ஞானியின் இளமைக்காலம் முதல் அவருடைய மறைவுக்காலம் வரையிலான உலக- இந்திய- தமிழக அரசியல்சூழல் ஒரு கோட்டுச்சித்திரமாக அளிக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு கம்யூனிஸ்டுக்கட்சியின் எழுச்சி ஒடுக்கப்படுவது, நேரு அளித்த எதிர்ப்பார்ப்பின் வீழ்ச்சி, சோவியத் ருஷ்யாவிலிருந்து வெளிவந்த ஒடுக்குமுறைச் சித்திரங்கள், கம்யூனிஸ்டுக் கட்சிகளின் உடைவு, கம்யூனிஸ்டுக்கட்சியின் உட்போர், நக்சலைட் எழுச்சியும் வீழ்ச்சியும்,சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சி, மார்க்சியர்களின் குறுகியகால கொள்கை மறுபரிசீலனை, இன்றைய இனவாத அரசியல்நுழைவு ஆகியவற்றை ஒரு கோட்டுச்சித்திரமாக நூல் அளிக்கிறது. இந்த ஒவ்வொரு காலகட்டம் வழியாகவும் ஞானி எப்படி கடந்து வந்தார், இவை ஒவ்வொன்றும் அவருடைய சிந்தனையை எப்படிப் பாதிக்கின்றன என்பதைக் காணமுடிகிறது

ஞானி மார்க்சியத்தை ஓர் இறுக்கமான எதிர்ப்பியக்கம் என்ற நிலையிலிருந்து அகற்றி ஒரு மென்மையான கருத்தியக்கமாக ஆக்க முயன்றவர் என நினைக்கிறேன். எல்லா சிந்தனைகளையும் மார்க்ஸியம் முழுமையாக மாற்றியமைத்துவிடும் என அவர் நினைத்திருக்கிறார். சென்ற இடத்தில் உள்ள சிந்தனைகளை உள்ளிழுத்துக்கொண்டு அது உருமாறும் என்றும் இந்தியாவுக்கேற்ப அது உருமாறும் என்றும் எண்ணியிருக்கிறார். அது நிறைவேறவில்லை என்பதையே அவருடைய வாழ்க்கை காட்டுகிறது

அவருடைய கனவு மகத்தானது. ஆனால் அப்படி உலகசிந்தனைகளை எல்லாம் இழுத்து ஒன்றாக்கும் ஆற்றல் மார்க்சிய தரிசனத்துக்கு இல்லை. அது சார்வாகம் நிகிலிசம் போல ஓர் எதிர்ப்புச் சிந்தனை மட்டும்தான். அதைத்தான் காலம் நிரூபித்திருக்கிறது

 

ஏ.ஆர்.செந்தில்

 

அன்புள்ள ஜெ

ஞானி பற்றிய நூலில் முக்கியமான பகுதி என்று நான் நினைப்பது எஸ்.என்.நாகராஜனின் கீழைமார்க்சியம் பற்றி விளக்கப்பட்டிருப்பதுதான். சுந்தர ராமசாமிக்கும் நவீனத்துவத்திற்கும் இருந்த உறவு, ஞானிக்கு நவீனத்துவத்தை கடக்க உதவிய காரணிகள் எல்லாம் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தன. ஆனால் சுருக்கமாக கூர்மையாக தொகுத்து அளிக்கப்பட்டிருந்த எஸ்.என்.நாகராஜனின் இந்திய மார்க்சியத்துக்கான தேடல் பற்றிய பகுதிகளே உண்மையில் மிக ஆழமானவை. அவை உருவாக்கும் கேள்விகள் நீடித்து சிந்திக்கவைப்பவை.

மார்க்சியத்தின் மூன்று மெய்யியல் அடிப்படைகளை அவர் வரையறைசெய்கிறார். அந்த வரையறை மார்க்சியத்தையே தெளிவுபடுத்திவிடுகிறது. அந்த மெய்யியல் எந்த மெய்யியலுடனெல்லாம் உரையாடி தன்னை மையச்சக்தியாக ஆக்கிக்கொள்ள முடியும் என்று சொல்கிறார். அந்த பகுதிகளை பலமுறை வாசித்தேன்

எம்.ராஜேந்திரன்

அன்புள்ள ஜெ

ஞானி கட்டுரைத்தொடர் வந்துகொண்டிருந்தபோது நண்பர்கள் பேசிக்கொண்டோம். ஞானி பற்றி ஏகப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகள் வந்தன. எல்லாமே டெம்ப்ளேட். அவர் என்ன சொன்னார் என்று ஒரு புதியவாசகனுக்கு அதில் தெரிந்துகொள்ள முடியாது. அவர் மார்க்சிய சிந்தனையாளர், மண்ணுக்கேற்ற மார்க்சியம்பேசியவர் அவ்வளவுதான். இந்த கட்டுரை வந்தபின்னால் ‘ஜெமோ இன்னும்கூட ஆழமா போயிருக்கலாம்’ ‘ஜெமோ திரிக்கிறார்’ என்றெல்லாம் கருத்துக்கள் வரும். வெட்கமே படமாட்டார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். இனி எதிர்பார்ப்பது அந்த கட்டுரைகள், குறிப்புகளைத்தான்.

எஸ்.சிவக்குமார்

 

ஞானி-21

ஞானி-20

ஞானி-18

ஞானி-17

ஞானி-16

ஞானி-15

ஞானி-14

ஞானி-13

ஞானி-12

ஞானி-11

ஞானி-10

ஞானி-9

ஞானி-8

ஞானி-7

ஞானி-6

ஞானி-5

ஞானி-4

ஞானி-3

ஞானி-2

ஞானி-1

முந்தைய கட்டுரைதிருமந்திரம்- இறுதியாக…
அடுத்த கட்டுரைஎண்ணும் பொழுது…