திரு.ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் தளத்தில் ஞானி ஐயா பற்றி விரிவாக எழுதி வரும் கட்டுரையைத் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன்.
ஐயா அவர்களுடன் எனக்கும் நீண்ட தொடர்பு உள்ளது. நான் கல்லூரியில் படிக்கும் காலம்தொட்டு ஐயா அவர்களுடன் உரையாடி வருவேன்.
நடந்துவரும் காலடி ஓசை கொண்டு யார் வருகிறார்கள் என அறிந்து கொள்ளும் தன்மையினை ஐயா பெற்றிருந்தது கூடுதல் சிறப்பு.
பல கூட்டங்களுக்கு ஐயா அவர்களை நான் கரம் பிடித்து அழைத்துச் சென்றிருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்வாக உள்ளது. தங்களது கட்டுரை வாயிலாக ஐயா அவர்களைப் பற்றி மேலும் பல தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது. தங்களது பணி தொடரட்டும்.
அன்புடன்
சங்கர்.
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
சுரா- நினைவின் நதியைப் போல், ஞானியுடன் நீங்கள் பயணித்த அனுபவமும் வாசிப்பதற்கு பெரும் கொடை.
சிந்தனை முறைகள் எவ்வாறு இயங்குகிறது என்பதற்கான சான்றுகள்.
நன்றி
பலராம கிருஷ்ணன்
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம்.
உங்களின் வலை பதிவுகளையும், கதைகளையும் நான் தொடர்ந்து படிப்பவன். உங்களின் ஊட்டி முகாமில் ஒரு முறையேனும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டவன். உங்களின் ஞானி அவர்களை பற்றிய பதிவுகளை படித்து கொண்டு இருக்கிறேன். எனக்கு ஒரு கேள்வி – நீங்கள் பெரியாரை பற்றி (17ம் பதிவு) ஒரு புறங்கை வீச்சாக சொல்லி இருப்பது ஒரு நெருடலை தருகிறது. பெரியாரை முழுமையாக ஒப்பு கொள்ளாவிட்டாலும், “ஈவேராவின் சிந்தனைகள் எந்த பண்பாட்டுக்கும் எதிர்மறைவிசைகள் என்றே நினைக்கிறேன். அவை மூர்க்கமானவை, அடிப்படையற்ற காழ்ப்புகளால் ஆனவை, சிந்தனைக்கு எதிரான பாமரத்தனத்தை வளர்ப்பவை. இன்றுவரை இந்த எண்ணத்தில்தான் என் மனம் நிலைகொள்கிறது.” என்று எழுதுவது சரியா? அது அவர் ஏற்படுத்திய சிந்தனை மாற்றங்களை குறிப்பாக பெண்களின் விடுதலை சார்ந்த சிந்தனைகளை எப்படி இப்படி ஒதுக்கி தள்ள முடியும். ஒரு வேளை, I may be missing the context. இதற்கு உங்களின் கருது என்ன? நன்றி.
தேவா
அன்புள்ள தேவா
நான் இதைப்பற்றி விரிவாக பலமுறை எழுதியிருக்கிறேன். படித்துப்பாருங்கள். என்ன நோக்கமிருந்தாலும் ஒரு சமூகத்தை நோக்கி தர்க்கத்தின் மொழியில் அல்லாமல், வரலாற்றுணர்வு இன்றி, காழ்ப்பு மேலோங்க பேசும் ஒரு முதன்மையான ஆளுமை காலப்போக்கில் மிக எதிர்மறையான விளைவையே உருவாக்குகிறார். ஈவேரா அவர்கள் இங்கே இன்று ஓங்கியிருக்கும் பாமரத்தனமான குதர்க்கங்கள், காழ்ப்புகள் ஆகியவற்றுக்கு வழிகோலியவர். அதை மீண்டும் மீண்டும் அவருடைய வழித்தோன்றல்கள் உறுதிசெய்கிறார்கள்
ஜெ
அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை
ஈவேரா -உண்மைகள்
ஈவேரா?
சந்திரசேகரரும் ஈவேராவும்