எஸ்,பி.பாலசுப்ரமணியம் பாடிய தமிழ்ப்பாடல்களில் எனக்குப் பிடித்தமானவற்றில் முதற்சில இடங்களுக்குள் வருவது அழியாதகோலங்கள் படத்திற்காக சலீல் சௌதுரி இசையில் வெளிவந்த ‘நான் எண்ணும் பொழுது’. சமீபத்தில் சுபஸ்ரீ தணிகாசலத்தின் குவாரண்டைன் ஃப்ரம் ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒருவர் அதைச் சிறப்பாகப் பாடினார். அதன்பின் அடிக்கடி அந்தப்பாடலைக் கேட்கிறேன்
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
நெஞ்சில் இட்ட கோலமெல்லாம்
அழிவதில்லை
என்றும் அது கலைவதில்லை
எண்ணங்களும் மறைவதில்லை.
அந்த நாள்
அந்த நாள் அம்மா என்ன
ஆனந்தமே
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
என்னை சேர்கின்றது நெஞ்சிலே
ஆற்றிலேஆற்றங்கரை
ஊற்றினிலே
அங்கு வந்த காற்றினிலே
தென்னை இளங்கீற்றினிலே
அம்மம்மாஅம்மம்மா அள்ளும் சுகம்
கோடி விதம்
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
நான் எண்ணும்பொழுது
அது இந்திமூலத்தில் லதாமங்கேஷ்கர் பாடிய நா ஜியா லகே நா என்றபாடலின் மறு உருவாக்கம். மூலத்தில் லதா அளித்ததை விட குழைவையும் அழகையும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அளித்திருக்கிறார். இத்தருணத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை நான் சந்தித்த நினைவுகளும் சேர்ந்துகொள்கின்றன. ‘நெஞ்சிலிட்ட கோலமெல்லாம் அழிவதில்லை’ என்ற வரி அங்கே இணைகிறது
ஆனால் இந்தப்பாடலில் என்றும் எனக்கு ஒரு குறை உண்டு. திரும்பத் திரும்ப இதைக் கேட்காமல் தவிர்த்தே வருவதும் அதனால்தான். இதன் வரிகள் இசையின் உணர்வுகளுடன் சரியாக அமையவில்லை. வழக்கமாக தமிழ்ப்பாடல்களில் பெரும்பாலானவற்றில் எனக்கு இச்சிக்கல் உண்டு. நான் இசையைவிட வரிகளைக் கவனிப்பவன், என் நுண்ணுணர்வு மொழி சார்ந்தது.
நான் இப்பாடலின் இந்தி மூலத்தை கேட்டேன். அதற்கும் மூலமான வங்கமொழிப்பாடலை. அதன் வரிகளை தேடி எடுத்து மொழியாக்கம் செய்து கேட்டேன். மூலம் அற்புதமாக அச்சொற்களுக்கான இசையாகவே ஒலிக்கிறது.[ வரிகளும் மொழியாக்கமும்]
நா ஜியா லகே நா
தேரே பினா மேரே கஹின்
ஜியா லகே நா
என்ற வரிகளை சொல்லுக்குச் சொல் மொழியாக்கம் செய்வதென்றால்
வேண்டியதில்லை எனக்கேதும்
நீயன்றி வேறேதும் எனக்கு வேண்டியதில்லை
என்று வரும். அங்கே மொழியிலிருக்கும் உணர்வே இசையிலும் அமைகிறது. எங்கோ என் வாழ்வை தொலைத்துவிட்டேன். உன்னைக் கண்டதும் அங்கே என் மூச்சைக் கண்டுகொண்டேன் என்ற அடுத்த தொடக்கமும் உணர்வுகள் சரியாக இசையுடன் அமைய அழகாகவே உள்ளது
மூலத்தில் நா என்று இழுக்கிறார் லதா. ‘இல்லை’ என்ற சொல் அங்கே அப்படி நீளும்போது அது அந்தப்பாடலுக்கு அத்தனை அழுத்தத்தை அளிக்கிறது. ஆனால் தமிழில் ‘நான்’ என்று அச்சொல் வருகிறது. இந்தப்பாடலுக்கு ‘நான்’ என்ற சொல்லில் அத்தனை அழுத்தம்விழ அர்த்தபூர்வமான, உணர்வுரீதியான காரணம் இல்லை. அது ராகத்துக்கான அழுத்தம். ஆகவே அது தேவையற்ற நீட்சியாக ஒவ்வொரு முறையும் தெரிகிறது.
எண்ணும் செயலில்தான் அழுத்தம். தேவையென்றால் பொழுது என்னும் சொல்லில் அழுத்தம்விழலாம். நான் என்பது இங்கே எவ்வகையிலும் முக்கியமல்ல. ‘நானே எண்ணும்போது’ ‘நான் மட்டுமே எண்ணிக்கொள்ளும்போது’ என்ற தொனி வருகிறது. அது பாடலின் உணர்வே அல்ல
அதற்குப் பின்னால் வரும் வரிகளும் இசையில் அமையவில்லை. அல்லது வரிகளை இசை உணரவில்லை. ‘ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது’ என்பது நினைவுகளின் மீட்டலாக வெளிப்படவில்லை. ‘அந்தநாள் என்ன ஆனந்தமே!” என்பது பாடல் வரி. இசையில் “அந்தநாள் என்ன? ஆனந்தமே” என்று கேள்விபதில்போல ஒலிக்கிறது. ‘என்னைச் சேர்கின்றது நெஞ்சினிலே’ என்ற வரியில் நெஞ்சினிலே சம்பந்தமில்லாமல் அறுந்து நிற்கிறது. உண்மையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவருடைய குரலால் மட்டும்தான் இதில் உணர்வேற்றம் செய்திருக்கிறார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் பாடலை வசனமாகவும் உணர்ச்சிபூர்வமாகச் சொல்லிச் சொல்லி இசையின் அழுத்தமும் பாடல்வரிகளின் பொருளின் அழுத்தமும் சரியாக பொருந்துகிறாரா என்று பார்ப்பார் என்று அவருடன் பணியாற்றியோர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். சலீல் சௌதுரி அதைச் செய்வதில்லை. அவருக்கு தென்னகமொழிகள் பழக்கமில்லை என்பதுடன் மெட்டுதான் முக்கியம், வரிகளுக்கு பெரிய முக்கியத்துவம் ஏதுமில்லை என்று அவர் நம்பியதாகவும் தெரிகிறது. அவருடைய அதிதீவிர ரசிகரான என் நண்பர் ஷாஜியும் அப்படித்தான் நினைக்கிறார்.
ஆனால் எனக்கு பாடல் என்றால் அதன் மொழிவடிவமே, அதன் வழியாகவெளியாகும் கவித்துவமும் உணர்ச்சியும் மட்டுமே. அவற்றை ஏந்தி நிற்பதுதான் மெட்டு என்பது என் எண்ணம். சாமானிய மக்களின் எண்ணமும் அதுவே என நினைக்கிறேன். மெட்டு முதலில் கவர்கிறது, முணுமுணுக்கவைக்கிறது. ஆனால் நீண்டகால அளவில் நிலைகொள்ளும் பாடல்கள் எல்லாம் மொழியில் கவித்துவமோ உணர்வோ வெளிப்பட்டவை மட்டுமே.
அழகிய மெட்டும், அதில் நன்கமையாத வரிகளும் கொண்ட பாடல்களை இசைநிபுணர்கள் சொல்லிச் சொல்லி நம் நினைவில் நிலைநிறுத்துகிறார்கள். நாமும் ஒவ்வொருமுறை கேட்டபின்னரும் “ஆமா, அற்புதம் இல்ல” என்று சொல்லி கடந்துசெல்கிறோம். நம் நினைவில் இயல்பாக அவை எழுவதேயில்லை.
“நான் எண்ணும் பொழுது” பாடல் “பசுமைநிறைந்த நினைவுகளே” பாடலின் அதே உணர்வைக் கொண்டது. ஒரு பழைய நினைவு எழும்போது பசுமைநிறைந்த நினைவுகளே என்னும் வரி நம்மில் இயல்பாக எழுகிறது. ‘நான் எண்ணும் பொழுது’ அப்படி எழுவதில்லை.
நா மோனோ லகே நா என்னும் வங்க வடிவத்தை சலீல் சௌதுரியே பாடிய ஒரு பதிவு கிடைக்கிறது. எல்லா வடிவங்களிலும் அதுவே சிறந்தது. அது எப்போதுமே அப்படித்தான்.